கீற்றில் தேட...

நீட் தேர்வை முதலில் அறிமுகப்படுத்தியபோது அதை ஆதரிப்பவர்கள் ஒரு வாதத்தை கூறினார்கள்; தனியார் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்துவதற்குத் தான் நீட் தேர்வை கொண்டு வருகிறோம், என்று கூறினார்கள். அது உண்மைதானா? இப்போது என்ன நடந்து கொண்டு இருக்கிறது?

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டவர்கள், மிக மிக குறைந்த மதிப்பெண்கள் பெற்றாலே போதும் என்ற நிலைக்கு நீட் தேர்வினுடைய தகுதி மதிப்பெண் அளவு குறைக்கப்பட்டு விட்டது. இதனால் மிக மிக குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கூட வசதி உள்ள மாணவர்களாக இருப்பார்களேயானால் அவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் வசதி இல்லாதவர்களாக இருந்தால் அவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாது, என்ற நிலை வந்துவிட்டது.

மருத்துவக் கல்லூரி கட்டணக் கொள்ளையைத் தடுக்கவே ‘நீட்’ என்ற வாதம் அடிபட்டு போய் விட்டது. இதற்கு வலு சேர்க்கும் விதத்தில் உயர்நீதிமன்றத் தீர்ப்பும் வந்திருக்கிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% இடங்கள் அரசு கோட்டாவின் கீழ் நிரப்பப்படுகின்றன. இந்த இடங்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படுகிற அதே கட்டணம் தான் என்று மருத்துவக் கவுன்சில் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதை எதிர்த்து தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம், 'இதற்கு கட்டண நிர்ணயம் செய்யக் கூடாது என்று மருத்துவக் கவுன்சிலுக்கு தாக்கீது அனுப்பியுள்ளது”.

தனியார் மருத்துவக் கல்லூரியின் கட்டணக் கொள்ளையை ஒழிப்பதற்காகத்தான் நீட் என்று வாதிட்டவர்கள் இதற்கு என்ன பதிலை கூறப்போகிறார்கள்.

கோச்சிங் சென்டரில் சேர்ந்து செலவு செய்யக்கூடிய மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என்ற நிலையை ‘நீட்’ உருவாக்கி விட்டது. அதுவும் 12 ஆம் வகுப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் கோச்சிங் பெற்றதற்குப் பிறகு தான் தேர்ச்சி பெற முடியும் என்ற நிலையையும் இது உருவாக்கி விட்டது.

பெரியார் மண் - ராகுல் பெருமிதம்

ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள நடைபயணம் “இந்திய ஒற்றுமைப் பயணம் என்று சொல்லப்பட்டாலும், இந்திய மக்களின் ஒற்றுமையைக் காப்பதே பயணத்தின் நோக்கம்” என்று இராகுல் காந்தி தந்திருக்கிற விளக்கம் மிகச் சிறப்பான ஒன்று. மண்ணின் ஒருமைப்பாட்டை விட மக்களின் ஒருமைப்பாடு தான் மிக மிக முக்கியமானது என்ற ஆழ்ந்த கருத்தோட்டத்தில் இந்தக் கருத்தை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

குமரியில் நடை பயணத்தை முடித்துவிட்டு கேரளாவிற்கு செல்வதற்கு முன், “பெரியார் மண்ணை வருத்தத்தோடு நான் பிரிந்து செல்கிறேன். தமிழ் மக்களிடம் எனக்கு தனிப்பட்ட ஈடுபாடு உண்டு” என்று உணர்வு பொங்க அவர் கூறியிருக்கிறார். “நாராயணகுரு மண்ணான கேரளாவில் அடியெடுத்து வைக்கப் போகிறேன்” என்று கேரளாவில் சமூக சீர்திருத்தம் பேசிய நாராயண குருவின் மண்ணாக அவர் கேரளாவையும் பார்க்கிறார்.

இராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் பண்பு மாற்றத்தில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று அவர் போராடிக் கொண்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில், இந்தியாவை ஒற்றை மனுவாத பார்ப்பன இராஜ்ஜியத்தை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிற மோடி ஆட்சியை வீழ்த்துவதற்கு இந்தப் பயணம் மிக முக்கியமான வரலாற்றுத் தேவையாக இருக்கிறது. அந்த வகையில் இந்தப் பயணத்தை நாம் முழுமையாக ஆதரிக்கிறோம்.

அதிலும் குறிப்பாக, சமூக நீதிப் பார்வையில் காங்கிரசில் மாற்றம் வேண்டும் என்பதற்காக கட்சிக்குள் அவர் நடத்துகிற போராட்டம் என்பது உண்மையிலேயே தலைமைப் பதவி என்பதை விட, கட்சிக்குள்ளான ஒரு கொள்கைப் போராட்டம் என்ற பார்வையிலேயே நாம் பார்க்க வேண்டி இருக்கிறது.