மோடி பேசி வரும் பொய்களின் ஒரு தொகுப்பு, இது.

600 கோடி ஓட்டு: மோடி

உலக பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய மோடி, கடந்த 30 ஆண்டுகளில் முதன்முறையாக 600 கோடி மக்கள் ஓட்டு போட்டு என்னை பிரதமராக தேர்வு செய்திருக்கிறார்கள் என்றார்.

இந்தியாவின் மக்கள் தொகையே 120 கோடி மட்டும் தான். அதிலும் ஓட்டு போடும் மக்கள் 80 கோடி பேர் தான். இந்த 80 கோடி பேரில் 600 கோடி ஓட்டு பெற்று பிரதமர் ஆனதாக மோடி குறிப்பிடுகிறார். இப்படியொரு அறிவாளி பிரதமரை இந்தியா கொண்டிருப்பதற்கு என்ன தவம் செய்ததோ!

modi amit and yogiகுஜராத்திலிருந்து முதல் பிரதமர்: மோடியின் பொய்

குஜராத்திலிருந்து பிரதமராகும் முதல் நபர் தான் மட்டுமே என மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறினார். ஆனால் உண்மை? இந்தியாவின் வரலாற்றில் நான்காவது பிரதமராக மொரார்ஜி தேசாய் குஜராத்திலிருந்து வந்தவர் தான். ஆனால் மோடி தன்னை குஜராத்திலிருந்து வந்த முதலாவது பிரதமர் என்று பொய் கூறி குஜராத் மக்களின் அனுதாபத்தை பெற முயற்சிக்கிறார்.

காங்கிரஸ் தலித் பாரபட்சம் - மோடி பொய்

மோடி தனது கர்நாடக பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் கட்சி, ஒரு தலித் குடியரசு தலைவராக வந்துவிட்ட காரணத்தாலேயே ஒரு வாழ்த்துகூட சொல்லவில்லை. அப்படிப்பட்ட தலித் விரோத கட்சி காங்கிரஸ் என பேசினார். ஆனால் உண்மை?

குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்ற நாளிலேயே காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், மன்மோகன் என அனைவருமே வாழ்த்து கூறினர்.

நாட்டில் எந்த கட்சி பிரதமர் பதவி ஏற்றுக் கொண்டாலும் எதிர்க்கட்சி சார்பாக வாழ்த்துக்கள் சொல்வது காலங்காலமாக நடந்து வரும் இயல்பு. இந்த நடைமுறையை கூட காங்கிரஸ் பின்பற்ற வில்லை. நான் பதவியேற்ற போது வாழ்த்துகூட சொல்ல வில்லை என்று மோடி தேர்தல் பேரணியில் புலம்பினார். ஆனால், உண்மையில் மோடி பதவியேற்றபோதே காங்கிரஸ் கட்சியினர் மோடிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

நேரு, ஜெனரல் திம்மய்யாவை அவமானப்படுத்தினார் - மோடியின் பொய்

மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில் 1948இல் நடந்த பாகிஸ்தான் போரில் வெற்றிக்கு காரணமாக இருந்த ஜெனரல் திம்மய்யா அவர்களை நேருவும், அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த கிருஷ்ணமேனன் அவர்களும் அவமானப் படுத்தினார்கள் என்றார். ஆனால், உண்மை?

1948 போரின்போது பாகிஸ்தான் போரை வென்று கொடுத்ததாகக் கூறும் ஜெனரல் திம்மய்யா, ஜெனரலாக பதவி ஏற்றுக் கொண்டதே மே 1957ஆம் ஆண்டு தான். ஆம், 1957இல் ஜெனரலாக பதவி ஏற்றுக் கொண் டவரைத் தான் 1948 போரின் வெற்றிக்குக் காரணம் என்று மோடி குறிப்பிட்டார். அதேபோல் பாதுகாப்பு அமைச்சரான கிருஷ்ணமேனன் பதவிக் காலம் 1957-1962. இருவருக்குமே 1948இல் நடந்த பாகிஸ்தான் உடனான போருக்கும் சம்பந்தம் இல்லை.

பட்டேல் பிரதமராக இருந்தால் முழு காஷ்மீரகமும் நமது - மோடியின் பொய்

நேருவுக்கு பதிலாக பட்டேல் பிரதமராக இருந்திருந்தால் முழு காஷ்மீரும் இந்தியா வுடன் தான் இருந்திருக்கும் என்று தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார் மோடி. ஆனால், வரலாற்றாசிரியர்கள் அப்போது பட்டேலுடைய நிலைப்பாட்டைக் கூறி மோடியின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடித்தனர்.

