‘இப்போது என் நாட்டில் நிகழ்ந்திருக்கும் மாற்றத்திற்கு சிறிய அளவிலாவது பங்களித்திருக்கிறேன் என்ற பெருமிதம் கொள்ள வாய்ப்பின்றி போனால், ஸ்வீடன் வழங்கிய அங்கீகாரத்தின் ஒளியில் நான் எப்படி தலைநிமிர்ந்து நிற்க முடியும்’.

என்று நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டு பாப்லோ நெரூதா கூறினார். ஒரு இலக்கியவாதிக்கு பெருமை கொள்ளும் தருணம் விருதுகளோ, பதவிகளோ வந்தடையும் பொழுதுகளல்ல, மாறாக ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக, அதிகாரத்திற்கு எதிரான செயல்பாட்டிற்காக, அன்பும் கருணையுமிக்க ஒரு சமூக அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கனவுக்காக அவன் சிந்தனையை செலவழித்திருப்பானேயானால் அதுதான் பெருமிதம் கொள்ளும் தருணம்.

தமிழகத்தில் சில எழுத்தாளர்களுக்கு உயரிய விருதுகள்கூட வந்தடைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் பெருமிதம் கொள்ளும் தருணத்தைச் சந்திப்பதற்கான வாய்ப்புகளே அவர்களுக்கு இருக்காது என்று தோன்றுகிறது.

சமீபத்தில் ஜெயகாந்தன் எழுதியுள்ள ‘ஹரஹர சங்கர’ நாவலும், சென்னையில் ‘ஸ்மஸ்கிருத ஸேவா ஸமிதி’ நடத்திய கூட்டத்தில் அவர் பேசிய பேச்சும், ‘அவுட்லுக்’ இதழில் அசோகமித்திரன் தெரிவித்துள்ள கருத்துக்களும், சுந்தர ராமசாமி காலச்சுவடு இதழில் எழுதியுள்ள சிறுகதையும், விவாதத்திற்கும் கடும் கண்டனத்திற்கும் உள்ளாக்கப்பட வேண்டியவைகளாக உள்ளன.

குஜராத் படுகொலைகளைக் கண்டு வாய் திறக்காதவர்கள்; மேலவளவு, தின்னியம் கீரிப்பட்டி என்று தலித்களின் மீதான தாக்குதலுக்கு எதிராகக் குரல் கொடுக்காதவர்கள்; ஜெயலலிதா 40க்கும் மேற்பட்டவர்களை பொடாவில் சிறைவைத்து, ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை வேலை நீக்கம் செய்தபொழுது சின்னதாக முணுமுணுக்கக்கூட செய்யாதவர்கள்; சங்கராச்சாரி கைதைத் தொடர்ந்து காட்டுக்கூச்சல் போட்டுக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

‘வர்ணவேறுபாடுகள் இருக்க வேண்டும், ஏற்றத்தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்’ என்று ஒருவர் சொல்கிறார். இந்த வர்ண வேறுபாட்டை உருவாக்கிய பிராமணீய கோட்பாட்டைப் புத்தெழுச்சிகொள்ளச் செய்ய ஒருவர் பிரயத்தனப்படுகிறார். பிராமணீய கோட்பாட்டால் நுகத்தடியில் நசுக்கப்பட்ட தலித்கள் மற்றும் பெண்களின் உயர்வை ஒருவர் சிறுமைப்படுத்துகிறார். இவ்வளவும் ஒரு குறிப்பிட்ட காலச் சூழலில் தமிழ் இலக்கிய உலகிற்குள் நடக்கிறது. இப்படி வெளிப்படையான பிராமணீய முகத்தோடு தங்களை அடையாளங் காட்டியுள்ளவர்கள்தான் கடந்த காலங்களில் கம்பீரமானவர்களாகவும், சாதுவானவர்களாகவும், அறிவார்ந்தவர்களாகவும் தங்களைப்பற்றிய பிம்பத்தை உருவாக்கி வைத்துள்ளனர். இந்த போலி பிம்பங்கள் தகர்க்கப்பட வேண்டும். இவர்களின் உண்மையான எண்ணமும், எதிர்பார்ப்பும் எதை நோக்கியது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அந்த அடிப்படையில்தான் இவர்கள் முன்வைத்துள்ள கருத்துக்கள் இங்கே விவாதிக்கப்படுகின்றன.

1. ஜெயகாந்தன்

Jayakandan

‘ஜெயேந்திரர் இந்து தர்மத்தின் மேன்மைக்காகப் போராடியவர் அவர் மீது காழ்ப்புணர்வு கொண்ட, அவரது கொள்கைக்கு எதிரானவர்கள் அவர் மீது பொய் குற்றச்சாட்டினைச் சுமத்துகிறார்கள். இவ்வாறு பொய் குற்றச்சாட்டு சுமத்தப்படப் போவதை அறிந்து முதல் நாள் இரவே சிவன் மாயாவி உருவத்தில் அவர் கனவில் தோன்றி, உனக்குத் தீங்கு வரப்போகிறது; எனவே மடத்தைவிட்டு வெளியேறு என்று சொல்கிறார். அதற்கு அவர் மனிதர்களுக்கு எதையும் நம்புவதைவிடவும் சந்தேகிப்பது இயல்பாக இருப்பதனால் தான் நாட்டில் நாத்திகம் பரவுகிறது, நான் மடத்தை விட்டு போய்விட்டால் மனிதர்களுக்குச் சந்தேகம் வரும்; அதனால் நாத்திகம் பரவும்; அதற்கு நான் ஒருபோதும் இடம் தர மாட்டேன் என்று சத்திய ஆவேசப்படுகிறார். இவரது சத்திய ஆவேசப் பார்வையைச் சந்திக்க முடியாமல் சிவனே மறைந்து போகிறார். அதன்பின் சத்தியத்தை நிலை நிறுத்த அவரே முன் வந்து கைதாகிறார்’.

‘ஹர ஹர சங்கர’ என்ற பெயரில் ஜெயகாந்தன் எழுதியுள்ள நாவலில் சொல்லப்பட்டுள்ள கருத்து இதுதான். 64 பக்கங்கள் எழுதப்பட்டுள்ள இந்த நாவலில் (நாவல் என்று அச்சிடப்பட்டிருப்பதால்) சகிக்க முடியாத உளறல்களே அதிகம். சிலவற்றை நாம் சிலேடையாக எடுத்துக் கொள்ளலாம். பெரியார், ஏகலைவன், வள்ளலார் ஆகிய மூவரையும் இழிவுபடுத்துவதில் இவருக்கு ஒரு தனி சுகம் கிடைக்கிறது. மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்புவதை மட்டற்ற மகிழ்ச்சியோடு செய்கிறார். அதற்கு ஒரு தத்துவ விளக்கம் வேறு கொடுக்கிறார். என்ன தத்துவத்தைச் சொன்னாலும் எழவு எச்சில் நாத்தம் பொறுக்க முடியவில்லை.

இரவோடு இரவாக மடத்தைவிட்டுப் போய்விடு என்று ஈஸ்வரனே சொன்னாலும் போகக்கூடியவரல்ல ஜெயேந்திரர் என்று புளகாங்கிதப்படுகிறார் ஜெயகாந்தன். உண்மைதான். ஆனால் அந்த உண்மையை சுற்றி வளைத்துச் சொல்லாமல் நேரடியாகச் சொல்லியிருக்கலாம். இருபது ஆண்டுகளுக்கு முன்னால் இரவோடு இரவாக மடத்தைவிட்டு அவர் வெளியேறிப்போனார். அதற்கு காரணம் அன்று இரவு ஈஸ்வரனை விட ‘சக்தி’யான ஒருவர் வந்து வழிகாட்டியிருக்க வேண்டும். பொதுவாக சக்தி வழிபாடுள்ள ஒரு மடத்தில் சிவனை விட சக்தி வழிகாட்டுதலையே அவர் அதிகம் பற்றி நின்றிருப்பார். மேலும் அன்று அவர் வெளியேறியதன் மூலம் நாத்திகம் பரவாமல் பார்த்துக் கொண்டார். லௌகீகம் தான் பரவியது. ஆனால் இன்று வெளியேறினால் நாத்திகம் பரவத்தான் வாய்ப்புள்ளது. எனவே தான் அன்று அவரை சக்தியால் வெளியேற்ற முடிந்தது. இன்று ஈஸ்வரனால் அவரை வெளியேற்ற முடியவில்லை.இந்த உண்மையைத்தான் குருடன் யானையைத் தடவியதைப் போல தடவிப்பார்த்துச் சொல்லியிருக்கிறார் ஜெயகாந்தன்.

‘ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர்களின் பெயரில் வந்துள்ள பீடங்களில் இருக்கிற எங்களுக்கு அவர் இட்டுள்ள முக்கியமான ஆக்ஞை என்னவெனில் நாங்கள் எப்போதும் ஈஸ்வரத் தியானம் செய்ய வேண்டும்... மற்றவர்களையும் தியானம் செய்யுமாறு பண்ண வேண்டும்...’ என்று சிறைக்குப் போவதற்கு முதல் நாள் இரவு ஜெயேந்திரர் சொல்வதாக ஜெயகாந்தன் சொல்கிறார்.

திரைப்பட நடிகை துவங்கி திருச்சி பெண்மணி வரை மடத்தின் லீலைகளோடு இணைத்துப் பேசப்பட்ட பெண்மணிகள் எத்தனை என்பதை நாடறியும். போலீஸ் விசாரணைக்கு ஆஜரானவர்களை ஊடகங்களின் மூலம் ஊரே பார்த்தது. எழுத்தாளர் அனுராதாரமணன் போன்றவர்கள் நேரடி சாட்சியங்களாகியுள்ளனர். மடத்தில் நடைபெற்ற இந்த வாத்ஸ்யாயன பராகிரமத்திற்கு ஜெயகாந்தன் வைத்துள்ள பெயர் ஈஸ்வர தியானம். அட ஈஸ்வரா !

‘கஞ்சா குடிப்பது கலை’ என்று சொன்ன அதே ஜெயகாந்தன் தான், இப்பொழுது காமலீலைகளை ஈஸ்வர தியானம் என்று சொல்லியிருக்கிறார். எனவே இதை சீரியஸானது என எடுத்துக் கொள்வதோ, சின்னத்தனமானது என எடுத்துக்கொள்வதோ ஆத்திகர்கள் செய்ய வேண்டிய முடிவு.

போலீஸ் வேனில் ஏறும் முன் மடத்தின் முன் குவிந்திருந்த பக்தர்களிடம் ஜெயேந்திரர் சொல்லுகிறார், ‘நம்பிக்கையைத் தளர விடாதீர்கள். காலன் வரும்போது மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைப் பற்றிக் கொண்டானே அந்த மாதிரி இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். சிவனடியார்களுக்கு வராத சோதனையா? பழியா? கல்லைக் கட்டிக் கடல்லே போட்டாளோன்னோ? கற்றுணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயமேன்னு சொன்னவாள்ளாம் சிவனடியார்கள் தான். எங்கேயிருந்தாலும் சிவசிவன்னு சொல்லிண்டிருங்கோ . . . நாடகம் நடந்து கொண்டுதானே இருக்கிறது . . . நடுவில் எதற்கு விமர்சனம்? ஈஸ்வரன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டுப் பொறுமையாயப் பார்த்து ரசியுங்கள்?’ என்று ஜெயேந்திரர் சொல்வதாக ஜெயகாந்தன் சொல்கிறார்.

ஆனால் நடந்ததென்ன ! கற்றுணை பூட்டிக் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயமே என்று சொல்லிக் கொண்டு சும்மா இருக்கவில்லை ஜெயேந்திரர். மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கே போகாமல் உயர்நீதிமன்றத்தில் நேரடியாக ஜாமீன் கேட்டு மனுவுக்கு மேல் மனு தாக்கல் செய்து கொண்டிருந்தார். யாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்று பேசவில்லை ‘நான் நீதிபதியை நம்புகிறேன் போலீசை நம்ப மாட்டேன்’ என்று தான் பேசினார். மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைப் பற்றிக் கொண்டதைப் போல வழக்கு என்று வந்தவுடன் ராம்ஜெத்மலானி முதல் நாடறிந்த வக்கீல்களைத் தான் நன்றாகப் பற்றி நின்றார். எல்லாம் மாயை என்ற சித்தாந்தவாதி ஜாமீன் பெற பட்டப்பாடு எவ்வளவு நிஜம் என்பதை ஜனங்கள் அறிவார்கள், ஜெயகாந்தன் அறிய வாய்ப்பில்லை.

சிறைக்குப் புகுமுன் பக்தர்களிடம் ஜெயேந்திரர் வைக்கும் வேண்டுகோள் இன்னும் விசித்திரமானது. ‘மடத்தில் உள்ள தொண்டர்களே எப்போதும் போல் ஸ்ரீகாரியத்தின் வழிகாட்டுதல் படி நடந்து கொள்ளுங்கள். என்னை ஜாமீனில் எடுக்கவோ, என் பொருட்டு ஆர்ப்பாட்டங்கள் எதுவும் செய்யவோ வேண்டாம். சோதனை காலத்தில் தான் நமது சுயம் தெரியும்! அதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். மனம் தளராதீர்கள். இந்த மாயைகளுக்கு வசப்படாதீர்கள்’ என்கிறார்.

இந்த இடத்தில் தான் ஜெயகாந்தன் தனது விசுவாசமிக்க மடத்தின் கீதா உபதேசத்தை மிக நன்றாகப் பதிவு செய்துள்ளார், எது செய்யப்படக் கூடாதோ அது செய்யப்பட வேண்டும். எது செய்யப்பட வேண்டுமோ அது செய்யப்படக் கூடாததாக சொல்லப்பட வேண்டும். எல்லாம் தன்னால் செய்யப்பட்டாலும் எதுவும் தன்னால் செய்யப்பட்டதாக சொல்லப்படக்கூடாது. அதையும் மீறி எவனாலாவது சொல்லப்பட நேர்ந்தால் அவன் கொல்லப்பட வேண்டும். கொல்லுதல் கொல்லப்படாதல் என்பது நம் கையில் இல்லை. சொல்லுதல் சொல்லப்படாதல் மட்டுமே நம் கையில் உள்ளது. எது உருவாக்கப்பட்டதோ அது அழிக்கப்படும். எது அழிக்கப்படுமோ அது உருவாக்கப்படும். என்னால் உருவாக்கப்பட்டது எப்படி என்னால் உருவாக்கப்பட்டதாக அறியப்படவில்லையோ, அதுபோல என்னால் அழிக்கப்படுவதும் என்னால் அழிக்கப்பட்டதாக அறியப்படாது (ஒரு வழக்கைத் தவிர).

இவைகள் தவிர மீதமுள்ள பக்கங்கள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ்சும் அதன் ஊதுகுழலான ஜெயேந்திரரும் கடந்த காலத்தில் பரப்பி வந்த விஷப்பிரச்சாரத்தைத் தான் அப்படியே பதிவு செய்துள்ளார்.

