பெண்ணுரிமைக்கு எதிராக வந்த ‘தமிழ்த் திருமணம்’ புரோகித விலக்கு - இந்தி எதிர்ப்பு -தனிநாடு கோரிக்கைகளுக்கு பெரியாருக்கு முன்னோடியாக செயல்பட்டவர்கள் சைவத்தமிழறிஞர்கள் என்று எழுதிய தோழர் பெ.மணியரசன் கட்டுரைக்கான மறுப்பு.

‘புரோகித நீக்கம்’ என்ற கொள்கைக்கு முன்னோடியாக செயல்பட்ட பெரியார் இயக்கம் -சுயமரியாதைத் திருமணங்களில் ‘புரோகித நீக்கம்’ என்பதையும் தாண்டி முன்னோக்கிச் சென்றதை 10.7.2014 இதழில் குறிப்பிட்டோம். 28.5.1929இல் அருப்புக்கோட்டை அருகே சுக்கிலநத்தத்தில் ஒரே மேடையில் 3 புரோகித மறுப்பு திருமணங்கள் நடந்தன. அது குறித்து ‘குடிஅரசு’ இதழில் வெளிவந்த செய்தி இது: சாதாரணமாய் அணிந்திருக்கும் நகையன்றி, திருமணத்துக்கென வேறு நகை எதுவுமின்றி,பட்டாடை விலக்கி, கதராடை அணிந்து (அதுவும் புத்தாடை அன்று…. பெரியாரும் அதுவரை கதரை ஆதரித்துக் கொண்டுதான் இருந்தார்) ஒரு முழுசுயமரியாதைத் திருமணமாக அருப்புக்கோட்டை சுக்கிலநத்தத்தில் 28-5-1928 அன்று மூன்றுதிருமணங்கள் ஒரே மேடையில் நடந்தேறியது, அந்தத் திருமணத்தில் ஒரு வயதான மூதாட்டிகுத்துவிளக்கு ஏற்ற நெருப்புக் குச்சியை உரைக்கும் போது, மணமகனின் தகப்பனாரான ஸ்ரீ துரைசாமிரெட்டியார் எழுந்து “எதற்காக இங்கு விளக்குப் பற்றவைக்கவேண்டும்? பகல் 11-00 நேரத்துக்கு இங்குஇருட்டாகவா இருக்கிறது? அனாவசியமாக அர்த்த மில்லாததைச் செய்யாதீர்கள்” என்று தடுத்துவிட்டார். தவிர வேறெந்த சடங்கையும் வைத்துக்கொள்ளவில்லை. மற்றபடி ஒரே ஒரு சடங்கில்தான்எல்லோரும் ஈடுபட்டிருந்தார்கள். அதாவது பகல் 12 மணி முதல் இரவு 2-00 மணி வரையிலும் வந்திருந்தசுமார் 5000 பேருக்குக் குறையாமல் சோறுபோட்டவண்ணமாக இருந்தார்கள் (குடிஅரசு 3-6-1928 பக்12)

அதுதான் குடிஅரசு குறிப்பிடும் அந்த ஒரே ஒருசடங்கு. அதே நாளில் 12-00 மணிக்கு மூன்றாவது திருமணத்தையும் நடத்தி முடித்துவிட்டு, மதுரைக்குசென்று அங்கேயும் நண்பகல் 1-30 மணிக்கு மற்றொரு முழு சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்ததும் இதே காலகட்டத்தில் தான். இவற்றையெல்லாம் விட திருமணத்தை நிகழ்த்திவைக்க வந்த பெரியாரை, மணமகள் இரத்தினம்மாள் (அவர் ஒரு தீவிர குடிஅரசு வாசகர்; சுயமரியாதைக் கொள்கையர்) “ஞானக் குணா நவ மணியே வருக”என்ற பாடலைப் பாடி வரவேற்றதும் (1928இல்) ஒரு கூடுதல் செய்தி.

  மேலும் பெரியார் பெண் விடுதலைக்கு பிள்ளைப் பேறும் ஒரு தடையே என்ற அடிப்படையில் ‘கர்ப்பஆட்சி’ (இன்றைய குடும்பக் கட்டுப்பாட்டு முறை) குறித்து சுயமரியாதை திருமண மேடைகளில் 1928 இல் பேசத் தொடங்கியிருந்தார். ஆக, தனித் தமிழ் இயக்கம் பார்ப்பன, வடமொழிவிலக்கு திருமணங்களுக்கு முன்னோடியாக இல்லை என்பது மட்டுமல்ல; ஒரு சரியான பின்னோடி யாகவாவது இருந்தார்களா என்றால், அதுவும் இல்லை.

