எச்.ராஜாவின் பார்ப்பனத் திமிருக்கு பதிலடி

ஆட்சி அதிகாரம் வந்துவிட்டது என்ற திமிரில் எச். ராஜா போன்ற பார்ப்பனர்கள் எல்லை மீறி தூற்றுகிறார்கள். வாய்க்கொழுப்பு பூணூல் திமிருடன் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள்.

நடிகர் கமல்ஹாசன், தனது 61ஆவது பிறந்த நாளில் வெளியிட்ட சில கருத்துகளுக்காக ‘துக்ளக்’ பத்திரிகையில் எச். ராஜா ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். கமல்ஹாசன் பேசும் பகுத்தறிவு கருத்துகள் குழப்பம் மற்றும் பார்ப்பனியத்தின் கலவையாகவே இருக்கிறது என்பது வேறு சேதி. ஆனால், இந்த கடிதத்தில் எச்.ராஜா தன்னை அசல் பார்ப்பனராக அடையாளம் காட்டியிருப்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.

ஒருவர் ஏழையாகவும் தீண்டப்படாத ஜாதியிலும் பிறப்பதற்கு முன் ஜென்மத்தின் பலன்தான் காரணம் என்று பார்ப்பனர்கள் கூறி, இந்த ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தி வந்தார்கள். பெரியாரி யக்கம், பார்ப்பனரின் இந்த பிறவித் திமிரைத்தான் கேள்விக்கு உட்படுத்தியது. கடவுளையும் ‘கடவுள்’ பெயரால் அதிகாரங்களையும் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கப் பிடிக்குள் பறித்துக் கொண்டதை பெரியார் இயக்கம் கிழித்துக் காட்டியவுடன் பார்ப்பனர்கள் ஏற்றத்தாழ்வுகளை தாங்கள் ஏற்கவில்லை என்றும், ஜாதி பேதம் கூடாது என்றும், ‘பம்மாத்து’ காட்டி வந்தார்கள். ஆனால், பார்ப்பான் பார்ப்பனாகவே இருக்கிறான் என்பதை எச். ராஜாவின் இந்த நச்சுக் கருத்துகள் உறுதிபடுத்துகின்றன.

சுனாமி வந்து மக்கள் மடிவதற்கும், ஏழ்மையில் மக்கள் உழல்வதற்கும் முன் ஜென்மப் பலன்தான் காரணம்; இதுவே இந்து மத தத்துவம் என்று பச்சையாக நியாயப்படுத்துகிறார், இந்தப் பார்ப்பனர்.

“‘சுனாமி, ஏழ்மை ஆகியவை ஏன் வருகிறது? ஆண்டவன் ஏன் இவற்றை தடுக்கவில்லை’ என்றும் (கமலஹாசன்) கேள்வி எழுப்பியுள்ளீர்கள். இதற்கு இந்து மதத்தின் வினைப் பயன் சித்தாந்தம் சரியான விளக்கமளித்துள்ளது. பிற மதங்கள்தான், ‘எல்லாம் ஆண்டவனின் கொடை, ஆண்டவனின் விருப்பப்படி அனைத்தை யும் படைக்கிறான்’ என்று கூறுகின்றன. ஆனால், ஒருவன் ஏழையாகவும், மற்றொருவன் பணக்காரனாகவும், ஒருவன் அறிவாளியாகவும், மற்றொருவன் முட்டாளாகவும், ஒருவன் ஆரோக்கியமானவனாகவும், மற்றொருவன் நோயாளியாகவும் இருப்பதற்குக் காரணம், அவனது வினைப் பயனே ஆகும்” என்கிறது இந்து மதம். நல்வினை செய்தவன் நல்லது பெறுகிறான். தீவினை செய்தவன் தீயது பெறுகிறான்.” - ‘துக்ளக்’ 25.11.2015

பா.ஜ.க.விலும் இந்து முன்னணியிலும் உள்ள சொரணையுள்ள பார்ப்பனரல்லாதவர்கள் எச். ராஜாவின் இந்த கருத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

