இந்து சமூகத்தில் அனைத்துப் பிரிவினருக்கும் அர்ச்சகராகும் உரிமை மீண்டும் மறுக்கப்பட்டுள்ளது. ஆகமங்களைப் பின்பற்றும் கோயில்களின் நடைமுறைகள் அப்படியே தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆகமங்களுக்கு சட்டப்பூர்வ ஏற்பை வழங்கியிருக்கிறது. “பிராமணர்களில்”கூட எல்லோரும் கருவறைக்குள் சென்று பூஜை செய்து விட முடியாது. அதற்குரிய ஆகம தகுதி பெற்றவர்கள்தான் பூஜை செய்ய முடியும் என்று பார்ப்பனர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் நியாயப்படுத்துகிறார்கள்.

ஆனால், அதற்குரிய ஆகமத் தகுதி பெற்ற பார்ப்பன ரல்லாத ‘சூத்திரர்’களுக்கு முற்றிலும் உரிமை கிடையாது. பார்ப்பனர்கள் இப்போது கோயில்களில் வழிபாடுகளில் ‘ஆகம’ விதிகளை அப்படியேதான் பின்பற்றி வருகிறார்களா? அவை மீறப்படாமல் இருக்கிறதா என்பதைக் கண்காணிக்க ஏதேனும் அமைப்பு இருக்கிறதா? அல்லது இப்போது ஆகமக் கோயில்களில் அர்ச்சகர் வேலை பார்க்கும் அய்யர், அய்யங்கார், சாஸ்திரிகள் ஆகமங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் என்பதற்கு ஏதேனும் தேர்வுகளோ - அதில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றுகளோ இருக்கிறதா? எதுவும் இல்லை. அவர்கள் பின்பற்றுவதுதான் ஆகமம். அவர்கள் நடத்துவது எல்லாமே முறையான பூஜை! அவர்கள் நடத்துவது எல்லாமே சரியான சடங்கு. அப்படித்தான் எல்லாமும் நடந்து கொண்டிருக்கிறது.

ஆகமத்தை மீறக் கூடாது; ‘சூத்திரர்’கள் உள்ளே வந்துவிடக் கூடாது என்று அலறும் பார்ப்பனர்களுக்கும் அதை நியாயப்படுத்தும் ‘சூத்திரத்’ தமிழர்களுக்கும் சில கேள்விகளை முன்வைக்கிறோம்.

• ஆங்கில புத்தாண்டு பிறப்பின்போது நள்ளிரவில் பல பெரிய கோயில்கள் பூஜைக்கு திறந்துவிடப்படுகிறது. இதைக் கண்டித்து பா.ஜ.க. பொதுச் செயலாளராக இருந்த இல.கணேசன், ‘தினமணி’ நாளேட்டில் (4.1.2001) இவ்வாறு கடிதம் எழுதினார். “ஹிந்து ஆகமப்படி ஆலயங்களில் சுவாமியை இரவு பள்ளி கொள்ள அனுப்பி விட்டால் மறுநாள் காலை பள்ளி எழுச்சிதான். எந்த ஜாதியினரையும் அர்ச்சகராக்கிக் கர்ப்பகிரகத்துக்கு உள்ளே அனுமதிக்கலாம் என்ற கோரிக்கை வரும்போது பாதுகாப்புக்கு ஆகம விதிக்குள் புகுந்து கொள்பவர்கள், இந்த விஷயத்தில் ஆகம விதியை மீறத் துணிவது எப்படி எனப் புரியவில்லை?” - இது இல.கணேசன் எழுப்பிய கேள்வி.