‘சமூகத்தில் செல்வம் படைத்தோரும், அரசும் போட்டியிடும் எல்லாத் துறைகளிலும், மடமும் அவர்களுக்கு இணையாக ஈடுபட்டு சமூகப்பணிபுரிய நேர்ந்தது. அதனால் தான் ஜெயேந்திரர் மீது இவ்வளவு கோபமும் பழியும் உருவானது’ என்று எழுதுகிறார்.

மதமாற்ற தடைச் சட்டத்தை ஆதரித்தது; ஆடு,கோழி பலியிடல் தடைச் சட்டத்தை ஆதரித்தது , பெண்களையும், தலித்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தி வந்தது; மதவெறி அமைப்புகளின் நிகழ்ச்சியில் பங்கெடுத்து சமூக மோதலுக்கான சூழலை உருவாக்கியது. இதில் எது சமூகப்பணி என்பதையும். எந்த சமூகத்திற்கான பணி என்பதையும் ஜெயகாந்தன் பட்டியலிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இதே காஞ்சி மடத்தைச் சேர்ந்த அன்றைய சங்கராச்சாரியார் காந்தியடிகளின் ஆலய நுழைவுப் போராட்டத்தை எதிர்த்தபொழுது எழுத்தாளர் கல்கி காஞ்சி சங்கராச்சாரி லோக குரு அல்ல. இந்து மதத் தலைவரும் அல்ல. ஒரு சாதியின் ஒட்டு மொத்தத் தலைவரும் அல்ல. ஒரு மடத்தின் நிர்வாகி மட்டும் தான். அந்த வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கட்டும், சமூக சீர்திருத்த விஷயங்களில் குறுக்கிட வேண்டாம்’ என்று எழுதினார்.

ஆனால் இன்று அனைத்து வித சமூகக் கொடுமைகளுக்கும் வக்காலத்து வாங்கி வலம் வந்து கொண்டிருந்த ஜெயேந்திரர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவுடன் அதை எதிர்த்து, இறைவனே இந்த கைது நடவடிக்கைக்கு முன்பே நீ மடத்தை விட்டு தப்பித்துவிடு என்று சொன்னாலும், இல்லை அப்படி நடப்பது கோழைத்தனம் என்று சொல்லி இறைவனை விட பெரியவராக நடந்து கொண்டார், என்று எழுதுகிறார் ஜெயகாந்தன்.

கல்கியின் எழுத்தைப் படித்தவுடன் பாரதியின் கவிதை வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது.

‘நிலத்தில் யாருக்கும் அஞ்சாத திமிர்ந்த ஞானச்செருக்கு’.

ஜெயகாந்தனின் எழுத்தைப் படித்தவுடன் கந்தர்வனின் கவிதை வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது.‘விதவிதமா மீச வெச்ச . . . வீரத்த எங்க வச்ச’ ‘இந்த தேசத்தில் எத்தனை வண்ணக் கொடிகள் வானுயரப் பறந்தாலும், அவற்றுக்கெல்லாமல் மேலாக இமயத்தின் கொடுமுடியில் ஏறிப்பறக்கும் பெருமை, இந்தக் காவிக்கொடிக்கே உண்டு என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆதிசங்கரரால் ஏற்கனவே பிரகடனப்படுத்தியாகிவிட்டது. அதற்கு அடையாளமாக இந்தியாவின் எல்லாக் குலங்களும் கெட்டுப் பாழ்பட்ட இந்தக் கலியுகத்திலும் ‘பெருமை’யோடு அந்தக் காவிக்கொடி இந்த திருமடத்தின் முகப்பில் பறந்து கொண்டு தான் இருக்கிறது.

சங்கரரும், சாணக்கியரும், சாவர்காரும் காணவிரும்பிய ஓர் ஹிந்து மத எழுச்சி எழுகிற போது நாம் ஒதுங்கி நிற்க வேண்டுமா? அத்தகைய எழுச்சிக்கு ஆக்கப்பணிபுரிவது எனக்குக் கிட்டிய ஈஸ்வர ஆக்ஞை அல்லவோ?’

இந்த பெருமிதமும், இறுமாப்பும் தான் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டவுடன் சிலரைத் துடியாய் துடிக்க வைத்தது. கொதித்து வெடித்தெழ வைத்தது. ஜெகத்குரு சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அவரை சட்டமோ, நீதிமன்றமோ தண்டிக்கக் கூடாது - மடங்களுக்குள்ளும், கோயிலுக்குள்ளும் போலீசு நுழைவதைத் தடை செய்ய தனிச்சட்டம் இயற்ற வேண்டும், இந்த வழக்கை குஜராத் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும். மிசாவுக்குப் பின் தேசம் சந்திக்கும் இருண்ட காலம் இது என்று ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. வகையறாத் தலைவர்களைக் கூற வைத்தது.

இந்த இறுமாப்பும், வைதீக வெறியும் தான் ‘காக்க காக்க கனகவேல் காக்க’ என்று இராமகோபாலனைச் சிறைவாசலில் நின்று கந்த சஷ்டி கவசம் பாட வைத்தது. ஜெயகாந்தனை மடத்தின் திசையைப் பார்த்துக் கொண்டு ‘ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர’ என்ற பஜனையை எழுத வைத்துள்ளது. எழுத்து என்ற மந்திரக் கண்ணாடி எழுத்தாளன் சொல்ல நினைப்பதை மட்டும் பிரதிபலிப்பதில்லை. அந்த நினைப்பிற்கு உள்ளே இருக்கும் உண்மையையும் சேர்த்தே பிரதிபலித்து விடுகிறது. ‘ஹர ஹர சங்கர’ விலும் அதுதான் நடந்துள்ளது. ‘துறவிக்கு வேந்தன் துரும்பு’ என்பது தான் எழுத்தாளன் பிரதிபலிக்க நினைத்தது. ஆனால் எழுத்தோ அதையும் தாண்டி ‘அடிமைக்கு இல்லை முதுகெழும்பு’ என்ற உண்மையையும் சேர்த்தே பிரதிபலித்து நிற்கிறது.

இந்நாவல் எழுதப்பட்டதன் நோக்கம் மிக வெளிப்படையானது. நூலாசிரியரே புத்தகத்தின் இறுதியில் ‘ஒரு நோக்கம் (பர்ப்பஸ்) இல்லாமல் வெறுமே இவனும் பணத்தைத் தேடிப் பறந்து கொண்டிருக்கிறான் என்றால் அப்புறம் இவன் பிராமணன் என்று தனியாக இருக்க வேண்டியதில்லை. இப்படி ‘பர்ப்பஸ்’ இல்லாமல் பிராமண ஜாதி இருந்தால் அதை மற்றவர்கள் அழிப்பதற்கு முன்னால் நானே அழித்து விட வேண்டும் போல் இருக்கிறது. பிரயோஜனம் (பர்ப்பஸ்) இல்லாமல் ஒரு வஸ்துவும் இருப்பதற்கு உரிமையில்லை. லோகத்துக்குப் பயன் இல்லாவிடில் பிராமண ஜாதி வேண்டியதே இல்லை’ என்று ‘பெரியவாள்’ சொல்லியதை எடுத்துப் போட்டு, லோக குரு கைது செய்யப்பட்டிருக்கிறார் பிராமணன் எல்லாம் வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பதா, சூது தர்மத்தின் வாழ்வை கவ்வுகிற நேரத்தில் நீ சும்மா இருக்கலாமா! உடனே புறப்பட்டு போர் முனைக்கு வா என்று தர்ம ஆவேசம் ஊட்டுவதற்காக எழுதப்பட்டது தான் இந்த நாவல்.

ஆர்.எஸ்.எஸ்.காரர்களும், வி.எச்.பி.காரர்களும் சென்னையில் கூட்டம் போட்டு, துப்பாக்கி எடுப்போம், வெடிகுண்டு வீசுவோம் என்று எதை மையப்படுத்தி பேசினார்களோ, அதை மையப்படுத்தித்தான் இந்த பழம்பெரும் எழுத்தாளர் நாவலை எழுதியுள்ளார். இவ்வளவு நல்ல நாவல் ஈன பாஷையில் மட்டுமே இருந்தால் போதாது. இங்கிலீசு பாஷையிலும் இருக்க வேண்டுமென ஒருவர் அவசர அவசரமாக ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளார். அதுதான் ஞான பீடத்தை அடைவதற்கான கடைசி கதவைத் திறந்துள்ளது என்று கருதுபவர் பலர் உள்ளனர்.

துளியும் இலக்கியத் தகுதி பெறாத ஒரு எழுத்தை, துளியும் சமூக பொறுப்பில்லாமல் நாவல் என்ற பெயரில் தமிழில் வெளியிடப்பட்டுள்ளதன் மீது தமிழ்ச் சமூகம் உரிய முறையில் எதிர்வினையாற்றாமல் விட்டுவிட்டது. அதனால் தான் ஞானபீடம் கிடைத்தவுடன் அவர் அடுத்தபடி மேலே போகிறார். ‘சமூக ஏற்றத் தாழ்வுகள் இல்லையென்றால் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்காது’ என்கிறார்.

‘தமிழிலேயே பேச வேண்டும், எழுத வேண்டும் என்பவர்களைத் தன்னைத் தானே நக்கிக் கொள்ளும் நாய்கள்’ என்கிறார். அடுத்த கூட்டத்தில் ‘நான் நாய் என்று பேசியதாகச் சொல்கிறார்கள். அதை சிங்கம் என்று திருத்திக் கொள்ளுங்கள்; ஆனால் சிங்கமும் மிருகம் தான்’ என்று பேசுகிறார். நால்வர்ண முறைதான் இந்து மதத்தையே காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்பதும் தமிழ் நீச பாஷை எனவே அதில் கும்பாபிஷேகம் செய்தால் தீட்டு என்பதும் ஏற்கனவே சங்கராச்சாரி தெரிவித்து வந்த கருத்துக்கள் தான். அதனையே தான் அவரது சிஷ்யகோடி ஜெயகாந்தனும் தெரிவித்துள்ளார்.

எனவே இனி நாம் நாயையோ! சிங்கத்தையோ! மிருகத்தையோ! ஜெயேந்திரரையோ! ஜெயகாந்தனையோ! பற்றிப் பேச வேண்டாம்.

2. அசோகமித்ரன்

‘அபவாதம் பேசக்கூடாதுன்னு நெனக்கிறவன் நான், நல்லா இல்லன்னா ஒத்துக்கிறனும். செக்ஸையோ, வன்முறையையோ, எழுத நான் விரும்பவில்லை. வன்முறையை விரித்தெழுத ஆட்கள் இருக்காங்க. சின்ன குழந்தை கூட படிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். மென்மையாக இருக்க வேண்டும். குழப்பம் விளைவிக்கக் கூடாது. வன்முறையையும் பிரமிப்பையும் தரும் படைப்பாளி வாசகனுக்குத் தீங்கு செய்கிறான் என்று தான் சொல்வேன். படைப்பாளி வாசகனைப் படித்தீர்களா? என்று கேட்பது கூட வன்முறைதான். என் படைப்பைப் படித்தீர்களா என்று கேட்க மாட்டேன்.’

Ashokamitran

இப்படித்தான் பிப்ரவரி 12ம் தேதி சென்னையில் தனது படைப்புகள் பற்றி நடந்த நிகழ்ச்சியின் ஏற்புரையில் அசோகமித்திரன் பேசினார். சில வாரங்களுக்குப் பின் அவுட்லுக் (ஏப்ரல் 11) இதழின் வழியே அவர் பேசியிருப்பது. இதற்கு நேர் தலைகீழானது மட்டுமல்ல மேலே சொன்னதுபோல் அல்லாமல், பாசாங்கற்ற மனம் திறந்த கருத்துப்பதிவு என்றே சொல்லலாம். தமிழகத்தில் இராமகோபாலனும், குருமூர்த்தியும் கூட இவ்வளவு வெளிப்படையாக சமீபத்தில் பேசியதாகத் தெரியவில்லை. அப்படியொரு பிராமண வெறியை, அது சார்ந்த மனக்கொதிப்பைக் கொட்டித் தீர்த்திருக்கிறார் அசோகமித்திரன்.

சாதுவான எழுத்தாளர், மென்மையானவர், அதிர்ந்து பேசத் தெரியாதவர் அபவாதம் பேச விரும்பாதவர் என்று சிலரால் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகின்ற அசோகமித்திரன் மேல் பூச்சு ஏதுவுமற்ற, தனது உண்மை முகத்தை ஆத்திரம் கொப்பளிக்க அவுட்லுக் இதழில் வெளிக்காட்டியுள்ளார். ‘தமிழ் பிராமண சமூகம் தண்டிக்கப்பட்ட ஒரு சமூகமாகவே தெரிகிறது. தமிழ் பிராமணர்கள் ஒரு நூற்றாண்டாக தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள். பிராமண இனம் காயடிக்கப்பட்டதாக உணர்கிறது. இவர்களின் நிலை 30களில் (ஹிட்லரின் காலத்தில்) இருந்த யூதர்களின் நிலையை ஒத்திருக்கிறது’ என்கிறார்.

‘பிராமணீயம் என்பதற்கு நான் கொள்ளும் பொருள் பிராமணர்கள் ஒரு சமூகம் என்ற வகையில் கொண்டிருக்கும் அதிகாரம், சிறப்புச் சலுகைகள், நலன்கள் என்பன அல்ல. நான் அந்தப் பொருளில் இச்சொல்லைப் பயன்படுத்துவதில்லை. பிராமணீயம் என்பதற்கு நான் கொள்ளும் பொருள் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற உணர்வின் மறுப்பு என்பதாகும். இந்தப் பொருளில் நாம் பார்த்தோமேயானால் பிராமணீயம் என்பது எல்லா வகுப்புகளிலும் கட்டுக்கடங்காதபடி இருப்பதைப் பார்க்கலாம். பார்ப்பனர்கள் தாம் அதன் மூல கர்த்தாக்கள் என்ற போதிலும் அவர்களோடு மட்டும் அது மட்டுப்பட்டிருப்பதில்லை’ என்று அம்பேத்கார் குறிப்பிட்டார். இந்த அர்த்தத்தில் தான் பிராமணீயம், பிராமணர் என்ற சொல்லை நாம் பயன்படுத்துகிறோம்.

பிராமணீயத்திற்கு இப்பொழுது என்ன நெருக்கடி வந்துவிட்டது? யூதர்கள் நடத்தப்பட்டதைப் போல நாங்கள் நடத்தப்படுகிறோம் என்று அசோகமித்திரன் கதறுவதற்கு என்ன காரணம்? 1980களுக்குப் பின் இந்துத்துவாவின் வலதுசாரி அரசியல் தீவிரமடைந்தன் விளைவாக அது அதிகாரத்தை நோக்கி முன்னிலும் வேகமாக நகர்ந்துள்ளது. உள்ளுக்குள் மறைத்து மெல்ல பேசிக்கொண்டிருந்தவைகளையெல்லாம் இப்பொழுது வெட்ட வெளிச்சமாகவும் தைரியமாகவும் பேசிக் கொண்டிருக்கிறது. தனக்கு மிக சாதகமான நிலையை அரசியல் தளத்தில் அது உருவாக்கியுள்ளது. அப்படியிருக்க அசோகமித்திரன் இவ்வளவு ஆத்திரப்பட்டு பேசுவதற்குக் காரணம் சமீபத்தில் நடந்த சங்கராச்சாரி கைது மட்டும் தான்.

