குஜராத்தில் ‘என்கவுன்டர்’ கொலைகளுக்கு சதித் திட்டம் தீட்டிய அப்போதைய உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை சிறப்பு நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்திருக்கிறது. இது எப்படி நடந்தது? தமிழ் ஊடகங்களோ தொலை காட்சிகளோ இருட்டித்த உண்மைகள் இங்கே வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்படுகின்றன.

அமீத்ஷா, குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்தபோது மோடியை கொல்ல முஸ்லிம் தீவிரவாதிகள் சதி செய்ததாக பல ‘என்கவுன்டர்’ கொலைகள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டன. மும்பையைச் சார்ந்த இர்ஷத் ஜஹான் என்ற கல்லூரி மாணவி உள்பட நான்கு பேர் பம்பாயிலிருந்து அகமதாபாத்துக்கு கடத்திச் செல்லப்பட்டு கொல்லப் பட்டனர். காவல்துறையினரே திட்டமிட்டுக் கொலை செய்தார்கள் என்று குஜராத் நீதிமன்றங்களே உறுதி செய்தன. இந்த என்கவுன்டரில் தொடர்புடைய 32 காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

2002ஆம் ஆண்டு குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான இனப்படுகொலையை மோடி ஆட்சி கட்டவிழ்த்துவிட்டது. 2000த்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். மதத்தின் பெயரால் வெறியூட்டப்பட்டவர்கள் ஆயுதங்களுடன் வெளிப்படையாக இந்த கலவரத்தை நடத்தியபோது, காவல்துறை அதைத் தடுக்க வேண்டாம் என்று மோடியே உத்தரவிட்டார். இந்த உண்மையை மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஹரேன் பாண்டியா என்பவரே, விசாரணைக் குழுவில் அம்பலப்படுத்தினார். அதன் காரணமாக அடுத்த சில மாதங்களில், அந்த அமைச்சர் கொலை செய்யப்பட்டார். ஹரேன் பாண்டியாவின் தந்தை, ‘தனது மகன் சாவுக்கு காரணம், மோடி தான்’ என்று வெளிப்படையாக குற்றம் சாட்டினார். ஆனால், ‘ஹரேன் பாண்டியாவின் கொலை, பாகிஸ்தான் சதி’ என்றார் மோடி. 17 அப்பாவி முஸ்லிம்கள் இந்த சதித் திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டார்கள். ஆனால், ‘இவர்கள் அனைவருமே அப்பாவிகள்; கொலைக்கு தொடர்பில்லை’ என்று நீதிமன்றமே விடுதலை செய்துவிட்டது. உண்மையில் ஹரேன் பாண்டியா கொலைக்கு ஷொராபுதின் என்ற ரவுடி. கூலிப் படையாகப் பயன்படுத்தப்பட்டார். குற்றத்தை மறைக்க அவரும் கொலை செய்யப்பட்டார். இதில் ஈடுபட்ட குற்றவாளிகளை மறைக்க அவரது மனைவி கவுசர்பீ எரித்துக் கொல்லப்பட்டார்.

இந்த சதியின் பின்னணி முழுமையும் தெரிந்தவர் துளசி பிரஜாபதி என்ற தொழில்முறை வன்முறை யாளர். வேறு குற்ற வழக்குகளில் உதய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்து சிறையிலிருந்தபடியே மனித உரிமை அமைப்புகளுக்கு, மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பாதுகாப்பு கேட்டு கடிதங்களை எழுதிக் கொண்டே இருந்தார். கடைசியில் அவரது கதையும் முடிக்கப்பட்டது. நீதிமன்ற விசாரணைக்காக அகமதாபாத்துக்கு கொண்டு வரப்பட்டு, மீண்டும் உதய்ப்பூர்திரும்பும்போது போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலை செய்யப்பட்ட இடம் குஜராத்தின் எல்லையோர மாவட்டமான பனாஸ் கந்தா. ஏற்கெனவே என்கவுன்டர் கொலைகள் நடத்திய வன்சாரா என்ற காவல்துறை டி.அய்.ஜி.யை உள்துறை அமைச்சர் அமீத்ஷா, இந்த எல்லைப்புற மாவட்டத்துக்கு அதிகாரியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். அவர் பொறுப்பேற்ற அடுத்த சில நாட்களிலே அதே பகுதியில் விசாரணைக் கைதி துளசி பிரஜாபதி ‘என்கவுன்டர்’ நடக்கிறது. அமைச்சர் ஹரேன் பாண்டியாவின் கொலைச் சதி முழு விவரமும் தெரிந்தவர் பிரஜாபதி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சிறையில் அடைக்கப் பட்டுள்ள அதிகாரி வன்சாரா, சிறையிலிருந்து முதல்வர் மோடிக்கு கடிதம் எழுதினார். “உங்கள் அரசாங்கத்தின் உத்தரவை ஏற்றுத் தானே நாங்கள் ‘என்கவுன்டர்’ நடத்தினோம். தண்டனை எங்களுக்கு மட்டும்தானா? அரசாங்கத்துக்கு இல்லையா?” என்று அந்த கடிதத்தில் கேட்டார்.

