இன்று இந்தியப் பழங்குடிகள் மிக முக்கியமான இரண்டு வாழ்வியல் பிரச்சனைகளை எதிர் கொண்டிருக்கிறார்கள். ஒன்று அவர்கள் தமது பூர்வீக நிலத்தைவிட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு அவர்களின் வாழ்நிலம் பன்னாட்டு நிறுவனங்களிடம் கைமாற்றப்படுகிறது. மற்றொன்று, மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை தேடும் பணியிலும் அவர்களை வேட்டையாடி அழித்தொழிக்கும் பணியிலும் ஈடுபட்டுவரும் காவல் மற்றும் இராணுவத்துறையால் அடக்குமுறைக்கு ஆளாகிவருகிறார்கள். இவ்விரண்டு பிரச்சனைகளுமே ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொண்டதாகும்.

கானகங்களை தற்காப்பிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மாவோயிஸ்ட்களை அழித்தொழிப்பது என்பதே அங்குள்ள நிலத்தை எதிர்ப்புகள் ஏதுமின்றி வணிக நிறுவனங்களுக்கு விலைபேசவே. காலாவதியான போராட்ட முறையைக் கைக்கொண்டிருக்கும் மாவோயிஸ்ட்கள் ஒரு பக்கம், அப்பாவி பழங்குடிகளை கொன்றழிக்கிறார்கள் என்றால் மற்றொரு பக்கம் மாவோயிஸ்ட் அமைப்புகளுக்கு ஆதரவளிக்கும் பழங்குடிகள் சல்வா ஜூடும் போன்ற அறிவிக்கப்படாத போர் நடவடிக்கைகளால் கொன்றழிக்கப்படுகிறார்கள். மாவோயிஸ்ட்களுக்கும் காவல் படைத்துறையினருக்கும் இடையே பழங்குடிகளின் வாழ்க்கை சிக்கிச் சீரழியும் வேளையில், அவர்களை மதமாற்றத் துடிக்கும் கிறிஸ்தவ மிஷினரிகள் ஒருபுறமும் அதைக்கண்டு பதைபதைக்கும் இந்துத்துவ அமைப்புகள் மற்றொருபுறமும் நின்று பழங்குடிகளை வைத்து பகடையாடிக் கொண்டிருக்கின்றனர்.

பழங்குடிகள் மலைகளை புனிதத்திற்குரியதாக வழிபடுபவர்கள். எனவே அங்கு நீர்மின் நிலையங்கள் அமைவதையோ சுரங்கம் தோண்டுவதையோ அனுமதிக்க மறுக்கிறார்கள். அந்த அடிப்படையில்தான் த்ஸோங்கு மலையையயட்டி தீஸ்தா நதியில் அமையவிருக்கும் மின்நிலையங்களுக்கு லெப்ஸாஸ் பழங்குடி மக்கள் எதர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். உலகப் பெருமுதலாளிகளில் ஒருவரான அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனத்தால் நியம்கிரியில் அமையவிருக்கும் பாக்ஸைட் எனப்படும் அலுமினியத் தாதூவை வெட்டியயடுப்பதற்கான சுரங்கத்தை அம்மலைக்குன்றுகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழ்ந்துவரும் டோங்க்ரியா, கோந்த் பழங்குடிகள் எதிரித்து போராடி வருகிறார்கள். பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் பன்னாட்டு நிறுவனங்கள் சுரங்கம் தோண்டவோ, தொழிற்சாலை நடத்தவோ அனுமதி வழங்கும்போது அங்குள்ள மக்களை கலந்தாலோசிப்பது என்பது அறவே இல்லை. அவர்களை மனிதர்களாக நினைத்தால்தானே?

