தலையங்கம்

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி - குறைந்தபட்ச பொது செயல் திட்டம் ஒன்றை முன் வைத்து ஆட்சிக்கு வந்திருக்கிறது. கடந்த கால தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சி - பச்சை பார்ப்பன இந்துத்துவா ஆட்சியாக செயல்பட்ட நிலையிலிருந்து மாறி, மதவெறிச் சாயம் பூசிக் கொள்ளாத ஆட்சியாக இது செயல்படுகிறது என்ற வகையில் மகிழ்ச்சி அடைந்தாலும், பொருளாதாரக் கொள்கைகளில், கடந்த கால ஆட்சியின் பாதையிலே நடை போட்டு வருவது, கண்டனத்துக்கும், வேதனைக்கும் உரியதாகும்.

குறைந்தபட்ச வேலைத் திட்டத்தில் கூறப்பட்டுள்ள உறுதி மொழிகளைக் காற்றில் பறக்க விட்டு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முயற்சிகளில் இந்த அரசு இறங்கியிருக்கிறது. இதற்கு இடதுசாரி கட்சிகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருவதும், கூட்டணியில் இடம் பெற்றுள்ள இதர கட்சிகள், இந்தக் கொள்கைப் பிரச்சினையில் மவுனம் சாதித்து வருவதையும், கவலையுடன் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.

‘பெல்’ பொதுத்துறை நிறுவனம் நல்ல லாபத்துடன் இயங்கிவரும் ஒரு நிறுவனம். இதில் 33 சதவீதப் பங்குகளை அரசு ஏற்கனவே விற்றுவிட்டது. ‘பெல்’ இயக்குனர் குழுவில் அன்னிய நிறுவனங்களின் இரண்டு பிரதிநிதிகளும் ஏற்கனவே இடம் பெற்றுள்ளனர். இப்போது மேலும் 10 சதவீதப் பங்குகளை, அன்னிய முதலீட்டாளருக்கு விற்க, முடிவு செய்திருப்பது குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் தரப்பட்டுள்ள உறுதியை மீறும் நடவடிக்கையாகும். இது மட்டுமல்ல, லாபம் தரக்கூடிய அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் 49 சதவீதப் பங்குகளை விற்றுவிடப் போவதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகிறார். இது பொதுத்துறை நிறுவனங்களைப் பகுதி பகுதியாக தனியார் மயமாக்கும் முயற்சியேயாகும்.

இந்தப் பங்கு விற்பனையால் அரசுக்குக் கிடைப்பது ரூ.2000 கோடி. ஆனால், வாராக் கடன்களாக, இந்திய பொதுத் துறை வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள தொகை மட்டும் ரூ.45,000 கோடி. பெல் பங்கு விற்பனையில் கிடைக்கக்கூடிய வருவாயைவிட, இது 22 மடங்கு அதிகம்.

இதே போல், மக்களின் கடுமையான கோபத்துக்கு உள்ளாகியிருக்கும் பிரச்சினை - பெட்ரோல், டீசல் விலை உயர்வாகும். பெட்ரோலுக்கு சுங்கவரி, விற்பனை வரி, உற்பத்தி வரி, சில்லறை விற்பனை வரி என்று வரிகளை போட்டுக் கொண்டு, சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலை ஏறுவதால், இந்த விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது என்று போலி சமாதானம் கூறுகிறார்கள். உதாரணமாக டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.40-49 காசு. இதில் பெட்ரோல் விலை மட்டும் ரூ.17.51 காசுகள் மட்டும் தான். எஞ்சிய தொகை எல்லாம் வரிகளாக விதிக்கப்படுபவை. சாதாரண மக்கள் மீது ஏற்றப்படுகிற நேரடி வரிச்சுமை இது!

2004 ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் பங்குச் சந்தை பரிவர்த்தனைகளுக்கு 0.15 சதவீதம் வரி விதித்தவுடன், பங்கு சந்தை முதலீட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, நிதியமைச்சர் ப.சிதம்பரம் உடனே பின்வாங்கினார். இந்த வரி விதிப்பில் மட்டும் அரசு உறுதியாக இருந்தால், இப்போது பங்கு விற்பனையில் கிடைப்பதைவிட, பல மடங்கு கூடுதல் வருவாய் கிடைத்திருக்கும்.

அரசின் இந்த மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகள், கடந்த ஆட்சியைப் போலவே தொடருகிறது. அமைச்சர்கள் மாறுகிறார்கள். ஆட்சி அதிகாரம் ஆட்சியை ஆட்டி வைக்கும் பார்ப்பன-பனியா-பன்னாட்டு சக்திகள், தொடர்ந்து தங்கள் மேலாதிக்கத்தை நிலைப்படுத்தியே வருகின்றன. இது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும். வாக்களித்த மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். கூட்டணி கட்சிகள் இதில் மவுனம் சாதிப்பதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.