இத்தனை என்கவுன்டர் கொலைகள் நடந்த போதும், குஜராத்தின் உள்துறை அமைச்சர் அமீத்ஷா, குற்றச்சாட்டுக்கு உள்ளாகி பிணையில் வெளி வந்தவர்; அவர் குஜராத் மாநிலத்துக்கு திரும்பக் கூடாது என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. அதன் காரணமாகவே உ.பி.யின் தேர்தல் பொறுப்பை கவனிக்க மோடி அமீத்ஷாவை பணித்தார். பிறகு, பா.ஜ.க.வின் தலைவராகவும் உயர்த்தப்பட்டார். இப்போது, ‘என்கவுன்டர்’ கொலை வழக்கிலிருந்தே சிறப்பு நீதிமன்றம் அமீத்ஷாவை விடுவித்தும் விட்டது. சிறப்பு நீதிமன்றம் அமீத்ஷாவை விடுவித்தது சரியான நடவடிக்கையா? சட்டத்தின் கூறுகள், அமீத்ஷாவின் பின்னணி, அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட சாட்சியங்கள் கருத்தில் கொள்ளப் பட்டதா?

இந்த ‘என்கவுன்டர் கொலை’ வழக்கு சதியை மாநில அரசு விசாரிக்கக் கூடாது என்று சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிட்டதே உச்சநீதிமன்றம்தான்.

அமித்ஷாவை வழக்கிலிருந்து சி.பி.அய். சிறப்பு நீதிமன்ற நீதிபதி இப்போது விடுவித்து விட்டார்.

“சில அரசியல் காரணங்களுக்காகவே சி.பி.அய். 16ஆவது குற்றவாளியை (அமீத்ஷா) இந்த வழக்கில் சேர்த்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார். நீதிபதி இந்த என்கவுன்டர்’ கொலைக்கு மூளையாக செயல்பட்டதே அமித்ஷாதான் என்பது சி.பி.அய். யின் குற்றச்சாட்டு.

முதலில், இந்திய தண்டனை சட்டம் 227ஆவது பிரிவின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்கள் உண்மை யான குற்றவாளிகளா, இல்லையா, குற்றம் செய்திருக் கிறார் என்பதற்கு போதுமான முகாந்திரங்கள் இருக்கிறதா என்பதை எல்லாம் நீதிபதிகள் வழக்கு விசாரணையின் போக்கில்தான் ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். அதனடிப்படையில் இறுதிகட்ட விசாரணைகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவார்கள். ஆனால், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையிலேயே வழக்கிலிருந்து ஷா விடுவிக்கப்பட்டிருக்கிறார். வழமையாக இந்த நிலையில் குற்றம்சாட்டப் பட்டவர்களை நீதிமன்றம் வழக்குகளிலிருந்து விடுவிப்பது இல்லை.