1937-1939 ஆம் ஆண்டுகளில் சுயமரியாதை இயக்கமும், தனித் தமிழ் (சைவ) இயக்கமும் இந்தி –பார்ப்பனியம் என்ற பொது எதிரியை வீழ்த்தும் ஓரம்ச சட்டத் திட்டத்தோடு இணைந்து செயல்பட்டனர். கருத்தியல் அடிப்படை என்றில்லாமல், நடைமுறை தந்திரத்தின்பாற்பட்டதாய் அமைந்ததுஅந்த கூட்டணி (இரண்டாம் உலகப் போரினால், காங்கிரசு அமைச்சரவை பதவி விலக) கட்டாயஇந்தியும் கூடவே ஒழிந்ததன் பின் பழையபடியே அந்தக் கூட்டணி பிரிந்தது.

அப்போது தான் தனித்தமிழ் இயக்கத்தார் (சைவர்கள்), தமிழர்கள் சுயமரியாதை இயக்கத்தின்பால் பற்று கொண்டு பார்ப்பனர், சமஸ்கிருத விலக்கு மட்டுமின்றி சாஸ்திர, சடங்குகள் மறுப்பு,ஆணாதிக்க எதிர்ப்புப் பார்வையில் தாலி மறுப்பு போன்ற புரட்சிகர கூறுகள் கொண்ட சுயமரியாதைதிருமணங்களை செய்துகொள்ள தலைப்பட்டு விடுவார்களே என்ற அச்சத்தோடு, இந்தி எதிர்ப்புப்போர் நடந்து முடிந்த சில மாதங்களுக்குள் (சைவர்கள்) ஒன்று கூடி தமிழர் திருமணமாநாட்டைச் சென்னையில் 16-7-1939 அன்று நடத்தினர் (கூடியது சைவர்கள்; – நடந்தது தமிழர்திருமண மாநாடு) பார்ப்பனர் –சடங்கு – வடமொழி விலக்கிய பகுத்தறிவு சார்ந்த - திருமணம் என்பதுஒப்பந்தம் தான்; தாலி என்பது அடிமைச் சின்னம் - எனும் பெண்ணுரிமை பேணும் சுயமரியாதைத்திருமணத்தை தமிழர் திருமணமாக வரை யறுத்தார்களா என்றால் அதுதான் இல்லை.

“வடமொழி மந்திரங்களுக்குப் பதிலாக சைவப் பாடல்கள். பார்ப்பனர்களுக்குப் பதிலாக சைவர்கள்.

இவ்வளவுதான் சைவர்கள் வகுத்த தமிழர்த் திருமணம்” (குமரன் 27-7-1939)   1916 ஆம் ஆண்டு மறைமலை அடிகளார் தொடங்கிய ‘தனித் தமிழ் இயக்கம்’ மொழித்தூய்மைமட்டும் பேசவில்லை; சமற்கிருதம் உள்ளிட்ட பிற மொழிச் சொற்களைத் தமிழிலிருந்து நீக்குவது போல், தமிழர் வாழ்வியல் சடங்குகள் ஆகியவற்றிலிருந்து சமற்கிருதத்தையும், ஆரிய புரோகிதர்களையும் நீக்குவதையும் வலியுறுத்தியது. பார்ப்பனர்களுக்கு பதிலாக தமிழில் தமிழர்களைக் கொண்டு குடும்பச்சடங்குகளையும் ஆன்மிக நிகழ்வுகளையும் நடத்திக்கொள்ள வேண்டும் என்று மறைமலை யடிகளார் வலியுறுத்தினார். ( அதாவது, சைவர்களைக் கொண்டு சைவ திருமறைகளை ஓதி நடத்த வேண்டும் என்றார்)“அரசியல் இயக்கங்கள் செயல்படும் காலம் வந்தபின், பெரியார் பார்ப்பனிய எதிர்ப்பைப் பெரும்வீச்சில் கொண்டு சென்றார். பட்டி தொட்டியெங்கும் பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பு பரவியது.

இதற்கெல்லாம் முன்னோடிகளாக, அடித்தளம் அமைத்தோராகத் தமிழறிஞர்கள் இருந்தார்கள்என்பதை இன்றையத் தமிழுணர்வாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று இப்போது 2014இல்கூறுகிறார் தோழர் மணியரசன். இதே கருத்தை 1929 இல் சைவ சித்தாந்த மகாசமாஜத்தின் (இப்போது சைவ சித்தாந்தப் பெருமன்றம்) மாத இதழான ‘சித்தாந்தம்’ ஜூன் மாதஇதழில், அவ்விதழ் ஆசிரியர் ம.பாலசுப்பிரமணிய முதலியார் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.

