நவீன இந்தியாவின் சமூகச் சிற்பிகளில் முதன்மையான ஒருவரான வைகுண்டசாமி கன்னியாகுமரி அருகே சாஸ்தான் கோயில் விளையில் சான்றோர் குலத்தில் 1809ம் ஆண்டு பிறந்தார்.தாயார் வெயிலாளம்மை, தந்தை பொன்னுமாடன், பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் முடிசூடும் பெருமாள்.ஆனால் அன்றைய ஆதிக்கவாதிகள் அதை ஏற்றுக்கொள்ளாததால் இளமைக்காலத்தில் முத்துக்குட்டி என்று அழைக்கப்பட்டார்.பக்கத்து தென்தாமரைக்குளம் சீர்திருத்தக் கிறிஸ்தவப் பள்ளியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமஸ்கிருதம் ஆகியன கற்க அவருக்கு அன்று வாய்ப்பிருந்தது. எல்லா இளைஞர்களையும் போல அவரும் வீரமிக்க இளைஞராக வளர்ந்தார். கைவிடப்பட்ட ஒரு அபலைப்பெண்ணுக்கு அன்றைய சமூக இறுக்கங்களை மீறி வாழ்வளித்தார்.தன் 23ஆம் வயதில் அவர் எதோ நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார். அன்றைய மருத்துவத்துக்கு அந்த நோய் கட்டுப்படவில்லை. தாயார் திருச்செந்தூருக்கு அவரை தொட்டில் கட்டி தூக்கிச் சென்றார். திருச்செந்தூரில் கடலாடச் சென்ற அவர் கடலுக்குள்ளே திருமாலை தரிசித்து மூன்று நாள் அறிவுரைகளும் ஆற்றல்களும் பெற்று வெளியே வந்ததாக அவர் வாழ்வையும் பணிகளையும் விவரிக்கும் அகிலத்திரட்டு காவியம் தெரிவிக்கிறது.

கடலிலிருந்து வெளியே வந்த வைகுண்டர் துறவாழ்வை மேற்கொண்டார். சாஸ்தான் கோயில் விளைக்குத்திரும்பி ஆறு ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார்.ஏழை எளிய மக்கள் அவரிடம் வரத் தொடங்கினார்கள்.மண்,தண்ணீர்,மூலிகைகள் ஆகியவற்றால் அவர்களை குணப்படுத்தினார்.அவருடைய அன்பான சொற்கள் துயரப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளித்தன. வருணாசிரம ஏற்றத்தாழ்வுகளும் அதன் அடிப்படையில் அமைந்த சாதித் தீண்டாமைகளும் திருவிதாங்கூர் மக்களை மிகக்கொடூரமாகக் கசக்கிப் பிழிந்து கொண்டிருந்த காலம் அது.கிறிஸ்தவம் இந்தக்கொடிய இறுக்கத்தை தளர்த்துவதில் முதல் வெற்றி பெற்றிருந்தது.ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அக்காலத்தில் விதிக்கப்பட்டிருந்த தலைவரிமுறை, முலைவரிமுறை முதலிய பல வரிகளிலிருந்து கிறிஸ்தவத்திற்கு மாறியவர்களை விடுதலை செய்தது கிறிஸ்தவம்.அதற்கு வாய்ப்பாக அன்றைய அரசில் ஆலோசகராக ஒரு கிறிஸ்தவ ஆங்கிலேயர் நியமிக்கப்பட்டிருந்தார்.கிறிஸ்தவத்திற்கு மாறிய பெண்களுக்கு மார்பை மூடி தோள் சீலை அணியும் உரிமையும் பெற்றுத்தந்தது கிறிஸ்தவம்.பல பள்ளிகளைத் திறந்து மதம் மாறியவர்களுக்குக் கல்வியளித்தது அது. இந்த மாற்றங்கள் கிறிஸ்தவ மதம் மாறாத மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியது. ஒரே வீட்டில் அல்லது ஒரே குடும்பத்தில் ஒரு சிலர் கிறிஸ்தவர்களாக மாறி இச்சலுகைகளை அனுபவித்த போது மற்றவர்களுக்கும் மதம் மாறாமலேயே இச்சலுகைகளை அனுபவிக்க ஆசை உண்டாயிற்று. பலர் வரி கொடுக்க மறுத்தனர் பெண்கள் தோள்சீலை அணிந்தார்கள். ஆதிக்க எதிர்ப்பு அடையாளங்களை இவை வேகமாக பரப்பின.

