ஜப்பானிலும் ரஜினிக்கு ரசிகர் மன்றங்களாமே? நமது பிரதமரே ஜப்பான் நாடாளுமன்றத்தில் பெருமையோடு குறிப்பிட்டுப் பேசியிருக்கிறாரே?
டி.குமாரசாமி, கோயம்புத்தூர்

பெரியாரிடம் ஒருவர் வந்து, “அய்யா, ஜப்பான்ல கூட அலகு குத்துறாங்களாம், சாமி ஆடுறாங்களாம். என்னங்கய்யா அந்த நாட்டுல்ல கூட இப்படி” என்று வருத்தப்பட்டாராம். அதற்கு பெரியார், “மூடநம்பிக்கையும், காட்டுமிராண்டித்தனமும் ஒட்டு மொத்தமா நம்ம நாட்டுக்கு மட்டும்தான் சொந்தம்னு நினைச்சீங்கிளா?”ன்னு திருப்பிக் கேட்டாராம்.

ஆனாலும் நம்ம பிரதமர் ‘அஞ்சா நெஞ்சன் பாட்சா ரஜினி ரசிகர் மன்ற தலைவர்’ மாதிரி, ரஜினியைக் குறிப்பிட்டு பேசினதை தவிர்த்து இருக்கலாம். எங்க நாட்ல இருந்த பெரியம்மையும், காலராவும் இப்போ உங்க நாட்லேயும் வந்திருக்கிறதைப் பார்த்தா ரொம்ப பெருமையா இருக்குன்னு சொல்ல முடியுமா?

என்னங்க இப்படி ஆயிடுச்சி? முரசொலி அறக்கட்டளை சார்பில் ஜெயகாந்தனுக்கு கலைஞர் விருது அறிவிக்கப்பட்டுள்ளதே?
கோ.செங்குட்டவன், திருக்குவளை.

23.4.2005 அன்று மாலை மயிலாப்பூர் ஆர்.கே.சபாவில் ‘ஸம்ஸ்கிருத ஸேவா ஸமிதி’ சார்பாக ஜெயகாந்தனுக்கு நடந்த பாராட்டு விழாவில், “வர்ண வேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்”, “தமிழை விட சமஸ்கிருதம் உயர்வானது. சமஸ்கிருதம் இங்கே ஆதரித்து வளர்க்கப்பட்டிருந்தால் ஆங்கிலம் இப்படி நுழைந்திருக்காது”, “தமிழறிஞர்கள் தன்னைத் தானே நக்கிக் கொள்கிற நாய்கள்” என்றெல்லாம் ஜெயகாந்தன் பேசிய, அநாகரிகமானப் பேச்சை அந்த மேடையிலேயே ஏறி நேரிடையாக ஜெயகாந்தனிடம், கண்டித்தவன் நான். பிறகு அதை வெளி உலகத்துக்கு அம்பலப்படுத்தியதன் விளைவாக, உணர்வாளர்கள் ஜெயகாந்தனை மன்னிப்பு கேட்க வைத்தார்கள். ஆனால் முரசொலி அறக்கட்டளை விருது வழங்கி கவுரவிக்கிறது.

ஜெயகாந்தனின் அடிப்படை அரசியல் பெரியார் எதிர்ப்பு, திராவிட இயக்க எதிர்ப்பு. திராவிட இயக்க எழுத்தாளர்களை எழுதவே தெரியாத ‘முட்டாள்களாக’ சித்தரிப்பதில் ஜெயகாந்தனும் வல்லவர். அதிலும் குறிப்பாக கலைஞரின் தமிழை. அந்த ஜெயகாந்தனுக்குத்தான், முரசொலி அறக்கட்டளை சார்பாக ‘கலைஞர் விருது’. இது திராவிட இயக்க வரலாற்றில் கரும்புள்ளி. கலைஞருக்கு, தன்னை எப்போதும் பாராட்டிக் கொண்டிருப்பவர்களை விட, அவரை கடுமையாகத் தீட்டித் தீர்ப்பவர்கள், பாராட்டி விட்டால் அவர்களை அவருக்கு அதிகம் பிடித்துவிடுகிறது. அதுவும் இலக்கியவாதிகளாக இருந்தால் இன்னும் விசேக்ஷம்தான்.

