இந்துத்துவ அமைப்புகள் தற்போதைய கல்விமுறை ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டது என்றும், இதனை நீக்கிவிட்டு மீண்டும் பழைய குருகுல முறைக் கல்வியை கொண்டு வர வேண்டுமென்றும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன. தற்போது இவர்களின் கோரிக்கை செயல்வடிவம் பெறத் துவங்கியுள்ளது, குருகுலக் கல்விக்காக புதிய ஆணையம் உருவாக்கப்பட்டு அதன் தலைவராக சாமியார் ராம்தேவ் அமர வைக்கப்பட்டுள்ளார். ஆங்கிலேயர் வருகைக்கும் முன்பு பார்ப்பனர் மட்டுமே கல்வி கற்கும் நிலை இருந்தது.

சூத்திரர்கள் உள்ளிட்டோர் அங்கு கல்வி கற்க அனுமதியில்லை. இதனால் பல நூற்றாண்டுகளாக இந்தியா இருண்ட காலத்தில் இருந்து வந்தது. 1700-களில் ஆங்கிலேயர்கள் இந்தியா விற்கு வருகை தந்த பிறகு சீரழிந்து கிடந்த சமுகத்தை கல்வியின் மூலம் மேம்படுத்த முயலும் நோக்கத்தில், மதத்தின் பரப்புரையின் மூலமாக மிசனரிப்பள்ளிகள் நாடு முழுவதும் துவங்கப்பட்டன.

முக்கியமாக தென் இந்தியாவில் அதிகமாக துவங்கப்பட்டன. இதன் விளைவாக 1800களுக்குப் பிறகு இந்தியாவின் எழுத்தறிவு 5 விழுக்காடாக உயர்ந்தது, இதனைத் தொடர்ந்து 1900-களின் துவக்கத்தில் 13 விழுக்காடாக கூடியது, பள்ளி மற்றும் கல்லூரிகளின் எண்ணிக்கை கணிச மாக அதிகரித்தன. அதே நேரத்தில் மற்றொருபுறம் குரு குலக் கல்விமுறை சீந்துவார் யாருமின்றி கிடந்தது, இதனை அடுத்து பல குரு குலங்கள் ஆங்கிலேயக் கல்வி முறையை ஏற்றுக் கொண்ட காரணத்தால் குருகுலக்கல்வி முறை முடிவிற்கு வந்தது.

குருகுலக்கல்வி முறை முடிவிற்கு வந்த பிறகுதான் அனைவருக்குமான கல்வி என்பது சாத்தியமானது, இருப்பினும் குருகுலக்கல்வி என்ற பெயரில் பொதுக் கல்வியிலும் ஆங்காங்கே பாகுபாடுகளைக் காண முடிந்தது. தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியே வந்ததில் முக்கிய காரணமாக இருந்தவற்றில் ஒன்று சேரன்மாதேவி குருகுலத்தில் நடந்த ஜாதியக் கண்ணோட்டம் தான். சுதந்திரத்திற்குப் பிறகு சில மடங்கள் குருகுலக் கல்வி என்ற பெயரில் ஆரம்பித்தனர்.

ஆனால் அங்குவாழ்க்கை முன்னேற்றத்திற்கான கல்வியில்லாத நிலையில், பார்ப்பனர்கள்கூட அதை ஆதரிக்கவில்லை, 1950-களுக்குப் பிறகு மீண்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கல்வி நிறுவனங்களைத் திறந்து நடைமுறைக் கல்வியுடன் மெல்ல மெல்ல மதவாதத்தையும் திணித்து வந்தது, 'இந்து வித்யாலயா' என்ற பெயரில் நாடு முழுவதும் அதன் கிளைகள் திறக்கப்பட்டன. இருப்பி னும் பழைய குருகுலக்கல்வி முறைக்கு மக்களை இழுக்க முடிய வில்லை.

இந்த நிலையில் 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கல்வியில் சீர்திருத்தம் என்ற பெயரில் இந்துத்துவ அமைப்புகளின் ஆலோசனைகளை ஏற்று, கல்விமுறையில் வெகுஜன மக்களின் எதிர்ப்பிற்கும் இடையில் மெல்ல மெல்ல மதவாதத்தைத் திணித்து வந்தது. தற்போது நேரடியாக மீண்டும் குருகுலக் கல்விமுறையை அறிமுகப்படுத்த மனித வளத்துறைத் ஆணையம் ஒன்றை உருவாக்கி யுள்ளது, இந்த ஆணையத்திற்குத் தலைவராக சாமியார் ராம்தேவை நியமித்து உள்ளனர். (இவர்மீது வருமான வரித்துறையில் வழக்குகள் உள்ளன) இந்த ஆணையம் குரு குலக்கல்விக்கான பாடத்திட்டங்கள், தேர்வுகள், சான்றிதழ்கள் ஆகிய வற்றைத் தயார் செய்து வருகிறது.

வேதக் கல்வியைப் போதிக்கும் மகிரிஷி சத்திபனி ராஷ்டிரிய வேதவித்யா பிரதிஷ்தன் என்ற எம்.எஸ்.ஆர்.வி.பி. மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. பதஞ்சலி நிறுவனத்தின் யோகப்பீட தொண்டு அமைப்பு உட்பட மூன்று தனியார் நிறுவனங்கள் இந்தப் பதவிக்கான தங்களின் விருப்ப மனுக்களை அளித்தன. யோகபீடம் மற்றும் ரீதானந்தா பாலவேத கல்வி அறக்கட்டளை மற்றும் புனேவை மய்யமாக கொண்டு இயங்கி வரும் மகாராட்டிரா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி உள்ளிட்ட இரண்டு நிறுவனங்களும் இந்த பட்டியலில் அடங்கும்.

இந்த மூன்று நிறுவனங்களும் தங்களின் அறிக்கையினை சமர்ப்பித்தன. நேசனல் புக் ட்ரஸ்ட்டின் இயக்குநர் கோவிந்த் பிரசாத் ஷர்மா முன்னிலையில் யோகபீடத்திற்கான அறிக்கையை பதஞ்சலி நிறுவனத்தின் இயக்குநராக உள்ள பால்கிருஷ்ணா சமர்ப்பித்தார். இவர் ராம்தேவின் சகோதரர் ஆவார். “வேதக் கல்வி முறையின் மூலம் இந்தியாவின் பாரம்பரியம் பற்றிய அறிவினை நிலை நிறுத்த வேண்டும். வேதம், சமஸ்கிருதம், சாஸ்திரம், மற்றும் தரிசனம் ஆகியவற்றை இந்த கல்வி மூலம் மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளோம். இதற்கும் பாடத்திட்டங்கள், தேர்வுகள், சான்றிதழ்கள் ஆகியவற்றைத் தயாரித்து வருகின்றோம்” என்று அவர் கூறி யுள்ளார். இவை எல்லாம் எதைக் காட்டுகின்றன?

பா.ஜ.க. ஆட்சி என்பது பார்ப்பன ஆட்சி - வருணாசிரம நோக்கத்தைக் கொண்டது - மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், மீண்டும் குலக்கல்விதான் எச்சரிக்கை!