இதை உயர் சாதியினர்களாலும், அதிகாரிகளாலும் அன்று தாங்கிக்கொள்ள இயலவில்லை.கிறிஸ்தவர்களின் மதமாற்ற முயற்சியைக் கட்டுப்படுத்த அரசு முயன்றது.இந்தச் சிக்கலான சூழலில்தான் முத்துக்குட்டி தவம் மேற்கொண்டு வைகுண்டசாமியாகிறார்.

தாமரைக் குளம் உப்பளத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. உப்பளங்களில் வேலை செய்த பல சாதித் தொழிலாளர்கள் உப்பளத்தை ஒட்டிய பகுதிகளில் வாழ்ந்து வந்தனர்.வைகுண்டசாமியின் செயல்பாடுகள் இவர்களை வெகுவாகக் கவர்ந்தது.அவருக்கு சீடர் கூட்டம் பெருகிற்று. அவருடைய செயல்களும், சொற்களும்,புண்பட்ட மக்களுக்கு அருமருந்தாக அமைந்தன.தன்னிடம் வருவோரை சாதி வேறுபாடு பார்க்காமல் ஒரே கிணற்றில் குளிக்கச்செய்து ஒன்றாக உணவு அருந்தச் செய்வார்.வைகுண்டர் ஆடை விசயங்களில் அக்கால ஆட்சியாளர்கள் விதித்திருந்த கொடிய கட்டுப்பாடுகளை உடைத்துத் தன்னிடம் வருவோர் ஆணாக இருந்தால் வீரத்துக்குரிய அடையாளமான தலைப்பாகை அணிந்தும், பெண்கள் தங்கள் மானத்தின் அடையாளமான தோள்சீலை அணிந்தும் தான் வரவேண்டும் என்று வற்புறுத்துவார்.பெருங்கோயில்களில் பூசகர்கள் பக்தர்களைத் தீண்டத்தகாதவராகக் கருதி எட்ட நிறுத்தும் அசிங்கமான போக்குக்கு எதிராக அவர் பக்தர்களின் நெற்றியைத் தொட்டு நாமமிடும் வழக்கத்தை மேற்கொண்டார்.

பெண் விடுதலைக்காகவும் வலுவாக குரல் கொடுத்தார் வைகுண்டர். அக்காலத்தில் வீட்டை விட்டு பெண்கள் வெளியே வர பெரும்பாலும் அனுமதி கிடைக்காது. வைகுண்டரின் அருளுரைகளால் ஏராளமான பெண்கள் அவரிடம் ஆசி பெற வந்தார்கள். அவர்கள் மார்பை மூடி நேர்த்தியாக ஆடை உடுத்திவர வற்புறுத்தினார். மருத்துவ வசதிகள் மிகக்குறைந்த காலம் அது. காலரா,பிளேக் முதலிய கொடிய நோய்கள் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் மக்களை அள்ளிக்கொண்டு போய்விடும். பெரும் எண்ணிகையில் வாழ்ந்த விதவைகளின் துயரம் குறிப்பாக இளம் விதவைகளின் துயரம் அவர் கண்களை உறுத்தியது. அணிகலன்களை இழந்த மூளிஉடம்போடு அவர்கள் திரிவதை அவரால் சகிக்கமுடியவில்லை.கணவனை இழந்த பெண்கள் தங்கள் கோலத்தை கெடுத்துக்கொள்ளக்கூடாது என்றார் அவர்.தாலியை கழட்டத் தேவை இல்லை. வண்ண உடைகளோடும் அணிகலன்களோடும் வாழவேண்டும் என்பதை வற்புறுத்தினார். ஆணும் பெண்ணும் சமம் என்னும் கருத்தையும் வலியுறுத்தினார். பெண்ணும், ஆணும் இணைந்த குடும்ப வாழ்க்கையே முழுவாழ்க்கை என்பது அவரது கொள்கை.