பகுத்தறிவாளர்களின் நோக்கம் ‘இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது தானாம்’ எழுதுகிறார் ராஜா. பகுத்தறிவுவாதிகளின் நோக்கம் தாழ்த்தப்பட்டவர்களாகவும், பிற்படுத்தப்பட்டவர்களாகவும் உள்ள இந்துக்களைப் புண்படுத்தி அவமானப்படுத்தும் பார்ப்பனர் களையும் பார்ப்பனீயத்தையும் எதிர்ப்பதுதான்! இந்து மக்களின் சுயமரியாதைக்கு போராடுவதுதான்! அவனவன் முன் ஜென்மத்தின் கர்ம வினைப்படி கீழ் ஜாதியாகவும் ஏழையாகவும் பிறக்கிறான் எனும் இந்த “கூஜா”க்களின் கூற்றைவிட பார்ப்பனரல்லாத இந்துக்களை அவமதிக்கக் கூடிய கருத்து வேறு இருக்க முடியுமா? இப்போதும் ‘பூணூல்’ அணிந்து கொண்டு பெரும்பான்மை ‘இந்து’ மக்களை ‘சூத்திரர்’ என்று இழிவுபடுத்துவது யாரப்பா?

யாகம், கும்பாபிஷேகம், அர்ச்சனை, சடங்கு - உரிமைகள் ‘இந்து’ சூத்திரர்களுக்கு கிடையாது என்று தடை போட்டு இழிவுபடுத்துவது யாரப்பா? பதில் உண்டா?

“விநாயகர் சிலைகளை ஈ.வே.ரா. உடைத்தார்” என்று குற்றம் சாட்டுகிறார் - இந்த பூணூல்!

சரி; அதே கேள்வியை திருப்பி கேட்கிறோம்; விநாயகன் ஊர்வலத்தில் விநாயகனை கிரேனில் தூக்கி, காலால் அழுத்தி, துதிக்கையை உடைத்து, தொந்தியை ‘கும்மாங்குத்து’ குத்தி, கடலில் தூக்கி வீசுவது யாரப்பா? இதுதான் கடவுள் பக்தியின் இலட்சணமா?

ஆஸ்திகர்கள் அகிம்சாவாதிகள் என்றால் பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கியது தான் அகிம்சையின் அடையாளமா?

‘அசுரர்கள்’ என்ற திராவிடர்களை அழிப்பதற்கு பண்டிகை; ‘சம்ஹாரம்’ செய்வதற்கு விழா! ‘இராவணனை’ எரிப்பதற்கு கொண்டாட்டம்; ஏகலைவன் கட்டை விரலை வெட்டி எடுப்பதற்கும், ‘சம்பூகன்’ தலையை துண்டித்து வீசுவதற்கும் இதிகாசப் பெருமை; ‘கொலை செய்யலாம் பாவமில்லை; ஆன்மா அழியாது’ என்று சொல்வதற்கு புனித நூல்; இதற்கெல்லாம் என்ன பெயர்?

“ஒரு சட்டம் ஏற்புடையதா இல்லையா என்பது முக்கியமல்ல; சட்டப் புத்தகத்திலுள்ள சட்டம் பராமரிக்கப்பட வேண்டும்” என்று நியாயவானைப் போல படம் காட்டுகிறார். சரி ஒரு கேள்வி; சட்டத்தை மதிக்க வேண்டும் என்று கூறுகிற இந்தக் கூட்டம், இந்தியாவை இந்து நாடு என்று கொக்கரிக்கிறதே; அப்படி ஏதும் சட்டத்தில் இருக்கிறதா? இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை பறிக்க வேண்டும் என்று பதறுவதுதான் சட்டத்தை மதிப்பதா?

தேவாரமும் திருவாசகமும் தமிழுக்கு அழியாப் புகழை ஈட்டித் தந்துள்ள பக்தி இலக்கியம் என்று பரவசப்படுகிறார். தில்லை கோயிலில் தேவாரம் பாட வந்த முதியவரை ‘பாடாதே’ என்று அடித்து உதைத்து வெளியே தூக்கி வீசியதே ‘தீட்சதர்’ கூட்டம்; அப்போது ராஜாவின் வாய் எங்கே போயிருந்தது?