• அர்ச்சகர்களாக இருப்பவர்களுக்கான உடல் தகுதி மற்றும் இருக்கக்கூடாத குறைபாடுகள் குறித்தும் ஆகமம் கூறுகிறது. அதிகமாக உடல் பருத்து குண்டாக இருப்பவர்களும், அதிக குள்ளமாக இருப்பவர்களும், மொட்டைத் தலை, செம்பட்டை மயிர், உடலில் அதிக உரோமம் இருப்பது, ஊனமுற்றோர், பல் இல்லாதவர், அதிகம் உண்ணுபவர் போன்றவர்கள், அர்ச்சகர்களாவதற்கு தகுதி இல்லாதவர்கள் என்று காரணாகமம், பூர்வ பாகம் 26ஆவது படலம் ஆச்சாரிய இலட்சணம் விதிப்படலம் ஆகிய ஆகம சா°திரங்களில் கூறப்பட் டுள்ளன. இந்த அளவுகோலின்படி தான் அர்ச்சகர்கள் இருக்கிறார்களா? அப்படி இல்லாதவர்களை கண்டறிந்து அர்ச்சகர் பொறுப்பிலிருந்து நீக்கிட ஏதேனும் கண்காணிப்பு அமைப்பு இருக்கிறதா?

• சிவன் கோயில்களில் அர்ச்சகர்களாக இருக்கும் பார்ப்பனர்களில் இரு பிரிவினர் உண்டு. ஒன்று - சிவாச்சாரி அல்லது ஆதி சைவர் என்று அழைக்கப் படும் பார்ப்பனர்கள். இவர்கள் ‘சிவபெருமான்’ அய்ந்து முகங்களிலிருந்து சிவனாலேயே உருவாக்கப்பட்டவர்களாம். மற்றொரு பிரிவினர் ‘ஸ்மார்த்த பார்ப்பனர்’. இவர்கள் ‘பிரம்மா’வின் நான்கு முகங்களிலிருந்து ‘பிரம்மாவால்’ உருவாக்கப்பட்டவர்களாம்.

சிவன் கோயில்களில் பூஜை செய்ய சிவாச்சாரியார்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. “°மார்த்த பிராமணர்களுக்கு” உரிமை கிடையாது என்றும்; அப்படி ஆகம விதிகளை மீறி செயல்பட்டால் அரசனுக்கும் நாட்டுக்கும் உடனே கேடு வந்துவிடும் என்றும் ஆகமங்கள் திட்டவட்டமாக கூறுகின்றன. (காடிககாமம், காரணாகமம் ஆகிய ஆகமங்கள்) இந்த ஆகமவிதிகள் பின்பற்றப்படுகிறதா? சிதம்பரம், இராமேசுவரம், திருவிழி மிழலை, கன்யாகுமரி, திருவானைக்காவல், திருச்செந்தூர் போன்ற பிரபலமான சிவன் கோயில்களில் சிவாச்சாரியார் அல்லாத “°மார்த்த பிராமணர்களே” காலம்காலமாக பூஜை நடத்துகிறார்கள். இது ஆகம விதிமீறல் இல்லையா?

• கருவறைக்குள் சிவாச்சாரியார் அல்லாத பிரிவினர் நுழைந்தால், சிலையைத் தொட்டால், சிலையின் புனிதம் கெடும் என்று ஆகமம் கூறுகிறது. ஆனால் பல சிவன் கோயில்களில் ‘°மார்த்த பிராமணர்களே’ அபிஷேக தீர்த்தம் தருதல்; பரிவட்டம் துவைத்தல்; திருவிளக்கு இடுதல் போன்ற வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். பார்ப்பனர்கள் மட்டும் ஆகமங்களை மீறிக் கொள்ளலாமா?

• அர்ச்சகர்கள் ஊதியம் பெறக் கூடாது; அதனால் ‘தேவலோகத் துவேஷம்’ வரும். கோயிலின் புனிதம் கெடும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. (ஆதாரம்: காரணா கமம், பூர்வபாகம், புண்ணியாபிஷேக விதிப்படலம்) ஆனால், என்ன நடக் கிறது? அர்ச்சகர் மாத ஊதியம் வாங்குகிறார்கள்; சங்கம் அமைத்துக் கொண்டு ஓய்வூதியம் கேட்கிறார்கள்; கோயில் வருமானத்தில் ஒரு பங்கு தங்களுக்கு ஊக்க ஊதியமாக தரவேண்டும் என்கிறார்கள். இது ஆகமத்துக்கு எதிரானது அல்லவா?