இந்த சதியில் அமித்ஷாவுக்கு தொடர்பு உண்டு என்று குற்றவியல் நடைமுறை சட்டம் 161 மற்றும் 164ஆவது பிரிவுகள் கீழ் சாட்சிகள் அளித்த வாக்குமூலங் களையும் நீதிமன்றம் ‘நம்பத் தகுந்தவையல்ல’ என்று, தள்ளுபடி செய்துவிட்டது. இந்த என்கவுன்டர் கொலையை செய்த காவல்துறை அதிகாரிக்கும் அமீத்ஷாவுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்களின் பதிவுகளை சி.பி.அய். நீதிமன்றத் தில் சமர்ப்பித்தது. அமித்ஷா பேசியிருப்பது - என்கவுன்டர் கொலைகளை செய்த அகமதாபாத் மாவட்டத்தைச் சார்ந்த மாவட்ட மட்டத்திலான காவல்துறையினருடன் (டி.ஜிவன் சாரா, எஸ். ராஜ் குமார் பாண்டியன், என்.கே.அமீர் போன்ற மாவட்ட அதிகாரிகள்). உரையாடல் நடந்ததோ ‘என்கவுன்டர் படுகொலைகள்’ நடந்த பகுதியைச் சார்ந்த அதிகாரிகளிடம். உள்துறை அமைச்சராக உள்ள ஒருவர், மாநில மட்டத்திலான அதிகாரி களுடன் தான் பேசுவார்களே தவிர, மாவட்ட காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு பேசுவது வழமையல்ல; மரபும் அல்ல என்று சி.பி.அய். குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தது.

சி.பி.அய்.யின் இந்த குற்றச்சாட்டுக்கு அமித்ஷா, வழக்கறிஞர், குஜராத் உயர்நீதின்றத்தில் 2010இல் பதிலளித்தார். அமீத்ஷாவுக்கு பிணை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு அது. அதில், அப்போது இளைஞன் ஒருவன் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து, மாவட்ட காவல்துறை அதிகாரியிடம் மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அமீத்ஷா பேசினார் என்று விளக்கமளிக்கப்பட்டது.

ஆனால், சிறப்பு நீதிமன்றத்தில், வழக்கிலிருந்து ஷாவை விடுவித்தபோது, இளைஞன் கடத்தப்பட்ட தாக, ஏற்கெனவே கூறிய கதையை முழுமையாக மறந்து விட்டார்கள். இப்போது வேறு ஒரு புதிய கதை ஷா தரப்பில் முன் வைக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை, கலவரங்கள் வரும் போதெல்லாம் அமீத்ஷா நேரடியாகவே கீழ் மட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசுவார். அது, அவரது நிர்வாக தனித்துவம் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது. இந்த வாதத்தை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. ஷாவை விடுவிக்கும் உத்தரவில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட் டுள்ளது.

“உலகம் முழுதும் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருவதை இந்த நீதிமன்றம் கவனத்தில் கொண்டு, அத்தகைய சூழலில், ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் உள்துறை அமைச்சர் - கள நிலையில் செயல்படும் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டு பேசுவதில் அதிசயமோ, வழமைக்கு மாறானதோ இல்லை” என்று நீதிபதி கூறியுள்ளார்.

ஷொராபுதின், என்கவுன்டரில் கொலை நடந்த பண்ணைத் தோட்டத்திலிருந்த காவல்துறை அதிகாரி களுடன் அமீத்ஷா பேசியிருப்பது - உரையாடல் பதிவுகளைக் கொண்டு கண்டறியப்பட்டது. ஷாவுக்கு சதியில் பங்கு உண்டு என்பதற்கான இந்த உறுதியான ஆதாரங்களை நீதிமன்றம் ஏற்கவில்லை. இந்த உரையாடல்களுக்கு முக்கியத்துவம் ஏதுமில்லை என்று நீதிமன்றம் கூறி விட்டது. ஆனால், குஜராத் மாநில புலனாய்வுத் துறைக்கு, இதன் முக்கியத்துவம் தெரியும். இந்த உரையாடல்களை மாநில புலனாய்வுத் துறை விசாரணையின்போது, அவர்களால் சேகரிக் கப்பட்டதாகும். பிறகு உச்சநீதிமன்றம் தலையிட்டு, சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிட்டபோது, இந்த உரையாடல் பதிவுகளை (331 உரையாடல்கள்) உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் மாநில உளவுப் பிரிவு மறைத்துவிட்டது.

