நடுவண் அரசின் எதிர்ப்புக்கு அஞ்சிய ம.பொ.சி.

“பொது வாழ்வில் எவ்வளவோ இன்னல்களுக் கிடையே  நான் கடை பிடித்து வரும் ஒழுக்கத்தை! மக்கள் ஐயுறும் வகையிலும் என் மீது பழி சுமத்திப் பிரச்சாரம் செய்தனர். அந்தப் பொய் குற்றச்சாட்டுகள் “தினத்தந்தியில்” முழுப்பக்க அளவில் பெரிய தலைப்பு களில் அவ்வப்போது பிரசுரிக்கப்பட்டு வந்தன. என்ன காரணத்தினாலோ திரு. காமராசருக்கு ஆதரவாக இருந்தது அந்நாளில் சி.பா.ஆத்தினாரின் நேர்பார்வை யில் நடத்தப்பட்டு  வந்த ‘தினத்தந்தி’ அப்போதும் நானும் திரு. சி.பா. ஆதித்தனாரும் நண்பர்களாகத் தான் இருந்தோம். ஆயினும் அவருக்கு என்னிடமிருந்த நட்பைவிட திரு. காமராசரிடமிருந்த “பக்தி (?)” யே விஞ்சியிருந்தது.

“வடக்கெல்லை - தெற்கெல்லைப் பிரச்சனைகள் பற்றி நான் பொதுக் கூட்டத்திலோ, நிருபர்களுக்கும், பேட்டிகளிலோ மத்திய அரசைக் குறைக் கூறி ஏதேனும் சொல்லி விட்டால் போதும்; அவை “நேருவுக்கு ம.பொ.சி எச்சரிக்கை”, “இன்னும் 15 நாட்களில் போராட்டம்”, “பிரதமருக்கு ம.பொ.சி இறுதி நோட்டீ°” என்றெல்லாம் தலைப்புகள் தந்து ‘தினத்தந்தி’யில் பிரசுரிக்கப்படும்” என்றெல்லாம் ‘தினத்தந்தி’யின் மீது ம.பொ.சி வசைப்பாடுகிறார்.

வடக்கெல்லை தெற்கெல்லைப் போராட்டத்தில் இவர் முழு மனதுடன் செயல்பட்டிருந்தால் இந்த செய்திகளுக்காக மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். ‘தினத்தந்தி’ எதையும் திருத்தி போடவில்லை. இவர் கூறியதைத் தானே முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தது. இதையெல்லாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நேருவுக்கு அனுப்பி விட்டார்களாம். அனுப்பினால் நல்லது தானே.

தமிழ்நாட்டில் எல்லைப் போராட்டங்கள் நடக்கின்றன என்று நேரு தெரிந்து கொள்ளட்டுமே. ம.பொ.சி தன்னை காங்கிரசை விட்டு நீக்கி விடக் கூடாது என்பதற்காக எல்லார் மீதும் வசைப்பாடினார் என்பது தானே உண்மை.

மேலும் தமிழ்நாடு பிரிவினைக்கு எதிராக பல கட்டுரைகளை ம.பொ.சி. தொடர்ந்து தனது ‘செங்கோல்’ இதழில் எழுதி வந்துள்ளார்.  அதில் ஒரு சிலவற்றை மட்டும் இங்கே தருகிறேன்.

தமிழ்நாடு பிரிவினையைக் கண்டிக்கும் ம.பொ.சி.:

தமிழகத்தை இந்தியாவிலிருந்து துண்டாட விரும்புகின்றன. ஒன்றிரண்டு கட்சிகள் - அறிஞர் ஒருவர் சொல்கிறார், “எனது தாயகம் அக்பருக்கு அடிமைப்பட்டதில்லை, மௌரியருக்கு அடிமைப் பட்டதில்லை.....” என்று. ஆனால் அந்த அரசியல் அறிஞர் நாம் வாழ்வது அசோகர், மௌரியர் காலமல்ல, அணு ஹைட்ரஜன் குண்டு காலம் என்பதை மறந்து விடுகிறார்.

அக்பர் காலத்தில் இந்தியாவில் ஆயிரம் தனி நாடுகள் இருந்திருக்கலாம். இந்த அணுகுண்டு காலத்தில் வல்லரசுகளின் கெடு பிடிபோர் இந்தியாவின் வாயிற் கதவைத் தட்டுகின்ற நேரத்தில் நாடு துண்டாடப்படுவது நல்லதா?

தமிழகத்தின் மக்கள் தொகை 3 கோடிக்கு மேல் இல்லை. இந்த இலட்சணத்தில் தமிழகம் தனியாக பிரிந்தால், நமது இராணுவத்தில் எத்தனை இலட்சம் பேர் இருப்பார்கள்? அந்நிய நாடுகளிடமிருந்து பாதுகாப்புக்கு ஆயுதங்கள் பெறலாம் பண உதவியும் பெறலாம். இராணுவ வீரர்களையும் இரவல் வாங்குவதோ? வாங்கினால் அதன் பின் நாம் பெற்ற சுதந்திரம் நிலைக்குமா? (‘செங்கோல்’ 27.11.60)

“பிரிவினைக் கோரிக்கையை அது எந்த வடிவத்தில் வந்தாலும் எதிர்ப்பேன்” என்ற தலைப்பில் ம.பொ.சி எழுதுகிறார். “தமிழகத்தில் ஜீவநதி ஒன்று கூட இல்லை காவிரியாற்றின் தலைப்பு கன்னட நாட்டில் இருக்கிறது. தமிழகம் பிரிந்தால் காவிரி ஆற்றில் தண்ணீர் விட கன்னட அரசு சம்மதிக்குமா?......