• மனைவி இல்லாதவன் (அபத்திகன்), பிரம்மச்சாரி ஆகியோர் ‘நைமித்திகம்’ போன்ற பூஜைகள் செய்யக் கூடாது என்கிறது ஆகமம். ஆனால், பல கோயில் களில் இவர்கள் நைமித்திக பூஜை செய்கிறார்கள். இவர்களை பரிசோதிக்க ஏதேனும் அமைப்பு இருக்கிறதா? மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படு கிறதா?

• கோயில்களில் கடவுளை ‘பிரதிஷ்டை’ செய்வது ஆகமப்பபடி நடந்திருக்கும். அதே கோயிலில் ஆகம பூஜையே நடத்த வேண்டும். அதற்கு பதிலாக ‘ஸ்மார்த்த பிராமணர்கள்’ வைதீக பூஜை நடத்துகிறார்கள். நடராசர் - தெட்சிணாமூர்த்தி போன்ற பெரும் கடவுள்களுக்கு தனித்தனி மந்திரங்கள் இருந்தும்கூட - அர்ச்சகர் ஒரே மந்திரத்தைக் கூறுகிறார். தேவி மந்திரத்தை காளிக்கும், மாரியம்மனுக்கும் வித்தியாசமின்றி கூறுகிறார்கள் - இவை ஆகமத்துக்கு எதிரானவை அல்லவா?

• பெருங்கோயில்களிலுள்ள மடப்பள்ளியில் (படையல் உணவு தயாரிக்கும் இடம்) சிவாச்சாரியார்களே நிவேதனம் (படையல் உணவு) தயாரிக்க வேண்டும் என்பது ஆகமவிதி. பல பெரிய கோயில்களில் ‘தீட்சைகூட இல்லாத “°மார்த்த பிராமணர்கள்” உணவு தயாரித்து படையல் செய்வது வழக்கமாக இருக்கிறது. இது ஆகம விரோதம் இல்லையா?

• பழனி முருகன் கோயிலில் பார்ப்பனரல்லாத பண்டாரங்கள்தான் காலம் காலமாக பூஜை நடத்தி வந்தார்கள். திருமலை நாய்க்கன் காலத்தில் அவனது பார்ப்பன தளபதி இந்த பண்டாரகர்களை துரத்தி அடித்துவிட்டு பார்ப் பனர்களை உள்ளே கொண்டு வந்தான். திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் பார்ப்பனர்கள் பூஜை செய்கிறார்கள்; இவை ஆகமங்கள் மீறல் இல்லையா?

• ஆகமங்களின்படி ‘சிவன்-விஷ்ணு’வை இணைத்து கோயில் கட்ட முடியாது. சென்னையில் ‘சிவ-விஷ்ணு’ கோயில் கட்டப்பட்டு, அதில் பார்ப்பனர்கள் பூஜைகளும் நடத்துகிறார்களே! இதை எந்த ஆகமம் அனுமதிக்கிறது?

•ஆகமக் கோயில்களில் மின்சாரம், கண்காணிப்புக் கேமிரா, ‘தரிசனத்துக்கு ஆன்லைன் பதிவு’ என்றெல்லாம் விஞ்ஞான கருவிகள் பயன்படுத்தப்படுகிறதே; இவற்றையெல்லாம் ‘ஆகமம்’ அனுமதிக்கிறதா?

•  வேத பூஜை என்பதும், ஆகம பூஜை என்பதும் வெவ்வேறானது. அக்னி, வாயு, வருணன், இந்திரன் - இவை எல்லாம் வேதக் கடவுள்கள். இந்தக் கடவுளுக்கான படையல் (நிவேதனம்) நெருப்பின் வழியாகவே நடத்தப்படும். நெருப்பான ‘அக்னி’ தேவன், படையல் பொருள்களை அந்தந்தக் கடவுள்களுக்குக் கொண்டு செல்லும் ‘கூரியர்’ ஆக செயல்படுகிறானாம் - சிவன் - திருமால் என்ற கடவுள்களுக்கு மட்டுமே உரித்தானது ஆகமம்.