ஜெயலலிதா ஒரு நள்ளிரவில் மிக மோசமான முறையில் கலைஞரைக் கைது செய்தபோது, அந்தக் கைதை ஆதரித்து, ’எதுக்கு போலிஸ் கிட்ட சண்டித்தனம் பண்றாரு. கைது பண்ணா போகவேண்டியதுதானே’ என்று பேசியவர்கள், இப்போது கலைஞரின் அன்புக்குரியவர்களாக இருக்கிறார்கள். அன்று அவரின் கைதைக் கண்டித்த பெரியார் தொண்டர்கள் இன்று தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் இருக்கிறார்கள். நினைக்கவே நெஞ்சு பூரிக்கிறது. என்ன சொல்வது? கலைஞரின் ஆசான் அண்ணாவின் வார்த்தைகளில் சொல்வதானால், ‘வேந்தே இதுதான் காலக்குறி’

இந்த ஆண்டு கலைஞர் விருது ஜெயகாந்தனுக்கு. அடுத்த ஆண்டு ஜெயேந்திரனுக்கா?

(திராவிட இயக்க எதிர்ப்பாளரான, ஜெயகாந்தனுக்கே நம் பெயரிலான விருதை தந்து விட்டோம் என்ற மகிழ்ச்சி கலைஞருக்கு இருக்கலாம். போன ஆண்டு உணர்வாளர்கள் தெரிவித்த எதிர்ப்பில் நாறிப்போன தன் பெயரை சரி செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் ஜெயகாந்தனுக்கும் இருக்கலாம்)

பெரியார் சிலை இடிப்பு கண்டிப்பு, அதே சமயத்தில் பெரியார் சிலையை வேறு இடத்தில் வைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் அறிக்கை குழப்பமாக இருக்கிறதே?
சி. கோகிலா, திருக்காட்டுப்பள்ளி.

இதில் குழப்பம் ஒன்றமில்லை. ஜெயலலிதா தெளிவாகத்தான் அறிவித்திருக்கிறார். ஒருவர் தனது எழுத்து அல்லது பேச்சின் துவக்கத்தில் ஒரு விசயத்தையோ அல்லது ஒரு நபரைப் பற்றியோ அளவுக்கு அதிகமாக புகழ்ந்து சொல்லுகிறார் என்றால், அதன் பின் பகுதியில் அதற்கு நேர் எதிராக சொல்லப் போகிறார் என்று அர்த்தம்.

பெரியார் பற்றி புகழ்ந்தும், பிறகு பெரியார் சிலை இடிப்பாளர்களைக் கண்டித்தும், “அவரது (பெரியார்) பெயருக்கும் புகழுக்கும் எந்த ஒரு சிறு களங்கமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நம் எல்லோருடைய கடமையாகும்” என்கிற ஜெயலலிதாதான், பத்திரிகையாளர் சந்திப்பில் பெரியார் சிலையை இடித்தவர்கள் என்ன காரணம் கூறினார்களோ அதையேத்தான் சொல்கிறார், “தமிழ்நாட்டில் எத்தனையோ இடங்களில் பெரியார் சிலைகள் உள்ளன. ஆனால் அங்கெல்லாம் பிரச்சினைகள் எழவில்லை. ஸ்ரீரங்கத்திலேயே வேறிடத்தில் பெரியார் சிலையை நிறுவலாம். அச்சிலை வேறு இடத்துக்கு மாற்றப்பட்டால் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது” என்கிறார்.

ஆமாம், உத்திரப்பிரதேசத்தில் எத்தனையோ இடங்களில் ராமருக்கு சிலைகள் இருக்கிறது. ஆனால் ‘பாபர் மசூதிக்குள்தான் சிலை வைப்போம்’ என்று அடாவடி செய்கிற ஆட்களை ஆதரித்து, அங்கு ‘ராமருக்கு கோயில் கட்டியே தீர வேண்டும்’ என்று சொன்ன ஜெயலலிதாதான், பொது இடத்தில் முறையான அனுமதியோடு நிறுவப்பட்ட பெரியார் சிலையை கண்டிக்கிறார்.

