தற்போதைய அரசு ஆவணங்களின்படி, இந்தியா-இலங்கைக்கு இடையில் கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்து எந்த ஒரு ஒப்பந்தமும் இல்லை. அதே நேரத்தில், இரு நாடுகளுக்கான கடல் நீர் எல்லை தொடர்பாக மட்டும் ஒப்பந்தம் உள்ளது. கோவையைச் சார்ந்த ஒருவர், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வெளியுறவு அமைச்சகத்திட மிருந்து பெற்ற பதிலில் இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடல் நீர் எல்லை தொடர்பான வரையறையிலும், இரு நாடுகளுக் கிடையே எந்தவிதமான அரசு முத்திரையோ நாடாளுமன்ற அனு மதியோ அரசு அதிகாரிகளின் கையெழுத்தோ இல்லை. எனவே வெறும் வெற்றுத் தாளைக் காட்டி ஒப்பந்தம் என்று மத்திய வெளி யுறவுத் துறை பார்ப்பன அதிகார வர்க்கம் ஏமாற்றி வருகிறது. அந்த அடிப்படையில்தான் தமிழக மீனவர்களுக்கு கச்சத் தீவில் மீன் பிடிக்கும் உரிமை இல்லை என்று காங்கிரஸ் ஆட்சி, நீதிமன்றத்தில் கூறியது.

இப்போது பா.ஜ.க. ஆட்சியும் இதே கருத்தை சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் உறுதிப்படுத்தியுள்ளது. இப்படித்தான் சட்டப்பூர்வ அங்கீகாரம் ஏதும் இல்லாமல் சி.பி.அய். என்ற புலனாய்வு அமைப்பு இயங்கி வருகிறது என்ற செய்தி சில மாதங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் வழியாக அம்பலமானது குறிப்பிடத்தக்கது.

தமிழில் மட்டும் தீர்ப்பு!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் தமிழில் மட்டுமே தீர்ப்புகள் வழங்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை வரவற்கத்தக்க ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. 1956 இல் தமிழகத்தின் ஆட்சி மொழி சட்டம் அமுலானது. மாவட்ட நீதிமன்றங்களில், சாட்சி, விசாரணை தமிழில் நடத்தப்பட்டு, தமிழிலே தீர்ப்புகளையும் எழுத வேண்டும் என்று 1976இல் ஆட்சி மொழி சட்டம் திருத்தப்பட்டது.

அதன் பிறகு தமிழ் மொழி தெரியாத நீதிபதிகள், ஆங்கிலத்திலும் தீர்ப்பு எழுதலாம் என்று உயர்நீதிமன்ற பதிவாளர், சுற்றறிக்கை அனுப்பினார். இப்போது தமிழ் தெரியாத நீதிபதிகள், அரசு பணியாளர் நடத்தும் தேர்வாணையம் வழியாக தமிழில் தேர்ச்சிப் பெற்றாக வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. இதேபோல் உயர்நீதிமன்றத்திலும் தமிழ் கோலோச்சும் நிலை அடுத்து வரவேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பு.

Pin It