மாட்டுக் கறித் தடையைப் பற்றி இந்த ‘சட்ட மேதை’ கூறியிருக்கிற கருத்துகள் இவரது அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!

அரசியல் சட்டம் என்பது வேறு; அரசியல் வழிகாட்டும் நெறி என்பது வேறு என்பதை முதலில் புரிந்து கொள்ளட்டும். அரசியல் வழிகாட்டும் நெறி என்பது எதிர்காலத்தில் அரசியல் சட்டத்தின் திசை வழிப் பயணத்தை சுட்டிக் காட்டுவதுதான். அதற்கு அரசியல் சட்டத்துக்கான அங்கீகாரம் கிடையாது.

அரசியல் சட்ட வழிகாட்டும் நெறியின் 48ஆவது பிரிவு, “பசு இந்துக்களின் தெய்வம். எனவே அதை வதை செய்யக் கூடாது” என்று கூறியிருக்கிறதா? அப்படி ஏதும் இல்லை. பசுவை தெய்வம் என்றும், எனவே அதை வெட்டுவது பாவம் என்றும், இந்தப் பிரிவில் சேர்ப்பதற்கு சிவன்லால் சக்சேனோ, சேக் கோவிந்தராசு என்ற இரண்டு இந்துத்துவ அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் வலியுறுத்திய போது, நிர்ணய சபை அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்தது. - இதுதான் வரலாறு.

“மதக் கண்ணோட்டத்தில் நாங்கள் இதைப் பார்க்கவில்லை; மாறாக விவசாயக் கண்ணோட்டத்தில் இந்தப் பிரச்சினையை அணுகு கிறோம்” என்று அரசியல் நிர்ணயசபை விளக்கம் அளித்து கீழ்க்கண்ட பகுதியை வழிகாட்டும் நெறியாக 48ஆவது பிரிவில் இணைத்தது.

“வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்புக்கு நவீன அறிவியல் முறை குறித்து முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக உயர்ரக கால்நடைகளை பாதுகாப்பதற்கும் மற்றும் பால்தரும் விலங்குகள், பாரம் இழுக்கும் கால்நடைகள் ஆகியவற்றைக் கொல்வதைத் தடுப்பதற்கும் வேண்டிய முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும்” என்றுதான் அந்த 48ஆவது வழிகாட்டும் பிரிவு கூறுகிறது.

அதனால்தான் விவசாயத்துக்குப் பயன்படாத, பால் கறப்பது நின்று போன அடிமாடுகளை வெட்டுவதற்கும் உணவாக்குவதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் பயன்பாட்டுக் கண்ணோட்டத்தில் அனுமதிக்கப்படு கிறது.

14.11.1949இல் அரசியல் நிர்ணயசபையில் நடந்த இது குறித்த விவாதங்கள், விவாதங்களின் 11ஆவது தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இந்த உண்மைகளை எல்லாம் திசை திருப்பி காதில் பூச்சுற்றக் கிளம்பியிருக்கிறது இந்த ‘பூசுரர்’ கூட்டம்.

நோயாளியாக ஒருவன் இருப்பதற்குக் காரணம் ‘வினைப் பயன்’ என்றால், இந்தப் பார்ப்பனர்கள் ஏன் மருத்துவமனைகளுக்கு ஓட வேண்டும்? ஏழ்மையாக இருப்பது வினைப் பயன் என்றால், எதற்கு ஏழ்மையை ஒழிப்பதாக ஏமாற்றிக் கொண்டு அதிகாரத்தைப் பிடிக்க துடிக்க வேண்டும்?

‘சுனாமி’யில் மக்கள் மடிவது வினைப் பயன் என்றால், அந்த மக்களைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமலே இருந்து விடலாமே?

மனிதநேயமுள்ள எவராவது இப்படிக் கூறுவார்களா? மாட்டுக்காக மனிதர்களையே சாகடிக்கும் கூட்டம் இதைத் தவிர வேறு எதை பார்க்க முடியும்?

‘ராஜா’வுக்குள் அடங்கிக் கிடக்கும் பார்ப்பனத் திமிர்தான் இப்படி எழுத வைக்கிறது.

எழுதுங்கள்; சந்திக்கிறோம்!