‘அப்சலுக்கும், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கும் உடனே தண்டனையை நிறைவேற்ற வேண்டும். நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தாமல் இருப்பதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது’ என்று சட்டத்தை ‘மதித்து’ பேட்டியளிக்கிற ஜெயலலிதாதான், ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதித்த பிறகும் அதை கண்டிக்கிறார். ஜெயலலிதா அறிக்கையின் நோக்கம் பெரியார் சிலை இடித்தவர்களை கண்டிப்பதல்ல. பார்ப்பனர்களின் பூணூல் அறுக்கப்பட்டதையும், ராமர் சிலை உடைக்கப்பட்டதையும், எரிக்கப்பட்டதையும் கண்டிப்பதே. அதனால்தான் பெரியார் சிலை இடித்தபோது அறிக்கை தராமல், ராமர் சிலை உடைக்கப்பட்டப் பிறகுதான் அறிக்கை தந்திருக்கிறார், இந்த சமூக நீதி காத்த வீராங்கனை.

எல்லா பொதுத் துறைகளையும் தனியார் நிறுவனங்களுக்கு அதுவும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கிறது மத்திய அரசு. கேட்டால், அவர்கள் திறமையாக லாபகரமாக நடத்துவார்கள். அதுதான் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்கிறார்கள். மக்களும் ‘தனியார்தாங்க சூப்பர்’ என்கிறார்கள். உண்மைதானா?
கே.டில்லி, சிதம்பரம் 1.

உண்மைதாங்க, தனியார் நிறுவனங்கள் அதிலும் குறிப்பாக அன்னிய நிறுவனங்கள் பெரும் லாபத்தோடுதான் நடத்துவார்கள். அந்த லாபம் சாதாரண லாபம் அல்ல கொள்ளை லாபம். கொள்ளை லாபம் பார்ப்பவர்கள் நாட்டின் நலனுக்கல்ல, குறைந்த பட்சம் அந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குக் கூட நன்மை புரியமாட்டார்கள். ஆட்குறைப்பு என்ற ஆயுதத்தால், அவர்கள் அடிக்கிற முதல் அடியே தொழிலாளர்கள் வயிற்றில்தான். நிர்வாக குறைபாடுகள் இருந்தாலும், பொதுத் துறைதான் மக்களுக்கானது.

தனியார் துறையின் மோசடியை புரிந்து கொள்ள ஆம்னி பஸ் ‘சேவை’யே ஒரு உதாரணம். இந்த பஸ்களில் சாதாரண நாட்களில் ஒரு கட்டணமும், பண்டிகை நாட்களில் மிக அதிகமான கட்டணமும் வசூலிக்கப்படும். சீட்டுகள் நிறைந்தால்தான் பஸ் ‘கண்’ டைமுக்கு கிளம்பும். இல்லையேல் அது புறப்பட்ட இடத்தையே சுற்றி சுற்றி வரும். இருவர், மூவர்தான் பயணிகள் என்றால் அந்த ‘டிரிப்பே’ கேன்சல் ஆகி பயணிகள் ‘அம்போ’ என்று இறக்கி விடப்படுவார்கள். ஆனால் அரசு பேருந்து அப்படியில்லை. ஒரே ஒரு பயணியாக இருந்தாலும் அவருக்காக அது தன் பயணத்தை மேற்கொண்டுதான் ஆக வேண்டும். ஏனெனில் அது நமது நிறுவனம்.
கொள்ளையடிப்பதில் தனியார் பஸ் முதலாளியே இப்படி என்றால், ஏகாதிபத்திய நிறுவனங்களின் சூறையாடலை சொல்லவும் வேண்டுமோ?

கே.டில்லி, உங்க ஊர் பெயரை தன் பெயராகக் கொண்ட ஒருத்தர், உங்க பேர் கொண்ட ஊர்ல நிதியமைச்சரா இருக்காரே அவரு கூட சொல்றாரு, ‘அன்னிய முதலீடு, நிர்வாகம் நாட்டை முன்னேத்தும்’னு. அது உண்மையா இருந்தா, நிதியமைச்சர் பதவிய ‘நோக்கியா’ கம்பனிக்கும், பிரதமர் பதவிய ‘கோக கோலா’ கம்பெனிக்கும் நேரடியாவே கொடுத்திருலாமே? அவுங்க ஒட்டுமொத்தமா நாட்டை முன்னேத்திட்டு போறாங்க.