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலும் சரி, சுதந்திர இந்தியாவிலும் சரி, பழங்குடி மக்கள் மீதான அரசின் கொள்கைகள் அவர்களை சராசரி குடிமக்களின் நிலையில் வைத்து ஒரு போதும் அணுகியதில்லை என்பதிலிருந்தே தற்போது அவர்கள் மீது தொடர்ந்துவரும் அரசியல் பொருளாதார மற்றும் கலாச்சார ரீதியான தாக்குதல்களைக் கண்டுகொள்ள முடியும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் கிழக்கிந்தியக் கம்பெனி அஸ்ஸாம் பகுதியில் தேயிலை பயிரிட முடிவெடுத்தபோது, அப்பகுதியில் வாழ்ந்த பழங்குடி மக்களனைவரும் உழைப்புச் சுரண்டலுக்கு ஆட்படுத்தப்பட்டனர். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆந்திரப்பகுதியில் பழங்குடிகள் வசிப்பதற்கென்று பிரிட்டிஸ் இந்திய அரசால் வழங்கப்பட்ட நிலங்களும் அவர்களின் எழுத்தறிவின்மையை பயன்படுத்திக்கொண்டு பழங்குடி அல்லாதவர்களால் அபகரிக்கப்பட்டு விட்டன.

சுதந்திர இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட கானகப் பகுதிகளுக்கான சாலைப் போக்குவரத்து வசதிகளால் பழங்குடி மக்கள் கல்வி மருத்துவ வசதிகளைப் பெற முடிந்ததில்லை. மாறாக அந்தச் சாலைகளால் மரத்தை வெட்டி விற்கும் வியாபாரிகளும், வட்டிக்கடைக்காரர்களும், சாராய வியாபாரிகளுமே பயனடைந்து வருகிறார்கள். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் அந்தந்த மாநில எல்லையில் வாழும் பழங்குடிகள் மீது வலுக்கட்டாயமாக பிராந்திய மொழிக்கல்வி திணிக்கப்பட்டது. சந்தால் பழங்குடிகளின் நிலையே இதில் மிகவும் பரிதாபம். ஒரிஸ்ஸாவில் வசிப்பவர்கள் ஒரிய மொழியையும், பீஹாரில் வசிப்பவர்கள் இந்தியையும், மேற்கு வங்கத்தில் வசிப்பவர்கள் வங்காள மொழியையும் கற்கவேண்டிய நிர்பந்தம். தமிழ்நாட்டில் கூட இருளர்களின் குழந்தைகள் பள்ளிகளில் கட்டாய தமிழ்த்திணிப்புக்குத்தான் ஆளாகிவருகிறார்கள்.

ஜவஹர்லால் நேருவின் ஆட்சிக்காலத்தில் வெளியுறவுக்குப் போலவே பழங்குடி இனத்தவருக்கும் பஞ்சசீலக் கொள்கையொன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி,

1.     பழங்குடிகள் அவர்களது பாரம்பர்ய மரபறிவைக் கொண்டே வளர்ச்சிபெற வேண்டும். அவர்களின் மீது எந்த புறக்காரணிகளையும் திணிக்கக்கூடாது. அவர்களது பாரம்பர்ய கலைகளையும் கலாச்சாரத்தையும் ஊக்குவிக்க வேண்டும்.

2.     நிலத்தின் மீதும் கானகப்பகுதிகளின் மீதுமான பழங்குடிகளின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும்.

3.     பழங்குடி இனத்தவரைக் கொண்டே அவர்களுக்கிடையே நிர்வாகத்தையும் மேம்பாட்டுப் பணிகளையும் நிறைவேற்ற வேண்டும். தொழில்          நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு மிகக்குறைந்த அளவில் அந்நியர்கள் அங்கு அனுமதிக்கப்படலாம். எனினும் அது கண்டிப்பாக            ஆரம்பக்கட்டத்தில் மட்டுமேயாக இருக்கவேண்டும். பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் அளவுக்கதிகமான அந்நியர்களை அனுமதிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

4.     பழங்குடி மக்களுடைய சமூக கலாச்சார அமைப்புகளுடன் இணைந்தே திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

5.     திட்டங்களின் முடிவுகளை புள்ளிவிவரங்களைக் கொண்டோ அல்லது செலவழிக்கப்பட்ட பணத்தைக் கொண்டோ கணக்கிடாமல் மனித வாழ்க்கைத் தரத்தைக் கொண்டே அறியவேண்டும்.

