kolathoor mani tippu sultan

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா ஒருங்கிணைப்புக் குழு சார்பில் காஞ்சிபுரத்தில் 17.09.2015 அன்று காஞ்சி மக்கள் மன்றத்தைச் சார்ந்த தோழர் பாலமுருகன் -உமா இணையரின் ஆண் குழந்தைக்கு பெயர் சூட்ட கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் ‘திப்பு சுல்தான்’ என்று பெயர் சூட்டினார்.

அதைத் தொடர்ந்து அவர் பேசுகையில் குறிப்பிட்டதாவது:

“மனு சாஸ்திரம் சொல்லுகிறது பார்ப் பனர்களுக்கு மங்கலமான பெயர்களை யும், சத்ரியர்களுக்கு வீரமான பெயர் களையும், வைசியர்களுக்கு பணத்தை, தனத்தை குறிக்கிற பெயர்களையும் சூத்திரர்களுக்கு இழிவான பெயர்களை யும் வைக்கச் சொல்லி சொல்லுகிறது.

காலம் காலமாக குப்பனாய், பிச்சை யாய், மண்ணாங்கட்டியாய் வாழ்ந்த வருக்கு மனுசாஸ்திரம் தடைகளுக்கு மாறாக பின்னாளில் பெரியார் புரட்சிகரப் பெயர்களை வைத்தார்.

புராணத்தின் பெயரால் ராமனை தூக்கி பிடிக்கிற இந்த சமுதாயத்தில் இயக்க தோழர்களுக்கு இராவணன் என்று பெயர் வைத்தார். பார்ப்பனியத் திற்கு எதிராக நின்ற புத்தரின் பெயரை சித்தார்த்தன் என்று பெயர் வைத்தார்.

சோவியத் புரட்சியின்போது இயக்க தோழர்களுக்கு (குழந்தைககளுக்கு) லெனின், ஸ்டாலின் என்றும், ஏன் மாஸ்கோ, ரஷ்யா என்று பெயர் உள்ளவர்களும் உண்டு. குத்தூசி குருசாமி மகளின் பெயரை இரஷ்யா என்று தான் வைத்தார்.

ஊரின் பெயரை சூட்டலாமா என்று கேட்ட போது பழனி என்றும், சிதம்பரம் என்றும், திருப்பதி வைத்திருக்கிற நீ என்னை கேட்கலாமா? என்று திருப்பிக் கேட்டு, இது புரட்சிகரமான ஊர் மாஸ்கோ என்றார் பெரியார். (பலத்த கைத்தட்டல்)

இப்போதைய காலகட்டத்தில் நாம் யார் பெயரை சூட்டுவது? சகிப்புத் தன்மை அற்றவர்களாக இஸ்லாமி யர்களை கூறுகிறார்கள். இஸ்லாமிய மன்னர்களின் மதச்சார்பின்மையை பின்பற்றியவர்கள்; அனைத்து மதத்தை யும் அரவணைத்துக் கொண்டவர்கள் உண்டு.

திப்புசுல்தான் - அனைத்து ஏகாதி பத்தியங்களுக்கும் எதிர்ப்பாக இருந்த மன்னன். பிரஞ்சு மன்னர் 14ஆம் லூயியிடம் அவர் நெருக்கமாக நட்பு கொண்டிருந்தார். ஆனாலும், மன்னராட்சி முறைக்கு எதிராக பிரஞ்சு புரட்சி நடந்தபோது மன்னரை எதிர்த்துப் போராடியவர்கள் தன்னிடம் அடைக்கலம் தேடி வந்தபோது அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தார்.

ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் நடக்கும் செய்தியை ஒரு பிரஞ்சு பத்திரிகை வழியாக அவர் படித்து அறிந்தார். உடனே போராட்டக்காரர்களுக்கு இங்கிருந்து நிதி உதவி செய்தார். பிரிட்டிஷ்காரர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து ஏகாதிபத்தியங்களுக்கும் நான் எதிரானவன் என்று அமெரிக்கா வுக்கு கடிதம் எழுதினார்.

அந்த திப்புசுல்தான் பெயரை இந்தக் குழந்தைக்கு சூட்டுகிறேன்” என்றார் கொளத்தூர் மணி