தமிழில் பெயர் வைத்தால், வரி விலக்கு, படப்பிடிப்புக்கான கட்டணக்குறைப்பு, திரையரங்குகளில் கட்டணக் குறைப்பு என தமிழக அரசு தமிழ் சினிவிற்கு சலுகைகளை அள்ளி வழங்குகிறதே?
சு.தமிழ், வேலூர்.

தமிழ் சினிமாவிற்கு செய்கிற நன்மை, தமிழர்களுக்கு செய்கிற தீமை என்பதை தமிழக அரசு உணர வேண்டும். தமிழ் எம்.ஏ. படித்தவர்களுக்கு தனியார் துறைகளில் சுத்தமாக வேலை இல்லை. அரசு நிறுவனங்களிலும் ஏறக்குறைய அதே நிலைதான்.

தமிழ் பெயர் கொண்ட சினிமாவிற்கு வரிவிலக்கு. தமிழை விருப்பப் பாடமாக எடுத்துப் படிக்கிற தமிழனுக்கு நடுத்தெரு. நன்றாகத் தான் இருக்கிறது தமிழ் வளர்ச்சி. சினிமாகாரர்களுக்கு சலுகை. அன்னிய நிறுவன ஆலைகளுக்கு அனுமதி. சலுகை. இந்த இரண்டில் மட்டும் கலைஞருக்கும் ஜெயலலிதாவிற்கும் நல்ல கருத்து ஒற்றுமை.

தமிழ் வளர்ச்சிக்கு ஒரே வழி, ‘தமிழ் வழியில் படிக்கிறவர்களுக்கு மட்டுமே தமிழக அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை’ என்று அறிவிப்பதே. இப்படி சட்டம் கொண்டு வந்தால், இயல்பாகவே ஆங்கில வழி பள்ளிகள் எல்லாம், தமிழ் வழி பள்ளிகளாக மாறிப் போகும். கல்வி வியாபாரிகளும் தமிழ் உணர்வாளர்களான மாறிப் போவார்கள். அதற்கு சமீபத்து உதாரணம் சினிமாக்காரர்கள்.

‘திரைப்படத்திற்கு தமிழில் பெயர் வையுங்கள்’ என்று பாட்டாளி மக்கள் கட்சியும், விடுதலை சிறுத்தைகளும் எவ்வளவோ கேட்டுப் பார்த்தார்கள், கமல்ஹாசனும், சூர்யாவும் கலைஞர்களின் உரிமையில் தலையிடக்கூடாது. கதைக்குப் பொருத்தமான தலைப்புதான் வைப்போம்’ என்று சவடால் பேசினார்கள். ‘நமது இனமுரசு’ சத்யராஜ் வேண்டுமென்றே இனஉணர்வோடு, ‘இங்கிலீஷ்காரன்’ என்று படத்திற்குப் பெயர் வைத்தார். அரசு ‘வரிவிலக்கு’ என்ற அறிவித்தவுடன், சினிமாக்காரர்கள் எல்லாம் மறைமலை அடிகளாக மாறிப் போனார்கள்.

நடிகை பத்மினி, நடிகை ஸ்ரீவித்யா இவர்களின் மரணத்தைப் பற்றி ஆனந்த விகடன் இதழில் சுஜாதாவும் ஞாநியும் ஒரே மாதிரியாக எழுதியிருந்தார்களே? அதெப்படி ஒரே இதழில் ஒரே மாதிரியான கட்டுரையைப் பிரசுரிக்கிறார்கள்?
கோ. வானதி, சேலம்.

அது கட்டுரை எழுதறவங்க யார் அப்படிங்கறதை வைச்சி ‘சமூகம்’ முடிவு பண்ணும்போலும். ஆனா அதுல பிரச்சினை அது இல்லை. நடிகை பத்மினியையும், ஸ்ரீவித்யாவையும் சம திறமையாளர்களாக மதிப்பிட்டதுதான். (ஸ்ரீவித்யாவைப் போல் திறமையான நடிகை பத்மினி - சுஜாதா) சவுகார் ஜானகி, லட்சுமி மாதிரி ஸ்ரீவித்யாவும் திறமையான நடிகைதான். ஆனால் பத்மினி ஒரு லெஜன்ட். தமிழ் சினிமாவை அழகுபடுத்திய எம்.ஆர்.ராதா, மனோரமா, சிவாஜி கணேசன், பாலையா வரிசையில் பத்மினியும் ஒருவர்.