தமிழ்நாட்டு அந்தணர் குலத்துக்கே ஓர் உன்னத இலக்காய் இருந்த மடம் (உபயம் ஹரஹரசங்கர) பிராமணீய கோட்பாட்டின் சின்னமாய் விளங்கிய திருத்தலம். டில்லி முதல் சென்னை வரை அனைத்து அதிகார மையங்களையும் தனது காலில் விழ வைத்து அகமகிழ்ந்து கொண்டிருந்த இடம், இன்று சந்தி சிரிக்கும்படியாகிவிட்டது.‘கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி காமம் செப்பாது கண்டது மொழியுமோ’ என்று மடத்திற்குள் நடந்த ஆய்வுக்குக் காஞ்சிபுரம் காட்டு பங்களாவில் பல உரையாசிரியர்களும், பாடல் பெற்ற ஸ்திரிகளும் நேரில் வந்து விளக்கம் கொடுத்தபொழுது மக்களுக்கு உண்மையான பொருள் விளங்கியது. உண்மை என்பது சந்தனத்தை சந்தனம் என்று சொல்லுவதைப் போலவே சாக்கடையைச் சாக்கடை என்றும் சொல்கிறது.

உண்மை வெளிவரும் பொழுது சிலருக்கு அவயமெல்லாம் நெருப்பாய் எரிகிறது. ஜனாதிபதி அரசியலுக்கு அப்பாற்பட்டவர் எனவே ஓட்டளிக்கக்கூடாது என்று சொன்ன ஆர்.வெங்கட்ராமன் டெல்லி வீதியில் உட்கார்ந்து உண்ணாவிரதம் இருக்கிறார். ‘குழந்தைகள் கூட படிக்கும்படி மென்மையாகத்தான் எழுதுவேன்’ என்று சொல்லும் அசோகமித்திரன் ஆத்திரத்தோடு இரத்தக் கரையேறிய வார்த்தைகளை வீசி எரிந்து களத்தில் குதிக்கிறார்.

கோணிப்பைக்குள் இருந்து வெளியில் வரும்பொழுது தான் தெரிகிறது. உள்ளே கிடந்தது பூனையா, அல்லது சுருண்டு கிடந்த கருநாகமா என்பது.

‘பிராமணர்கள் என்றைக்குமே கோஷம் போட்டதோ, கொடி பிடித்ததோ கிடையாது.’ என்கிறார் அசோகமித்திரன் இவர் இப்படி சொல்வதற்குக் காரணம் பிராமணர்கள் தங்களது பிராமணீய கோட்பாட்டிற்காக என்றைக்கும் கோஷம் போட்டதோ, கொடி பிடித்ததோ கிடையாது என்பதால் தான். பிராமனணீய கோட்பாட்டிற்காக நிற்கிற பொழுதுதான் பிராமணன் என்ற அடையாளம் முழுமையடைகிறது என்பது அதன் அர்த்தம். இந்தக் காரணம் உண்மையானது. எந்த ஒரு பெரும் நெருக்கடியையும் இன்றைக்கு வரை பிராமணீயம் சந்திக்கவில்லை. அதிகாரத்தின் ருசியை அனு அனுவாக அது சுவைத்துக் கொண்டிருக்கிறது. எனவே அதிகாரத்திற்கு எதிரான அரசியல் நடவடிக்கையான கோஷம் போடுவது என்பதோ, கொடிபிடிப்பது என்பதோ அதனுடைய அகராதியிலே இல்லாத வார்த்தை. அதனால் தான் அசோகமித்திரன் அப்படி சொல்கிறார்.

அது மட்டுமல்ல, பிராமணன் கோஷம் போட்டதோ, கொடி பிடித்ததோ கிடையாது என்பதைப் போல அரசாட்சி செலுத்தியதும் இல்லை. ஒரு சில விதி விலக்குகளைத் தவிர.

அசோகன் காலத்திற்குப் பின் பௌத்தம் தழைத்தோங்கியது, கொள்ளாமை தத்துவம் பெரும் செல்வாக்கைப் பெற்றது, உயிர்ப் பலிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டதால் பிராமணீய சமூகம் தனது செயலின் ஆணி வேரை இழந்தது போல் ஆனது. யாகங்கள் நடத்துவது, அதில் பலியிடுவது, அதற்காக தட்சணை பெறுவது என அனைத்தையும் அது இழந்து தாழ்ந்த நிலையை அடைந்தது.

இந்நிலையில் தான் அசோகரின் கொள்ளுப்பேரன் பிருகத்ரதன் காலத்தில் அவனுடைய தளபதியாக இருந்த புஷ்யமித்ரன் எனும் பிராமணன், மன்னனைக் கொலை செய்து ஆட்சியைப் பிடித்தான். ஆட்சியைக் கைப்பற்றியவுடன் புத்த பிட்சுக்களை ஒழிக்கவும் பௌத்த சமயத்தை அழிக்கவும் மிகக்கொடிய வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டான்.

புத்தபிக்குகளின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு 100 பொற்காசுகள் என அறிவித்தான். வெட்டிக்கொண்டு வரப்பட்ட பல்லாயிரம் பௌத்தத் துறவிகளின் தலைகளைக் கொதிக்கும் நெய்க்கொப்பரையில் போட்டு எடுத்துக் குப்பையில் வீசினான்.

இவன் காலத்தில் தான் அதுவரை செவிவழிக்கதையாக இருந்து வந்த இராமன் பற்றிய செய்திகளைத் தொகுத்து இராமாயணத்திற்கு முதன் முதலாக வடிவம் கொடுக்கப்பட்டது.

பௌத்தத்திற்கு எதிரான பிராமணீய வெற்றியின் கோட்பாடுகளைத் தொகுத்து பிராமணீய சட்டத் தொகுப்பான மனுஸ்மிருதி உருவாக்கப்பட்டது. அந்த மனுஷ்மிருதி தான் பிராமணீயத்தின் உயிர்நாடியாக மாறியது.

ஒரு பிராமணன் சட்டபூர்வமாக மன்னன் ஆகவும், சட்டபூர்வமாக ஆயுதம் ஏந்தவும், சதுர்வர்ணத்துக்கு எதிராகவுள்ள மன்னனைச் சட்டப்பூர்வமாக கொலை செய்யவும், பிராமணனின் அதிகாரத்தை எதிர்க்கும் எந்த குடிமகனையும் சட்டப்பூர்வமாக கொல்லவும் மநு விதி செய்தான் என்றால் அன்று புஷ்யமித்திரன் என்ற பிராமணன் மன்னனாக இருந்ததால் தான் அது சாத்தியமானது.

அதன்பின் மனுவின் சட்டங்களே சமூக விதிகளாக மாற்றப்பட்டன, அவைகளே சாஸ்திரங்களாகவும், கதைகளாகவும், இதிகாசங்களாகவும், கடவுள்களாகவும் மாறி பிராமண ஒழுக்கத்தையே சமூகத்தின் பொது ஒழுக்கமாக ஆக்கியது. தனது சிந்தாந்த மேலாண்மையை சமூகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் அது நிலை நிறுத்தியது.

அதன்பின் தனி பிராமணனை ஆட்சியில் அமர வைக்க வேண்டிய தேவை பிராமணீயத்துக்கு இல்லாமல் போனது. யார் ஆட்சியில் இருந்தாலும் ஆட்சி செய்யப்போவதென்னவோ பிராமணீய கோட்பாடே, வர்ணாசிரம சட்டங்களே, சாதீயப் படிநிலையிலான ஒழுக்கங்களே, அதை மீறுகிற யாரையும் மன்னன் அனுமதிக்கமாட்டான். சாஸ்திரங்களும், கடவுள்களும், வேதங்களும் அனுமதிப்பதில்லை.

எனவே எல்லா இடங்களிலும் மன்னனையும், நாட்டையும் விட பிராமணன் முக்கியத்துவமானவனாக மாறினான். ஒரு நாட்டின் மீது வேற்று நாட்டு மன்னன் படையெடுக்கும் போது, அந்த நாட்டில் உள்ள பிராமணனை வெளியேறச் சொல்லிவிட்டுத்தான் படையெடுக்க வேண்டும் என்பதை நமது புறநானுப்று சான்று பகர்கின்றது. கண்ணகி கற்பின் நெருப்பு கொண்டு மதுரையை எரிக்கும் பொழுது முதல் விதிவிலக்கை பிராமணர்களுக்கு அளிக்கிறார்.

‘பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்

மூத்தோர், குழவி எனும் இவரைக் கைவிட்டுத்

தீத்திறந்தார் பக்கமே சேர்க’ என்கிறாள்.

இவ்வாறாக மிக நீண்ட இந்திய வரலாறு முழுவதும் பிராமணர்கள் ஆட்சியில் அமராமலும், கொடி பிடிக்காமலும், கோஷம் போடாமலும் இருந்துள்ளனர். ஏனென்றால் அவர்களுக்காகத்தான் வேதங்களும், உபநிதங்களும் கோடிக்கணக்கான கடவுள்களும் ஆட்சி செய்து வருகின்றனர். பின் அவர்கள் யாருக்காக ஆட்சி செய்ய வேண்டும். கொடி பிடிக்க வேண்டும். கோஷம் போட வேண்டும்.

‘பிராமண எதிர்ப்பு இயக்கம் ஆதிக்கத்தில் இருப்பதால் நகர்ப்புறத்துப் பிராமணர்கள் தங்கள் குல அடையாளங்களைத் தவிர்க்க ஆரம்பித்துவிட்டனர். குடுமி போய்விட்டது. பிராமணரல்லாதோரைப் போல் மீசை வைத்துக் கொள்கிறார்கள். பிராமணப் பேச்சு வழக்குப் போய்விட்டது. சிலர் மாமிசம் புசிக்கின்றனர்’ என்கிறார் அசோகமித்திரன்.

காலத்திற்கு ஏற்றாற்போல் ஈடுகொடுத்து எல்லா சமூகத்திலும் பழக்க வழக்கங்கள் சம்பிரதாயங்கள், அடையாளங்கள் ஆகியவை மாறியுள்ளதைப் போல பிராமண சமூகத்திலும் மாறியுள்ளது. போன நூற்றாண்டில் இருந்த இந்திய கிராமம், இன்று இல்லை. அன்றிருந்த பழக்க வழக்கங்களில் இன்று எவ்வளவோ மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதுவும் அறிவுத்துறையைக் காலகாலமாக கையில் வைத்திருந்த பிராமண சமூகம் நவீன காலத்திற்கு ஏற்ப வாழ்தல் பொருட்டு எத்தனையோ மாற்றங்களுக்குத் தன்னை உள்ளாக்கிக் கொண்டது. அப்படி உள்ளாக்கிக் கொண்டதனால் தான் மீண்டும் மீண்டும் அது தனது உயர்ந்த, பலம் மிகுந்த இடத்தைத் தக்க வைக்க முடிந்துள்ளது.

அக்கிரகாரத்தை விட்டுப் போகமாட்டேன் என்று அது அடம்பிடிக்கவில்லை. அதிகாரம் நகரத்தில் கோலோச்சும் வெள்ளைக்காரன் கையில் இருக்கிறது எனத் தெரிந்த பின் அக்கிரஹாரத்தில் குத்த வைத்து உட்கார்ந்திருக்கவில்லை. அதிகாரத்தை நோக்கி அக்கிரஹாரத்தை விட்டு முதலில் வெளியேறி ‘டவுனுக்கு’ வந்தது, மிலேச்சனின் பாஷையான ஆங்கில பாஷையே அதிகாரத்தின் தேவ பாஷையாக இருந்ததால் மற்றவர்களை விட வேகமாகவும், முதன்மையாகவும் அது கற்றறிந்து கொண்டது, கடல் தாண்டிப் போவதை சாஸ்திரங்கள் அனுமதிப்பதில்லை என்று கிணற்றுத் தவளையாய் அது இருந்து விடவில்லை. கடல் தாண்டிப் போய் மேற்கு உலகில் தனது விஸ்தாரமான ஆதிக்கத்தை இன்று நிலை நிறுத்தியுள்ளது. கடவுளர்களும் அங்கே போய்விட்டர்கள். பிராமணர்களுக்கே இல்லாத சாஸ்திரம் கடவுளர்களுக்கு என்ன இருக்கிறது பாவம். உருவாக்கியவனுக்குப் பின்னால் போக வேண்டியது தானே உலகநியதி. அதன்படி கடவுளர்களும் போய்ச் சேர்ந்துள்ளனர்.

பிராமண சமூகம் தனது வெளிப்புற நடவடிக்கைகளில் பாரம்பரிய வைதீக நடைமுறையைத் தேவையின் பொருட்டு எப்படி மாற்றிக் கொண்டதோ, அதேபோல உள்ளுக்குள்ளும் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டது.

சூத்திரங்கள் விதித்துள்ளபடி ஒரு பிராமணன் கர்ப்பதானம், பும்சவனம், சீமந்தம், ஜாதகர்மம், நாமகரணம், அன்னப்பிராசனம், கௌளம், உபநயனம், விவாகம் என்ற சமஸ்காரங்களை (சடங்குகளை) முறையாகச் செய்கிறானா, என்று கேட்டால் அதற்கு வாய்ப்பே இல்லை என்பது அனைவருக்கும் தெரியும், அசோகமித்திரனுக்கும் தெரியும்.

பூணுலுக்கான நூலினைத் தயாரிக்கும் போது கடை வீதியில் விற்கும் பருத்தியினை வாங்கி தயாரிக்கக் கூடாது, பருத்திச் செடியிலிருந்து நேரடியாக பருத்திச் சுளைகளை எடுத்து தயாரிக்க வேண்டும் என்ற சடங்கை இன்று பின்பற்ற முடியுமா என்ன?

பிராமணர்கள் தங்களின் மணச்சடங்குகளின் போது க்ருக்ய சூத்திரங்களை முறையாக பின்பற்றுகின்றனரா? நாள் தோறும் தரப்பட வேண்டிய பலிச்சடங்கினை இன்று எத்தனை பிராமணர்கள் செய்கின்றனர். இச்சடங்குகளில் ஓதப்பட வேண்டிய மந்திரம் எத்தனை பேருக்குத் தெரியும். சாவுச் சடங்குகளும் நீத்தார் நினைவுச் சிரார்த்தங்களும் முழுமையாக செய்யப்படுகின்றனவா? கருட புராணத்தை ஆதாரமாகக் கொண்ட இறந்தவர்கள் தொடர்பாக செய்யப்படும் சடங்குகள் பத்து நாட்களுக்கு முறையாக செய்யப்படுகின்றவையா?

