“10ம் வகுப்பு தேர்வு வினாத் தாளில் பெரியார் பெயருடன் ஜாதிப் பெயரை இணைத்ததற்கு திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம்.'' இது குறித்து கழக தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்டுள்ள அறிக்கை:

10-04-2015 அன்று நடந்த பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது. அதில் சமூக அறிவியல் பாட வினாத் தாளில் 4 ஆவது கேள்வி, தமிழ்நாட்டின் தலைசிறந்த சமுதாய சீர்திருத்தவாதி பற்றியதாக உள்ளது. அதில் நான்கு தலைவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்தலைவர்களில் ஒருவராய் உள்ள பெரியாரைக் குறிப்பிடும்போது, “ஈ.வே.ராமசாமி நாயக்கர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஜாதிப்பெயரை விகுதியாகப் போடும் போக்கு இருந்த 1927ஆம் ஆண்டின் இறுதியிலேயே ஜாதி விகுதியை நீக்கி, தன் பெயரை

ஈ.வெ. இராமசாமி என தனது ஏட்டில் வெளியிட்டவர். தான் நடத்திய சுயமரியாதை மாநாடுகளில் ஜாதிப் பின்னொட்டை அகற்றுமாறு தீர்மானங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றியவர். அதனால்தான் இன்றைய தமிழ்நாட்டின் ஜாதிச் சங்கத் தலைவர்கள்கூட தங்கள் பெயருக்குப் பின்னால் ஜாதியப் பட்டத்தைக் கைவிட்டவர்களாக உள்ளனர். அதுவுமின்றி தமிழகத்தின் பாமர மக்களும்கூட அவரைப் பெரியார் என்ற பெயராலேயே அறிவர்.

பார்ப்பனர்களின் ஏடான ‘தி இந்து’ போன்ற சில ஆங்கில ஏடுகளும், தமிழ் பாசிசவாதிகள் சிலரும் மட்டுமே ‘பெரியாரை இராமசாமி நாயக்கர் என்று வலிந்து எழுதி வருகின்றனர்.

இவ்வாறான சூழலில் தமிழக அரசின் கல்வித்துறை நடத்தும் ஒரு பொதுத் தேர்வு வினாத்தாளிலேயே பெரியாரை “ஈ.வே.ராமசாமி நாயக்கர்” என்று குறிப்பிட்டுள்ளமை கடும் கண்டனத்துக்குரிய ஒன்றாகும்.

வினாத்தாள் தயாரித்தவர், தமிழ் நாட்டின் பொதுப்போக்குக்கு எதிராக தனது தனிப்பட்ட கொள்கையைத் திணிக்கும் திமிர்ப்போக்காகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

தமிழக அரசும், குறிப்பாக கல்வி அமைச்சரும், கல்வித்துறை இயக்கு நரும் விரைந்து செயல்பட்டு இச் செயல்களுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அச்செயலுக்கு காரணமானவர் பெயரை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் எனவும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்!

Pin It