சோதிடம், பேய், பில்லி சூன்யங்களை உண்மையாக சித்தரித்து மக்களிடம் மூடநம்பிக்கைகளை தொலைக்காட்சி ஊடகங்கள் பரப்பி வருகின்றன. விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று அரசியல் சட்டம் வலியுறுத்துவதற்கு எதிரான இந்த  நிகழ்ச்சிகளை நியாயமாக தடை செய்ய வேண்டும். இந்த ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் குறித்து கண்காணிப்பதற்கும் புகார்களை விசாரிக்கவும் ஒரு குழு செயல்பட்டு வருகிறது.

தொலைக்காட்சிகளை நடத்துவோரே நியமித்துக் கொண்டுள்ள குழு இது. நிகழ்ச்சி குறித்த புகார்களை விசாரித்து ஒழுங்குபடுத்துவதே இதன் பணி. இந்தக் குழு இத்தகைய மூடநம்பிக்கைகளை பரப்பும் நிகழ்ச்சிகளை பொது மக்கள் பார்க்கக்கூடிய முதன்மையான நேரங்களில் ஒளிபரப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறது.

பார்வையாளர்களிடமிருந்து வந்த புகார்களை யொட்டி இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ‘சீ’, ‘சன்’, ‘கலர்ஸ்’, ‘மா’ ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட் டுள்ளது. ‘சன்’ தொலைக்காட்சி இத்தகைய மூட நம்பிக்கைகளை பரப்பும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது வெட்கக் கேடானதாகும். இத்தகைய மூடநம்பிக்கை பரப்பும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது உண்மைதான் என்றும், இவை தவிர்க்கப்பட வேண்டும் என்றும் குழுவின் தலைவராக உள்ள ஓய்வு பெற்ற நீதிபதி முகுல்முச்சல் கூறியுள்ளார்.

விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று அரசியல் சட்டத்தின் 51A(H) பிரிவு சுட்டிக்காட்டியிருப்பதை குழு எடுத்துக் காட்டி யிருக்கிறது. இத்தகைய மூடநம்பிக்கை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பிடும்போது ‘சம்பவங்கள் கற்பனை’ என்று கீழே எழுத்துகளின் வழியாக அறிவிக்கலாம் என்றும் தொலைக்காட்சிகளுக்கு குழு அறிவுறுத்தியிருக்கிறது.

இதேபோல் ஒவ்வொரு நாளும் சோதிடர்கள் தொலைக்காட்சிகளில் தோன்றி ஒவ்வொருவர் நட்சத்திரத் துக்கும் இராசி பலன் கூறி வருகிறார்கள். அன்றைய நாளில் ஒரு இராசிக்காரர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

“புருஹத் பிரம்மானந்தா” என்ற கன்னட தொலைக் காட்சியில் தொலைக்காட்சி நடிகராக இருந்து, பிறகு சோதிடத் தொழிலில் இறங்கிய நரேந்திர பாபு சர்மா என்ற பார்ப்பனர் மற்றும் லட்சுமி என்ற பெண் சோதிடர் கூறும் சோதிடப் பலன்களை ஏராளமானவர்கள் பார்த்து வருகிறார்கள். இந்த நம்பிக்கை, பலரை வீண் மயக்கத்திலும் குழப்பத்திலும் மூழ்கச் செய்து விடுகிறது என்பதால் தொலைக்காட்சிகளில் சோதிட நிகழ்ச்சிகளுக்கு தடை போட வேண்டும் என்று கருநாடக முதல்வரும் பகுத்தறிவாளருமான சித்தராமய்யா வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் முதல்வரிலிருந்து அமைச்சர்கள் வரை மூடநம்பிக்கைகளில் மூழ்கிக்கிடக்கிறார்கள். ஆனால் எந்த அமைச்சருக்கு எப்போது பதவிப் பறிபோகும் என்று கணித்துக் கூற ஒரு சோதிடர் இன்னும் கிடைக்க வில்லையே என்பதுதான் தமிழக அமைச்சர்களின் கவலையாக இருக்கிறது!