ஸ்காட்லாந்து நாட்டில் நடத்திய வாக்கெடுப்பில் (செப். 18, 2014) அந்நாடு, பிரிட்டனுடன் இணைந்து நிற்பதற்கு ஆதரவாக 55 சதவீத மக்களும், தனி நாடாக வேண்டும் என்று 45 சதவீத மக்களும் வாக்களித்துள்ளனர். வாக்கெடுப்பு முறையை ஏற்றுக் கொண்ட பிறகு, அதில் பெரும்பான்மை மக்களின் முடிவே இறுதியானது. சில ஏடுகள் ‘பிரிவினை வாதம்’ தோற்றுப் போய்விட்டது என்று கொச்சைப்படுத்துகின்றன. உலகில் பல்வேறு தேசிய இனங்கள் சுயநிர்ணய உரிமைக்காக நடத்தும் போராட்டங்களுடன் முடிச்சுப் போட்டு, இனி எங்கும் பிரிவினையே கூடாது என்று தங்கள் நாட்டாமை தீர்ப்புகளை வழங்குகிறார்கள்.

உண்மையில், ஸ்காட்லாந்தில் நடந்த வாக்கெடுப்பு “தேசிய சுயநிர்ணய உரிமை” என்ற கொள்கைக்குக் கிடைத்துள்ள வெற்றி. தங்களுக்கான சுயநிர்ணய உரிமையை ‘ஸ்காட்லாந்து’ மக்கள், முறையான வாக்கெடுப்பு வழியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். முடிவு, பிரிந்து செல்வதாகவும் இருக்கலாம் அல்லது இணைந்திருப்பதாகவும் இருக்கலாம்; பிரச்சினை அதுவல்ல. முடிவெடுக்கும் உரிமை மக்களுக்கே உண்டு! இதில் முக்கியமாக ஒரு கருத்தை சுட்ட வேண்டும். 650 உறுப்பினர்களைக் கொண்ட பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஸ்காட்லாந்து உறுப்பினர்கள் 59 பேர் மட்டுமே. இந்தப் பின்னணியில் பிரிட்டிஷ் பிரதமர், அமைச்சர்கள் ஸ்காட்லாந்து பிரிந்து செல்லக்கூடாது என்று வாக்கெடுப்பின்போது வலியுறுத்தி இயக்கம் நடத்தினர். ஸ்காட்லாந்து மக்களுக்கான தேசிய கட்சி பிரிந்து போக வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக முன் வைத்தது. இவ்வளவுக்குப் பிறகு 55 சதவீதம் பேர் பிரிட்டிஷ் ஆட்சியின் கருத்துகளையே ஆதரித்துள்ளனர். வாக்கெடுப்பில் முறைகேடுகள் தலைதூக்கியிருந்தாலோ பிரிட்டன் பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி ஸ்காட்லாந்து மக்களை மிரட்டி, அச்சுறுத்தி பணிய வைக்க விரும்பியிருந்தாலோ இப்படி ஒரு முடிவுக்கு அந்நாட்டு மக்கள் நிச்சயம் வந்திருக்க மாட்டார்கள். இப்போதும்கூட 45 சதவீத மக்கள் ஸ்காட்லாந்து தனி நாடாவதையே வலியுறுத்தியிருக்கிறார்கள். தங்களது இனத்தின் தனித்துவம்; வளர்ச்சிக்கான தடைகள்; அதிகாரம் மிக்க பதவிகளில் புறக்கணிப்பு போன்ற நியாயமான பிரச்சினைகளை அவர்கள் முன் வைத்தார்கள். வாக்கெடுப்பு முடிவுக்குப் பிறகு ஸ்காட்லாந்து மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துக்கு பிரிட்டன் தள்ளப்பட்டிருக்கிறது.

கி.பி.1707இல்தான் அகண்ட பிரிட்டன் உருவானது. அப்போதுதான் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்தன. அதுவரை இங்கிலாந்தில் குறுநில மன்னர்கள் ஆட்சிகளும், ஸ்காட்லாந்தில் தனித் தனி மன்னர்கள் ஆட்சிகளுமே நடந்தன. ஸ்காட்லாந்து மக்கள் தங்களுக்காக ஒரு வாக்கெடுப்பு நடத்தி, சுயநிர்ணய உரிமையை உறுதி செய்து கொள்ளும் சட்டத்துக்கு வழியமைத்துத் தந்தது, 1998ஆம் ஆண்டு பிரிட்டனின் டோனிபிளேர் அரசாங்கம்தான். அந்த ஆண்டில் ‘ஸ்காட்லாந்து சட்டம்’ உருவானது. அதன்படி ஸ்காட்லாந்துக்கு நாடாளுமன்றத்தை நிறுவிக் கொள்ளவும், சுயநர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பு நடத்தவும் உரிமை கிடைத்தது. 2011 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஸ்காட்லாந்து தேசியகட்சி, இந்த வாக்கெடுப்பு கோரிக்கையை முன்வைத்துதான் தேர்தலை சந்தித்தது. 2012 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பிரதமராக பதவிக்கு வந்த டேவிட் கேமரோன், ‘எடின்பர்க் ஒப்பந்தம்’ வழியாக ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்துக்கு வழங்கப்பட்ட வாக்கெடுப்பு உரிமைக்கு ஏற்பு வாங்கினார். 2013 டிசம்பரில் பிரிட்டிஷ் அரசியாரின் ஒப்புதலும் கிடைத்தது. அதனடிப்படையில் தான் வாக்கெடுப்பு நடந்து முடிந்துள்ளது.