ஸ்ரீவித்யா இளம் வயதிலேயே முதிர்கன்னியின் தோற்றத்திலும் பிறகு குணச்சித்திர வேடத்தில் நடித்தவர். அதன் பிறகு ‘வீட்டில் சும்மா இருக்க வேண்டாமே’ என்பதற்காக மூத்த காதாநாயகர்ளுக்கு அம்மாவாக நடித்தவர். மற்றபடி மிகச் சிறப்பாக குறிப்பிட்டு சொல்லும்படி எதுவம் அவர் சாதித்து விடவில்லை.

ஆயிரம் பாவனைகள் சொல்லும் பத்மினியின் முகமும், தனது உடல்மொழியால் உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்திய பாங்கும், தனது நாட்டியத்தின் நளினமான அசைவுகள் மூலமும் உலக புகழ்பெற்றவர் பத்மினி. (சோவியத் அரசு பத்மினிக்கு தபால்தலை வெளியிட்டிருக்கிறது)

‘நலந்தானா?’ என்று அவர் விசாரித்தது இன்றும் தமிழ் ரசிகர்களுக்கு, மகிழ்ச்சியோடு ஞாபகம் இருக்கிறது. ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?’ பாடலுக்கு அவர் காட்டிய பாவனை அழகோ அழகு. பத்மினி ஒரு கலைஞர். ஸ்ரீவித்யா ஒரு நடிகை. இப்படியிருக்கையில் இருவரையும் ஒரே மாதிரியாக ஒப்பிடுவது தந்திரமான அரசியலாகவே இருக்கிறது.

ஞாநி இப்படிதான் சில நேரங்களில் செய்து விடுவார். பெரியாரை பாரதியோடு ஒப்பிடுவார். சிவாஜியும் நாகேசும் மிகச் சிறந்த நடிகர்கள் என்பார். (நாகேஷ் நல்ல குணசித்திர நடிகர். மற்றப்படி அவருடைய காமெடி பலமுறை ரிகர்சல் பார்த்து நேர்த்தியாக ‘தயாரிக்கப்பட்ட’தாக இருக்கும். இயல்பாக இல்லாததால் அவருடைய காமெடி பார்வையாளர்களை சிரிக்க வைக்க நிறைய சிரமப்படும். பல நேரங்களில் சிரிப்பே வராமல் சீனே முடிஞ்சிடும்)


காலச்சுவடு உலகத் தமிழ் இதழின் ‘பாரதி 125’ எப்படி?
பத்ம விஸ்நாதன், மைலப்பூர்.

சிறப்பு. மிக சிறப்பு. ஒரு ஆளு நம்மளவர். ஆனா ஊதாரி என்று தெரிந்தால் கூட, ஊதி, ஊதி அவனை எப்படி உலகத் தரத்துக்கு உயர்த்துவது என்பதை தெளிவாக ‘போட்டோ’ (எழுத்தில் கிராபிக்ஸ்) பிடித்து காட்டுயிருக்கிறார்கள், ‘பாரதி 125’ல். ஒருத்தர் நேர்மையளார், கொள்கையில் உறுதியானவர், பெரிய சிந்தனையாளர் ஆனால் ‘நம்பளாவாவுக்கு வேட்டு வைக்கிறவர்’ என்ற தெரிந்தால், உடனே ‘ஆய்வு, நடுநிலை, அறிவுப்பூர்வமான விவாதம், நிறை குறை என்ற அலசல்’ என்று தங்களது ‘அறிவு நாணய’த்தைப் பயன்படுத்தி பொய், புரட்டுகளை கொண்டு எப்படி ஆப்படிப்பது?’ என்பதற்கு 2004 செப்டம்பர் காலச்சுவடு வெளியிட்ட ‘பெரியார் 125’ மிகச் சிறந்த உதாரணம்.

