பெரியார் காங்கிரஸ் கட்சிக்குள்ளே வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்காகவே போராடினார்; மக்கள் தொகையில் அவரவர் விகிதாச்சாரத்துக் கேற்ப கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதே பெரியார் கோரிக்கையாக இருந்தது. அரசியல் சட்டம் முதன்முதலாக பெரியார் போராட்டத்தினால் திருத்தப்பட்ட பிறகு, சமூக கல்வி ரீதியான இடஒதுக்கீடு முறை வந்தது. உச்சநீதிமன்றம் வழக்கு ஒன்றில் வழங்கிய தீர்ப்பில் இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்று கூறியது. ஆனால், அரசியல் சட்டப்படி அப்படி வரையறை ஏதும் இல்லை. இதை கி.வீரமணிகூட பல்வேறு சம்பவங்களில் சுட்டிக்காட்டியுள்ளார். 69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குகள் வந்த நிலையில் அதை 31(சி) பிரிவின் கீழ் கொண்டு வந்து தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி அதை குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் சட்டமாக்கிவிட்டால், உச்சநீதிமன்றத்தின் தலையீட்டை சட்டப்படி தடுக்கலாம் என்ற ஒரு யோசனையை கி.வீரமணி, அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் முன் வைத்தார். அதை ஜெயலலிதா ஏற்று, சட்டப் பேரவையிலும் தீர்மானமாக்கினார்.

ஆனால், அதே ஜெயலலிதா ஆட்சி, உச்சநீதி மன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் இப்படி ஒரு சட்டம் நிறைவேற்றப்பட் டிருக்கிறது என்ற தகவலையே உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரவே இல்லை. இப்படி ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டதே உச்சநீதிமன்றத்தின் தலையீட்டைத் தவிர்ப்பதற்குத்தான் என்று சொல்லப்பட்டாலும், எந்த நோக்கத்துக்காக கொண்டு வரப்பட்டதோ, அதற்குப் பயன்படுத்த ஜெயலலிதா ஆட்சி தயாராக இல்லை. இந்த சட்டத்தை சட்டசபையில் ஒரு மனதாக ஆதரித்து ஒப்புதல் அளித்த தி.மு.க. உட்பட, அத்தனை கட்சிகளுமே ஏமாற்றப்பட்டன. இதற்காக கி.வீரமணி - ஜெயலலிதாவைக் கண்டித்து எந்த அறிக்கையும் பதிவு செய்யவில்லை. ஜெயலலிதாவுக்கு 'சமூக நீதி காத்த வீராங்கனை' என்ற பட்டத்தை மிகப் பெரும் விழா எடுத்து வழங்கி பாராட்டினார். ஆனால் 'வீராங்கனை' சமூகநீதியைக் காக்க உண்மையில் முன் வரவில்லை.

பட்டம் அளித்ததை 'குமுதம் தீராநதி' ஏட்டுக்கு அளித்த பேட்டி ஒன்றில் நியாயப்படுத்திய கி.வீரமணி, காலம் முழுதும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்காக குரல் கொடுத்த பெரியார் - 50 சதவீத இடஒதுக்கீட்டைகேட்டதாக திரித்துக் கூறினார்.

'குமுதம் தீராநதி' 2002 ஆம் ஆண்டு நவம்பர் மாத இதழுக்கு அவர் அளித்த பேட்டியை அப்படியே வெளியிடுகிறோம்.

"குமுதம் தீராநதி கேள்வி : இருந்தாலும் ஜெயலலிதாவுக்கு நீங்கள் 'சமூகநீதி காத்த வீராங்கனை' பட்டம் கொடுத்தது சம்பந்தமான சலசலப்பு இன்னும் நீடிக்கிறதே?

கி. வீரமணி பதில் : 69 சதவிகித ஒதுக்கீடு இப்போதும் வேலை வாய்ப்புகளில், சர்வீஸ் கமிஷனில் அமலாகியிருக்கிறதே? மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் சேர்ப்பதற்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. 31சி என்கிற சட்டப் பாதுகாப்பு போடப்பட்டு இன்றைக்கு நடைமுறையில் இருக்கிறதே? பல மாநிலங்களில் இதை இன்னும் ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள். பெரியார் 50 என்று சொன்னதை அவரது தொண்டர்கள் 69 ஆக்கியிருக்கிறோம். சமூகநீதி என்பது இடஒதுக்கீட்டிற்கான வார்த்தை. இதைக் காத்ததால் ஜெயலலிதாவை 'சமூகநீதி காத்த வீராங்கனை' என்று சொன்னோம். இதை நிறைவேற்றியது இவர்களின் துணிச்சல் தானே? அந்த அம்சத்தில் இப்போதும் இந்த அரசு துளிகூடப் பின் வாங்கவில்லையே!" (உச்சநீதிமன்றத்தில் மவுனம் சாதித்தது பின்வாங்கல் இல்லையோ!) தாம் 69 சதவீதத்தைப் பெற்றுவிட்டதாகக் காட்டிக் கொள்ள பெரியார் 50சதவீத ஒதுக்கீடு கேட்டதாக திரித்துக் கூறுகிறார், வீரமணி.

25.11.2001 அன்று பெரியார் திடலில் 'பெரியாரியல் தோற்கடிக்கப் பட்டதா' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் கி.வீரமணி இவ்வாறு பேசினார்.

