பெரியார் உணவகம், சில நாள்களுக்கு முன்பு கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் உள்ள காரமடை என்னும் ஊரில், பெரியார் உணவகம் என்னும் பெயரில் ஓர் உணவகம் திறக்கப்பட்டது. உடனே இந்து முன்னணியைச் சேர்ந்த சிலர் அங்கு வந்து ஈவெரா பெயரில் எல்லாம் கடை திறக்கக் கூடாது. உடனே அதனை நீக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அப்போது உணவகத்தின் உரிமையாளர் பிரபாகரன் அங்கு இல்லை. ஒரு பணியாளர் மட்டுமே இருந்திருக்கிறார். கடை உரிமையாளர் வந்ததும் சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

அவர்கள் கேட்கவில்லை. மேலும் 10 பேரை அழைத்துக் கொண்டு வந்து பெயர்ப் பலகையை உடைத்து இருக்கிறார்கள். கடையில் இருந்த பொருள்களை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். அது மட்டுமின்றி, அந்தப் பணியாளரையும் 36 தையல்கள் போடும் அளவுக்கு அடித்துத் தாக்கி இருக்கிறார்கள்.

மிகச் சரியான விடையை அதன் உரிமையாளர் சொல்லி இருக்கிறார். நீங்கள் ஒரு பெயர்ப் பலகையை இடித்தால், அதே பெயரில் இன்னும் பத்து உணவகங்களை நான் உருவாக்குவேன் என்று அழுத்தமாகக் கூறியிருக்கிறார்.

உடனடியாக அந்த உணவகம் புதுப்பிக்கப்பட்டு, பெரியார் பிறந்த நாளான செப்.17 பகல் 12 மணிக்கு காரமடையில் மீண்டும் திறக்கப்படுகிறது. கோவை ராமகிருஷ்ணன் தலைமையில், திமுகழகத்தின் மாவட்டச் செயலாளர் சி.ஆர். ராமச்சந்திரன் முன்னிலையில் அந்த உணவகத்தையும், பெயர்ப் பலகையையும் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு எங்கும் இருக்கும் அம்மா உணவகங்களை, நம் தன்னிகரற்ற தலைவர், தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் பெரியார் உணவகம் என்று மாற்ற வேண்டும் என்றும் சுப. வீரபாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Pin It