ஆம், பாரதியின் பார்ப்பன இந்து மனதை நாம் நிருபித்தபோதும், கஞ்சா புகையில் கலைந்து போன அவரின் தேசப்பற்றை சுட்டிக்காட்டிய பிறகும் (மருதையனின் ‘பாரதி அவலம்’, வாலாசா வல்லவனின் ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதி’, ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி.) அறி[வு நாணயத்தோடு அதை ஒத்துக் கொள்ளவோ, இல்லை அதற்கு மறுப்பு சொல்லவோ வக்கற்றவர்கள், எந்தக் ‘கீறலும்’ இல்லாமல், ‘பாரதி 125’ என்று பாரதியை சாஸ்டாங்கமாக நமஸ்கரித்து இருக்கிறார்கள்.

சமீபத்தில் பெரியார் சிலையை ஸ்ரீரங்கத்தில், ‘இந்து மக்கள் கட்சி’யை சேர்ந்தவர்கள் சேதப்படுத்தியது போல், 2004 செப்டம்பர் காலச்சுவடு இதழ் பெரியாரின் நேர்மையை சேதப்படுத்தியது. இந்து மக்கள் கட்யின் ஈனச் செயலுக்கு மிகச் சிறந்த எதிர்வினை இருந்தது. ஆனால் காலச்சுவடுக்கு?

‘சுயமரியாதை’ அதென்னமோ பெரியார் கட்சிக்காரங்களுக்கு மட்டும்தான் சொந்தம் மாதிரி பேசுறாங்கா? எல்லாருக்கும் சுயமரியாதை இருக்குங்க? பி.எஸ். சுப்பிரமணியசாமி, திண்டுக்கல்.

உண்மையில் சொல்லனும்னா பெரியார் கட்சிக்காரர்களுக்குத்தான் சுயமரியாதையே இருக்கக் கூடாது. ‘சமூக சுயமரியாதைக்காக தன் சுயமரியாதையையே பலிகொடுப்பவன்தான் உண்மையான சுயமரியாதைக்காரன்’ என்பதே பெரியாரின் நிலை. அதனால்தான் கடவுளை செருப்பால் அடித்த பெரியார் தன் மீது செருப்பை விட்டெறிந்த நபரைப் பார்த்து, ‘ஒரு செருப்பை வைத்தக் கொண்டிருப்பதால் உனக்கும் பயன் இல்லை. எனக்கும் பயன் இல்லை. இன்னொரு செருப்பையும் என் மீது விட்டெறி” என்றார்.

மதத்தை, சாதியை கடவுளை மிகக் கடுமையான வார்த்தைகளால் திட்டிப் பேசிய பெரியார், தன்னைப் பற்றி கேவலமாக பேசிய, எழுதிய கி.ஆ.பெ. விஸ்வநாதம், ப.ஜீவானந்தம் போன்றவர்களின் அவதூறுகளுக்கு பதில் சொன்னதில்லை.

தன்னை தனிப்பட்ட முறையில் தாக்குகிறவர்களை பெரியார் ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை. சுருங்கச் சொன்னால், பெரியாருக்கு மத, ஜாதி, ஆண் என்கிற உணர்வு இல்லாதது மாதிரியே, சுயமதிப்பு கூட சுத்தமாக இல்லாதவர். தன்னை மற்றவர்கள் உயர்வாக மதிப்பிட வேண்டும் என்கிற எண்ணம் அவருடைய பேச்சில் எழுத்தில் எங்கும் பார்க்க முடியாத ஒரு அதியசம்.

பார்ப்பனர்களை எதிர்க்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை ஆதரிக்க வேண்டும். ஆண்களை எதிர்க்க வேண்டும். பெண்களை ஆதரிக்க வேண்டும் என்று முன் முடிவோடு அரசியலுக்கு நுழைந்தவர் அல்ல பெரியார். ‘இவர்கள் பக்கம் நியாயம் இருக்கிறது. இவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் செய்வது அநியாயம்’ என்பவரே பெரியார்.

ஆக சுயமரியாதை என்பது அநீதியை கண்டு பொங்குவது. அதற்கு சமீபத்திய உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், மக்கள் கலை இலக்கிய கழகம், பெரியார் திராவிட கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியினர். பெரியார் சிலை இடிப்பு விவகாரத்தில் இவர்களின் உணர்வு சுயமரியாதையோடு இருந்தது.

விழிப்புணர்வு, ஜனவரி - பிப்ரவரி, 20007.

Pin It