உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்மீது பாலியல் புகார் கொடுத்த பெண்மணி யார் என்றால், நீதிபதிகள் அளித்த தீர்ப்பையே தலைகீழாக மாற்றி தொழில் அதிபர்களால் இலாபம் அடைந்தவர் என்ற திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

supreme court 255தலைமை நீதிபதி மீது புகார் கூறிய பெண் மீது பல மோசடி வழக்குகள் உள்ளன. அதில் நீதிமன்றத் தீர்ப்புகளை ‘டைப்’ செய்யும் பணியில் இருந்த போது, நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் “மோசம், மிக மோசம்” என்று கூறிய வரிகளை அப்படியே “நல்லது மிகவும் நல்லது” என்று தலைகீழாக மாற்றம் செய்து பதிவு செய்வார். முக்கியமாக வங்கிக் கடன் தொடர்பாக பெரிய நிறுவனத்தினர் மீது வரும் தீர்ப்புகளில் முன்கூட்டியே இவரிடம் நிறுவனத்தின் முக்கிய நபர்கள் பேசி வைத்ததைப் போல் இவர் மாற்றிவிடுவார். இதன்மூலம் பல பெரிய தொழில் நிறுவன முதலாளிகள் பயனடைந்துள்ளனர்.

இந்த விவகாரம் ரஞ்சன் கோகோய் தலைமையில் உள்ள குழுவில் இவர் எழுத்தராகச் சேர்ந்த 2015ஆம் ஆண்டில் 10 மாதங்கள் பணி புரிந்தபோது ரஞ்சன் கோகோயிடம் இந்த மோசடி கொண்டு செல்லப்பட்டது. பிறகு அவர் நடவடிக்கை எடுத்தார், இதற்கு முன்பு இருந்த நீதிபதிகளிடமும் புகார் கொடுக்கப்பட்டும் விசாரணை நடைபெறுவதில் மிகவும் தாமதம் ஏற்பட்டது, இதற்கு முன்பு இவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த குறிப்புகளில் இவர் குறித்த முழுமையான விசாரணை அறிக்கையிலும் இவரே தலையிட்டு தன்னை மிகவும் நல்லவர் என்றும், மிகவும் திறமையாக பணியாற்றினார் என்றும் மாற்றியுள்ளார்.

இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக உச்சநீதி மன்ற முன்னாள் பெண் பணியாளரான அந்தப் பெண் ஊழியர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் பிரமாணப் பத்திரம் அனுப்பியிருந்தார். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு கூடியது. அப்போது, இந்தப் புகார் குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வருத்தம் தெரிவித்திருந்தார். இதன் பின்னணியில் பெரும் சதி இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், “இந்த வழக்கில் தலைமை நீதிபதிக்கு எதிராக வாதிட ரூ. 1.5 கோடி வரை தருவதற்கு சிலர் முயன்றனர்” என்று உச்சநீதிமன்ற வழக்குரைஞர் உத்சவ் சிங் பைன்ஸ் சார்பில் பிரமாணப் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான சிறப்பு அமர்வு முன் நடைபெற்றது. அந்த அமர்வில் தலைமை நீதிபதியுடன் நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், தீபக் குப்தா ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.

உச்சநீதிமன்றமே தானாக முன் வந்து இந்தப் புகாரை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. முதல் நாள் அமர்வில் குற்றச்சாட்டுக்குள்ளான தலைமை நீதிபதியே அமர்வில் இடம் பெற்றது கடும் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்விலிருந்து விலகிக் கொண்டார். நீதிபதி போப்டே தலைமையில் அமைக்கப்பட்ட அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதி ரமணா, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு மிகவும் நெருக்கமானவர் என்று புகார் தெரிவித்த பெண் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நீதிபதி ரமணா அமர்விலிருந்து விலகிக் கொண்டார்.  இந்து மல்கோத்ரா என்ற பெண் நீதிபதி அமர்வில் இணைக்கப்பட்டார்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்  மீதான குற்றச்சாட்டுகளைப் பற்றி இந்த அமர்வு விசாரிக்கும். இதில் நீதித் துறையைக் களங்கப்படுத்தும் சதி அடங்கியிருக்கிறதா என்பது குறித்து விசாரிக்கவும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் உத்சவ் சிங் பைன்ஸ் தாக்கல்  செய்த மனு குறித்து ஆராயவும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. பட்நாயக்கை உச்சநீதி மன்றம் நியமித்துள்ளது. முதலில் குற்றச்சாட்டு உண்மையா இல்லையா என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உறுதி செய்த பிறகு சதி குறித்து தனது விசாரணையைத் தொடங்கப் போவதாக முன்னாள் நீதிபதி ஏ.கே. பட்னாயக் கூறியிருக்கிறார்.

சபரிமலை அய்யப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கலாம். தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு மோடி வரலாறு குறித்த திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க முடியாது. ரபேல் விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் தொடரப்பட்ட வழக்கில் ‘இந்து’ ஆங்கில நாளேடு வெளியிட்ட ஆவணங்களை நீதிமன்றம் பரிசீலிக்கும் என்பது போன்ற அரசுக்கு எதிரான பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலையை மாநில அரசுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள 161ஆவது பிரிவின் கீழ் பரிசீலிக்கலாம் என்ற உத்தரவை வெளியிட்டவரும் தலைமை நீதிபதி தான்.

கடந்த வாரம் அசாமில் பா.ஜ.க. ஆட்சியைக் கடுமையாக எச்சரித்து நீதிபதி ரஞ்சன் கோகாய் ஒரு உத்தரவைப் பிறப்பித்தார். அசாமில் வங்க தேசத்திலிருந்து ஊடுருவியவர்கள் என்று 900 வங்கதேச முஸ்லிம்களை அம்மாநில ஆட்சி கடந்த 5 ஆண்டுகளாக முகாமில் கைதிகளாக அடைத்து வைத்திருப்பது அரசியல் கூட்டத்துக்கு எதிரானது என்று கூறிய தலைமை நீதிபதி மாநில அரசின் இந்த சட்ட விரோத செயலுக்கு நீதிமன்றம் ஒரு போதும் துணை நிற்காது என்று எச்சரித்தார். ஊடுருவிய வெளிநாட்டுக்காரர்களை சொந்த நாட்டுக்கு  திரும்பி அனுப்ப வேண்டுமே தவிர, காவலில் வைக்க முடியாது என்று கூறிய தலைமை நீதிபதி, “ஏற்கனவே ஊடுருவிய வெளிநாட்டுக்காரர்கள் பல இலட்சம் பேர். அசாம் சமூகத்தில் இரண்டறக் கலந்து அசாம் அரசியலிலேயே பங்கெடுக்கும்போது இந்த 900 பேரை மட்டும் ஏன் அடைத்து வைத்திருக்கிறீர்கள்” என்றும் தலைமை நீதிபதி கேட்டுள்ளார்.

இந்தப் பின்னணியில் ஆட்சிக்கு எதிராக துணிவோடு சட்டரீதியான தீர்ப்புகளை வழங்கி வரும் தலைமை நீதிபதியை மிரட்டிப் பணிய வைக்கும் நோக்கத்தோடு இந்த பாலியல் குற்றச்சாட்டு சதி கூறப்படுகிறது உச்சநீதிமன்ற ஊழியர்கள் சங்கமும் இந்தக் குற்றச்சாட்டு ஒரு சதி என்று கண்டனம் தெரிவித்துள்ளது.

Pin It