"நூற்றுக்கு நூறு பார்ப்பனர்கள் அனுபவித்து வந்ததைத்தான் 50 சதவீத இடமாவது பார்ப்பனரல்லாதாருக்கு ஒதுக்கித் தாருங்கள் என்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் தீர்மானமாகவே கொடுத்து கேட்டார்கள்." (13.12.2001 - விடுதலை)

காஞ்சிபுரம் மாநாட்டில் பெரியார் கொடுத்த தீர்மானத்தில் 50 சதவீத இட ஒதுக்கீடா கேட்டார்? இல்லை; இல்லவே இல்லை.

பெரியார் - முன்மொழிந்த தீர்மானம் இதுதான்.

"தேசத்தின் முன்னேற்றத்தை உத்தேசித்தும் தேசிய ஒற்றுமையை உத்தேசித்தும் அரசியல் சம்பந்தமான சகல பதவிகளிலும், இந்து சமூகத்தில் பிராமணர், பிராமணரல்லாதார், தீண்டாதோர் என்போர் ஆகிய இந்த மூன்று சமூகத்தாருக்கும் அவரவர் ஜனத் தொகையை அனுசரித்துப் பிரதிநிதி ஸ்தானம் கிடைக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டுமாய் மாகாண மாநாட்டைக் கேட்டுக் கொள்வதாடு, இத் தீர்மானத்தை மாகாண மாநாடு மூலமாய் காங்கிரசை வலியுறுத்தும்படியும் தீர்மானிக்கிறது." (குடிஅரசு - 16.12.1925) இதுதான் பெரியாரின் தீர்மானம்.
இதில் எங்கே 50 சதவீத இடஒதுக்கீடு வருகிறது?

பெரியார் காஞ்சிபுரம் மாநாட்டில் முன் மொழிந்த தீர்மானத்தின் நோக்கத்தையே திரித்துப் பேசுவதற்கு என்ன பெயர் சூட்டலாம்?

பாரதியார் நூல்கள் தேசவுடைமையாகிவிட்டதால், பாரதியின் பல கருத்துகள் சிதைக்கப்பட்டு விட்டதாக பாரதியார் பேத்தி கூறியதை - விடுதலை தலைப்புச் செய்தியாக வெளியிட்டு பெரியார் நூல்களை தேசவுடைமையாக்க வேண்டும் என்று 'கதறுவோர்' பார்வைக்கு என்று தலைப்பிட்டுள்ளது. பாரதியின் தீவிர பார்ப்பன ஆதரவுக் கருத்தை அவரை முற்போக்காகக் காட்ட விரும்பியவர்கள் - திருத்தியது உண்மை. பார்ப்பன பாரதியைத் தூக்கி நிறுத்த அப்படி திருத்தப் பட்டனவற்றை எல்லாம் உண்மையான ஆய்வாளர்கள் வெளிப்படுத்தி விட்டனர்.

வால்மீகி ராமாயண ஆபாசங்களை பெரியார் ஆதாரத்துடன் தோல் உரித்து வந்தபோது பெரியாரால் சுட்டிக்காட்டப்பட்ட பகுதிகள் பிறகு, வெளிவந்த பதிப்புகளில் பார்ப்பனர்களால் நீக்கப்பட்டன. இதை இயக்கத்தின் ஏடுகளே கண்டுபிடித்து வெளிப்படுத்தியுள்ளன. கருத்துகள் திரிக்கப்பட்டால், கண்டுபிடிக்கப்பட்டு, அம்பலமாக்கப்பட வேண்டுமே தவிர, நூல்களே தேசியமயமாக்கக் கூடாது. எல்லோரும் வெளியிட்டுவிடக் கூடாது என்று வாதிடுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்? அப்படியானால் எந்த சிந்தனையாளர் நூல்களும் தேசவுடைமையாகவே கூடாது என்பதுதான் கி.வீரமணியின் கொள்கையா? அப்படி அவர் வெளிப்படையாக அறிவிப்பாரா?

பெரியார் நூல்கள் பெருமளவில் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று வீரமணி கவலைப்படவில்லை. தனக்குப் பிறகு தனது நூல்களே வாரிசு என்று பெரியார் அறிவித்தாலும்கூட பெரியாரின் வாரிசாக தன்னை பிரகடனப்படுத்திக் கொள்ளும் வீரமணி, உண்மையான வாரிசாகிய நூல்களை, தனது கட்டுப்பாட்டுக்குள் முடக்கிப் போடவே துடிக்கிறார்.

மற்றவர்கள் வெளியிட்டால் பெரியார் கருத்தை திரித்துவிடுவார்கள் என்று கூறிக் கொண்டு, தானே பெரியார் கருத்தைத் திரிக்கலாமா? காஞ்சிபுரம் மாநாட்டில் 50 சதவீத இடஒதுக்கீட்டை பெரியார் கேட்டதாக புளுகலாமா?

"பெரியார் கேட்டது 50 சதவீதம் தான்; நான் பெற்றதோ 69 சதவீதம்" - என்று தன்னை புகழ் ஏணியில் உயர்த்திக் கொள்ள பெரியார் கூறாததைக் கூறலாமா?

பெரியாரைத் திரிப்பது யார்?
(புரட்டுகள் உடைப்பது தொடரும்)

Pin It