இலங்கையில் உள்நாட்டுப் போர் அன்றாடத் துயரங்களாகிவிட்டது. அய்ரோப்பிய சமரச முயற்சிகளும் எடுபடுவதாய் தெரியவில்லை. ஆனால் ஒன்று. அய்ரோப்பிய சமரச முயற்சியாளர்கள், இலங்கை அரசையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் இரண்டு அரசுகள் என்றே குறிப்பிடுகின்றனர். ஆனால், எந்தத் தமிழ் ஊடகத்தின் வாயிலாகவும் "இரண்டு அரசுகள்” என்று நான் கேள்விப்பட்டதே இல்லை.

செப்டம்பர் தலித் முரசில் "தென்திசையில் பூக்கும் புதியதொரு கியூபா' என்ற கட்டுரையில் பூங்குழலி, விடுதலைப் புலிகள் தங்களது அரசை "பக்கா”வாக அமைத்து எப்படித் திறம்பட செயலாற்றி வருகிறார்கள் என்று எழுதியிருந்தார். நல்ல விஷயங்கள்தான். ஆனால், சாதி ஒழிப்பிற்கான செயல்பாடுகள் புலிகள் அரசில் என்ன இருக்கிறது? கல்வி, நிதி, நீதி, விளையாட்டு, வனவளம் என அரசில் தனித்தனி துறைகள் உள்ளது போல் சமூகத்தைச் சீரழிக்கும் சாதிக்கென சாதி ஒழிப்புத் துறை என தனித்துறையை உருவாக்கி 24 மணி நேரம் செயல்பட்டால்கூட, ஆதிக்க சாதி என்று கருதிக் கொண்டுள்ள சாதித் திமிர் பிடித்தவர்களுக்கு சாதியை விட்டொழிக்க பல ஆண்டுகள், தலை முறைகள் கடக்கும்.

சாதி ஒழிப்பிற்கான சட்டங்கள் பல இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார் கட்டுரையாளர். சட்டங்கள் போட்டு சாதி ஒழிப்பை நடத்திட முடியுமென்றால், அது இந்தியாவில் எப்போதோ ஒழிந்திருக்க வேண்டும். 1992 ஆம் ஆண்டு 73ஆவது இந்திய அரசியல் திருத்தச் சட்டத்தின்படி, பஞ்சாயத்து தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அதில் தலித் மக்களுக்கான தனித் தொகுதியும் சட்டப்படியே உள்ளது. ஆனால், இன்று வரை பாப்பாபட்டி, கீரிப்பட்டி போன்ற ஊர்களில் தலித் மக்கள் தேர்தலில் நிற்க முடிகிறதா? தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டதாகக்கூட சட்டம் சொல்கிறது. தீண்டாமையை நம்மால் டீக்கடையில் கூட ஒழிக்க முடியவில்லை. தலித் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்று ஒன்றுள்ளது. அதன் பேரில் எத்தனை வழக்குகள் சாதி இந்துக்களுக்கு எதிராகப் பதியப்பட்டுள்ளது?

ஈழத்தில் சாதியை ஒழிக்க சட்டங்கள் இருக்கட்டும். அவர்களின் கலாச்சார செயல்பாடுகள் என்ன? சாதியை கட்டி அழ, பல்வேறு கலாச்சார நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. திருமணம், குடும்பம், பிள்ளை பெறல் மூலம் அடுத்த தலைமுறைக்கு சாதி எடுத்துச் செல்லப்படுகிறது.

புலிகள் அரசுப் பகுதியில் சாதி நசுக்கப்பட்டு விட்டது என்றால், எப்படி திருமணத்தின் மூலம் சாதி என்ற பேச்சு எழ முடியும்? திருமணத்தின்போது சாதி என்ற பேச்சு எழுந்தாலே அங்கு சாதிய இறுக்கம் இன்னும் இருக்கிறது என்பதல்லாமல் வேறென்ன? இடப்பெயர்வுகள் சாதியை இல்லாதொழித்துவிட்டன என்று கூறுவதும் நம்பக் கூடியதாக இல்லை. அகதிகளாக அய்ரோப்பாவில் சுற்றித் திரிந்தாலும், தம் சாதியை யாரும் விட்டுக் கொடுப்பதில்லை. திருமணம் ஒன்று போதாதா சாதியை காக்க? வலிந்து வலிந்து புலிகள் அரசில் சாதி இல்லை என்று சொல்லும்போது, ஆசிரியருக்கே தடுமாற்றங்கள் ஏற்படுவதை நம்மால் உணர முடிகிறது.