‘ஒரு பிராமணன் கடைபிடிக்க வேண்டிய அகன்னிகங்கள் எனப்படும் அன்றாட நெறிமுறைகள் பலவாம். இன்று சமயஞ்சார்ந்த வாழ்க்கையை முழுமையாக மேற்கொண்டுள்ள பிராமணர்கள் ஒரு சிலரே. இவர்களுள் பலரும் ஊர்புறங்களிலிலேயே வாழ்கின்றனர். குளித்தல், சந்தி செய்தல், பிரம்ம யக்ஞம், தேவ பூசை அல்லது தேவ தரிசனம், தர்பணம், வைஸ்வ தேவச் சடங்கு, புராண, இதிகாசங்களைப் படித்தல் என்பன அன்றாடம் மேற்கொள்வதற்குரிய செயல்களாம். ஒவ்வொரு சமய நெறிப்பட்ட பிராமணனும் சூரியன் உதிக்க ஒன்றரை மணி நேரம் முன்னதாக பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலையில் துயிலெழ வேண்டும். அவன் தன் பற்களை மாவிலை அல்லது கருவேல் அல்லது வேப்பங்குச்சியால் விளக்கித் தூய்மை செய்ய வேண்டும். பின்னர் ஆற்றிலோ குளத்திலோ முழங்காலளவு நீரில் நின்று பின்வருவனவற்றைக் கூறியபடி குளிக்க வேண்டும் ....... இது உபநயனச் சடங்கினை முடித்துக் கொண்ட ஒவ்வொரு பிராமணனும் தவறாது செய்ய வேண்டிய கடமையாகும். எனினும் பெரும்பாலோர் இதனைக் கடைபிடிப்பதில்லை’ என்கிறார். புகழ்பெற்ற மானுடவியல் ஆய்வாளர் எட்கர்தர்ஸ்டன் (தென்னிந்திய குலங்களும் குடிகளும் - பாகம் ஒன்று, பக்கம் 390).

நூறு ஆண்டுகளுக்கு முன்பே பிராமண சமூகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் எட்கர் தர்ஸ்டன். ஆனால் நூறு ஆண்டுகளுக்குப் பின்பு பிராமணர்கள் குல அடையாளங்களைத் தவிர்க்க ஆரம்பித்துவிட்டனர், குடுமி போய்விட்டது, மீசை வைத்துக் கொள்கிறார்கள், பிராமணப் பேச்சு வழக்கு போய்விட்டது. மாமிசம் புசிக்கின்றனர் என்று பதறுகிறார் அசோகமித்திரன். அதுமட்டுமல்ல இவைகள் எல்லாவற்றிற்கும் பிராமண எதிர்ப்பு இயக்கமே காரணம் என்கிறார். அப்படியென்றால் பிராமண எதிர்ப்பு இயக்கம் உருவாவதற்கு முன்பே கடந்த (19) நூற்றாண்டில் பிராமண சமூகம் இழந்த சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் பட்டியலிடுகிறாரே தர்ஸ்டன் அதற்கு யார் காரணம்?

பிராமணர்கள் மாமிசம் புசிப்பதற்குக் கூட பிராமணர் எதிர்ப்பு இயக்கத்தைக் காரணம் சொல்லும் அசோகமித்திரனர் பிராமணர்களில் இரு பெரும் பிரிவுகளில் ஒன்றான பஞ்ச கௌடர்கள் மீனும், ஊனும் உண்ணுபவர்கள் தானே அதற்கு யார் காரணம்?

அசோகமித்திரன், பிராமணத் தூய்மைக்காக வரிந்து கட்டிக் கொண்டு வாதாடுகிறார். எந்த ஒரு பிராமண அடையாளமும் மாற்றத்திற்குள்ளாவதையோ, மறக்கப்படுவதையோ அவர் விரும்பவில்லை. ஆனால் யதார்த்த வாழ்க்கை பலமாற்றங்களையும் தவிர்க்க முடியாததாக்கியுள்ளது. இந்த மாற்றங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்பது அவருக்குத் தெரியும் ஹைடெக் யுகத்தில் தர்பைப்புல்லைத் தேடிக் கொண்டிருக்க முடியாது என்பதை அவர் அறிவார். ஆனால் தனது பிராமணத் தூய்மையை நிலை நிறுத்தலின் பொருட்டு இந்த மாற்றங்களுக்கு எல்லாம் பிராமண எதிர்ப்பு இயக்கமே காரணம் என்று குற்றம் சாட்டுகிறார். சகல பாவங்களையும் சூத்திர, பஞ்சம மக்களின் மீதே மீண்டும் சுமத்துகிறார். ஆண்டாண்டுகாலமாய் செய்து வந்த வழக்கப்படி.

‘பிராமணர்கள் உயிர் பிழைத்திருப்பதற்கான தந்திரோபாயங்களைச் செய்து வாழ வேண்டிய சூழலில் இருப்பதாக’ அசோகமித்திரன் கூறுகிறார். அப்படி என்ன மிகப்பெரிய நெருக்கடி பிராமணர்களுக்கு தமிழகத்தில், இந்தியாவில் இன்று வந்துவிட்டது. எதை வைத்து இந்த முடிவுக்கு அவர் போகிறார். பிராமணர்கள் மீசை வைத்துக் கொள்ளவும், மாமிசம் புசிக்கவும் செய்கின்றனர் என்பதைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாமல் தான் இந்த காட்டுக் கூச்சல் போடுகிறார். உண்மையில் பிராமணீயமானது பலவிதமான தந்திரோபாயங்களைச் செய்துதான் வரலாறு முழுவதும் நகர்ந்து வந்திருக்கிறது. ஆனால் அது உயிர் பிழைப்பதற்கான தந்திரோபாயங்கள் அல்ல. அதிகாரத்தை பிடிப்பதற்கான தந்திரோபாயங்கள், பிடித்த அதிகாரத்தைத் தக்க வைப்பதற்கான தந்திரோபாயங்கள்.

அதனுடைய நெடிய வரலாறு முழுவதையும் பார்த்தோமேயானால் அதன் தந்திரோபாயங்கள் எவ்வாறு எதிரெதிர் முனைக்கு மாறியது என்பதையும் அதிகாரத்தை கைப்பற்றுதல் என்பது மட்டுமே அதற்கான அடிப்படை காரணமாக இருந்துள்ளது என்பதனையும் யாரும் எளிதில் அறிந்து கொள்ளலாம் அதற்கு சில உதாரணங்கள்.

(அ) வேதங்களோ, பிராமணங்களோ, உபநிடதங்களோ, கால்நடைகள் கொல்லப்படுவதையும் மாட்டிறைச்சி உண்பதையும் குற்றமெனச் சொல்லவில்லை. மாறாக வேள்வியின் பொழுதும், விருந்தின் பொழுதும் மாட்டிறைச்சி எவ்வாறெல்லாம் பரிமாறப்பட்டன என்று தான் அவைகள் வர்ணித்தன. ‘அவர்கள் எனக்காக பதினைந்து இருபது எருதுகளைச் சமைத்தார்கள்’ என்று இந்திரன் கூறுவதாக ரிக் வேதம் கூறுகிறது. ‘ஒரு பக்தனின் துதி பாடல், அல்லது அவன் தந்த விறகு அல்லது அவன் தந்த உணவு ஆகியவை மிகுந்த பக்தியோடு தரப்பட்ட உயிர்ப்பலிக்குச் சமம்’ என்கிறது ரிக் வேதம்.

‘பசுவும் காளையும் புனிதமானது ஆகவே அவற்றின் இறைச்சியை உண்ண வேண்டும்’ என்கிறது தர்ம சூத்திரம். ‘ஒரு புனித சடங்கில் உரிய முறையில் ஈடுபட்டிருப்பவன் அவற்றை முன்னின்று நடத்துபவன் அந்த சடங்கின் இறைச்சியை உண்ண மறுத்தால் இறந்தபின் 21 பிறவிகளில் ஒரு பிராணியாக இருந்து வருவான்’ என்கிறான் மநு.

இதுமட்டுமல்ல. பௌத்த இலக்கியத்தின் வாயிலாக கசாப்புக்காரர்களாகச் செயல்பட்ட அந்தணர் பற்றி அறிய முடிகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இவ்வாறாக ஆதிகாலம் தொட்டு மாட்டிறைச்சியை ருசித்தும், சுவைத்தும் தின்று கொண்டிருந்த பிராமணர்கள் சமூகத்தின் உயர்ந்த இடத்தில் இருந்த பௌத்த பிட்சுக்களிடமிருந்து மேலாதிக்கத்தைக் கைபற்ற புதிய தந்திரமாக மாட்டிறைச்சி உண்பதை நிறுத்தினார்கள். பௌத்தத்தையும் அதன் செல்வாக்கையும் ஒழித்துக்கட்டுவதன் ஒரு பகுதியாக மாட்டிறைச்சி திண்பதை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் பசுவை வழிபடவும் ஆரம்பித்தனர்.

முன்பு மாட்டிறைச்சியைத் தின்று கொண்டிருந்த பொழுது காளி புராணத்தில் ருதிர் அத்தியாயத்தில் (இரத்த அத்தியாத்தில்) சிவபெருமான் தனது மகன்களிடம் கூறுகிறான் ‘பறவைகள், ஆமை, முதலை, மீன் ஒன்பது வகையான காட்டு விலங்குகள், எருமைகள், காளைகள், வெள்ளாட்டுக் கிடாக்கள், கீரிகள், காட்டுப்பன்றிகள், காண்டாமிருகங்கள், மான்கள், உடும்புகள், பனிப்பிரதேசமான்கள், சிங்கங்கள், புலிகள், மனிதர்கள் கியோரின் இரத்தமும், கொடுப்பவனின் சொந்த உடலின் இரத்தமும், தேவி சண்டிகாவுக்கும் பைரவர்கள் முதலானவர்களுக்கும் தகுந்த நிவேதனங்களாகக் கருதப்படுகின்றன.

மனிதப்பலி புனிதமான வழிபாடு நடக்கும் இடத்திலோ அல்லது இறந்த உடல்கள் புதைக்கப்படுகின்ற இடுகாட்டிலோ அளிக்கப்படட்டும்.

பலியாகும் மனிதனைப் பைரவருக்குப் புனிதமான கிழக்குப் பகுதியில் பலியிட வேண்டும். தலையைப் பைரவிக்குப் புனிதமானதாகக் கருதப்படும் தெற்குப்பகுதியில் அளிக்க வேண்டும். இரத்தத்தை ஹெருகா என்று கூறப்படும் மேற்குப் பகுதியில் அளிக்க வேண்டும்’ என்று.

ஆனால் இப்பொழுது மாட்டிறைச்சி தின்பதை நிறுத்தி தங்களைப் பௌத்தர்களை விட அஹிம்சாவாதிகளாகக் காட்டிக் கொள்ள நினைத்தவர்கள். காளி தேவிக்குப் பதில் காமதேனுவைப் படைத்தனர். அது மென்மையானது, மேன்மையானது புனிதமானது, அதன் உடம்பில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வசிப்பதாகக் கூறினர். அது தொழப்பட வேண்டிய அன்னை என்றனர். செல்வங்களைச் செழிக்கச் செய்யும் புனித உரு என வர்ணித்தனர்.

காண்டாமிருகத்தின் தலை முதல் மனிதர்களின் தலைவரை பலியிடப்பட்டு இரத்தக்கரை திசைகள் தோறும் தெரித்துக் கிடந்த அந்த வழிபாட்டுத் தளத்தில் அழகிய காமதேனுவை அனுப்பி வைத்து பசும்புல் மேய வைத்தார்கள். அதன் புனிதமான கோமியம் இரத்தக் கரையைக் கழுவியது. அது இட்ட சானத்தில் கபால ஓடுகள் மறைந்தன. மாமிசங்களின் மீது வளர்ந்த செடி கொடிகளை தின்று அது தானாகப்ப் பால் சுரந்தது, தேவர்களும், பிராமணர்களும் பலியிடப்பட்டவர்களின் இரத்தத்தைப் பாலாக மாற்றிப் பருகினர். மாமிசம் புல்லானது, புல் இரையானது, இரை பாலானது, பால் மீண்டும் மாமிசமானது.

இந்த மோசடியைத் தான் அம்பேத்கர் மிகச் சரியாகக் குறிப்பிட்டார். ‘முள்ளை முள்ளால் எடுக்கும் நடவடிக்கையைப் போல, இடது சாரிகளைச் சமாளிக்க எல்லா வலது சாரிகளும் அவர்களை விட தீவிரமாக பேசுவதைப் போல பிராமணர்கள் பௌத்தர்களை வெற்றி கொள்ள அவர்களைவிடத் தீவிரமாக கொல்லாமையைப் பேசினர்’ என்று.

சுவைத்து தின்ற மாட்டிறைச்சியைப் புனித உருவாக மாற்றியது என்பது மேலாதிக்கத்தை நிலை நிறுத்தும் போராட்டத்தில் பிராமணர்களுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்த தந்திரோபாயங்களில் ஒன்று.

(ஆ) கொல்லாமை, அஹிம்சை போன்ற கோட்பாடுகளால் பௌத்தம் செல்வாக்குப் பெற்று இருந்தபொழுது யாகத்தை மையப்புள்ளியாக கொண்ட பிராமணீயத்தின் செல்வாக்கும் அதிகாரமும் தளர்ந்தன. இதனால் பிராமணீய சமூகத்துக்குப் பேராபத்து உருவானது இந்நிலையில் பிராமணீயம் புத்துயிர் பெற ஏற்கனவே மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழும் ஆரியரல்லாத இனக்குழு மக்களின் எண்ணிலடங்கா தெய்வங்களைத் தனதாக்கிக் கொள்ளும் தந்திரத்தைக் கையாண்டது. மேலாதிக்கத்தை நிலை நிறுத்தும் பொருட்டு தனது புனிதத்தில் கலப்படம் செய்ய முன் வந்தது.

அதன்படி வேத காலத்தில் சிறப்பான இடத்தில் இருந்த இந்திரனையும், பிரம்மாவையும் அது அந்த இடத்திலிருந்து கைவிட்டது. விஷ்ணுவையும் சிவனையும் பிரதானமாக்கியது. இந்திரன் வரம் கேட்டு விஷ்ணுவிடம் தவம் இருப்பதாக புராணங்களைத் தோற்றுவித்தது. எண்ணற்ற ஆரியரல்லாத இனக்குழு மக்களின் கடவுள்களை விஷ்ணுவின் அவதாரமாகவும், சிவனின் அவதாரமாகவும் அது ஆக்கியது.

வேதத்துக்குப் புறம்பான சிவசங்கரன், ஆரியரல்லாத சுமேரீயக் கடவுளான நாராயணன் பிராமணர்களைக் கொல்வதையே தொழிலாகக் கொண்ட சங்கர்ஷணர், யாகங்களைக் கண்டித்து இந்திரனுக்கு எதிராக மேரு மலையைத் தூக்கிப் போராடிய ஆயர் குல தெய்வமான கிருஷ்ணன், விவசாயம் செய்து பிழைத்த மக்களின் கடவுள் பலராமன் என அனைவரையும் தனது அவதாரக் கோட்பாடுகள் மூலம் உள் வாங்கிக் கொண்டது பிராமணீயம்.

வேதகாலத்தில் தலைசிறந்த இடத்திலிருந்த பிரம்மனும், இந்திரனும் தலை குப்புற கவிழ்க்கப்பட்டதற்கும், ஆரியரல்லாத இனக்குழு மக்களின் கடவுள்கள் கூட அவதாரமாக்கி புகழப்பட்டதற்குமான காரணம் மேலாதிக்கத்தை நிலை நிறுத்த பிராமணீயம் செய்த தந்திரம் தான்.