ஸ்ரீநாத் ராகவன், முன்னாள் இராணுவ அதிகாரி மற்றும் வரலாற்று நிபுணர். அவர் சொல்லும்போது பட்டேல் காஷ்மீரை விட்டுக் கொடுத்து ஜுனாகத் மற்றும் ஹைதராபாத் பகுதியை இந்தியாவுடன் இணைப்பதையே விரும்பினார் என்று சொல்கிறார்.

பட்டேல் மற்றும் பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலிகான் இடையே நடைபெற்ற உரையாடலில் பட்டேல், காஷ்மீரத்தை பாகிஸ்தானுக்கு கொடுப்பதற்கு தயாராக இருந்தது தெரிய வருகிறது.

வரலாற்றாசிரியர் ராகவன், இத்தோடு நிற்காமல் இன்னொரு தகவலையும் சொல்கிறார். இரு நாடு என்ற பிரிவினை கொள்கையை ஜின்னாவிற்கு 16 ஆண்டுகளுக்கு முன்பே ஆர்.எஸ்.எஸ். தலைவர் சவார்க்கர் எழுப்பத் தொடங்கினார். ஆனால் மோடி பிரிவினை மீதான பழியை காங்கிரஸ் மீது போட்டு வெறுப்புப் பிரச்சாரத்தை கட்டமைக்கிறார். (தி க்யூண்ட் 8.2.18)

காங்கிரஸ் தலைவர்கள் பகத்சிங்கை சந்திக்கவில்லை - மோடியின் பொய்

விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்போது காங்கிரஸ் தலைவர்கள் ஒருவர்கூட பகத்சிங்கை நேரில் சந்திக்கவில்லை. விடுதலை வீரர்களுக்கான மரியாதையையும் காங்கிரஸ் செலுத்தவில்லை என்றும் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.

பிரதமர் நேருவும் முக்கியமான காங்கிரஸ் தலைவர்களும் இணைந்து சென்று பகத்சிங்கை நேரில் சிறையில் சந்திக்கிறார்கள். அது மட்டுமல்ல; நேரு பகத்சிங்கிற்கு கடிதங்கள் மூலமும் தொடர்பு கொள்கிறார். பகத்சிங் உடன் நடந்த உரையாடலைக் கூட தனது புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். ஆக மோடி கூறிய அப்பட்டமான பொய்களில் இதுவும் ஒன்று.

கடந்த நான்கு ஆண்டுகளில் 35 ஏர்போர்ட்கள் - மோடியின் பொய்

மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் தனது ஆட்சியின் கீழ் மொத்தம் 35 ஏர்ப்போர்ட்கள் கட்டப்பட் டிருப்பதாகவும், வருடத்திற்கு 9 ஏர்போர்ட்கள் என கட்டும் பணி விரைவாக நடை பெற்றதாகக் கூறினார். ஆனால் உண்மை?

மோடியின் ஆட்சியின் கீழ் மொத்தம் வருடத் திற்கு இரண்டு ஏர்போர்ட்கள் என மொத்தம் 7 ஏர்போர்ட்கள் தான் கட்டும் பணி நடந்து வருகிறது. எப்போதும் போல எண்ணிக்கையில் பஞ்சம் பார்க்காமல் தனக்குப் பிடித்த நம்பரை சொல்லி விட்டார் மோடி அவ்வளவுதான்.

பா.ஜ.க. ஆட்சியின் கீழ் கலவரங்கள் இல்லை: அமித்ஷா

அமித்ஷா, ஜீ செய்தி ஊடகத்திற்கு பேட்டி கொடுக்கும்போது, இதுவரை பா.ஜ.க. ஆட்சி செய்த மாநிலங்களில் கலவரங்கள் இல்லாத நிலை உருவாகியிருக்கிறது. குஜராத்தில் 27 வருட ஆட்சியில் இருந்திருக்கிறோம். மத்திய பிரதேசத்தில் 15 வருட ஆட்சி, சத்திஸ்கரில் 15 வருட ஆட்சி இந்த மூன்று மாநிலங்களில் நாங்கள் பதவிக்கு வந்த பிறகு ஒரு கலவரம் கூட உருவாகவில்லை என்று கூறினார். ஆனால் உண்மை?

