உச்ச நீதிமன்றத்தில் நீதியை நிலைநாட்ட, தமிழக அரசு முன்வர வேண்டும்
.
1. வழக்கறிஞர்களாகிய நாங்கள் படுகொலை செய்யப்பட்ட மேலவளவு தலித் குடும்பங்களுக்கும், அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மற்ற குடும்பங்களுக்கும் சட்ட உதவிகளை, எங்கள் எல்லைக்குட்பட்ட வகையில் தளர்வின்றி செய்து வருகிறோம். நேரடி மிரட்டல் கடிதங்கள், மறைமுக அச்சுறுத்தல், அவதூறுகள் போன்றவற்றை எதிர்கொண்டு சமூக நீதிக்காக மாமனிதர் டாக்டர் அம்பேத்கர் விட்டுச் சென்ற அனுபவப் பகிர்வுகளின் அடிப்படையில் ஆண், பெண், சாதி, சமயப் பாகுபாடற்ற ஓர் அணியாகத் திரண்டு, மற்ற மனித நேய தோழமையுள்ளவர்களின் ஆதரவுடன் இப்பணியைச் செய்து வருகிறோம்.

2. இந்தப் பின்னணியில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளான திரு. பி. சதாசிவம் மற்றும் திரு. என். பால் வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், 19.4.2006 அன்று இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மற்றும் சீராய்வு மனுக்களை விசாரித்து, சமூக நீதி சார்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விசாரணை நீதிமன்றம் 17 பேருக்கு ஆயுள் தண்டனையையும் 23 பேருக்கு விடுதலை வழங்கியதையும் உறுதி செய்துள்ளது. அதே சமயம், உயர் நீதிமன்றம் விடுதலை செய்யப்பட்ட 23 பேருக்கு எதிராக தக்க சாட்சியங்கள் இருந்தும் தமிழக அரசு மேல்முறையீடு செய்யாததால், அவர்களுக்கு தண்டனை வழங்க இயலாத சூழ்நிலை உயர் நீதிமன்றத்திற்கு இருந்ததை தீர்ப்பில் (பத்தி எண்.52) உயர் நீதிமன்றம் தெளிவாகவும், விரிவாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
3. இந்தக் காட்டுமிராண்டித்தனமான படுகொலை 30.6.1997 அன்று பகல் 3 மணி அளவில் ஓடும் பேருந்தை நிறுத்தச் செய்து நிகழ்த்தப்பட்டுள்ளது. அக்காலகட்டத்தில் திரு.மு. கருணாநிதியை முதலமைச்சராகக் கொண்ட ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வந்தது. அப்போதைய அரசு வழக்கை பலவீனப்படுத்தும் விதமாக செயல்பட்டது. விசாரணை நீதிமன்றத் தீர்ப்பு 27.7.2001 அன்று வெளியான போது, அ.இ.அ.தி.மு.க. அரசு செல்வி ஜெயலலிதாவின் தலைமையில் ஆட்சியேற்றிருந்தது. இந்த ஆட்சியின்போது உயர் நீதிமன்றத்தில், ‘‘மேல்முறையிடு செய்ய எவ்வித அடிப்படையும் இல்லை'' என்று அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, அது பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், வழக்குரைஞர் அணியினருக்கு பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், தலித் உணர்வாளர்கள், சட்ட ஆட்சியில் நம்பிக்கை கொண்டவர்கள் போன்றவர்கள் அளித்த ஊக்குவிப்பின்படி எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளால், தமிழக அரசின் சார்பில் அரசுத் தலைமை வழக்குரைஞர் திரு. என்.ஆர். சந்திரன், ‘‘இவ்வழக்கில் கொலை செய்யும் சதி தீட்டப்பட்டுதான் இக்கொலைகள் நிகழ்த்தப்பட்டதற்கான சாட்சியம் போதுமான அளவு உள்ளது'' என ஆவணங்களைச் சுட்டிக்காட்டி வாதாடினார். இந்த எதிர்பாராத மாற்றம் தமிழக அரசுக்கு எவ்வாறு ஏற்பட்டது என்பது எங்களுக்குத் தெரியாது. இந்த ஆட்சியிலும், இவ்வழக்கை பலவீனப்படுத்த முயற்சிகள் நடந்தன. அவை அதிர்ச்சி தருபவை, கசப்பானவை, அரசியல் சட்ட நாகரீகத்திற்கு எதிரானவை.
4. இச்சூழலில் ஆயுள் தண்டனை பெற்ற 17 நபர்களும் இந்தியத் தலைமை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். அந்த மனு விசாரணைக்கு, நீதிபதிகள் திரு. ஏ.ஆர். லட்சுமணன் மற்றும் திரு. அல்தமஸ் கபீர் ஆகியோர் அடங்கிய பிரிவு முன்பு 6.11.2006 அன்று வந்துள்ளது. அவர்கள் வாதங்களைக் கேட்டபிறகு தமிழக அரசுக்கு தாக்கீது அனுப்ப உத்திரவிட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோர் சார்பிலும் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
5. இந்தப் பின்னணியில், தற்போது தி.மு.க. மீண்டும் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்துள்ளது. மற்ற கூட்டணிக் கட்சிகளின் துணையும் ஒத்துழைப்பும் பெற்று இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. இச்சூழலில், தமிழக அரசு இந்தியத் தலைமை நீதிமன்றத்தில், இவ்வழக்கில் இதுநாள் வரை மேல்முறையீடு செய்யவில்லை என்ற கசப்பான உண்மையை அறிகிறோம். தலித் மக்கள் உரிமையில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் தமிழக அரசு, இந்தியத் தலைமை நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யக் கோர வேண்டும்.
6. தலைமை நீதிமன்றத்தில் வழக்கைத் தளர்வின்றி நடத்த, சமூக நீதியில் அக்கறையுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஒரு மூத்த வழக்குரைஞரை நியமித்து முழு ஒத்துழைப்பு கொடுத்து, நீதியை நிலைநாட்ட தமிழக அரசு முன்வர வேண்டும் என அனைவரும் வலியுறுத்துவோம்.
- சமூக நீதி வழக்கறிஞர் மய்யம்,
262, 9ஆவது பிளாக்,
பார்வதி கக்கன் நகர்,
புளியந்தோப்பு, சென்னை - 600 012