சாதி வேறுபாட்டை அறவே எதிர்த்தார் வைகுண்டர். அடித்தள உழைக்கும் மக்கள் சாதிவேறுபாடுகளைக் களைத்து ஒன்றாக ஒரு குடும்பமாக வாழ வற்புறுத்தினார்.அவர்கள் அனைவருக்கும் ஒரே இடத்தில் சமையல் செய்யப்பட்டது. ஒரே வரிசையில் அமர்த்தப்பட்டு உணவு பரிமாறப்பட்டது. 1840ம்ஆண்டு வாக்கில் அவரை சுற்றி பல சாதிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 700 குடும்பங்கள் ஒன்றாக வாழ்ந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இவர்கள் காலை வேலைக்கு செல்லும் முன்பும் மாலை இரவு உணவுக்கு முன்பும் கூட்டு வணக்கம் செய்வதற்காகப் பாடல்கள் இயற்றும்படி வழிகாட்டினார்.வேதம் இல்லாத இந்த அடித்தள மக்களுக்காக எழுதப்பட்ட புதிய தமிழ் வேதம்தான் கவிஞர் அரிகோபால் இயற்றிய அகிலத்திரட்டு அம்மானை. இன்றும் வைகுண்டசாமியை கடவுளாக நம்பும் மக்கள் அகிலத்திரட்டை பக்திச்சுவையோடு வீடுகளிலும் வழிபாட்டு இடங்களிலும் படிக்கவும் பாடவும் செய்கிறார்கள்.

அன்றைய சமூகக் கொடுமைகளின் அடிப்படைக்காரணம் வருணாசிரம ஏற்றத்தாழ்வும் தீண்டாமையும். இவை கலியின் கோளாறுகளே என்றார் வைகுண்டர். அவர் கருத்துப்படி கலி என்பது தீமைகளின் திரண்ட வடிவம் .அது மண்ணில் மன்னனின் வடிவிலும் சாதி வெறியர்களின் வடிவிலும் திரிகிறது என்றார்.கலியர்களை நீசர்கள் எனவும் சாபமிட்டார். அக்காலத்தில் மக்களைக் கொடுமைப்படுத்திய ஆங்கிலேயே அதிகாரிகளை வெண்கலியர்கள் என்று சிறப்பு பெயரிட்டு அழைத்தார்.ஒழுக்கம் நிறைந்த மக்கள் மனம் நொந்து அழுது சாபமிட்டால் கலியர்களாகிய இந்த நீசர்களின் கோட்டை கொத்தளங்கள் இடிந்து பொடியாகும்.இவர்களின் வம்சங்கள் அழியும் என்று மக்களுக்கு மனவலுவூட்டினார் அவர்.

கலியை அழிப்பதற்கு வழி என்ன? தன்மான உணர்வே கலியை அழிக்கும் பேராயுதம் என்று அவர் மக்களுக்கு அறிவுரை கூறினார்.கலி நீசர்களுக்கு எதிராக ஆயுதப்போராட்டம் தேவையில்லை .எவருக்கும் அஞ்சாமல் சுய மரியாதையோடு வாழ்ந்தால் கலி தானே அழிந்துவிடும் என்பது அவரது வழிகாட்டல். காந்திக்கும் பெரியாருக்கும் கிட்டத்தட்ட 80ஆண்டுகளுக்கு முன்பு அகிம்சையையும், சுயமரியாதையையும் ஒடுக்கு முறைக்கு எதிரான விடுதலைப்போர் முறைகளாக வைகுண்டர் காட்டியது கவனிக்கத்தக்கது.