இந்தக் கடவுள்களுக்கு நேரடியாகவே படையல் செய்ய வேண்டும். பார்ப்பனர்கள் கோயில்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிட்ட பிறகு, ஆகமத்தையும் வேதத்தையும் ஒன்றாக்கிக் கொண்டார்கள். அதன்படி வேத பூஜைகள் நடத்துகிறார்கள். இவை ஆகம விதிமீறல்கள் இல்லையா?

• ஒவ்வொரு கோயிலும் இப்போது பின்பற்றப்படும் ஆகம முறையைத்தான் பின்பற்ற வேண்டும் என்று பார்ப்பனர்கள் கூறுகிறார்கள். உச்சநீதிமன்றமும் இதை ஏற்கிறது. அப்படியானால் ஒரு கேள்வி. ஒவ்வொரு கோயிலிலும் இப்போதுள்ள ஆகமமுறை எப்போது தொடங்கியது? அதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? பழனி முருகன் கோயிலிலும் கருமாரியம்மன் கோயிலிலும் பார்ப்பன அர்ச்சகர்கள் ஆகமத்துக்கு எதிராக உள்ளே புகுந்ததுபோல் வேறு கோயில்களிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்காதா? ஒரு அர்ச்சகர் கோயிலுக்கு  வர முடியாத நிலையில் வேறு கோயில் அர்ச்சகர் அவருக்கு பதிலாக வந்து பூஜைகள் செய்கிறார்.

இந்தக் கோயிலின் ஆகம வழிபாடு முறை இவருக்கு தெரியுமா? அந்த முறைப்படிதான் பூஜை நடத்து கிறார் என்பதற்கு ‘சோதனை’கள் உண்டா? எல்லாவற்றுக்கும் ‘அத்தாரிட்டி’ - அய்யர், அய்யங்கார், சர்மா, சாஸ்திரிகள்தானா? அவர்கள் கூறுவதுதான் வழிபாட்டு முறையா? இதுதான் ஆகமங்களைப் பின்பற்றும் ஒழுங்குமுறையா?

• ஆகமம் ‘சூத்திரர்’கள் (அதாவது - மனுசாஸ்திரப்படி “பிராமணர்”களின் வைப்பாட்டி மக்கள்) கோபுரத்துக்கு வெளியே நின்றுதான் தரிசிக்க முடியும் என்று கூறுகிறது. நடு மண்டபம் வரை ‘ஸ்மார்த்த பிராமணர்களும்’ மகாமண்டபம் வரை சத்திரியரும் வைசியரும் செல்லலாம். சிவாச்சாரிகள் மட்டுமே ‘கர்ப்பகிரகம் வரை’ செல்லலாம் என்று கூறுகிறது. (இது பிற்காலத்தில் பார்ப்பனர்கள் நுழைந்த இடைச்செருகல் என்பாரும் உண்டு.

ஆனாலும் இப்போதும் இந்த இழிவு ஆகமத்தின் பெயரால் நீடிக்கிறது) இந்த ஆகம சாஸ்திரங்களை நடைமுறைப்படுத்துவது ‘தீண்டாமை’ குற்றத்தின்கீழ் வராது என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பும் கூறுகிறது. சமூகத்தில் தீண்டாமை சட்டப்படி குற்றம் என்கிறது சட்டம். ஆனால், பார்ப்பன மதத்தின் ஆகமம் கூறும் ‘தீண்டாமை’ மட்டும் குற்றமில்லையாம்! இது யாருக்கான நாடு?

• ஆகமங்களை மாற்றவே முடியாது என்று பார்ப்பனர்கள் வேத காலம் தொடங்கி மோடி காலம் வரை நீட்டி முழங்குகிறார்கள். தங்கள் மேலாதிக்கத்தை அசைக்கவோ ஆட்டவோ முடியாது என்று ‘திமிர்’ பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

• அரசியல் சட்டத்தைவிட மேலே உயர்ந்து நிற்கிறது - ‘ஆகமம்’ என்கிறார்கள். உச்சநீதிமன்றம் அதை ஏற்கிறது!