“சுயமரியாதை இயக்கத்திலுள்ள நல்ல பகுதி களெல்லாம் மறைமலையடிகள் ஞானத் தந்தையாக அருள் சுரந்து இட்ட பிச்சையென்பது தமிழ்நாடு அறிந்ததே. இப்பிச்சை வாங்கிப் பிரச்சாரம்செய்பவர்கள் பிச்சையிட்ட பிதா செய்த நன்றியை மறப்பாராயின் அப்பிரச்சாரம் முழுமையும் கடலிற்பெய்த மழை போல் ஒரு பயனும் தராது போகும்.” அன்று பாலசுப்ரமணிய முதலியார் எழுதியதை இன்று பெ.மணியரசன் பேசுகிறார், அவ்வளவுதான். பெ. மணியரசன் பெரியாருக்கு முன்னோடிகளாகபுத்தரையோ, சித்தர் களையோ, அயோத்திதாசரையோ, சமகாலம் எனினும், ஏன் அம்பேத்கரையோ கூறியிருந்தால்கூட புரிந்துகொள்ள முடியும்.ஆனால் மறைமலை அடிகளை முன்னோடியாகக்கூறுவது சரியா?   இந்தி எதிர்ப்புக்கும் தனித்தமிழ் நாட்டு கொள்கைக்கும் பெரியாருக்கு இந்த தமிழறிஞர்கள்தான் முன்னோடியாக இருந்தார்களா 1937’இல் “சென்னை மாகாண முதலமைச்சராகஆனவுடன் இராஜாஜி, 1938 இல் ஒரு பகுதி பள்ளிக் கூடங்களில் வெள்ளோட்டமாக இந்தியைக்கட்டாயப் பாட மொழியாக்கினார். (பாட மொழியாக அல்ல; கட்டாயப்பாடமாகத்தான் ஆக்கினார்) அந்தஇந்தித் திணிப்பைத் தமிழ் அறிஞர்கள் எதிர்த்தனர். இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் பெரியார்கலந்து கொண்டு முன்னெடுத்தப் பின், அது பெரும் வீச்சைப் பெற்றது. தமிழகம் தழுவிய எழுச்சிஏற்பட்டது” என்கிறார் பெ.மணியரசன். ஆக, இந்தி எதிர்ப்பிலும் தமிழறிஞர்கள் தான் முன்னோடிகள்.

பெரியார் பின்னோடியே என்பதைத்தான் வேறு வகையில் வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு தீங்கை, தீச்செயலை எதிர்க்க வேண்டும் என்று பலருக்குத் தோன்றும்; நினைப்பவர்களைவிடசெயல்படுபவர்கள்தான் வெற்றிக்குக் காரணமாக இருப்பார்கள். நடைமுறையில் நாம் பலரைக்காண்கிறோம். நம்மிடம் பேசும் போதெல்லாம், ‘நீங்கள் சொல்வதெல்லம் சரிதான்’ என்பார்கள்.

‘எனக்குப் பல ஆண்டுகளாகவே இந்த கருத்து உண்டு’ என்பார்கள். மனைவியை, கணவனை, குடும்பத்தை, தெருவை, ஜாதியை, ஊரை, கட்சியைக் காரணம் காட்டி ஜாதி ஒழிப்பு, ஜாதி மறுப்புத் திருமணம், பகுத்தறிவு, பொதுவுடைமை என்று பலவற்றில்பின்வாங்குவதைப் பார்க்கிறோம். அதனால்தான் ‘சிந்திக்காத மடையனும், சிந்தித்துசரி என்று உணர்ந்ததை நடைமுறைப்படுத்தாத அறி வாளியும் சரிநிகர் சமமானவர்களே’ என்கிறார்கள்.

இந்த எடுத்துக்காட்டு, இந்தி எதிர்ப்புப் போருக்காகஅல்ல. பொதுவாகத்தான் கூறப்பட்டது.இந்தி எதிர்ப்புப் போர் என்று பார்க்கிறபோதுகூடஇந்தித் திணிப்பை எதிர்க்க வேண்டும் என்ற சிந்தனைகூட தமிழறிஞர்களுக்கு முதலில் வரவில்லை என்பதுதான்.

சற்று விரிவாகப் பார்ப்போம்.

(அடுத்த இதழில்)