தன் கருத்துக்களைப் பரப்புவதற்காக ஐந்து சீடர்களை தயார் செய்தார் வைகுண்டர். கற்றறிந்த அந்த சீடர்கள் பல ஊர்களுக்குச் சென்று கருத்துப் பிரச்சாரம் செய்தனர்.புத்த பிச்சுக்களைப் போல இந்தச் சீடர்கள் ஊர் ஊராய்ச் சென்று பிச்சை ஏற்று வாழ்க்கை நடத்தினர். பல ஊர்களிலும் நிழல் தாங்கள்கள் என்று பொதுஅமைப்புகளை ஏற்படுத்தினார் வைகுண்டர். இந்த நிழல் தாங்கள்கள் அன்று எளிய மண்டபங்களாக அமைக்கப்பட்டன. பகலில் அவை குழந்தைகளுக்கு பள்ளிக்கூடங்களாகவும்,இரவில் கூட்டு வழிபாடு செய்யும் தொழுகை இடங்களாகவும் அமைந்தன.சாதி, மதம்,பாலியல் ஏற்றத்தாழ்வுகள் இன்றி மக்கள் கூடும் பதிகளாக (வழிபாட்டு தளங்கள்) அவை வளர்ந்தன. இந்த இடங்களில் பசித்து வருவோருக்கு உணவு கொடுப்பதை முதல் கடமையாக ஆக்கினார் வைகுண்டர்.அன்று கிராமப்புறத்து மக்கள் பேய் நம்பிக்கைகளில் மூழ்கிக்கிடந்தனர்.வீட்டுக்கு ஒரு தெய்வம் அவர்களை ஆட்சி செய்தது.இம்மாதிரியான அச்சங்களிலிருந்தும்,மூடநம்பிக்கைகளிலிருந்தும் மக்களை மீட்டெடுத்து ஒரு தெய்வ வணக்கத்தினராக அவர்களை ஒன்று படுத்தினார் வைகுண்டர்.எல்லா மதங்களிலும் இருக்கும் இறை ஒன்றே அது எங்கே இருக்கிறது? அதை எப்படிக் காண்பது?ஆளுயரம் உள்ள ஒரு நிலைக் கண்ணாடியை தொழுகை இடத்தில் வைப்பார். அதைப் பார்த்து மக்களை கும்பிடச்சொன்னார் அவர்.கண்ணாடியில் என்ன தெரியும்? முன் நிற்பவர்களின் பிம்பம் தெரியும் நீயே தெய்வம் என்பதை மக்களுக்கு இப்படி உணர்த்தினார் அவர்.பாரதி இந்தக் கருத்தை வைகுண்டருக்கு பின்பு 80 ஆண்டுகள் கழித்து தெய்வம் நீ என்றுணர் என்றார். ஆக அவருடய சமயம் நோக்கமென்பது மக்களை தெய்வ நிலைக்கு மேம்படுத்துவதே.

வைகுண்டர் இவ்வாறு துறவறம் பூண்டு சமூக எழுச்சிக்கான முயற்சிகளைச் செய்ததை அன்றைய உயர் சாதியினர் பொறுத்துக் கொள்ளவில்லை. அன்று இந்து மதம் துறவறத்தை பஞ்சமர்க்கும்,சூத்திரருக்கும் அனுமதிக்கவில்லை.வைகுண்டசாமி துறவி என்ற நிலையைத் தாண்டி திருமாலின் அவதாரம் என்றே மக்கள் கருதியதால் ஆதிக்க வாதிகளிடையே கசப்பும், வெறுப்பும் வளர்ந்தது. அவரைக் கைது செய்து திரு வனந்த புரத்துக்கு இழுத்துச் சென்று பூசைப் புரை சிறையில் அடைத்து துன்புறுத்தியது நீச அரசு. அவர் அனுபவித்த சிறைக் கொடுமைகள் பற்றிப் பல கதைகள் பேசப்படுகின்றன. பல நாள் பட்டினி போடப்பட்ட ஒரு புலியின் கூண்டுக்குள் வைகுண்டசாமியை அடைத்தார்களாம் அரசு அதிகாரிகள். புலி ஒன்றும் செய்யாமல் அவரைக் கண்டு ஒதுங்கிக்கிடந்ததாம். பார்த்துக்கொண்டிருந்த ஒரு நம்பூதிரிக்கு கோபம் தாங்கமுடியவில்லையாம். சேவகன் ஒருவனிடம் இருந்த ஈட்டியைப்பிடுங்கி அதைத் தலை மாற்றிப் பிடித்து கைபிடிப்பகுதியால் புலியை இடித்து உசுப்பினாராம். கைப்பிடியை புலி பற்றிக் கொண்டு இழுத்ததாம். பயந்து ஈட்டியை அதனிடமிருந்து பிடுங்க முயன்றாராம் நம்பூதிரி. பிடியை புலி திடிரென விட்டுவிட கூர்மையான பகுதி அவர் நெஞ்சில் பாய்ந்ததாம். அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து செத்தாராம் நம்பூதிரி.