•அனைத்து ஜாதியினரும் கோயில்களுக்குள்யே நுழையக் கூடாது என்பதுதான் ஆகம் விதித்த கட்டளை. இதை மீறித்தான் 1947ஆம் ஆண்டு அனைத்து ‘இந்து’க்களும் கோயிலுக்குள் நுழையவும் கோயில் குளத்தில் குளிக்கவும் உரிமை வழங்கப்பட்டது.

• ஆகமத்துக்கு எதிராக பல மாற்றங்களை செய்தவர்தான் இராமானுஜர். திருவரங்கம் கோயிலில் ‘வைகாசன’ பூஜைகளை நிறுத்திவிட்டு ‘பஞ்சராத்திர பூஜை’ முறையை அறிமுகப்படுத்தியது இராமானுஜர்தான். திருவரங்கம் ‘ரெங்கநாதனிடம்’ அன்பைக் காட்டிய இ°லாமிய பெண், துலுக்க நாச்சியாரை திருவரங்கம் கோயிலுக்குள் அழைத்து வந்து வழிபாடு செய்யும் முறையைத் தொடங்கி வைத்தவர் இராமானுஜர்தான். (இந்த சடங்கு இப்போதும் தொடருகிறது) வைணவத் துறவியாக பார்ப்பனர்கள் கொண்டாடும் இராமானுஜரே ஆகமங்களை காலத்துக்கேற்ப மாற்றிக் காட்டியிருக்கிறார். ஆனால், அவர் வழிவந்ததாகக் கூறும் தென்கலையினர் ஆகமத்தை மாற்றாதே என்று  நீதிமன்றத்துக்கு ஓடுகிறார்கள். பார்ப்பன இனவெறி மதத்தைத் தாண்டி நிற்கிறது.

• ஒவ்வொரு நாளும் பூஜையின்போது கடவுள் சிலை முன் காட்டப்படும் 12 உபச்சாரங்களில் இறுதி உபச்சாரமான ‘நிருத்தியம்’ உபச்சாரத்தை ‘தேவதாசிகள்’தான் செய்ய வேண்டும் என்பது ஆகம முறை. தேவதாசி ஒழிப்புச் சட்டம் வந்த பிறகு இந்த முறையும் ஒழிந்தது. இப்படி ஆகமங்கள் மாற்றமடைந்து வந்திருக்கும் வரலாறுகள் உண்டு.

• “நாங்கள் எங்கள் நலனுக்காக எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்வோம்; எதை வேண்டு மானாலும் செய்வோம்; நாங்கள் சொல்வதே ஆகமம்; நாங்கள் விதிப்பதே வழிபாட்டு முறை. அட, சூத்திரப் பசங்களா! உங்களை மட்டும் ஒதுக்கியே வைப்போம். எங்கள் குடுமியைக்கூட உங்களால் அசைக்க முடியாது” என்று பார்ப்பனர்கள் இந்தத் தீர்ப்பை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பார்ப்பனப் பிறவி இறுமாப்பு - ‘பழக்க வழக்கம்’ மதச் சுதந்திரம் என்ற அரசியல் சட்டப் பிரிவுகளாலும் இவை எல்லாவற்றையும்விட அதிகாரம் படைத்த ‘ஆகமங்களாலும்’ இன்றுவரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.

இது ‘பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்’ இந்த இழிவை ஒழிப்பதற்கே இறுதி மூச்சு அடங்கும் வரை பெரியாரின் போராட்டக் குரல் ஒலித்தது.

பெரியார் தொண்டர்கள் மட்டுமல்ல; தன்மானமுள்ள ஒவ்வொருவரும் இந்த இழிவுக்கு கல்லறை கட்டும்வரை போராடுவார்கள்! இது உறுதி!

தகவல்கள்: மகாராஜன் குழு பரிந்துரை