ஸ்காட்லாந்து மக்கள் ஒரு தனி தேசிய இனம் என்பதும், தங்களுக்கான ‘சுயநிர்ணய உரிமையை’தேர்வு செய்து கொள்ளும் உரிமைக்குரியவர்கள் என்பதும், இந்த வாக்கெடுப்பு வழியாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. தங்களுக்கான உரிமைகளை உறுதி செய்யும் அதிகாரங்களுடன் தான் பிரிட்டனுடன் இணைந்திருக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். வாக்கெடுப்பு, ‘வெளியக சுய நிர்ணய உரிமை’ (External Self determination) என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே நடந்துள்ளது. ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்துக்கு தங்குதடையற்ற அதிகாரப் பகிர்வுகளுக்கும் பிரிட்டிஷ் நாட்டின் வளங்களை சமமாகப் பகிர்ந்து கொள்வதற்கும் இதன் வழியாக அரசு உறுதி செய்துள்ளது. அத்துடன் பிரிட்டிஷ் அரசு தனது முடிவுகளைத் திணிப்பதோ நாட்டின் எல்லைகளில் குறுக்கிடுதலோ இயலாது என்பதையும் சுயநிர்ணய உரிமை உறுதி செய்துள்ளது. ஜனநாயகப் பண்புகள் மற்றும் ‘பன்முகத்துவம்’ என்ற சமத்துவ அடிப்படையிலான சமூக அரசியல்உறவுகளுக்கு அண்மைக்காலத்தின் மிகச் சிறந்த உதாரணம் இந்த வாக்கெடுப்பு என்று கூறலாம். மேலைநாட்டு மனித உரிமையாளர்கள் இப்படித்தான் பெருமையுடன் கூறுகிறார்கள்.

மக்களின் மாண்பு, சமத்துவம் என்ற நவீன கருத்தியல்களின் உள்ளடக்கம் தான் ‘தேசியம்’ - ‘தேச அரசு’ - ‘தேசிய சுயநிர்ணய உரிமை’ என்பவைகளாகும். பெரும்பான்மையினர் மதம் மற்றும் பெரும்பான்மை மொழியை ‘தேச பக்தி’ பெயரில் வெறியூட்டி மக்கள் மீது திணிப்பது ‘தேசியம்’ அல்ல. அதேபோல் பேரரசர் காலத்தின் பெருமிதங்களுக்குள் மூழ்கி, ஜாதி அடையாளப் பெருமைகளில் மிதந்து, இனக் குழு வாதங்களை முன்வைத்து ஒடுக்கப்பட்ட மக்களை பிளவுபடுத்தும் வரையறைகளும்கூட இதேபோன்றதுதான். அந்தப் பார்வை சமூகத்தைப் பின்னுக்கு இழுத்துச் சென்றுவிடும். ஸ்காட்லாந்து வாக்கெடுப்பை ஈழத் தமிழர் பிரச்சினையோடு நாம் பொருத்திப் பார்க்க வேண்டும். சிங்கள பேரினவாத ஆட்சி பிரிட்டிஷ் ஆட்சியைப்போல், ஏன், ஒரு வாக்கெடுப்பை நடத்தமுன்வரவில்லை என்ற நியாயமான கேள்விக்கு என்ன பதில்? இதேபோல் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக வாக்கெடுப்பு நடத்துவோம் எனஅய்.நா.வில் உறுதி கூறிய இந்திய ஆட்சி அதை காற்றில் பறக்க விட்டதையும் சுட்டிக்காட்டுகிறோம்.

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் அதிகார உரிமைகளில் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் தலையிடாது. இது சட்டத்துக்கு அப்பால், பிரிட்டிஷ் அரசு ஏற்றுக் கொண்டுள்ள நடைமுறை செயல்பாடு (Swell conversion); அதை பிரிட்டன் செயல்படுத்துகிறது. அதே நேரத்தில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கு ஸ்காட்லாந்தில் தலையிடும் உரிமை சட்டரீதியாக இருக்கவே செய்கிறது. ஸ்காட்லாந்து சட்டம் 1998இன் 28(7)ஆவது பிரிவு இதை உறுதி செய்கிறது. ஆனாலும், சட்டங்களைவிட ஏற்றுக் கொண்ட நடைமுறைகளையே பெரிதும் மதிக்கும் உயரிய ஜனநாயகப் பண்புகள் அங்கே நடைபோடுகின்றன. பிரிட்டிஷ் ஆட்சியின் முதலாளித்துவ கொள்கைகளை நாம் ஏற்கவில்லை என்றாலும் இந்த உயரிய மாண்புகளை பாராட்டத்தான் வேண்டும். இந்தியாவின் ‘பார்ப்பன நாயகத்தில்’ இந்த மரபுகளையும் விழுமியங்களையும் கற்பனைகளில்கூடநினைத்துப் பார்க்க முடியுமா?

Pin It