குஜராத் சொல்ல வேண்டிய அவசிய மில்லை. 2002 குஜராத் கலவரம் பல்லாயிரம் முஸ்லிம்களை கொன்று குவித்ததில் அரசே முன்னிலையில் நின்றது. தேசிய குற்றங்கள் பதிவு ஆணையத்தின் அறிக்கையின்படி மத்தியப் பிரதேசத்தில் மட்டும் 2003-2016 காலகட்டத்தில் 32,050 கலவரங்கள் நடந்திருக்கிறது. சத்திஸ்கர் மாநிலத்தில் 2003-2016 காலகட்டத்தில் 12,265 கலவரங்கள் பதிவாகியிருக்கிறது.

இந்த நிலையில் அமித்ஷா பா.ஜ.க. ஆட்சிக்குள்ளான பகுதியில் ஒரு கலவரம்கூட உருவானதில்லை என்று பொய் பேசுகிறார்.

ஒரு கலவரம்கூட கிடையாது - யோகியின் பொய்

தான் உத்திரபிரதேசத்தின் முதல்வராக பதவியேற்ற பிறகு தனது மாநிலத்தில் ஒரு கலவரம்கூட நடக்கவில்லை என்று மேடைகளில் பேசுகிறார் யோகி. ஆனால் உண்மை என்ன? உத்திரபிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்சகம் 2017ஆம் ஆண்டில் மட்டும் 195 கலவரங்கள் பதிவாகியுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது.

மாநில அமைச்சகத்தின் ஆவணம் ஒரு தகவலைச் சொல்லும். ஆனால் யோகி, மோடி, பா.ஜ.க.வினர் தனக்கு தோன்றுவதை மக்களிடம் பேசி உண்மையை மறைத்து விடுகின்றனர்.

2500 ஆண்டுக்கு முன் ஜனநாயகம் - மோடியின் பொய்

இந்தியாவில் 2500 ஆண்டுகளுக்கு முன்னதாகவே வடக்குப் பகுதியில் உள்ள பீகாரை ஆட்சி செய்த லிச்சவி என்ற அரசர் ஜனநாயக முறையைக் கொண்டு வந்து விட்டார். அதனை சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் கெடுத்து நாட்டை நாசமாக்கியது என்று மோடி தனது பிரச்சார மேடையில் பேசினார். உண்மை என்ன?

மோடி மற்றும் சங்பரிவார அமைப்புகள் விரும்புவது எல்லாம் லிச்சவி அரசரால் கொண்டு வரப்பட்ட ஜனநாயக முறைதான். அதனையே மீண்டும் கொண்டு வந்தாக வேண்டும் என்று வேலை செய்கிறார்கள். அப்படி என்ன ஜனநாயகம் லிச்சவி மன்னரால் கொண்டு வரப்பட்டது?

லிச்சவி மன்னர் எல்லா மன்னர்களையும் போல வாரிசு முறையிலோ அல்லது தகுதியின் அடிப்படையிலோ ஆட்சியில் அமர்வதை விரும்பவில்லை. அதனால் மக்கள் தேர்ந் தெடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். அவரைப் பொறுத்தமட்டில் தன் அரசவையில் இருக்கும் உயர்சாதிக்காரர்கள் மட்டுமே மக்கள்.

அதனால் அவர்கள் மட்டும் முடிவு செய்து அரசரைத் தேர்ந்தெடுக்கும் பழக்கம் உருவாக்கப் பட்டது. அதாவது, எளிய மக்களுக்கு எதிராகவே சிந்தித்த, அடிமைப்படுத்திய மனிதர்கள் இணைந்து அரசரைத் தேர்ந்தெடுப்பது. இதனையே மோடி ஜனநாயக முறை என்கிறார்.

இப்படியொரு ஜனநாயக முறையில் தேர்தல் நடந்தால் மீண்டும் சாதிய வட்டத்திற்குள் இந்தியா புகுந்து 3 சதவீதம் மட்டும் உள்ள பார்ப்பனர்களுக்கு ஒட்டு மொத்தமாக மற்றவர்கள் அடிமையாக இருக்க வேண்டியதுதான். இந்த முறையை கொண்டு வராமல் நாட்டை சீரழித்து விட்டது காங்கிரஸ் என்கிறார் மோடி. (ஸ்க்ரால் 9.2.18)

நன்றி : ‘வைகறை வெளிச்சம்’ இதழ்