பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த, தில்லிப் பல்கலைக்கழகம் மிகவும் அவசர கதியில் நடவடிக்கை எடுத்திருப்பதன் காரணமாக தற்சமயம் பணியிலிருக்கும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் வேலைநீக்கம் செய்யப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதனைக் கண்டித்து, தில்லிப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைமையில், ஆசிரியர்கள், இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில், தில்லிப் பல்கலைக் கழக நிர்வாகமானது, தற்போது பணியிலிருக்கும் தற்காலிக ஊழியர்கள் நூற்றுக்கணக்கானவர்களை வேலையை விட்டு நீக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாக, தில்லிப் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ரபிப் ராய் குற்றம் சாட்டியுள்ளார்.
தில்லி பல்கலைக்கழக நிர்வாகத்தின் நடவடிக்கை சரியல்ல என்றும், தற்சமயம் பணியிலிருக்கும் ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்படாத விதத்தில் கூடுதல் பணியிடங்கள் உருவாக்கும் வரை, பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீடு அமலாக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பல்கலைக்கழக ஆசிரியர்களின் இந்த கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக்குழு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றுக்கு, ஆசிரியர் சங்கம் சார்பில் கடிதங்களும் எழுதப்பட்டு உள்ளன. இப்பிரச்சினையில் பல்கலைக் கழகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக, ஆசிரியர்கள் திங்களன்று பல்கலைக் கழகத் துணைவேந்தர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டத்திலும் ஈடுபட்டனர். செவ்வாய்க்கிழமையன்றும் போராட்டம் தொடர உள்ளது.