(இ) இதன் தொடர்ச்சியாக பக்தி இயக்க காலத்தில் அது செய்த தந்திரோபாயங்களை எல்லாம் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. இவைகளெல்லாம் மிக பழைய காலமென்றால் மிகச் சமீபத்தில் உதாரணங்களைப் பார்ப்போம். 1947 ஆகஸ்ட் 15க்குப் பின் உருவாக இருந்த புதிய அரசியல் சாசன சட்டத்தில் தங்களது பிராமணீய மேலாதிக்கத்தை நிலைநிறுத்த இவர்கள் செய்த தந்திரங்கள் எண்ணற்றன.

பிராமணீய வெறிபிடித்த கும்பலும், ஜனசங்கமும், சங்கராச்சாரியார்களும் சேர்ந்து கொண்டு தங்களின் நோக்கத்திற்குத் தடையாய் இருந்த அம்பேத்காரை அமைச்சரவையில் இருந்து வெளியேறும் படி செய்துவிட்டு, தங்களின் விருப்பப்படியான இந்துச் சட்டத்தை 1955ல் நிறைவேற்றினார்கள். அதன்படி மநுவின் சட்டத்தை ஏற்றுக் கொண்டவனும் இந்து, அதை நிராகரித்தவனும் இந்து, பிராமணர்கள் படைத்த முட்டாள் தனம் என்று வேத உபநிஷங்களைத் தூக்கி எரிந்த பௌத்த, சமணர்களும் இந்து.

வைதீக வட்டத்திற்குள் வராமல் இருந்த குல தெய்வ வழிபாடுகளைக் கொண்ட எண்ணற்ற இனக்குழுக்களும் இந்து, நாத்திகர்களும் சாதி மறுப்பாளர்களும் இந்து என்று ஆனது.

இஸ்லாமியன், கிருஸ்துவன், பார்சி, யூதன் இவர்களைத் தவிர இந்தியாவில் உள்ள அனைவரையும் இந்து என்ற பெரும் வட்டத்திற்குள் அடைத்து அதன் உச்சியில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டது பிராமணீயம்.

ஈராயிரம் ஆண்டுகளாய் எவனை பார்த்தாலே தீட்டு என்று ஒதுக்கி வைத்திருந்ததோ, தான் ஓதும் வேதத்தின் சப்தத்தைக் கேட்டவனின் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியதோ, அவனையெல்லாம் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த ‘நம்மவா’ என்று சொல்லி அழைத்துக் கொண்ட நரிந்தந்திரம் தான் இந்துச் சட்டமென ஆனது.

(ஈ) இந்த வரலாற்றின் தொடர்ச்சியாகத்தான் 1980களுக்குப்பின் நவீன இந்துத்துவ வேடமேற்றுள்ள பிராமணீயம் தனது நரித்தனமான தந்திரோபாயங்களை எல்லை கடந்து அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.

பிராமணீயத்தின் வர்ணாசிரமக் கோட்பாடுகளை எதிர்த்து யாரெல்லாம் தங்களது வாழ்க்கை முழுவதும் சமரசமற்ற போராளிகளாக திகழ்ந்தார்களோ அந்த மதிப்பு வாய்ந்த தலைவர்களையெல்லாம் அது தன்னகத்தே உள் வாங்கப்பார்க்கிறது.

‘சாதி என்பதில் எந்தவொரு உண்மையும் இல்லை, எனவே ஒருவரின் சாதியை கேட்காதீர்கள், சாதியைப்பற்றி சிந்தனை செய்யாதீர்கள் சாதியைப் பற்றி பேசாதீர்கள்’ என்று சொன்ன நாராயண குரு துவங்கி பகத்சிங் வரை அது தனது பட்டியலில் இணைத்துக் கொள்கிறது.

தனது வர்ணாசிரமக் கோட்பாட்டால் ஆண்டாண்டு காலமாய் நுகத்தடியில் நசுங்கிக் கிடந்த, தலித் மறறும் பழங்குடியினரைத் தனது சங்பரிவார நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுத்தும் பொருட்டு அண்ணல் அம்பேத்காரை தனது பரிவாரத்தின் ‘பிரதாஸ்மரணிய’ வாக மாற்றி பல்வேறு வழிகளில் விஸ்வாசமான ஹித்துத்துவாவாதியாகவும், இஸ்லாமிய எதிர்ப்பாளராகவும் பிரச்சாரம் செய்து வருகின்றது.

அவரை முன்னிலைப்படுத்துவதன் மூலம் தலித் மக்களைச் சுலபமாக ஏமாற்றி விட முடியுமென அது நம்புகிறது. அதனடிப்படையில் நுட்பமான செயல்திட்டங்களை அது வகுக்கிறது. ‘குஜராத் எனும் கடைசி ஹிந்துத்துவ சோதனையில் தலித்களும், பழங்குடியின மக்களும் ஹிந்துத்துவ படையின் காலாட்படையாக பெரும்பங்காற்றினர்’ என்கிறார் ய்வாளர் தெள் தும்டே.

புத்தரை விஷ்ணுவின் அவதாரமாக்கிய இவர்கள், பெரியாரை 64வது நாயன்மார் என்று கூச்சநாச்சமின்றி கூறுகின்றனர்.

தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு முன் ‘அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள்’ என்ற நூல் சங்கராச்சாரியால் வெளியிடப்பட்டது. இதன் வெளியீட்டு விழாவில் தான் ஈஸ்வரனைப் பழித்தாலும் பிரமணணைப் பழிக்கக் கூடாது என்று அவர் பேசினார். 994 நபர்களைப் பற்றி 3147 பக்கங்களில் எழுதப்பட்டுள்ள புத்தகமது.

வாழ்க்கை முழுவதும் சாதி மறுப்பாளர்களாகவும், வர்ணாசிரம கோட்பாட்டினை எதிர்த்தவர்களாகவும், சகலவிதமான ஒடுக்கு முறைக்கு எதிரான வர்க்கபோராளிகளாகவும் விளங்கிய தமிழகத்தின் பொதுவுடமை இயக்கத் தலைவர்கள் பி.சீனிவாசராவ், பி.இராமமூர்த்தி, எம்.ர்.வெங்கட்ராமன், ஏ.பாலசுப்பிரமணியம் போன்றவர்களைக் கூட இந்த கும்பல் தனது பட்டியலில் இணைத்துக்கொண்டு அருந்தொண்டாற்றிய அந்தணர்கள் என்று சொல்கிறது.

இரண்டாயிரம் ஆண்டு கால அனுபவத்தின் தொடர்ச்சியாக இப்பொழுது அம்பேத்காரின் மீதும், பெரியாரின் மீதும், கம்யூனிஸ்டுகளின் மீதும் தனது நரித்தந்திரத்தைப் பின்னிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த தந்திரோபாயங்கள் உயிர் பிழைப்பதற்கானதல்ல, மாறாக அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கானது. பிராமணீயத்தின் உயிர் அதிகாரத்தில் தான் இருக்கிறது என்பதைச் சரியாக புரிந்து கொண்டு உயிர் பிழைப்பதற்கான தந்திரோபாயங்கள் என்று அசோகமித்திரன் எழுதியிருப்பாரேயானால் அதுவே சரியென்று நாமும் ஒத்துக் கொள்வோம்.

‘வேதங்கள் தவிர்த்து வேறு பல புராதன நூல்களிலும் கூட பிராமணர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்றும் உணவளிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த 50 ஆண்டுகள் மிகக் கடினமானவை. அவர்களுக்கு அரசாங்க வேலைகள் இல்லை. அவர்கள் எதைச் செய்தாலும் அதில் தங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அதிக பட்சம் உழைக்க வேண்டியுள்ளது’ என்கிறார் அசோகமித்திரன்.

அசோகமித்திரனின் இந்தக் கூற்று ஆச்சரியத்தை அளிக்கிறது. வேதங்கள் மற்றும் புராணங்களின் அடிப்படையில் தங்களது உரிமையைக் கேட்பதும், அது சொல்வது போல இப்பொழுது சமூகம் மற்றும் அரசு நடந்து கொள்வதில்லை என்று அவர் குறைபட்டுக் கொள்கிறார். ஒரு பழங்கால அருங்காட்சியத்திலிருந்து தப்பித்து வந்த ஒரு மனிதனின் பேச்சைப்போல இது இருக்கிறது.

வேதங்கள் மற்றும் புராணங்களில் உருவாக்கப்பட்ட வருணாசிரமக் கருத்தில் இந்நாட்டின் கோடிக்கணக்கான மக்களை நுகத்தடியில் பூட்டி, அடிமைப்படுத்தி அவர்களின் உழைப்பை உறிஞ்சிக் கொழுத்து வந்துள்ளது. கடந்த ஒரு நூற்றாண்டாகத் தான் இந்த ஒடுக்குமுறைக்கு எதிரான குரல் மெல்ல எழும்பி வலுப்பெற்றுள்ளது. பிறப்பின் அடிப்படையில் தீண்டாமை என்ற கருத்து சட்டப்படி குற்றமென விதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்றைக்கும் கூட வேதங்கள் மற்றும் புராணங்களின் அடிப்படையில் தங்களுக்கான உரிமையை அசோகமித்திரன் வெளிப்படையாகக் கேட்பது என்பது நூற்றாண்டு காலமாக பிராமணீயத்தை எதிர்த்து பணியாற்றி அனைவரின் சிந்தனையும் அவமதிக்கிற அகம்பாவமாகும். வேதங்கள் மற்றும் புராணங்களைப் புனித பிம்பமாகவும், அதை எழுதிய முன்னோர்கள் தேவர்கள் என்றும் அசோகமித்திரன் நம்புவதென்பது நம்மை சக மனிதனாக ஏற்றுக் கொள்ளாததின் பகுதியே.

‘என்ன முன்னோர்கள்? கழுதைக்குப் பிறந்தவன், நாய்க்குப் பிறந்தவன், கோட்டானுக்குப் பிறந்தவன். இந்த முன்னோர்கள் தான் வேதம் எழுதினார்கள். புராணம் எழுதினார்கள். வெங்காயம் எழுதினார்கள். உபநிஷத்தை எழுதியவன் யார்? மனிதனுக்கும் குதிரைக்கும் குழந்தை பிறந்திருக்குமா? இவனையெல்லாம் பெரியரிஷி என்கிறார்கள். சாஸ்திரம் இவன் எழுதினான், புராணம் இவன் எழுதினான். எழுதிய பயல்களைப் பார்த்தால் எல்லாம் அயோக்கியப் பயல்கள்! மனிதனுக்குப் பிறந்தவர்கள் அல்லர். இவர்களைத் தவிர வேறு முன்னோர்கள் இல்லை. இதைச் சொல்லியே நம்மை மிரட்டுகிறார்கள். இராஜாஜி சொல்கிறாரோ, ‘நம் முன்னோர்கள் நல்லபடி யோசனை செய்து உலக ஷேமத்திற்காகத்தான் தர்மத்தை எழுதினார்கள்’ என்று அதற்கு நேரு பதில் சொல்கிறார். ‘நம் முன்னோர்கள் யார்? காட்டுமிராண்டிகள் தானே? ஒரு காட்டுமிராண்டி, இன்னொரு காட்டுமிராண்டிக்கு எழுதி வைத்தது இன்றைய மனிதனுக்குப் பொருந்துமா?’ என்று கேட்கிறார். ஏன் சொல்கிறேன் என்றால், இது தானே இன்று போராட்டமாக இருக்கிறது’ என்கிறார் பெரியார். இதன் தொடர்ச்சியாகத் தான். வேதங்கள், புராணங்களில் சொல்லப்பட்ட புனித பாரத வர்ஷத்தை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்று சொன்ன வாஜ்பாயின் பிராமண ஆட்சியைக் ‘காட்டுமிராண்டிகளின் ஆட்சி’ என்று கச்சிதமாய் வர்ணித்தார் தோழர் ஜோதிபாசு. உண்மையில் ஒரு காட்டுமிராண்டி, இன்னொரு காட்டுமிராண்டிக்கு எழுதி வைத்ததை இன்றைக்கு நம்புகிறவர்களை அந்த சொல்லை அல்லாமல் வேறு எந்த சொல்லைக் கொண்டு அழைப்பது.

அம்பேத்கர் இன்னும் ஒருபடி மேலே போய் கேள்விகளை முன் வைக்கிறார். ‘சூத்திரனுக்கும், பிராமணப் பெண்ணுக்கும் கூடாவொழுக்கத்தால் பிறந்த சந்ததியார் சண்டாள சாதியினர் என்று மநு கூறியுள்ளார். இது உண்மையாக இருக்க முடியுமா? அப்படி உண்மையாக இருக்குமானால் பிராமணப் பெண்கள் தமது ஒழுக்கத்தில் உறுதியற்றவர்களாக இருந்தார்கள். சூத்திர ஆடவர்களோடு கூடுவதில் மிகுந்த ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள் என்றாகி விடக்கூடும். இது நம்ப முடியாததாகும்.

சண்டாளர்களின் மக்கள் தொகை பெரிதாக இருப்பதை வைத்துப் பார்த்தால் ஒவ்வொரு பிராமணப் பெண்ணும் ஒரு சூத்திர ஆடவனுக்குக் காமக்கிழத்தியாக இருந்திருந்தாலும் கூட நாட்டிலுள்ள சண்டாளர்களின் எண்ணிக்கை கணக்கை சரிகட்ட முடியாமல் போய்விடும்.

கலப்பு சாதியாரின் தோற்றத்தைப் பற்றிய கோட்பாடுகளை இந்த வகையில் வகுத்துரைத்ததன் மூலம் இந்த நாட்டிலுள்ள எண்ணற்ற மக்களின் தோற்றத்திற்கு இழிவைக் கற்பித்து, அவர்களின் சமூக, ஒழுக்க இழிவிற்கு வழி வகுத்திருக்கிறது’ பிராமணீயம் என்கிறார்.

ஆனால் அசோகமித்திரனோ, பெரும்பான்மையான மக்களின் இழிவில் தான் எங்களது சுகமும், உரிமையும் இருக்கிறது என்று வெளிப்படையாகச் சொல்கிறார். அடுத்த கட்டத்தில் போய் கடந்த 50 ஆண்டுகள் மிகக் கடினமானவை அரசாங்க வேலைகள் இல்லை என்கிறார். இது இட ஒதுக்கீட்டின் மீதான தாக்குதல். ஆண்டாண்டு காலமாய் கல்வியும், வேலைவாய்ப்பும் மறுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட சமூக நீதியாக கடந்த 50 ஆண்டுகள் இடஒதுக்கீடு அமுலில் உள்ளது. அதனால் தான் எங்களுக்கு வேலையில்லை என்கிறார். இது வடிகட்டியப் பொய். இன்றைக்கும் ஆடசி அதிகாரத்தில் முக்கிய பதவியில் பிராமண சமூகத்தில் பிறந்தவர்கள் எத்தனை சதவிகிதம் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அந்த உயர்ந்த இடத்தை கடந்த 50 ஆண்டு இடஒதுக்கீட்டின் மூலம் மிகச்சிறிய அளவு மட்டுமே அவர்கள் இழந்துள்ளனர். அதற்கே இந்த கூப்பாடு.