நம்பூதிரியின் இப்படிப்பட்ட துர்மரணம் கேட்டின் அறிகுறி என கலங்கினாராம் மன்னன். என் சாதியை மட்டும் நான் ஒன்றுபடுத்துவேன் பிறசாதிகளையெல்லாம் நான் ஒன்றுபடுத்தமாட்டேன் என்று ஓலை இலக்கை வைகுண்டசாமியிடம் நீட்டி அவரைக் கையெழுத்து இட்டுவிட்டு விடுதலை பெற்று ஊர் போகச்சொன்னார்களாம் அதிகாரிகள். அவரோ அதை அலட்சியமாக கிழித்துவிட்டு தன் தண்டனைக் காலம் முழுவதையும் சிறையிலேயே கழித்தாராம்.

வெளியே வந்த வைகுண்டர் ஊர் ஊராகச் சென்று அன்பையும் அறத்தையும் போதித்தார். சுத்தத்தையும் சுகாதாரத்தையும் மக்களிடம் வற்புறுத்தினார். பிறர் மதிக்க வாழும்படி வழிகாட்டினார். ஒருவர் உழைப்பைப் பிறர் திருட ஒரு போதும் அனுமதிக்கக் கூடாதென பொருளாதார விழிப்புணர்வு ஏற்படுத்தினார். எளியவர்களுக்கு உதவுவதே தருமம் என்றார்.

இவ்வாறு சமூக எழுச்சிக்காகவும் மனித நல்லிணக்கத்துக்காகவும் தொடர்ந்து உழைத்த வைகுண்டர் 1851ல் தன் 41ம் வயதில் மறைந்தார். அவருடைய இயக்கம் அவர் காலத்துக்குப் பின் அய்யாவழி என்று சமயப்பிரிவாக உருப்பெற்றது. இன்றும் தமிழகத்திலும், கேரளாவிலும்,தென் பகுதி மக்கள் வாழும் பெரும்பகுதி மாநிலங்களில் கூட இந்தப் பதிகள் வழிபாட்டு மையங்களாக செயல்பட்டு வருகின்றன.ஒரே ஒரு வருத்தம் அவை பகலில் பள்ளிக்கூடங்களாகச் செயல்பட வேண்டும் என்ற வைகுண்டரின் ஆசையை அவரது மக்கள் முற்றாக புறக்கணித்து விட்டனர்.

இந்தப்பதிகளும், நிழல்தாங்கள்களும் பல சாதியினருக்கும் உரியதாக இருப்பது சிறப்பு. கோனார்கள், கம்மாளர்கள், நாடார்கள், நாவிதர்கள், தேவர்கள், தொண்டைமான்கள், பறையர்கள், பள்ளர்மார்கள் இன்னும் பல சாதியினர் தலைமை ஏற்று நடத்துகின்ற பதிகள் நாட்டில் ஏராளமாக உருவாகியுள்ளன. ஆண்களைப் போல பெண்கள் தலைமை ஏற்று நடத்தும் பதிகளும் உள்ளன. இத்தகுப் புகழ் பெற்ற சமயம் சார்ந்த சமூகப் போராளியின் வரலாறு இளம் தலைமுறையினருக்கு அறிவிக்கப்படவேண்டும். அவருடைய வாழ்வும், சாதனைகளும் இளம் தலைமுறையினரை சமூகச் செயல்பாடுகளை நோக்கி உந்தித் தள்ள வேண்டும் பள்ளிப்பாட நூல்களிலும் கல்லூரிப் பாடநூல்களிலும் அவை இடம் பெற வேண்டும்.தமிழராய் பிறந்து தமிழ் உணர்வோடு வாழ்ந்த அந்த மாமனிதரின் வரலாறு கேரளத்தின் பள்ளிப் பாடநூல்களிலும், கல்லூரிப் பாடநூல்களிலும் இடம் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. தமிழகத்திலும் பாடப் புத்தகங்களில் வைகுண்டர் வரலாறு இடம் பெற அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
(இளைஞர் முழக்கம் ஜூலை 2011 இதழில் வெளியானது)
Pin It