எனினும் அந்தக் கொள்கை பின்பற்றப்படவேயில்லை. அக்கொள்கை பின்பற்றப்பட்டிருந்தாலே பழங்குடியினர் மீதான அரசு இயந்திரத்தின் அணுகுமுறையில் அச்சுறுத்தலுக்கும் சுரண்டலுக்கும் இடமிருந்திருக்காது. இப்போதும் நேருவின் பழங்குடிக்கொள்கை ஏற்பானதே. அதையே அடிப்படையாகக் கொண்டதாக கூறப்படும் பழங்குடியினருக்கான புதிய தேசியக் கொள்கை 2006ம் ஆண்டில் முன்வரைவு செய்யப்பட்டு 2009ம் ஆண்டில் மீண்டும் முன்வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் நாளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

அது நிறைவேறும்பட்சத்தில், கல்வி, மருத்துவம், கானக விளைப்பொருட்கள் மீதான உரிமைகளோடு பழங்குடி மக்கள் பாரம்பர்யமாகப்பெற்ற மரபறிவுக்கு அறிவுச்சொத்துரிமை பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதுவும் ஏட்டளவிலேயே இருக்கக்கூடும் என்றபோதும், எண்பது சதவீத பழங்குடி பெண்கள் இன்னும் எழுத்தறிவு பெறவில்லை என்ற நிலையில், நீர்வளமும் நிலவளமும் கனிமவளமும் மிகுந்த வடகிழக்கு மாநிலங்களில் பெருமளவில் வாழும் பழங்குடிகள் பொருளாதாரத்தில் நலிவுற்றிருக்க அங்குள்ள நிலவுடைமை மிகச்சிலரின் கைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறது என்ற நிலையில் அவ்வாறான தொரு கொள்கை விளம்பலுக்கு உடனடி அவசியமிருக்கிறது.

2001 கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், பழங்குடியினரின் எண்ணிக்கை 8.2 சதவீதம். வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப்பிரதேசம், மேகாலயா, மிசோரம் மற்றும் நாகலாந்தில் தொண்ணூறு சதவீதத்திற்கும் மேலாகவே பழங்குடியினர் வாழ்கின்றனர். தென்னிந்திய மாநிலங்களில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே பழங்குடியினர் வசித்து வருகின்றனர். தமிழகத்திலும் கேரளத்திலும் ஒரு சதவீதம், ஆந்திரத்திலும் கர்நாடகத்திலும் ஆறு சதவீதம். பழங்குடியினர் குறித்து தென்னிந்தியாவிலுள்ள அறிவுத்துறையினர் அக்கறை காட்டாமலிருப்பதற்கு இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

அண்டை நாடான இலங்கையில் அகதிகள் வெட்டவெளி முகாம்களில் சிறைவைக்கப்பட்டிருப்பது பற்றி பதைபதைப்பு கொள்பவர்கள், நமது நாட்டின் எல்லைக்குள்ளேயே பழங்குடிகள் அவர்களின் பூர்வீக நிலத்திற்குள்ளேயே முகாம்களில் தஞ்சம் அடைந்து கொண்டிருப்பதை கவனிப்பதேயில்லை. போர்க்குழுக்களில் இளம் வயதினர் சேர்க்கப்படுவதை பற்றி எதிர்ப்பு தெரிவிப்பவர்களோ நமது நாட்டிற்குள்ளே சட்டீஷ்கர் மாநிலத்தில் மாதம் ஆயிரத்து ஐநூறு என்ற அற்ப ஊதியத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடி சிறுவர்களும் சிறுமிகளும் சிறப்பு காவல் பணியாளர்களாக நியமிக்கப்படுவதைப்பற்றி அறிந்து கொள்ளவே ஆர்வம் காட்டுவதில்லை. ஏனெனில், அண்டை நாடுகளில் அரசியல் பற்றி பேசுவது நமக்கு பாதுகாப்பானது எவ்வளவு கத்தினாலும் யாரும் கண்டுக்கொள்ளப்போவதில்லை. அறிவு ஜீவி என்ற மதிப்பும் கிடைத்துவிடுகிறது. ஆனால் உள்நாட்டுப் பிரச்சனைகளைப் பற்றி மறந்தும் வாய்த்திறப்பதில்லை. காரணம் அரசின் கண்காணிப்பிலிருந்து கவனமாக தப்பித்துக் கொள்ள நினைப்பதே.

(புது எழுத்து மே௨௨ 2010 இதழில் வெளியான கட்டுரை)

Pin It