அரசியல் சட்டப்படி தலித் மற்றும் ஆதிவாசி மக்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் வேலை வழங்குவதில் கூட மோசடி நிலைமை நீடித்து வருகிறது. 1999ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கையில் மொத்தமுள்ள 144 துறைகளில் 96 துறைகளில் உள்ள நிலைமைகளை அது குறிப்பிடுகின்றது. அதன்படி ஏ பிரிவு பதவிகளில் தலித் எண்ணிக்கையில் 3.16 விழுக்காடும், ஆதிவாசிகளை 0.008 விழுக்காடு, பி.பிரிவு பதவிகளில் தலித்கள் 8.5 விழுக்காடும். ஆதிவாசிகள் 0.03 விழுக்காடு மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்குத் தகுதியான நபர்கள் இல்லை என காரணம் கூறுகிறது. ஆனால் வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்துள்ள தலித் மற்றும் பழங்குடியினரின் எண்ணிக்கை அரசு சொல்லும் காரணம் துளியும் நம்பும்படியானதில்லை என்பதை உணர்த்துகிறது.

கடந்த நாடாளுமன்றத்தில் தனியார் துறைக்குக் கொண்டு போகப்பட்ட பொதுத்துறையில் இடஒதுக்கீட்டை உத்தரவாதம் செய்வதற்கான தனிநபர் மசோதாவை மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜய்குமார் கொண்டு வந்தபொழுது ஆளும் கட்சியாக இருந்த பாரதிய ஜனதா அடாவடித்தனம் செய்து அந்த கூட்டத் தொடரையே நடத்தவிடாமல் ஆக்கியது.

ஒரு பக்கம், இருக்கும் இட ஒதுக்கீட்டையும் தகுதியான நபர்கள் இல்லையெனச் சொல்லி இட்டு நிரப்பாத மோசடி. இன்னொரு பக்கம் பொது துறைகளெல்லாம் தனியாருக்குத் தாரை வார்ப்பதன் மூலம் இட ஒதுக்கீட்டு கொள்கையை குழி தோண்டி புதைக்கிற ஏற்பாடு. இவைகளை கடந்தால் வேலை நியமன தடைச்சட்டம். இப்படி இன்றைய தலைமுறைக்கு இடஒதுக்கீட்டின் பலன்கள் சென்று சேர்ந்துவிடாமல் தடுக்க, வாய்ப்புகளின் கழுத்துக்கள் கொடூரமாக நெறிக்கப்பட்டு கிடக்கிறது. நவீன தாராளமய கோட்பாடுகளால் மூச்சுத் திணறிக் கிடக்கிறது சமூக நீதிக் கோட்பாடு.

ஆனால் அசோகமித்திரனுக்குத் தேவை சமூக நீதியல்ல, தனது சாதிக்கான நீதி தான். அதற்காக அதிகபட்சம் உழைக்கும் உழைப்பாளியாக அவர் இருக்கிறார். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற அசோகமித்திரன்-50, விழாவில் பேசிய ஒரு மூத்த எழுத்தாளர் ‘இவரைப் போன்ற உழைப்பாளர்களை உழைப்பாளர் தினத்தில் பாராட்டு வேண்டும்’ என்று பேசியுள்ளார். எனவே அடுத்த உழைப்பாளர் தினத்தில் ‘ஸமஸ்கிருத சேவா சங்கத்தின்’ சார்பிலோ, பிராமணர்கள் சங்கத்தின் சார்பிலோ அதிகபட்ச உழைப்புக்காக அசோகமித்திரன் பாராட்டப்படலாம்.

‘நான் சங்கர மடத்தைப் பின்பற்றுபவன் அல்ல, என்ற போதிலும் இதற்கு முந்தைய பெரியவாளின் மீது மதிப்பு கொண்டிருந்தேன். 1951இல் என் தாயார் விதவையானார். 1954ல் சென்னை தி.நகருக்குப் பெரியவாள் வந்து தங்கியிருந்தார். திரும்ப திரும்ப பலமுறை என் தாயார் வெறும் வயிறுடன் ஆச்சாரியாளை தரிசிக்கச் சென்றார். ஆனால் என் தாயார் விதவை என்பதால் பெரியவாள் அவரை ஒருமுறை கூட ஆசீர்வதிக்கவில்லை’ என்கிறார் அசோகமித்திரன்.

பார்ப்பனிய ஆச்சாரத்தின் மீது வெறிகொண்ட பக்தியுள்ள ஒருவரைத் தவிர வேறு யாராலும், தன் தாயிக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியின் பொருட்டு ஒரு துளி கோபம் கூட இல்லாமல் இப்படி சொல்ல முடியாது. ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்பும் கூட தன் தாய் அவமதிக்கப்பட்டாள் என்பதை அவரால் உணர முடியவில்லை, பெரியவாள் ஆசீர்வதிக்கவில்லையே என்ற கவலை தான் அவரைப் பற்றி நிற்கிறது.

அசோகமித்திரனின் தாயை மட்டுமல்ல உலகில் உள்ள எந்தப் பெண்ணையும் மனுஷியாக பெரியவாள் கருதியது கிடையாது.

‘பெண்ணுக்கு கணவனே தெய்வம், பெண்ணுக்கு என்று தனி அறிவு இல்லை. கணவன் பெற்ற அறிவையே அவள் பற்றி வாழ வேண்டும். - தனக்கென்று மான அவமானம் எதுவும் இல்லாமல் ஒருத்தி இருந்துவிட்டால் அவளது அகம்பாவம் கரைந்து போகிறது. அதுதான் மோட்சம். அதுதான் எல்லாப்பயனும். - பெண்களை அடக்கி, நசுக்கி வைக்கிற கொடுமை என்று எவ்வளவு எதிர்த்தாலும் இப்படியிருப்பது தான் இந்த தேசாச்சாரம் நமது கலாச்சாரம். - பெண்ணுக்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு, இதற்குக் காரணமான பால்ய விவாகத்தை (இளம் வயது திருமணம்) மாற்றுவதனால் அவர்களுடைய த்மாபி விருத்திக்குப் பெரிய ஹானியை உண்டுபண்ணுகிறோம். சின்ன சௌகரியத்தை ஏற்படுத்திக் கொடுத்து மகா பெரிய பிரயோஜனத்தை நஷ்டப்படுத்துகிறோம். - இருபது வயதுக்கு மேல் கல்யாணம் செய்து கொடுத்தாலும் விதியிருந்தால் விதவையாகத்தான் ஆவாள்.’

பெரியவாள் உதிர்த்த இந்த கழிசடைத்தனமான கருத்துக்கள் எல்லாம் தொகுக்கப்பட்டு தெய்வத்தின் குரல் என்று வெளியிடப்பட்டுள்ளது. பெரியவாள் சொன்ன இந்த கருத்தின் தொடர்ச்சியாகத்தான் சின்னவாள் ‘விதவைப் பெண்கள் விளையாத தரிசு நிலம்’ என்றார்.

அவரின் இந்தக் கருத்துக்கு எதிராக எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் ‘விதவைப் பெண்ணின் கூந்தலில் தான் இவர்கள் பரிபாலித்த இந்து மதத்தின் உயிர் நாடியே இருந்தது’ என்று குத்தலாகவும், முகத்தில் அரைந்தது போலவும் பதில் சொன்னார்.

ஒரு எழுத்தாளனுக்கு இருக்கிற தன்மானத்தை இன்னொரு எழுத்தாளரிடம் எதிர்பார்ப்பது தப்புதான். தன் சொந்த தாயின் பொருட்டே வராத மான உணர்ச்சியா? அடுத்து பெண்களைப்பற்றி கூறுகிற பொழுது வந்துவிடப்போகிறது?

‘இந்த தேசாச்சாரத்தையும் நமது கலாச்சாரத்தையும்’ கட்டிக் காக்கும் போர் வீரர்கள் எழுத்துலகுக்குள்ளும் தலைதூக்குகிறார்கள்.

‘அவரை கைது செய்தது என்னை அதிர்ச்சியடைய வைத்தது. இப்போது நான் விருப்பு வெறுப்பற்ற நிலைக்கு வந்துவிட்டேன். காஞ்சி மட விவகாரத்தில் இன்னும் ஏதோ ஒரு விசயம் வெளிச்சத்துக்கு வராமல் இருக்கிறது. இந்த விவகாரம் கையாளப்படும் விதத்தைப் பார்த்தால் வேண்டுமென்றேதான் அவர் துன்புறுத்தப்படுகிறார் என்று தோன்றுகிறது. பிராமண இனமும் அவமானப்படுத்தப்படுகிறது’ என்று சங்கராச்சாரி கைது சம்பந்தமாக அவர் கருத்து தெரிவிக்கிறார்.

விருப்பு வெறுப்பற்ற நிலைக்கு வந்துவிட்ட ஒருவர் சொல்லும் கருத்தல்ல இது என்பதை படித்தவுடன் யாராலும் புரிந்து கொள்ள முடியும். ‘இந்த விவகாரம்’ என்று தான் அவர் சொல்கிறாரே தவிர ‘கொலை வழக்கு’ என்று சொல்லக்கூட இன்னும் அவர் தயாராகவில்லை.

காஞ்சி மட விவகாரத்தில் இன்னும் ஏதோ ஒரு விசயம் வெளிச்சத்துக்கு வராமல் இருக்கிறது என்கிறார். ஒரு விசயமல்ல நூறு விசயம், ஆயிரம் விசயம் வெளிச்சத்துக்கு வராமல் இருக்கிறது. வெறும் நூறு வருட பழமையான மடத்திற்கு 5000 கோடிக்கு மேல் சொத்துக்கள் வந்ததெப்படி? திடீர் பணக்காரர்களும் குறுக்குவழி புரோக்கர்களும் மடத்தோடு பின்னிப் பிணைந்து கிடப்பதேன்? ரௌடி கும்பல்களுக்கும் மடத்துக்கும் உள்ள நெருக்கம் என்ன? பெண்கள் மீது நடத்தப்பட்டுள்ள பாலியல் கொடுமைகள் எத்தனை? என்று எண்ணிலடங்கா கேள்விகளுக்குள் வெளிச்சத்திற்கு வர வேண்டிய உண்மைகள் புதைந்து கிடக்கின்றன.

அவர் துன்பப்படுத்தப்படுகிறார் என்று கண் கலங்குகிறார் அசோகமித்திரன். அவர் என்ன துன்பப்பட்டார்? சிறையில் ஒரு பிராமணைக் கொண்டு தனிச்சமையல் செய்யப்பட்டது, நினைத்தது போல் பூஜை செய்து கொள்ள அனுமதிக்கப்ட்டது, கையில் தண்டத்தோடு தான் சிறைவாசம் முழுவதையும் கழித்தார். ஞாயிற்றுக்கிழமை கூட நீதிமன்றம் அவர் மனுவை விசாரித்தது. வீடியோ கான்பிரன்சிங் மூலமே அவர் விசாரிக்கப்பட்டு வாய்தா கொடுக்கப்பட்டது. இவ்வளவு வசதிகளும் அவருக்கு வழங்கப்பட்டன. ஆனால் இதே தமிழகத்தில் 40க்கும் மேற்பட்டவர்கள் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேல் சிறையில் கிடந்தார்கள். மூத்த அரசியல்வாதி நெடுமாறன் ஆயிரக்கணக்கான மைல்கள் போலீஸ் வாகனத்தில் அலைக்களிக்கப்பட்டார். அவருக்கெல்லாம் பயன்படுத்தப்படாத வீடியோ கான்பிரன்சிங் வசதி உடல்நோகக்கூடாது என்பதற்காக சங்கசராச்சாரிக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது. அப்படி இருந்தும் அவரின் துன்பத்தைக் கண்டு பொறுக்க முடியவில்லை அசோகமித்திரனால். பிராமண இனம் அவமானப்படுத்தப்படுகிறது என்கிறார். கோயில் நிர்வாகமும், மடத்தின் நிர்வாகமும் முறையாக சாஸ்திர விதிப்படி நடக்க வேண்டும் என்று சொன்னதற்காக பட்டப்பகலில் சங்கரராமன் எனும் பிராமணன் வெட்டிக் கொள்ளப்பட்டான் அப்பொழுது உணராத அவமானத்தை அந்த கொலை வழக்கின் முதல் குற்றவாளி கைது செய்யப்படும் பொழுது உணருகிறார் அசோகமித்திரன். இரத்தம் ஒழுக செத்துக் கிடக்கும் ஆட்டுக்காக கண்கலங்குபவர்களும் உண்டு. கடித்துக்குதறிய ஓநாயின் பல்வலிக்காக பரிதாபப்படுபவர்களும் உண்டு, அசோகமித்திரன் இரண்டாவது வகை.

‘பிராமண சமூகத்திற்கு ஒரு நல்ல தலைவர் உருவாவதற்கான அறிகுறி எனக்குத் தெரியவில்லை. ஜெயேந்திர சரஸ்வதியால் அது முடியாது. மதம் அல்லது அரசியல் பற்றி புரிந்து கொள்வதில் அவர் சமர்த்தர் அல்ல. ராஜாசியால் அது சாத்தியமாகியிருக்கும். ஆனால் அவர் இன்று இல்லை, ஒரு பிராமண புத்தெழுச்சிக்கான வாய்ப்பு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை’ என்கிறார்.

இவரது அகராதியில் ஒருவர் எவ்வளவு தவறு செய்தாலும், கொலையே செய்தாலும் கூட வெளியில் தெரியக்கூடாது, வழக்கில் மாட்டக்கூடாது அவர்தான் சமர்த்தர், பாவம் அந்தத் தகுதி ஜெயேந்திரருக்கு இல்லை. ஆனால் ராஜாஜிக்கு எல்லாத் தகுதியும் இருந்தது என்கிறார். அது உண்மை தான்.

‘சாதியைக் காப்பாற்றுவது தான் என் வேலை, அதற்காகத் தான் மூச்சு விடுகிறேன் இல்லாவிட்டால் பொது வாழ்வு எனக்கு அவசியமில்லை. தர்மம் கெட்டுவிட்டது, இன்றைய ஆட்சி தர்மத்தை அழிப்பது என்று கங்கனம் கட்டிக் கெண்டிருக்கிறது’ என்று சொன்னவர். தான் முதலமைச்சரானவுடன் குலக்கல்வித் திட்டத்தை கொண்டு வந்தவர். அதனாலேயே பெரியாரால் ‘தேவர்களுக்கு மகா விஷ்ணு மாதிரி பார்பனர்களுக்கு ராஜாஜி’ என்று வர்ணிக்கப்பட்டவர். அவர் உயிரோடு இருந்திருந்தால் பிராமண இனம் புத்தெழுச்சி பெறும். அசோகமித்திரன் போன்றவர்களின் கனவு நனவாகும். என்ன செய்வது, செத்துப் போனரே!

