"பவுத்தம் புரட்சிகரமானது. அது, பிரெஞ்சுப் புரட்சியைப் போன்ற மாபெரும் புரட்சியாகும். பவுத்தம் ஒரு மதப்புரட்சியாகத் தொடங்கினாலும், அது மதப்புரட்சியையும் கடந்தது. அது ஒரு சமூக, அரசியல் புரட்சியாக மாறியது.'' - டாக்டர் அம்பேத்கர்

... முதல் 2006 செப்டம்பர் 15 வரை, தலித்துகள் கோயிலில் நுழையப் போராட வேண்டியிருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகிலுள்ள கிராமம் கொசப்பாடி. இங்கு தண்ணீர் பீய்ச்சி கலவரத்தை அடக்கும் வஜ்ரா வாகனங்களோடு, தலித்துகள் கோயிலில் நுழைய வேண்டியிருக்கிறது! நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் பாப்பாபட்டி, கீரிப்பட்டிகளோடு தீண்டாமைப் பட்டியலில் இன்னும் பல ஊராட்சிகள் அணிவகுக்கின்றன. சென்ற மாதம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், "தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்' தலைவர் எம்.எச். ஜவாகிருல்லா, "... தன்னால் ஒரு மூலையில் முடக்கிப் போடப்பட்ட ஒரு முஸ்லிம் அதிகாரி, தி.மு.க. அரசில் முக்கியப் பொறுப்பில் அமர்ந்து கொண்டு, முக்கியமான நலத்திட்டங்களை முழு வீச்சில் நடத்தி வருவதை சகிக்க முடியாத ஜெயலலிதாவின் சங்பரிவார் புத்தி, சண்டாளக் குற்றச்சாட்டுகளை சுமத்திச் சதிராடுகிறது...'' என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வறிக்கையை தமிழக முதல்வரும் மேற்கோள் காட்டியிருக்கிறார்.

ஆக, சமூக பண்பாட்டு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் தீண்டாமை இழிவுகள் முற்றுப் பெற மறுக்கின்றன. நாள்தோறும் சாதிக் கொடுமைகளை சந்திக்கும் மக்களுக்குத் தீர்வாக உறுதியான செயல்திட்டங்களை முன்னிறுத்தாமல், வெறுமனே விவாதித்துக் கொண்டும்; சொந்தக் கருத்துகளைத் தீர்வுகளாக வழங்குவதும் பிரச்சினைகளை அதிகரிக்கவே உதவும். நாம் விடுதலையை நோக்கி வினையாற்றுகின்றவர்களாக இல்லாமல், எதிரிகளின் செயல்திட்டத்திற்கு ஏற்ப எதிர்வினையாற்றுகின்றவர்களாக மட்டுமே இருக்கிறோம். சாதி தீண்டாமைக் கொடுமைகளை முறியடிக்க, சாதி அமைப்பை அழித்தொழிக்க, அம்பேத்கர் அளித்த அறிவாயுதத்தைக் கொண்டு போராடுவதே விடுதலைக்கு வழிவகுக்கும். உரிமைப் போராட்டங்களையும், அரசியல் அதிகாரத் தீர்வுகளையும் முன்னிறுத்துபவர்கள், அம்பேத்கர் முன்வைக்கும் வலிமையான மதமாற்றத் தீர்வைப் பிற்போக்கானது என்று கூறி, இடஒதுக்கீடு போன்ற பொருளாதாரத் தற்சார்புக் கோரிக்கைகளை மட்டுமே எழுப்புவதற்குப் பயிற்றுவித்துக் கொண்டிருப்பது வருந்தத்தக்கது.

அம்பேத்கர் பவுத்தம் தழுவி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, இதுகுறித்து நம் சிந்தனையை தீவிரப்படுத்தியாக வேண்டும். அக்டோபர் 2 அன்று, பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இம்முறையும் நாக்பூரில் திரண்டனர். இம்மக்களின் ஊனிலும் உணர்விலும் புத்தரும் அம்பேத்கரும் இரண்டறக் கலந்திருக்கின்றனர். ஆனால், இந்த ஆற்றல் முறையாகத் திரட்டப்பட்டு, அது நம் வாழ்வியலின் அடிப்படைப் பண்புகளை மாற்றாதவரை, இந்து பண்பாடே நம்மை மீண்டும் மீண்டும் ஆட்கொள்ளும். சமமின்மையே இந்து மதத்தின் இருப்பு. இந்நிலையில், சமத்துவத்தை வென்றெடுக்கவும், சாதியால் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்தை, ஜனநாயகப்படுத்தவும் பவுத்தமே தீர்வாகும்.

இடஒதுக்கீடுகள் சில ஈவுகளைப் பெற்றுத் தருவது போல, அரசியல் அதிகாரத்திற்கான "சர்வபரித் தியாகங்கள்”, சில உரிமைகளைப் பெற்றுத் தரலாம். ஆனால், பெறப்பட்ட அந்த உரிமைகளால் நம்மீது சுமத்தப்பட்டுள்ள சாதி அடையாளங்கள் ஒருபோதும் நீங்கி விடாது. அதை முற்றாக நீக்குவதற்கும், போராட்டத்தால் பெற்ற உரிமைகளை முழுமையாக நுகர்வதற்கும், மதமாற்றமே இன்றியமையாததாகிறது. இல்லையெனில், காலம் முழுவதும், நாம் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களாக நம் உரிமைகளை இரந்து பெறும் சமூகமாகவே இருப்போம். முழு உரிமைகள் பெற்ற/அதிகாரம் மிக்க சமூகமாக மாறுவதற்கு வாய்ப்பே இல்லை.

"இந்நாட்டில் மதமாற்றமே உண்மையான அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்துக்கள் விழித்தெழுந்து, தங்களின் அடையாளத்தைத் தேட வேண்டும். தங்களின் பண்பாட்டை அழிப்பவர்களை முறியடிக்க வேண்டும். முகலாய மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியில், சாதி அமைப்பே சமூகம் பிளவுபடுவதைத் தவிர்த்தது. எனவே, சாதியைப் பாதுகாக்க வேண்டும்'' என்று 18.9.06 அன்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ். சுதர்சனம், புதுதில்லியில் பிரகடனப்படுத்தியிருக்கிறார். இதன் பொருள் என்ன? இந்துத்துவம் முன்வைக்கும் பண்பாடு, சாதிப்பண்பாடு. சாதி அடையாளம் இன்றளவும் நியாயப்படுத்தப்படுகிறது. அந்த சாதி அடையாளத்தை அழித்தொழிக்க, இங்கு பவுத்த பண்பாட்டுப் புரட்சி நடைபெற்றாக வேண்டும் என்பதைத்தான் இது சுட்டுகிறது. அண்ணல் அம்பேத்கர் பவுத்தம் தழுவிய 51ஆவது ஆண்டிலிருந்தாவது "தம்மப் புரட்சி”யைத் தொடங்குவோம்.