காந்தி கொலை  செய்யப்பட்ட ஜனவரி 30ஆம் நாளை தேர்ந்தெடுத்து, விசுவ இந்து பரிஷத், திருச்சியில் மாநாடு நடத்துவதுடன், அவர்கள் அமைப்பு தொடங்கப்பட்ட நாள் என்ற உண்மைக்கு மாறான பொய்யான கருத்தையும் முன் வைத்திருக்கிறது. காந்தி சுட்டுக் கொலை செய்யப்பட்ட நாளை திட்டமிட்டு மறைக்கும் நோக்கத்துடன் விசுவ இந்து பரிஷத் மேற்கொண்டுள்ள முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று திருச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம், மாநகர காவல் துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளது. மாவட்டச் செயலாளர் வே.க.கந்தவேல் குமார், இந்த மனுவை அளித்துள்ளார். மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

“அண்ணல் காந்தியடிகள், இந்து மதவெறியன் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்ட நாள் ஜனவரி 30ஆம் தேதி. நாடு முழுவதும் அவரது நினைவு நாளை கோடானு கோடி மக்கள் ஜாதி, மதம், இனம், மொழி, ஏன் நாடு கடந்து உலகமே நினைவுகூரும் நாளில் தொடர்ந்து காந்தீய கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் விசுவ இந்து பரிஷத் என்கிற இந்து அமைப்பு நாட்டில் அமைதியையும், மத நல்லிணக்கத்தையும், சீர்குலைக்கும் நோக்கத்தோடு அவர்களே அந்த அமைப்பு தொடங்கிய உண்மையான நாளான ‘கிருஷ்ண ஜெயந்தி’யை தவிர்த்து விட்டு காந்தியாரின் நினைவு நாளில் உள்நோக்கத்தோடு திருச்சி உழவர் சந்தையில் 50ஆம் ஆண்டு விசுவ இந்து பரிஷத் தொடக்க விழா நாளாக அறிவித்து மாநாடு நடத்த இருப்பதாக விளம்பரம் செய்து வருகிறார்கள். பொது மக்கள், காந்தீய கொள்கை வழி செயல்படும் அரசியல் கட்சிகள்,  அனைத்து அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், மகளிர் அமைப்புகள், தமிழ்நாடு அரசு-நிர்வாகம் என அனைவரும் ஒற்றுமையாக நினைவுகூரும் காந்தியாரின் நினைவைப் போற்றுவதற்கு ஏதுவாக வருகின்ற ஜனவரி 30ஆம் தேதி விஸ்வ இந்து பரிஷத்தின் 50 ஆண்டு விழா மாநாட்டிற்கு அனுமதி யளிக்க வேண்டாம் என திராவிடர் விடுதலைக் கழகம் அன்புடன் வேண்டுகிறது” என்று மனுவில் குறிப்பிடப்பட் டுள்ளது.

மாவட்டசெயலாளர் கந்தவேல்குமார், அமைப்பாளர் தமிழ்முத்து, தலைமைக்குழு உறுப்பினர் புதியவன் ஆகியோர் 30.12.2014 அன்று கழக சார்பில் இந்த மனுவை அளித்தனர்.

Pin It