செத்துப்போன மனிதரையும், செத்துப்போன தத்துவத்தையும், செத்துப்போன சாஸ்திரங்களையும், தூக்கிச் சுமக்கும் கனவுகளோடு அலைகின்ற அசோகமித்திரனைக் கண்டு நாம் பரிதாப்படுவோம் உங்கள் தோளில் இருப்பது பெருமையல்ல, வியாதி. சீழ் வைத்து உங்கள் விரல்களில் வழியே அது வழிகிறது. நாற்றம் தாங்க முடியவில்லை. ஆனால் உங்களால் அதை உணர முடியவில்லை. வழிவது தேன் என்று தான் திரும்பத் திரும்ப சொல்கிறீர்கள். சுவைத்து சுவைத்து மகிழ்கிறீர்கள். 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சுவை இப்பொழுது குறைந்துவிட்டது என்று ஆத்திரப்படுகிறீர்கள்.

உங்கள் ஆத்திரம் எல்லை கடந்து போகின்றது. நாங்கள் காயடிக்கப்பட்டுவிட்டோம் என்று கதறுகிறீர்கள். காயடிக்கும் கட்டைகளின் மீது வேதங்களையும், சாஸ்திரங்களையும், மனுவின் சட்டங்களையும் எழுதி வைத்து இந்நாட்டின் பெரும்பான்மையான மக்களின் விரைகளை நசுக்கி எடுத்தவர்கள் நீங்கள். தாங்க முடியாத ரணமும், வலியும், வேதனையும் தான் எங்களின் வரலாறானது. காயடிக்கும் கட்டைகளோ உங்களுக்குக் குலக்கருவியானது. ஆனால் இன்று நீங்கள் முந்திக் கொண்டு கத்துகிறீர்கள் ‘நாங்கள் காயடிக்கப்பட்டுவிட்டோம்’ என்று.

அதில் துளிகூட உண்மை இல்லை என்பதற்கு வரலாறே மாபெரும் சாட்சி, இன்றைய சமூக யதார்த்தத்தை விட இன்னொரு சாட்சி என்பதும் தேவையில்லை.

நாங்கள் சொல்லுவதை நீங்கள் நம்பத்தயாராகயில்லை என்றால் உங்கள் அபிமானத்துக்குறிய காஞ்சி காமகோடி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் போய் கேளுங்கள். அல்லது ஜம்புகேசவர சேஷத்திரம் சோம சேகர கனபாடிகள் எழுதிய ஒரு கடிதத்தையாவது படித்துப் பாருங்கள். நீங்கள் சொல்லுவதில் துளிகூட உண்மையில்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

அசோகமித்திரன் சொல்வதுபோல திராவிட இயக்கம் (பிராமணரல்லாதோர் இயக்கம்) பிராமணீய எதிர்ப்பில் அவ்வளவு உறுதியாக இன்று உள்ளதா? அந்த கோட்பாட்டு உறுதிதான் இன்றைய பிராமண இனத்தின் பிரச்சனையா? என்ற கேள்விகளுக்கு நாம் விடை காணுவது முக்கியம்.

பிராமணீய கோட்பாட்டிற்கு எதிரான உண்மையான போராட்டத்தைத் திராவிட இயக்கம் கைவிட்டு பல பத்தாண்டுகள் ஆகிவிட்டது. நிலைசெய்ய உதவாத உதிய மரத்தைப் போன்றதுதான் அவர்களின் இன்றைய வர்ணாசிரம எதிர்ப்பு. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருக்கும் திராவிட இயக்கத்தால், வர்ணாசிரம சாதீய வெறிக்கு எதிரான திசையில் தமிழ்ச்சமூகத்தைக் கொண்டு செல்ல முடியவில்லை. ஓட்டு வங்கிகளின் அடிப்படையிலான அணுகுமுறையும், அதனடிப்படையிலான சாதீய சமரசங்களுமே அதற்குக் காரணம். அதன் விளைவுதான் இன்னும் தமிழகத்தின் பல லட்சம் கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை அனைத்து வடிவங்களிலும் நிலைபெற்றுள்ளது. மேலவளவு முதல் திண்ணியம் வரை பல நிகழ்வுகளைப் பார்த்தப்பிறகும் இவர்களால் பதட்டப்படாமல், பெருமிதத்தோடு ஆட்சி நடத்த முடிகிறது.

கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், பாப்பாபட்டியில் இருபெரும் திராவிட இயக்கத்தின் ஆட்சிக் காலத்திலும் தேர்தல் நடத்தி தலித்தைப் பஞ்சாயத்துத் தலைவராக்க முடியவில்லை. அதைவிடப் பெரிய கொடுமை அங்கு நிலவும் சாதிவெறியை ஒரு பிரச்சனையாகக் கூட இரண்டு கட்சிகளும் இன்று வரை பேசுவதில்லை.

பிராமணீயம், அக்கிரகாரத்தில் மட்டுமல்ல, அடுத்தவேலை கஞ்சிக்கு வழியில்லாத கீரிப்பட்டியின் ஓலைக்குடிசை வரை கொடிகட்டிப் பறக்கிறது. இடைநிலை சாதிகளின் வாக்கு வங்கிகளே இவர்களுக்கு பிராதான இலக்காக இருப்பதால் அதன் சிந்தனையில் ஏற்றப்பட்டுள்ள சாதீய வெறித்தனத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்தும் கொள்கைத்திறனை இவர்கள் இழந்துவிட்டனர். அதுமட்டுமல்ல, இவர்கள் எந்த வர்க்கத்தின் நலனைப் பாதுகாக்க நினைக்கிறார்களோ, அந்த வர்க்கத்திற்கு இந்த ஏற்றத்தாழ்வுகளை அகற்றவேண்டிய அவசியம் ஏதுமில்லை. மாறாக இந்த ஏற்றத்தாழ்வுகள் நீடிப்பதென்பது, ஒடுக்கப்பட்டவர்கள் வர்க்கரீதியாக திரண்டுவிடாதபடி தடுக்கும் வலுமிகுந்த கேடயமாகும். எனவேதான் அந்த கேடயத்தை இவர்கள் இறுகப்பற்றிக்கொண்டு நிற்கின்றனர்.

வெண்மணி நெருப்பு பற்றி எறிந்தபொழுது இவர்கள் என்ன பேசினார்கள் என்பதை வரலாறு மறந்துவிடாது. வெண்மணி என்பது வெறும் கூலிக்கான போராட்டம் மட்டுமல்ல, தலித்களின் சுயமரியாதைக்குமான போராட்டமும்தான். ஆனால் அப்பொழுது இந்த சுயமரியாதைச் சிங்கங்கள் எங்கே போயின? இவர்கள் பேசும் வர்ணாசிரம எதிர்ப்பு என்பது இவர்களின் வர்க்கநலனுக்கு உட்பட்டதுதான் என்பதை வரலாறெங்கும் நம்மால் பார்க்கமுடியும்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தை வசைபாடுவதையே பிறப்புரிமையாக நினைத்துக் கொண்டிருப்பவரும், திராவிட இயக்கம் தமிழகத்தைப் பொன்விளையும் பூமியாக மாற்றிவிட்டது எனப் புகழ்மாலைபொழிந்து கொண்டிருப்பவருமான மலையாள எழுத்தாளர் சக்கரியா ஜுன் மாத காலச்சுவடு இதழில் எழுதுகிறார் ‘ஒரு பஞ்சாயத்தில் தலித் வேட்பாளர் வெற்றி பெறுகிறார். ஆனால் ஐந்தே நிமிடத்தில் உயர் வருணர்களுக்காகப் பதவியை ராஜினாமா செய்கிறார். மதுரைக்கு அருகில் கீழவளவு கிராமத்தில் பாண்டியம்மாள் என்ற தலித் இனப்பெண்ணை மேல் சாதியினர் ஆடுமேய்க்க அனுமதிப்பதில்லை.

பகிரமங்கமாகவும், சட்டத்துக்கு அறைகூவல் விடுத்தும் தலித் இனத்தவரை ஒடுக்கும் சம்பவங்களைப் பற்றியும் இதுபோன்ற பல செய்திகளை வாசித்தேன். மலையாளியின் தற்புகழ்ச்சியுடன் இதைச்சொல்கிறேன் - இது கேரளத்தில் நடக்காது. இந்த ஒரு செயலுக்காக கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு நான் நன்றி சொல்ல வேண்டும் (அதற்கும் முன்னதாக நாராயண குருவுக்கும், அய்யன் காளிக்கும்) இந்த தீராத களங்கம் முடிவடைகிற அன்றுதான் தமிழ்நாட்டின் உண்மையான பாய்ச்சல் தொடங்கும்’ என்கிறார்.

இந்த தீராத களங்கத்தை மகிழ்ச்சியோடு தூக்கிச்சுமக்கும் சமூகமாக தமிழகம் இன்று இருப்பதற்கு காரணம், தென்னிந்தியாவிலே மிகக்கொடுமையான ஜாதிய ஒடுக்குமுறை இருந்த கேரளத்துடன் ஒப்பிட்டு நாம் இழிவுபடுத்தப்படும் நிலை உருவானதற்குக் காரணம், பிராமணீய கோட்பாடு தமிழகத்தில் எதிர்கொள்ளப்பட்ட விதத்தில் இருந்த ஊனமே. இந்த ஊனத்தின் தொடர்ச்சிதான், எந்த கூச்சமுமின்றி இந்துத்துவாவின் இளைய பங்காளிகளாக இருபெரும் திராவிட இயக்கமும் தயக்கமின்றி எளிதில் கைகோர்க்க முடிந்ததென்பது.

உண்மை இப்படியிருக்க அசோகமித்திரன் அய்யோ, அப்பா எல்லாம் போய்விட்டது என்று பூச்சாண்டி காட்டுவதும், பிராமணரல்லாதோர் இயக்கத்தால் பிராமண இனம் கடும் நெருக்கடியில் இருக்கிறது என்று, சங்கரச்சாரி கைதை மட்டும் மையப்படுத்தி பேசுவதென்பதும் பெரும் அபத்தமாகும் ‘மாலுமி சரியில்லை என்பதற்காக கப்பலை அழிக்கக்கூடாது, காப்பாற்ற வேண்டும்’ என்று சங்கரமடத்தைக் காப்பாற்ற அசோகமித்திரனை விட தீவிரமான குரல் திராவிட கோட்டைக்குள் இருந்து தான் வந்தது என்பதை அவருக்கு நினைவுபடுத்துவோம்.

ஏகாதிபத்தியம் உருவாக்கியுள்ள நவீன உலகமயச்சூழல், தாராளமயக் கோட்பாடுகள், பெரும் முதலாளிகளின் லாப வேட்கை எல்லாம் சேர்ந்து இந்தியாவைச் சூறையாடிக்கொண்டிருக்கிறது. இதன் ஒரு விளைவுதான் வேலையின்மை. அடிமாட்டு விலைக்கு மனித உழைப்பு கிடைக்கும்பொழுது அரசு உத்தியோகம் எனச்சொல்லி அதிக சம்பளத்தோடு தத்தெடுத்தக்கொள்ளும் முட்டாள்தனத்தை இனிநாங்கள் செய்யமாட்டோம் என்று இந்தியாவின் ஆளும் வர்க்கம் உரக்க கத்துகிறது. நியாயமாக அதை நோக்கிப் பாய வேண்டிய கோபத்தைப் பிராமணரல்லாதோர் இயக்கம்தான் காரணம் என்று திசை திருப்புவது வேலையின்மை என்ற கொடுமையை நிலைநிறுத்தவே உதவி செய்யும்.

அதுமட்டுமல்ல, பிராமணர்களுக்கு மட்டும்தான் அரசாங்க வேலை இல்லை என்றும் இதர சாதிக்காரர்களுக்கு தட்டுத்தாம்பாளத்தோடு தலைமை செயலகத்தில் இருந்து உத்தரவுகள் வந்து கொண்டிருப்பதைப் போலவும் அவர் பேசுவது என்பது சாதீய கண்ணோட்டத்தின் உச்சமாகும்.

கடந்த மார்ச் மாதம் மதுரைக்கு அருகில் உள்ள ஒரு சிறு நகரத்தில் சாதி சங்கமொன்றின் தலைவர் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்ததைச் சிறிது நேரம் (தேனீர் குடிக்கும்வரை) கேட்க நேரிட்டது ‘நம்மாளுகளுக்காகத்தான் நான் தொடர்ச்சியா போராடுறேன். என் மேல 18 கேசு இருக்கு அதுல 3 கேசு கொலக்கேசு. ஆனாலும் நான் விடமாட்டேன் என்று சொல்லி பெருமிதத்துடனும் ஆக்ரோசத்துடனும் அந்த நபர் பேசிக் கொண்டிருந்தபொழுது அந்த சிறு கூட்டம் வெறியின் உச்சத்திற்கு இழுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. தனது சாதிக்காக இவ்வளவு வெறித்தனத்தோடு வேறு யாராலும் பேச முடியாது என் எனக்கு தோன்றியது. ஏப்ரல்11ம் தேதி அவுட்லுக் இதழைப் படித்தப்பின் எனது முந்தைய கருத்தை மாற்றிக்கொண்டேன்.

ஜெயகாந்தனின் இந்த நிலையை வெளிப்படையாக எதிர்க்காமல் மௌனம் சாதிப்பதன் மூலம் சிலர் மறைமுக ஆதரவை அவருக்கு அளிப்பதென்பதையும், அசோகமித்திரனை வெளிப்படையாக சிலர் ஆதரிப்பதென்பதையும் நாம் பார்க்கிறோம். வழக்கம் போல் ஜெயமோகன் ‘இலக்கிய வாசகன் இவ்விசயத்தில் ஒரு குறைந்த பட்ச தெளிவைக் கொண்டிருக்க வேண்டும்’ என்று பீடிகை போட்டு தனது விஷத்தைக் கக்கியுள்ளார். ‘அசோகமித்திரன் சொல்வது போல தமிழ்நாட்டு பிராமணர்கள் இன ஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ளனரா திடமான பதிலை சொல்வது சிரமம்’ எனச் சொல்லுவது போல் சொல்லி அசோகமித்திரனின் கருத்தை ஆமோதித்துள்ளார்.

‘ஜெயமோகன் ஆர்.எஸ்.எஸ்.காரர் அல்ல, ஒரு விஞ்ஞானியின் கூர்மையுடனும் நாணயத்துடனும் அவர் விசயத்தைப் பதிவு செய்கிறார்,’ என்று சமீபத்திய இந்திய டுடேயில் அசோகமித்திரன் எழுதியதற்கு கச்சிதமான கைமாறு ஜெயமோகன் தரப்பில் செய்யப்பட்டுள்ளது. இது ஆபத்தான கொள்கை கூட்டணி (பார்க்க : அறுவை சிகிச்சைக்குக் கடப்பாரை, ஈ.வே.ரா.வின் அணுகுமுறை என்ற ஜெயமோகனின் கட்டுரை).

அசோகமித்திரனின் பேட்டி குறித்து தீம்தரிகிடவில் ஞானியின் கருத்து அதிர்ச்சியளிக்கிறது. ‘இதுவரை அவரது கதைகளிலோ, நேரடி நடவடிக்கைகளிலோ ஜாதி வெறியையோ, ஜாதி வெறுப்பையோ வெளிப்படுத்தும் எதையும் கண்டதில்லை’ என்கிறார். இப்பொழுது இதைச் சொல்லுவதன் நோக்கம் என்ன? இதுவரை இப்படிப்பட்ட சிந்தனையே இல்லாதவருக்கு ஏப்ரல் 10ம் தேதி இரவு தான் இந்த சிந்தனையே வந்துள்ளது என்கிறாரா ஞானி?

