தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட - முற்போக்குச் சிந்தனை கொண்ட மாணவர்களே!

நமது எதிர்காலம் இருள்மயமாகி வருவதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். இந்தத் துண்டறிக்கையைப் படியுங்கள்!

                24 மத்திய அமைச்சகங்களில் குரூப் ஏ பிரிவு அதிகாரிகளில் பிற்படுத்தப்பட்டோர் 17 சதவீதம் தான். ‘பி’ பிரிவில் 14 சதவீதம். ‘சி’ பிரிவில் 11 சதவீதம். அதிகாரம் நிறைந்த முக்கிய முடிவுகளை செயல்படுத்தும் மத்திய அமைச்சரவை செயலகத்தில் ‘ஏ’ பிரிவு அதிகாரிகளாக இருக்கும் 64 பேரில் ஒருவர்கூட, பிற்படுத்தப்பட்டவரோ தாழ்த்தப்பட்டவரோ இல்லை.

                தொடர்வண்டித் துறை பாதுகாப்புத் துறை, உள்துறை, நிதித் துறை போன்ற துறைகளில்தான் 91.25 சதவீத வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தகவல்களைத் தெரிவிக்கவே இந்த அமைச்சகங்கள் மறுத்துவிட்டன.

                அது மட்டுமா? 2013இல் மத்திய வேலை வாய்ப்பு அமைச்சகம் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அதில் மத்திய அரசுப் பணிகளில் பட்டியல் இனப் பிரிவினர் (எஸ்.சி.), பழங்குடிப் பிரிவினர் (எஸ்.டி.), பிற்படுத்தப்பட்டோருக்கான நிரப்பப்படாத பணியிடங்களை விரைவாக கண்காணித்து, 6 மாத காலத்துக்குள் இடங்களை நிரப்பும் பணிகளை முடுக்கிவிட வேண்டும் என்று அந்த உத்தரவு கூறியது. தொடர்ந்து மத்திய வேலை வாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், 2016க்குள் இடஒதுக்கீட்டின் கீழ் காலியாக இருக்கும் பணி யிடங்கள் நிரப்பப்படும் என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இரண்டுமே நடக்கவில்லை. செயல்படுத்தும் அதிகாரத்தில் இருப்பவர்கள் அனைவரும் பார்ப்பன உயர்ஜாதி அதிகாரிகள் தானே? எப்படி செயல்படுத்துவார்கள்?

                தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் என்ன நிலை?

                இரத்தம் கொதிக்கிறது; நிலையைப் பாருங்கள்!

                தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் தலைவர்கள் ஜாதி சங்கம் வைத்துக் கொண்டு ஜாதிப் பெருமை பேசுகிறார்கள். ஜாதி மறுப்பு திருமணங்களைத் தடுக்கிறார்கள். ஆனால் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சார்ந்தவர்கள் இப்படி வேலை வாய்ப்பு உரிமைகள் மறுக்கப் பட்டு, வேலை வாய்ப்பின்றி தவிப்பதை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்களா? போராடுகிறார்களா? ஏன்? அவர்கள் சொந்த ஜாதிக்காரர்களை தங்களின் அரசியலுக்குப் பயன்படுத்தவே அணி திரட்டுகிறார்கள். சமூக நீதி பற்றியெல்லாம் அவர்களுக்கு கிஞ்சித்தும் கவலை இல்லை.

அது மட்டுமா? ‘நீட்’ எனும் நுழைவுத் தேர்வை மத்திய அரசு நம்மீது திணித்தது. நுழைவுத் தேர்வு முறையே எங்களுக்கு வேண்டாம் என்று நாம் அறிவித்து ‘பிளஸ் டூ’ தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்தோம். ஆனால், நமது மாநில அரசு பாடத் திட்டத்தில் படிக்கும் 85 சதவீத மாணவர்களின் கல்வி முறையை ஒதுக்கித் தள்ளிவிட்டு 15 சதவீத மாணவர்களே படிக்கும் சி.பி.எஸ்.ஈ. பாடத் திட்டத்தின் கீழ் நீட் தேர்வை நடுவண் அரசு நமது விருப்பத்துக்கு மாறாக திணித்துவிட்டது. உச்சநீதிமன்றம் இதற்குத் துணை போனது. தலித் சமூகத்தில் ஏழைக் குடும்பப் பின்னணியில் பிறந்து குடிசை வீட்டில் படித்து 1200க்கு 1176 மதிப்பெண் பெற்ற நமது தலித் சகோதரி அனிதாவுக்கு மருத்துவக் கல்லூரியில் நுழைய முடியவில்லை. அவர் வாழ்க்கையையே முடித்துக் கொண்டு விட்டார். ‘நீட்’ என்ற சமூக நீதிக்கு எதிரான ‘கொடுவாள்’ நமது தலை மீது இப்போதும் தொங்கிக் கொண்டே இருக்கிறது.

