ஆஸ்ட்ரியா – ஹங்கேரியை வெட்டிப் பிரித் ததை (ரஷ்யா) நாம் புரிந்து கொள்ள முடியும். அங்கு வெவ்வேறு மொழிகளைப் பேசும் வெவ்வேறு தேசிய இன மக்கள் உள்ளனர். வெவ்வேறான பண்பாடுகள், வெவ்வேறான மனித இனங்கள் – ஆஸ்ட்ரிய பேரரசு என்ற ஓர் எதேச்சதிகார ஆட்சியின் கீழ் ஒன்றாக வைக்கப்பட்டிருந்தனர். முதலாவது உலகப் போர், சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாட்டின் கீழ் ஆஸ்ட்ரிய பேரரசை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆனால் இங்கு நீங்கள் செய்து வருவது இதுதான். பண்பாட்டு ரீதியில் ஒன்று பட்டு, சமூக ரீதியில் ஒரே தன்மை வாய்ந்த மற்றும் ஒரே மொழி, ஒரே இனம், ஒரே எதிர் காலம் என ஒன்றாக சேர்ந்து வாழ விரும்பும் மக்களைக் கொண்ட நாடுகள் இங்கு உள்ளன.

நீங்கள் அங்கு சென்று அவற்றை வெட்டிப் பிரித்து, இறந்த உடலை இரண்டாகப் பிரிவினை செய்து கொள்கிறீர்கள். உடலின் ஒரு பகுதியை யாருக்கு அளிக்கிறீர்கள்? கம்யூனிசத்தைப் பரப்புவதில் அக்கறை கொண்டுள்ள நாடுகளுக்கு. நான் கொடுத்துள்ள புள்ளி விவரங்களிலிருந்து கம்யூனிச நாடுகள் இன்று ஓர் அரக்கனைப் போன்று, அவ்வளவு பெரியவையாகியுள்ளன என்பதில் அய்யமிருக்க முடியாது. யாரும் ஓர் அரக்கனைப் பார்த்ததில்லை – எப்படியும் நான் பார்த்ததில்லை!

இங்கு ஒரு பரந்த நாட்டைக் காண்கிறீர்கள். பிற மக்களை ஒழித்துக் கட்டும் பணியில் அது இடைவிடாமல் ஈடுபட்டிருக்கிறது. அவர்களை விடுதலை செய்கிறோம் என்ற தத்துவத்தின் பேரில், தனது ஆட்சியின் கீழ், தன்வயப்படுத்திக் கொள்கிறது. நான் புரிந்து கொண்டுள்ள வரையில் ரஷ்ய விடுதலையானது, அடிமைத்தனத்திற்குப் பின்னால் ஏற்பட்ட விடுதலையல்ல. ஆனால் விஷயம் என்னவெனில், அது என்னைப் பெருமளவு கவலைக்குள்ளாக்குகிறது.

இந்த வகைப்பட்ட அமைதியால், அந்த அரக்கன் தனது வாயைத் திறந்து, தின்பதற்கு ஏதாவது கேட்கும் போதெல்லாம் அவனுக்குத் தீனி போடுவதைத் தவிர வேறெதையும் நீங்கள் செய்வதில்லை. நீங்கள் அரக்கனுக்கு முறையாகவும், தொடர்ந்தும் தீனிபோடும்போது, என்னை நானே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி இதுதான் : இந்த அரக்கன் ஒரு நாள் நம்மை நோக்கியே திரும்பி, ""சாப்பிடுவதற்கு உள்ள எல்லாவற்றையும் நான் சாப்பிட்டு விட்டேன். நீங்கள் மட்டுமே எஞ்சி நிற்கிறீர்கள். உங்களையும் நான் சாப்பிட விரும்புகிறேன்'' என்று கூறுவான் என்பது எதிர்பார்க்கத்தக்கதல்லவா?