மாநில அளவில் விசாரணைகளை நடத்தி, குற்றம் செய்த அதிகாரிகளை கைது செய்தவர் ரஜனீஸ்ராய் என்ற காவல்துறை தலைமை அதிகாரி, உள்துறை அமைச்சராக இருந்த ஷா, அந்த அதிகாரியை தலைமைப் பொறுப்பிலிருந்து அகற்றி, அந்த இடத்தில் ஓ.பி.மாத்தூர் என்ற அதிகாரியை நியமித்தார். இந்த ஓ.பி.மாத்தூர்தான் சிறப்பு நீதிமன்றத்துக்கு விசாரணை மாற்றப்பட்டபோது, ‘தொலைபேசி’ உரையாடல் களை சமர்ப்பிக்காமல் மறைத்தவர்.

‘என்கவுன்டர்’ கொலைகளில் அமித்ஷாவுக் குள்ள நேரடி தொடர்பை தொடக்கத்தில் விசாரணை நடத்திய கீதா ஜோஹ்ரி என்ற பெண் போலீஸ் அய்.ஜி. சமர்ப்பித்த 24 பக்க அறிக்கை விளக்குகிறது. ஆரம்பத்தில் தலையீடு ஏதுமின்றிதான் விசாரணை நடந்தது. ஒரு கட்டத்தில் ‘என்கவுன்டர்’ கொலைக்கு உள்ளான ஷொராபுதீன், அவரது மனைவி கவுசர்பி இருவரும் அகமதாபாத்தில் சிறிகிரீஸ் பட்டேலுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் அடைத்துத் தான் வைக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள் என்று சாட்சிகள் கூறியதற்குப் பிறகுதான் தலையீடுகள் தொடங்கின. கொலையை நடத்திய குற்றவாளியான காவல்துறை அதிகாரிகள் வன்சாரா மற்றும் ராஜ்குமார் பாண்டியன், இந்த செய்தியை அவசரமாக உள்துறை அமைச்சர் அமீத்ஷாவின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். உடனே அமைச்சர் ஷா விசாரணைகளில் தலையிடத் தொடங்கினார். இது தொடர்பான ஆவணங்களை விசாரணை நடத்திய அதிகாரி கீதா ஜோஹ்ரியிடமிருந்து பறிக்கப்பட்டன. ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்தப் போவதாக அதற்குக் காரணம் கூறப்பட்டது. சாட்சி அளித்தவர்கள், சாட்சியளிக்கப் போகிறவர் களின் முழுமையான பட்டியல், தன்னிடம் வரவேண்டும் என்று அமைச்சர் அமீத்ஷா, ஜி.சி. ராய்கார் என்ற காவல்துறை அதிகாரிக்கு (இவர் காவல்துறைக்கான கூடுதல் இயக்குனர்) உத்தரவிட்டார். அமைச்சர் ஷாவின் இந்தத் தலையீடு சட்ட விரோதமானது; அவரது அதிகார வரம்புகளை முறைகேடாகப் பயன்படுத்திய தாகும். குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளிடம் இந்த விவரங்களைக் கொடுத்து, அவர்களைக் காப்பாற்றச் செய்வதே இதன் நோக்கம் என்று விசாரணை அதிகாரி கீதாஜோஹ்ரி, தனது அறிக்கையில் விரிவாக பதிவு செய்துள்ளார்.

