திரைப்படத் தணிக்கைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட் டுள்ள பகல்ஜீ நிகலானி, பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ்.சோடு நெருக்கமான உறவு கொண்டவர். தனது அடை யாளத்தை தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் அவர் ‘தணிக்கைக்கு’ உட்படுத்தாமல் வெளிப்படுத்தியிருக்கிறார். “நான் பா.ஜ.க.வைச் சார்ந்தவன் என்பதை பெருமையுடன் கூறுகிறேன். தேசத்தின் குரலாக நரேந்திர மோடி திகழ்கிறார். அவர்தான் எனது கதாநாயகன்” என்று கூறியுள்ள இவர்தான், நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடிக்காக ‘ஹர் ஹர் மோடி’ என்ற பிரச்சாரப் படத்தையும் தயாரித்தவர். தணிக்கைக் குழு தலைவராக இருந்த லீலா சைமன் மற்றும் குழு உறுப் பினர்கள். தணிக்கைக் குழுவில் அரசின் தலையீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கூண்டோடு பதவி விலகியதைத் தொடர்ந்து, தணிக்கைக் குழு இப்போது ‘சங் பரிவார்’ ஆட்களைக் கொண்டு நிரப்பப்பட்டிருக்கிறது. பஞ்சாபில் தன்னையே கடவுளாக அறிவித்துக் கொள்ளும் ஒரு சீக்கியக் குழுவின் தலைவரான ராம் ரகீம்சிங் தயாரித்த ‘கடவுளின் தூதர்’ என்ற படத்துக்கு லீலா சைமன் தலைமையிலான தணிக்கைக் குழு அனுமதி மறுத்தது. அரியானா தேர்தலில் பா.ஜ.க.வை ஆதரித்தவர் ராம் ரஹீம் சிங் என்பதால், மோடி ஆட்சியின் தகவல் துறை அமைச்சகத்தின் தலையீட்டில் மேல் முறையீட்டுக் குழு வழியாக 24 மணி நேரத்தில் தடையை நீக்கி படம் வெளியிட அனுமதித்து விட்டார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான், தணிக்கை அதிகாரி லீலா சாம்சனும், குழு உறுப்பினர்களும் பதவி விலகினர். இந்த திரைப்படத்துக்கு பஞ்சாப் மாநில அரசு தடை விதித்து விட்டது.

மத உணர்வை புண்படுத்தக் கூடிய காட்சிகள் இடம் பெற்றுள்ள தாகவும், அறிவியலுக்கு எதிராக தன்னைத் தானே கடவுளாகக் கூறிக் கொள்ளும் ராம் ரகீம் சிங் அற்புதங்கள் செய்வதாகவும் படத்தில் காட்சிகள் வருகின்றன என்பதால் அனுமதி தரவில்லை என்று தணிக்கைக் குழு கூறுகிறது. பொதுவாக ஒரு திரைப்படத்துக்கு அனுமதி மறுப்பது ஏற்கக் கூடியது அல்ல என்றாலும் பா.ஜ.க.வினரிடம் நாம் கேட்கும் கேள்வி இதுதான். தமிழ்நாட்டில் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொரு பாகன்’ நாவல் மத உணர்வை புண்படுத்துவதாகக் கூறி தடை போடும் இதே ஜாதி-மதவெறிகள் சக்திகள், அதே அளவுகோலை ‘கடவுளின் தூதர்’ படத்துக்கு பின்பற்றாதது ஏன்? மத உணர்வை புண்படுத்துவதாக தணிக்கைக் குழு தடை விதித்தப் படத்தை திரையிட அனுமதித்தது ஏன்?

Pin It