நம்மைப் பற்றி நாமே மிக அதிகமாகப் பெருமை யடித்துக் கொள்ள வேண்டாம். ஒரு சர்வதேச சண்டையில் நாம் இன்னும் ஈடுபட்டு முயற்சி செய்யவில்லை. அவ்வாறு நாம் ஒரு சர்வதேச சண்டையில் சோதனை செய்து பார்க்கப்படும்போது, நாமே அந்த நிலைமையை எதிர் கொள்ள முடியுமா என்பது கண்டுபிடிக்கப்பட்டு விடும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் நான் சொல்ல வந்த விஷயம் இதுதான் : அரக்கனுக்குத் தீனி போடும் கோட்பாடு, மிகவும் தீய, அருவருக்கத்தக்க கோட்பாடாகும். எனவே, எடுத்துக்காட்டாக, நான் கூறியது போன்று இதிலிருந்து நாம் எவ்வாறு விடுபடுவோம் என்று எதிர்பார்க்கிறோம்? இந்தியப் பிரதமரும் இந்திய நாடாளுமன்றமும் இந்தோ – சீனாவின் பிரிவினையை ஆதரித்தனர் என்பதற்காகவோ, கொரியாவின் பிரிவினையை ஆதரித்தனர் என்ற காரணத்திற்காகவோ ரஷ்யர்கள் ஏதாவது நன்றி தெரிவிப்பார்களா? அவர்கள் நமக்கு எதிராகத் திரும்ப மாட்டார்களா? இது, இந்தியர்கள் மனதிலிருத்த வேண்டிய ஒரு கேள்வி. இதை மறக்கவோ, பார்க்காமலிருக்கவோ முடியாது என்று நான் நினைக்கிறேன்.

பிறகு, சகவாழ்வு என்ற மற்றொரு பிரச்சினை. இந்த சகவாழ்வு, மிகவும் வியப்பளிக்கக் கூடிய ஒரு கோட்பாடு என்று என் மனதிற்குப் படுகிறது. இது மிகவும் கறாராகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும். கம்யூனிசமும், சுதந்திர ஜனநாயகமும் ஒன்றுபட்டுச் செயல்பட முடியுமா என்பதே கேள்வியாகும். அவை ஒன்றாக வாழ முடியுமா? அவற்றுக்கு இடையில் மோதல் ஏற்படாது என்று நம்புவது சாத்தியமா? எப்படியாயினும், இந்தக் கோட்பாடு முற்றிலும் அபத்தமானது. ஏனெனில், கம்யூனிசம் ஒரு காட்டுத் தீ போன்றது. அது தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும். வழியில் வரும் எதையும், எல்லாவற்றையும் அது சாப்பிட்டுவிடும்.

கம்யூனிசத்தின் மய்யத்திலிருந்து மிகவும் தொலைவிலுள்ள நாடுகள், தாங்கள் பாதுகாப்புடன் இருப்பதாக உணரக்கூடும். அது தம்மை அணுகுவதற்கு முன்பாக அணைக்கப்பட்டுவிடும் அல்லது, அந்த நெருப்பு தங்களை ஒருபோதும் அணுகாமலேயே போய்விடும் என்று அவை கருதலாம். ஆனால் இந்தக் காட்டுத் தீக்கு அருகில் வாழ்ந்து வரும் நாடுகளின் கதி என்னாவது? மனித வாழ்வும் (குடியிருப்பும்) இந்தக் காட்டுத் தீயும் – நீண்ட காலம் ஒன்றாக சேர்ந்து வாழ முடியும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? கனடிய ராஜதந்திரிகளும், அய்ரோப்பிய ராஜதந்திரிகளும் சகவாழ்வுக் கொள்கையைப் பாராட்டும் கருத்துக்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களது பாராட்டுதல்களும் புகழ்மாலைகளும் என்னை சிறிதும் அசைய வைப்பதில்லை. அவர்களது கருத்துக்கும், அவர்களது பார்வைக்கும் நான் எந்த மதிப்பும் கொடுப்பதில்லை. சகவாழ்வு சாத்தியம் என்று கனடிய ராஜதந்திரிகள் மிகவும் எளிதாகக் கூறிவிட முடியும்.

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 15, பக்கம்: 877)

Pin It