இலங்கைப் பேரினவாத அரசின் பல்வேறு கொடுமைகளிலிருந்து தமிழ் மக்களை அவர்களிடமிருந்து பாதுகாக்கவே உருவாக்கப்பட்டது புலிகள் அரசு. அந்த அரசு மனித நேய அரசாக அங்கு செயல்படுவதாக கட்டமைக்க முயற்சி மேற்கொள்ளும் கட்டுரையாளர், வெறும் தமிழ் மட்டுமே பேசத் தெரிந்த மூதூர், சம்பூர் முஸ்லிம் மக்களின் நிலை குறித்து ஏன் ஒரு வரிகூட எழுதவில்லை. அவர்கள் முஸ்லிம்கள் என்பதாலா? தமிழீழத்தில் "பக்கா”வாக ஓர் அரசாங்கத்தை நடத்தி வரும் தமிழீழப் புலிகளின் "மனித நேய அரசே” தமிழ் முஸ்லிம்களை அச்சுறுத்தி விரட்டும்போது, கட்டுரையாளர் மட்டும் என்ன செய்ய முடியும்?

அமுதா, சென்னை

 செப்டம்பர் 2006 இதழின் தலையங்கம் பார்த்தேன். அந்தச் சொல் குறித்து முதலில் எனக்கு அறிவுறுத்தியவர், அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள்தான். "தை” முதல் இதழைப் புரட்டிக் கொண்டு வந்தவர், அந்தச் சொல்லைப் பார்த்ததும் அது குறித்து விளக்கினார். இவ்வளவு விழிப்பாக இருந்தும் ஒரு பிழை நேர்ந்து விட்டதே என்று துடித்தேன். நேர்ந்துவிட்ட பிழைக்கு என்ன செய்யலாம் என்று விவாதிக்கையில், அந்தச் சொல்லின் மீது மற்றொரு சொல்லை அச்சடித்து ஒட்டி விடலாம்; அடுத்த இதழில் வருத்தம் தெரிவித்துக் கொள்ளலாம் என்கிற கருத்துகளைத் தம்பிகள் கூறினர்.

என் மனம் ஒப்பவில்லை. விற்பனைக்கு அப்பொழுதுதான் ஒன்றிரண்டு கடைகளுக்குத் தந்திருந்தோம் என்பதால், அவற்றை விற்க வேண்டாம் என்று கூறி திருப்பி எடுத்துக் கொண்டு வந்து அந்தச் சொல்லை மாற்றி, நான்கு பக்கங்களுக்கான தாள்கள் வாங்கி புதிதாக அச்சடித்து, பழைய பக்கங்களைக் கழற்றிவிட்டு புதிய பக்கங்களை இணைத்த பிறகே முறைப் படி விற்பனைக்கு அனுப்பினோம். இடையில் கை மாறிய சில இதழ்கள் தவிர, நான்காயிரம் இதழ்களில் மாற்றப்பட்ட சொல்லே இடம் பெற்றிருக்கிறது.

இதைப் பதிவு செய்வதற்குக் காரணம், இச்சொல்லைப் பயன்படுத்துவது தவறு என்பதை கொளத்தூர் மணியண்ணன் அவர்கள் சொல்கிற வரை நான் அறிந்திருக்கவில்லை என்பதையும், அவரால் சுட்டிக் காட்டப்பட்டவுடன் அதைத் திருத்துவதில் எவ்வளவு உண்மையாக இருந்திருக்கிறேன் என்பதையும் எம் தமிழ் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே. இது குறித்து தங்கள் ஆசிரியர் குழுவில் இருக்கிற என் அன்புயிர்த் தம்பி அழகிய பெரியவனுக்கும் முழுமையாகத் தெரியும். என்ற போதிலும், திருத்தி வெளியிட்ட போதிலும் அதற்காக ஏன் வருத்தம் தெரிவிக்கவில்லை என்கிற தங்கள் வலியை அப்படியே முழுமையாக உள்வாங்கி, அவ்விதம் வருத்தம் தெரிவிக்காமல் விட்டதற்காகவும் எம் மக்களிடம் எவ்விதத் தயக்கமின்றி என் மன்னிப்பைப் பதிவு செய்கிறேன்.

அறிவுமதி, சென்னை

 செப்டம்பர் இதழ் தலையங்கத்தில் என்னுடைய "தம்பி” திரைப்படத்தில், நடிகர் வடிவேலு "சண்டாளன்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருப்பதைப் பற்றி எழுதி இருக்கிறீர்கள். இது குறித்து சகோதரர் அழகிய பெரியவன் என்னிடம் பேசியபோது, நான் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்தேன். அச்சொல், தாழ்த்தப்பட்ட மக்களை குறிக்கும் சொல் என்று எனக்கு உண்மையாகவே தெரியாது. மேலும், அந்த வசனத்தை நான் எழுதவில்லை. வடிவேலு வசனத்தை உச்சரிக்கும்போது எதார்த்தமாக வந்தது.

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக பாடுபட்ட தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் கொள்கைகளை உள்வாங்கிப் போராடுகிற பிள்ளைகளில் நானும் ஒருவன். நான் வேண்டுமென்றே இந்தத் தவறை செய்திருப்பேன் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். இனி இது போல் தவறு நடக்காது. நடந்ததற்கு மிகவும் வருந்துகிறேன்.

சீமான், "தம்பி” திரைப்பட இயக்குநர், சென்னை