ஐம்பது வருடமாக அவர் இப்படித்தான் உள்ளார் என்பதை அவரது பேட்டியே சொல்கிறது. அசோகமித்திரனின் இந்த நிலைபாடு புதிதல்ல என்பதை அவரை நெருக்கமாக அறிந்தவர்கள் அறிவார்கள் (ஞானியைத் தவிர) பி.ஜே.பி. முதன் முறையாக ஆட்சிக்கு வந்த போது அதை வெளிப்படையாக வரவேற்ற தமிழ் எழுத்தாளர் இவர் தான். உண்மை இவ்வாறு இருக்கும் போது கடந்த காலத்தில் அவர் அப்படிப்பட்டவரல்ல என்ற நற்சான்றிதழை ஞானி ஏன் கொடுப்பானேன்?

ஆடு, கோழி பலியிடல் தடைச்சட்டம் என்பது ஆகம கோட்பாட்டுக்குள் சிறு தெய்வ வழிபாட்டை கொண்டு வரும் முயற்சி எனச்சொல்லி கம்யூனிஸ்டுகள் அதை எதிர்த்த பொழுது கோபம் கொப்பளித்து ‘இடது சாரி பூசாரிகள்’ என எழுதிய ஞானி, அசோகமித்திரன் எனும் ஆஷ்டான பூபதி அம்மணமாய் நிற்கும் பொழுது அதற்கு எதிராக வர வேண்டிய நியாயமான கோபத்தைப் புதைத்துவிட்டு, வேதனையையும், வருத்தத்தையும் மட்டும் சடங்கு பூர்வமாகத் தெரிவித்து விட்டு தப்பித்துக் கொள்வதென்பது பகுத்தறிவுக்கோ, பத்திரிக்கைத் தொழிலுக்கோ வழங்கும் நீதியல்ல.

3. சுந்தரராமசாமி

‘பிள்ளை கெடுத்தாள் விளை’ என்ற சிறுகதையைக் காலச்சுவடு (பிப்ரவரி) இதழில் சுந்தரராமசாமி எழுதியுள்ளார். ஒரு தலித் பெண்ணைச் சிறுமைப்படுத்தி, அதை மேல்சாதி மனோநிலையுடன் பதிவு செய்துள்ள கதை. காலப்பொறுத்தமற்ற கதை, தகவல் பிழைகள் மலிந்துள்ள கதை, ஆனாலும் தான் சொல்ல நினைத்ததை வன்மையாக சொல்லியுள்ள கதை.

Sundara Ramasamy

‘வேலைக்கு போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள்’ என்று சங்கராச்சாரி சொன்னதையும், ‘நடக்கிறது நடக்கிறதுக்குத்தான் ஆசப்படனும், பறக்கிறது பறக்கிறதுக்கத்தான் ஆசைப்படனும்’ என்று கீரிப்பட்டி பெரியதேவர் ஆனந்தவிகடன் (நவம்பர்) பேட்டியில் சொன்னதையும், சேர்த்து சிறுகதையாக எழுதி தமிழுக்குத் தந்துள்ளார் சுந்தரராமசாமி.

உண்மையில் சுந்தரராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை’ கதையிலிருக்கும் அரசியல் புரியவேண்டுமென்றால், அவர் எழுதிய ‘வாசனை’ என்ற சிறுகதையைப் படித்தால் மிகவும் உதவியாக இருக்கும். பிள்ளை கெடுத்தாள் விளையில் வருகிற பெண் தாயம்மாள், அவள் தாழ்ந்த சாதிப் பெண். வாசனை கதையில் வருகிற பெண் லலிதா, அவள் பிராமண சாதியைச் சேர்ந்த பெண்.

‘லலிதாவின் கணவன் சாம்பசிவன், இவன் ஊனமுற்றவன். தனது மனைவியை புண்ணிய ஸ்தலத்துக்கு அழைத்துச் செல்லும் பொழுது சாலை ஓரத்தில் கிடக்கும் ஒரு பெருவியாதி பிச்சைக்காரன் லலிதாவைப் பார்த்து ‘பாப்பாத்தி .... வாடீ ...... ராஜாத்தி’ என்கிறான். சாம்பசிவன் பாதிகேட்டும் கேட்காமலும் போய் விடுகிறான். அடுத்த முறை கோயிலுக்கு வரும் பொழுது அதே பிச்சைக்காரன் லலிதாவைப் பார்த்து ‘பாப்பாத்தி ஒதுங்கிப் போறா பாரு ...... ஒதுங்கிப்போறாப்லே ஒதுங்கிப்போய் .....’ என்று சாம்பசிவன் காதில் விழ சொல்கிறான். அன்று இரவு லாட்ஜில் தூங்கிக்கொண்டிருந்த பொழுது மனைவி லலிதாவை மட்டும் தனியாக விட்டுவிட்டு வந்த சாம்பசிவன் தனது பூண் கட்டிய ஊன்றுகோலால் பிச்சைக்காரன் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்துகிறான். அடுத்தநாள் காலை போலீஸ் ஸ்டேசனில் இருந்து லாட்ஜ்க்கு போன்வர சாம்பசிவன் போகிறான்’. இது தான் ‘வாசனை’ கதை.

‘நாகர்கோயில் பக்கத்தில் மாடக்குழி என்ற குக்கிராமம் அங்கு வாழும் தாழ்ந்தசாதிப் பெண் தாயம்மா. பக்கத்திலுள்ள ஊரில் வசிக்கும் பாதிரியார் ஒருவரிடம் கல்விகற்றுக் கொள்கிறாள். ஐரோப்பாவில் மிகப்பெரிய ஒரு பள்ளியில் இளங்கலை கற்றுத் தேர்ந்த பெண்ணுக்கு நிகராக இருக்கிறாள் தாயம்மா என்று பாதிரியாரே புகழ்கிறார். ஊர்பெரியவர்கள் மாடக்குழியிலே ஒரு பள்ளிக் கூடத்தை நிறுவி தலைமை ஆசிரியை ஆக்குகிறார்கள். பலரின் எதிர்ப்புகளுக்கு இடையிலும் இது நடக்கிறது. மாடக்குழி பள்ளிக்கூடம் ஹைஸ்கூலாகிறது. இதற்கிடையில் தாயம்மாளின் தகப்பன் ராசைய்யா ரகசியமாய் நிலம் வாங்கி வீடு கட்டி குடிபோய்விட்டான். தாயம்மாவுக்குப் படிப்புக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைக்கவில்லை. காலம் ஓடுகிறது. ஒருநாள் பள்ளிக்கூடத்தில் சற்று வசதியான குடும்பத்தைச் சேர்ந்து அழகான பையன் மணிகண்டனைப் பலாத்காரமாக உறவுகொண்டு விடுகிறாள் தாயம்மாள். அடுத்தநாள் ஊர்ப் பெரியவர்கள் எல்லாம் சேர்ந்து ‘ரவுக்கை அவுக்குதுக்கா ஸ்கூலுக்கு வாறே தேவிடியா?” எனச் சொல்லி அடித்து விளாசுகிறார்கள். ஊரைவிட்டு விரட்டுகிறார்கள். போனவள் 53 வருசத்திற்குப் பின் சொந்தவீட்டை நம்பி சாவதற்காக ஊருக்குள் ரகசியமாக வருகிறாள். அப்பொழுதும் ஊர் பெரியவர்கள் கூடி ‘அவள் யாருடனும் உறவுகொள்ளக் கூடாது. குழந்தைகள் அவள் பக்கம் போகக் கூடாது’ என்று நிபந்தனை விதிக்கிறார்கள். சில நாட்களில் அவள் செத்துப் போகிறாள்’ இதுதான் பிள்ளை கெடுத்தாள் விளையின் கதை.

முதல் கதையில் வருகின்ற பெருவியாதி பிச்சைக்காரனும், இரண்டாவது கதையில் வருகிற வாத்தியாயினி தாயம்மாளும் ஒரே குறியீடுகள் தான். பிச்சைக்காரன் ஒரு பிராமணத்தியை காமப்பார்வையோடு பார்த்து கேலி செய்துவிட்டான். தாயம்மாளோ ஒரு வசதி படைத்த பையனுடன் பலாத்காரமாக ‘உறவு’ வைத்துவிட்டாள். கீழ்சாதிக்காரர்கள் காமக் கொடூரர்கள், அவர்களுக்குத் தண்டனை கொடுத்து, ஒழுக்கங்களைப் பேணிக்காக்க வேண்டியது புனிதர்களின் பணி. எனவே, பிச்சைக்காரனை அடித்துக்கொள்ளு, தாயம்மாளை சாவு அடி அடித்து ஊரைவிட்டு துரத்து. இதுதான் சுந்தரராமசாமியின் அறம்.

ஒருமுனையில் ‘பாப்பாத்தி லலிதாவையும்’, மறுமுனையில் ‘அழகிய மணிகண்டனையும்’ சாட்சியாக வைத்து இழிந்த சாதிமக்களை அடித்து நொறுக்கி அறத்தை நிலைநிறுத்த அரும்பாடுபடுகிறார்.

ஒரு ஊனமுற்றவனுக்குக் கோபமும், ஆத்திரமும் கொலைசெய்யுமளவு கொப்பளித்து வருகிறது. ஆனால் தாயம்மாளின் உறவினர்களுக்கு அதில் துளிகூட வரமறுக்கிறது. அதுதான் சுந்தரராமசாமியின் அரசியல். அதே கதை முப்பது ஆண்டுகளுக்குப்பின் மாற்றி எழுதப்பட்டிருக்கிறது, அதே நோக்கத்திற்காக.

உண்மையில் ‘பிள்ளை கெடுத்தாள் விளை’ ஒரு முக்கியமான கதை என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனென்றால், ஒரே நேரத்தில் சுந்தரராமசாமியும், இரவிக்குமாரையும் சோர்த்து இது அம்பலப்படுத்துகிறது.

பெரியார், பாப்லோ நெருதா போன்ற ஆளுமைகளை விமர்சனம் என்ற எல்லைகளைக் கடந்து பழிதீர்த்துக் கொள்ளும் இரவிக்குமார், சுந்தரராமசாமியின் கதையின் மீது வைக்கப்படும் நியாயமான விமர்சனத்தைக் கூட பொறுக்க முடியாமல் குறுக்கே விழுந்து தடுக்கிறார். ‘இலக்கியத்தைப் பற்றிய அறியாமையால் இந்தப் பிரச்சனையைக் கிளப்புகிறார்கள்’ என்கிறார்.

‘தலித்களாக்கப்பட்டுள்ள பிராமணர்கள்’ என்ற செய்திக் கட்டுரையை அவுட்லுக் இதழில் ஆனந்த் எழுதியுள்ளார் அதில் தமிழகத்து பிராமணர்கள் தலித்களைப் போல துன்பப்படுத்தப்படுகிறோம் என்று கண்ணீர் வடித்துள்ளார். அதில்தான் அசோகமித்திரனின் பேட்டியும் இடம்பெற்றுள்ளது. இதைப்பற்றி வாய் திறக்க நேரமில்லை இரவிக்குமாருக்கு. காலங்காலமாய் ஒடுக்கப்பட்டு விழி பிதுங்கிக் கிடப்பவர்களை இழிவுபடுத்தும் இத்தகைய வரலாற்று மோசடி வாதத்தை எதிர்கொள்ள இவருக்கு மனமில்லை. மாறாக தலித்தை இழிவுபடுத்தும் சுந்தரராமசாமி கதையின் மீதான விமர்சனத்தைதான் இவரால் பொறுக்க முடியவில்லை. ‘தலித்கள் சாதியைச் சொல்லி பிளாக் மெயில் செய்யக் கூடியவர்கள்’ என்று தவறான கருத்து உருவாகிவிடுமென பிளாக் மெயில் செய்கிறார்.

சமீபத்தில் மாயாவதியின் பி.எஸ்.பி கட்சி உத்தரபிரதேசத்தின் பல இடங்களில் பிராமணர்கள் மகாசம்மேளனத்தையும், பிராமணர்கள் மாநாட்டையும் நடத்திக் கொண்டிருக்கிறது. ராஜபுத்திரர்களுக்கு எதிராக பிராமணர்கள் மற்றும் தலித் இணைப்பு அரசியல் அங்கே நடந்து கொண்டிருக்கிறது. இதே உத்தியைத்தான் தமிழகத்தின் கருத்தியல் தளத்தில் இரவிக்குமார் - ஆனந்த் கூட்டணி உருவாக்க முயற்சி செய்கிறது. சாதீய படிநிலைக்குக் காரணமான பிராமணீய கோட்பாட்டிற்கு எதிராகவும், சகலவிதமான பொருளியல் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் மக்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்புவதை விட்டுவிட்டு, பிற்படுத்தப்பட்டவனை மட்டும் பிறவி எதிரியாக்கி குளிர்காய நினைக்கும் சாதீய அரசியலின் சிறந்த களமாக பிராமணர் மற்றும் தலித் அணி தேவை என்று இவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

அதனால்தான் இவர்கள் பெரியாரையும், இடதுசாரிகளையும் கேவலப்படுத்தி எழுதுகிறார்கள். ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுந்தரராமசாமி போன்றவர்களின் பழமைவாத கருத்துக்களுக்கு நேரடியாகவும், மௌனத்தின் மூலமும் ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கு எதிரான இந்த கோழைத்தனமான அரசியலைத் தமிழகத்தின் கருத்தியல் தளத்தில் வீழ்த்துவது என்பது சமூக அக்கறை சார்ந்த இலக்கியவாதிகளின் முக்கிய கடமையாகும்.

‘மூத்த எழுத்தாளர்களுக்கே நேரம் சரியில்லை போலும்’ என்கிறார் ஜெயமோகன். உண்மையில், இந்த மூன்று மூத்த எழுத்தாளர்களையும் புரிந்து கொள்ள இதுதான் சரியான நேரம். படைப்பின் உள் இடுக்குகளுக்குள் ஒளிந்து கொண்டு பேசும் உத்தியை விட்டுவிட்டு, படைப்பின்மூலமும், பேட்டியின் மூலமும் மூவரும் உரக்கப் பேசியுள்ளனர். தாங்கள் யார் என்பதைப் பட்டவர்த்தனமாகக் காட்டியுள்ளனர். முகமுடிகள் கழற்றப்பட்ட இவர்களின் முகம் எவ்வளவு வன்மம் நிறைந்தது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

மக்களின் மேன்மைக்கும், உயர்வுக்கும் எதிராக தங்களின் எழுத்தைப் பயன்படுத்துபவர்கள் ‘மூத்த எழுத்தாளர்கள்’ என்ற அடையாளத்தின் மூலம் தப்பித்துக் கொள்வதை நாம் அனுமதிக்கக்கூடாது. சமூகத்தின்பால் அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டியவர்கள், ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்ட சமூக ஒடுக்குமுறைக்கு வக்காலத்து வாங்குவார்களேயானால், ஒழிக்கப்படவேண்டிய ஒடுக்குமுறைகளின் பகுதியாகவே இவர்களின் எழுத்துக்களும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.

Pin It