தமிழ்நாடு அரசு என்ன செய்கிறது?

அய்யகோ, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது. நமது மாநிலத்தில்தான் 69 சதவீத இடஒதுக்கீட்டை வைத்திருக்கிறோம். தமிழ்நாட்டில் நமக்கான வேலை வாய்ப்புகளை வழங்கி வந்த தமிழ்நாடு தேர்வாணையம் இப்போது திறந்த போட்டியில் தமிழ் தெரியாதவர்களும் இநதியா முழுதுமிருந்தும் நேபாளம், பூடான் போன்ற அண்டை நாடுகளைச் சார்ந்தவர்களும், தமிழ்நாட்டு வேலைக்கு மனுப் போடலாம் என்று கதவைத் திறந்து விட்டிருக்கிறது. இது நியாயமா? நேர்மையா? நாம், உ.பிக்கோ, பீகாருக்கோ, நேபாளத்துக்கோ, அம்மாநில அரசுப் பணிகளில் சேர முடியுமா? அப்படியே சேர்ந்தாலும் அம்மாநிலங்களில் தங்கி நமது வாழ்க்கையை ஓட்ட முடியுமா?

இது மட்டுமா?

                உயர்நீதிமன்றத்திலே வழக்குகள் வந்துள்ளன. இந்த நிலையில் மோசடி அம்பலமான நிலையில் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக் கின்றன. இயந்திரப் பொறியியல் எனும் மெக்கானிக்கல் என்ஜினியரிங் துறையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 219 விரிவுரையாளர்கள் இதில் பொதுப் பட்டியலில் உள்ள 67 இடங்களில் 46பேர் வெளி மாநிலத்துக்காரர்கள். மின்னணு தொடர்பியல் எனும் ஈ.சி.ஈ.க்கான விரிவுரை யாளர்களாக பொதுப் பிரிவுக்கான 36 இடங்களில் 31 பேர் வடநாட்டுக்காரர்கள் தேர்வு செய்யப்பட் டுள்ளனர். நமது தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புக்காக உரிய தகுதி உடைய எத்தனையோ நமது மாணவர்கள் இருக்கும்போது மோசடிகள் செய்து வடநாட்டுக்காரர்களை இறக்குமதி செய்வது நியாயமா? நேர்மையா?

உச்சநீதிமன்றம்தான் இப்போது நாட்டிலே அதிகாரம் படைத்த அமைப்பு. இதில் ஒருவர்கூட பட்டியல் இனப் பிரிவைச் சார்ந்த நீதிபதி இல்லை. பிற்படுத்தப்பட்டோரும் இல்லை. உச்சநீதிமன்ற நீதிபதிகளே தலைமை பார்ப்பன நீதிபதியை வெளிப் படையாக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக இப்போது குற்றம்சாட்டுகிறார்கள்.

தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் தலித் மாணவர்களுக்கு பொறியியல் பட்டப் படிப்புக்காக தமிழக அரசு வழங்கி வந்த கல்வித் தொகை ரூ.85 ஆயிரத்தை இப்போது தமிழ்நாடு அரசு ரூ.50 ஆயிர மாகக் குறைத்துவிட்டது. மீதிப் பணம் செலுத்திப் படிக்க நமது தலித் மாணவர்கள் எங்கே போவார்கள்?

இப்படி ஏராளமாகப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். மாணவர்களே! காமராசர் காலத்திலிருந்து நமது தமிழ்நாட்டில் சமூகநீதிக்கான கதவு திறக்கப் பட்டு படிப்படியாக நாம் கல்வி வேலை வாய்ப்புகளைப் பெற்றோம். இப்போது நமது எதிர்காலம் இருண்டு கிடக்கிறது.

அம்பேத்கர், பெரியார் போராடிப் பெற்றுத் தந்த உரிமைகள். காமராசர் காலத்திலிருந்து அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலம் வரை பாதுகாக்கப்பட்ட உரிமைகளை இழந்து வருகிறோம்.

மாணவர்களே! இந்த செய்திகளைப் பரப்புங்கள். சமூக வலைதளங்களில் பதிவு செய்யுங்கள். சக மாணவர்களிடம் விவாதியுங்கள்!

இது கட்சிப் பிரச்சினையல்ல; தேர்தல் பிரச்சினை யல்ல; எல்லாவற்றையும் கடந்த நமது எதிர்கால வாழ்வியல் பிரச்சினை.

விழிப்புணர்வை உருவாக்குங்கள்!

சமூக நீதிக்கான மாணவர்கள் இயக்கத்தை வலிமையாக்குவோம்;

இது நமது சமூகக் கடமை;

இது நமது வாழ்வியல் உரிமை.

- தமிழ்நாடு மாணவர் கழகம்

(மாணவர் பரப்புரை இயக்கத்துக்கு தோழர்கள் - இதை துண்டறிக்கையாகப் பயன்படுத்தலாம்.)