2006 ஜனவரி 30ஆம் தேதி உயர் காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை அமீத்ஷா, காந்தி நகர் சர்க்யூட் இல்லத்தில் கூட்டி, ‘என்கவுன்டர் கொலை’யை மறைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். அமீத்ஷா கூட்டிய மற்றொரு அதிகாரிகள் கூட்டம் மிகவும் விவாதத்துக்குரியது. இந்தக் கூட்டம் குறித்து அதில் பங்கேற்ற காவல்துறை அதிகாரிகள் குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 164 கீழ் அளித்த வாக்குமூலங்கள் அமீத்ஷாவை நேரடியாக குற்றம்சாட்டுகின்றன. அந்தக் கூட்டத்தில் கூடுதல் காவல்துறை இயக்குநர் கி. ரெய்கார் மற்றும் உயர்அதிகாரிகள் பி.சி.பாண்டே, கீதா ஜோஹ்ரி உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்தில், ‘என்கவுன்டர்’ கொலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு ஆதரவாகவும் விசாரணைக்கு எதிராகவும் அமீத்ஷா பேசினார். இந்த நிலையில் ஷாவிடமிருந்துவரும் சட்ட விரோத ‘அறிவுறுத்தல்களை’ ஏற்று செயல்பட முடியாது என்றும், எனவே தனக்கு பணிமாற்றம் செய்யுமாறும் காவல்துறை இயக்குனர் கி.ரெய்கார் கேட்டார். புலன் விசாரணை அறிக்கையை மாற்றி தயாரிக்குமாறு அமீத்ஷா, அதிகாரிகள் கூட்டத்தில் வலியுறுத்தினார். கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளே வாக்குமூலங்களாக இந்த உண்மைகளை பதிவு செய்துள்ளனர். இவ்வளவுக்குப் பிறகு இத்தனை பதிவுகளையும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏற்க மறுத்து ஷாவை விடுவித்திருக்கிறது.

சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், தனது உத்தரவில் விசாரணையின் ஒவ்வொரு நகர்வையும் சிறப்பு நீதிமன்றம் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. 2010ஆம் ஆண்டு குஜராத் உயர்நீதிமன்றம், அமீத்ஷாவுக்கு பிணை வழங்கியது. சி.பி.அய். உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. உச்சநீதிமன்றம், பிணையை இரத்து செய்யாவிட்டாலும் அதை எதிர்த்து கீழ்க்கண்ட கருத்தை பதிவு செய்தது:

“இப்போது விசாரணைக்கு வந்திருக்கும் மனு, அமித்ஷாவுக்கு பிணைகோரும் மனுவாக இருந்திருக்குமானால், இந்த நீதிமன்றம் எத்தகைய கருத்தைக் கூறியிருக்கும் என்பதை சொல்ல முடியாது. ஆனாலும், இது பிணை தரப்பட்ட பிறகு வந்த மேல் முறையீடு. இந்த வழக்கில் (குஜராத்) உயர்நீதிமன்றம் அமீத்ஷாவுக்கு வழங்கியுள்ள (பிணை) உரிமையை பறிப்பதற்கு இந்த நீதிமன்றம் தயங்குகிறது. அதே நேரத்தில், இந்த வழக்கு விசாரணையில் நேர்மை குலையாமல் காப்பாற்ற, விசாரணையை (குஜராத்திலிருந்து) வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட வேண்டும் என்பதில் இந்த நீதிமன்றம் உறுதியாக இருக்கிறது” (உச்சநீதிமன்ற உத்தரவு, செப்.27, 2012).

சிறப்பு நீதிமன்றம், அமீத்ஷாவை விடுவித்த உத்தரவிலும் அமீத்ஷா மீது சி.பி.அய். தொடர்ந்து உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது என்று கூறியிருக்கிறது. அது மட்டுமன்றி, “என்கவுன்டர் கொலை செய்யப்பட்ட ஷொராபுதீன், ஏற்கெனவே பல வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவான குற்றவாளி. இதில் எந்த சந்தேகமும் இல்லை. அதன் காரணமாகத்தான் குஜராத் மற்றும் இராஜஸ்தான் காவல்துறை, ஷொராபுதினைப் பிடித்துக் கொண்டு வந்தது” என்றும் சிறப்பு நீதிமன்றம் பதிவு செய்கிறது. இந்த என்கவுன்டர் கொலை தவறில்லை என்பதுபோல் சிறப்பு நீதிமன்றம் நியாயப்படுத்துகிறது.

