வாழவும் வழியில்லை
சாகவும் சட்டமில்லை
இருந்தாலும் வாழ்கிறோம்
இழிநிலையில் இன்றுவரை!
 
நகர்மயமாதலால்
குப்பைக்குக்கூட இடமுண்டு
மனிதனுக்கு இடமில்லை
சாலையோரத்தில்!
 
வாழ வழிகொடு என்றால்
'வா! செம்மொழி மாநாட்டுக்கு
வழிந்தோடுகிறது...
வழியெங்கும் தமிழ்
அள்ளிக்குடி' என்கிறார்!
காய்ந்துபோன வயிற்றுக்கு
தமிழாவது தெலுங்காவது!
 
கடைப்பெயரையெல்லாம்
தமிழில் மாற்றி
தமிழை வாழவைக்க
ஆசைப்பட்டோரே...
‘மதுபான விடுதி’
வாழ்ந்திடுமா தமிழ்?
 
தமிழாவது வாழ்ந்ததா?
அதுவுமில்லை!
கோவையில்
பத்துப்பாட்டுக்கு விழா!
கலைஞர் டிவியில்
குத்துப்பாட்டுக்கு விழா!
பாட்டுதான் தமிழில்
பேச்சில் இல்லை தமிழ்!
 
வேலைகொடு என்றால்
ஒரு ரூபாய்க்கு அரிசி இருக்கு
ஒய்யாரமாய் வீட்டிலிரு என்றிடுவார்!
 
கடைச்சரக்காகக் கூட இல்லை
கம்பெனி சரக்காக மாறியது கல்வி!
கட்டணத்தைக் குறைக்கச்சொல்லி
சாலையில் இறங்கிவிட்டால்
காளி வந்து ஆடுது
காவல்துறைக்கு!
 
பன்னாட்டு முதலாளிக்கு
என் நாட்டுச் செல்வத்தை
கண்ணிரண்டை மூடிக்கொண்டு
வாரிகொடுத்த ஆட்சியினில்
குறிச்சுவைச்ச கூலி கேட்டால்
வளைச்சு வளைச்சு விளாசும் லத்தி!
 
ஒழித்தே தீருவோம்
குழந்தை தொழிலாளியை என
ஓங்காரமிடும் ஆட்சியில்
அப்பனுக்கும் வேலையில்லை
என்னதான் செய்திடுவான் பிள்ளை?
 
பட்டாசு ஆலைதனில்
கந்தகத்தோடு சேர்த்து
அப்பாவிப் பிஞ்சும் கருகும்!
குளுகுளு அறையினில்
குறைந்த ஒலியினில்
வாஞ்சையோடு பார்த்திடுவான்
வண்ணப்பெட்டி ஒளிரவே
ஓட்டுவாங்கி ஜெயிச்சவன்!
 
மந்திரிப் பதவிக்கு
மடிப்பிச்சை கேட்டிடுவார்!
மக்களுக்கான அரிசியை
மத்தியிலே குறைக்கும்போது
தலையாட்டி நின்றிடுவார்
மகுடிக்கு மயங்கிய பாம்பாக!
 
பேயாட்சி செய்திட்டாலும்
பிணம் கோடி விழுந்திட்டாலும்
மீண்டும் வந்திடுவோம் அரியணைக்கு!
ஆணவத்தோடு அலறுகிறார்
காசிருக்காம் ஓட்டுவாங்க!
 
என்னதான் செய்திடுவர்
ஈனப்பிறவிகளென்ற
எக்காளத்தைத் தீயிட
ஏதாவது செய்திடுவோம்!

- இரா.சரவணன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It