“தமிழகத்தின் நிலப்பரப்பு ஐம்பதாயிரம் சதுர மைல். மக்கள் தொகையோ மூன்று கோடிக்கும் அதிகம். இன்னும் ஒரு அய்ம்பதாண்டு கழிந்தால் தமிழகத்தின் மக்கள் தொகை எட்டு கோடியாகலாம். அந்த நிலையில் பெருகி விட்ட மக்கள் தொகைக்கு குறுகிக்கிடக்கும் தமிழ் நிலம் போதுமா? வடவரை வெளியேற்றி, தமிழகத்தை தனி நாடாக்குவோமானால், அதையே காரணமாக காட்டி, வடக்கிலிலுள்ள தமிழர்களும் தமிழகத்திற்கு விரட்டப்படுவார்களே? இலங்கை, பர்மா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்களும் தாயகத்திற்கு விரட்டப்பட மாட்டார்களா?..... தமிழகத்தை இழப்பதால், எஞ்சிய பாரதத்திற்கு நஷ்டமில்லை. பாரத்திலிருந்து பிரிவதால் நஷ்டம் தமிழகத்திற்கே என்கிறார் ம.பொ.சி.” (‘செங்கோல்’ 28.10.62)

“தமிழகம் தனி நாடகப் பிரிந்தால் நமக்குத் தேவைப் படும் பண்டத்திற்கும், பணத்திற்கும் அயல் நாடுகளிள் உதவியை நாட வேண்டியிருக்கும். சகோதர நாடு என்ற நல்லெண்ணத்தாலோ, கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கருணையாலோ எந்த ஒரு நாடும் நமக்கு உதவி செய்ய முன்வராது. அயல் நாட்டு அரசியலில் நாம் சொந்தக் கொள்கையின்றி எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்து நடப்பதனால் மட்டுமே உதவி கிடைக்கும்...

பாகிஸ்தான் கதியை தமிழ்நாடு அடைய வேண்டுமா?” ‘செங்கோல்’ (15.12.57) 22.4.62 ‘செங்கோல்’ இதழில் ‘நாட்டை துண்டாடுவதால் யாருக்கு லாபம்’ என்ற கட்டுரையில் “தமிழகத் தின் கதி என்ன? சென்னை நகரின் குடி தண்ணீர்ப் பஞ்சத் தைப் போக்க, கிருஷ்ணா - கோதவரி ஆறுகளின் தண்ணீரில் ஒரு சிறு பகுதியைச் சென்னையின் பக்கம் திருப்பி விட முடியாதென்கின்றனர் ஆந்திரர்.

தமிழகம் இந்தியாவோடு இணைந் திருக்கும் போதே நிலைமை இதுவென்றால் பிரிந்து வாழுமானால், இப்போது கொடுக்கும் தண்ணீரைக் கூட நிறுத்தி விடுவார்கள் கன்னட,  கேரள ஆட்சியினர். அந்நிலையில் நம் தமிழகத்தின் கதி என்ன?

குறைப்பது எப்படி: உணவு உற்பத்தியைப் பெருக்கினால் தானே அரிசி விலையைக் குறைக்க முடியும். தண்ணீர் பஞ்சத்திற்கு இரையாகித் தவிக்கும். தமிழ்நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படுமென்றால் அரிசி விலையை எப்படி குறைக்க முடியும்?

கற்பனை செய்து பாருங்கள்: இது நிற்க, தனித் தமிழ் நாட்டில் அதன் சுய நிறைவுக் கேற்ப கனரகத் தொழிற்சாலைகளை ஏற்படுத்தியாக வேண்டும். அதற்கேற்ப மின் விசைத் தேவையைப் பூர்த்தி செய்ய தண்ணீர் வசதியும் தேவைப்படு மல்லவா? கற்பனை செய்து பாருங்கள்.

முன்னேற முடியுமா?: உணவு உற்பத்திக்குத் தேவைப்படும் நீருக்கும், குடி தண்ணீருக்குமே திண்டாடும் தனித் தமிழ்நாடு, கனரகத் தொழில் துறையில் சிறிதேனும் முன்னேற முடியுமா?

உதவி கிடைக்குமா?: இந்தியாவோடு இணைந் திருக்கும் இந்நாளில் வட மாநிலங்களிலிருந்து கோதுமை, அரிசி போன்ற உணவுப் பொருள்கள் ஓரளவு தமிழகத்திற்குக் கிடைக்கின்றன. ஆந்திர நாட்டிலிருந்து மிகுதியான அரிசி நமக்குக் கிடைக்கின்றது. தனித்து வாழும் தமிழ் நாட்டிற்கு இந்த உதவிகள் கிடைக்குமா? உரிமையோடு கேட்கத்தான் முடியுமா?

(தொடரும்)

Pin It