வழக்கில், முக்கிய சாட்சிகள் அளித்த வாக்குமூலங்களை சிறப்பு நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. குஜராத்தில் ‘ரியல் எஸ்டேட்’ தொழில் நடத்தும் பிரபலமான பட்டேல் சகோதரர்கள் (தசரதன் மற்றும் ராமன்) சி.பி.அய்க்கு குற்றவியல் நடைமுறை சட்டம் 164ஆவது பிரிவின் கீழ் அளித்த வாக்குமூலத்தில் தங்களிடம் எப்படி கட்டாயப்படுத்தி பணம் வாங்கினார்கள் என்பதையும் ஷொரா புதினுக்கு எதிராக அறிக்கை வெளியிடுமாறு கட்டாயப்படுத்தினர்கள் என்பதையும் சி.பி.அய். முன், பதிவு செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக இந்த சகோதரர்கள் அமித்ஷாவை சந்தித்ததையும் தொலைபேசியில் உரையாடியதையும் சி.பி.அய். பதிவு செய்திருக்கிறது. இவை எல்லாமுமே அமித்ஷாவை விடுவித்த சிறப்பு நீதிமன்றத்தின் பார்வையில் நம்பத் தகுந்த சாட்சியங்களாக இல்லாமல் போய்விட்டன.

குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்த இதே சி.பி.அய்., இப்போது அவரை விடுவிக்கக் கோரும் மனு மீது கண்டிப்பு எதுவும் காட்டவில்லை. ஷாவை விடுவித்த நீதிபதி வெளியிட்ட 75 பக்க ஆணையில் சி.பி.அய். வாதங்களுக்காக இரண்டு பக்கங்களை மட்டுமே ஒதுக்கியது. வழக்கு விசாரணையின்போது நேரில் வருவதற்கு ஷா, விதிவிலக்குக் கேட்டு தாக்கல் செய்த மனுவுக்கும், சி.பி.அய். தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. என்கவுன்டர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல்துறை அதிகாரி என்.கே.அமீன், பம்பாய் உயர்நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்தபோது, பிணை வழங்கக்கூடாது என்று கடுமையாக எதிர்த்த சி.பி.அய்., இப்போது தனது நிலையை மாற்றிக் கொண்டுவிட்டது. 2004 நவம்பரில் பிணை மனு உச்சநீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, சி.பி.அய். எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறிவிட்டது. ஷாவை விடுவிக்கக் கோரி அவரது வழக்கறிஞர் 3 நாள் தொடர்ச்சியாக, பல மணி நேரம் வாதாடினார். சி.பி.அய். தரப்பில் வாதாடிய ‘ஜூனியர்’ வழக்கறிஞர், 20 நிமிடங்கள் மட்டும் தனது எதிர்ப்பை பெயரளவுக்கு தெரிவித்தார். உ.பி.யில் பா.ஜ.க.வுக்காக அமீத்ஷா நடத்திய தேர்தல் வேலைகள் வெற்றி பெறத் தொடங்கியவுடன், சி.பி.அய். அணுகுமுறை தலைகீழாக மாறிவிட்டது.

அபேய் சுடாசமா என்ற காவல்துறை அதிகாரி, ஷொராபுதின் கும்பலைப் பயன்படுத்தி, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். பா.ஜ.க. வெற்றிக்குப் பிறகு அவர் மீதான நடவடிக்கை விலக்கப்பட்டு, குஜராத்தில் காந்தி நகர் பகுதியில் ஊழல் கண்காணிப்பு அதிகாரியாக மீண்டும் பணியமர்த்தப்பட்டிருக்கிறார். ‘என்கவுன்டர் கொலைகளுக்கான’ அமீத்ஷா சதித் திட்டத்தில் பங்கு பெற்ற குற்றச்சாட்டுகளும், உச்சநீதிமன்றம் தலையிட்டு, சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிட்டதும், ஷா சதித்திட்டம் தீட்டி யதாக சி.பி.அய். முன் வைத்த ஏராளமான சாட்சியங்களும் சிறப்பு நீதிமன்றத்தின் ஒரே உத்தரவால் புதைகுழிக்கு அனுப்பப்பட்டுவிட்டது.

அமீத்ஷா குற்றத்திலிருந்து விடுவிக்கப் பட்டது, நீதித் துறை சுதந்திரமாக செயல் படுகிறதா என்ற கேள்வியை அழுத்தமாக எழுப்பி நிற்கிறது.

- ‘எக்னாமிக் அன்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ ஜனவரி 24, 2015 இதழிலிருந்து

Pin It