தங்களுடைய வாழ்வை மிக ஆழமாகவும் நிரந்தரமாகவும் பாதித்துவிட்ட உண்மைகளை வாக்குமூலங்களாக அளிக்க துணிச்சலுடன் முன் வந்த நேரடி சாட்சிகளின் அடிப்படைப் பங்களிப்பை அங்கீகரிக்காமல், நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தனது பணியை முடிக்க இயலாது. எண்ணற்ற அளவில் பாதிக்கப்பட்ட மக்களின் சரியான பிரதிநிதிகள் இவர்களே. அவர்களின் துன்பத்தை முழுமையாக விவரிக்கவே இயலாது. அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் அங்கீகரிப்பதுமே நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் இருப்பிற்கும் செயல்பாட்டிற்குமான காரணங்கள்.
தங்கள் நாட்டில் நடைபெற்ற கொடுமைகளை நேரடியாகக் கண்டவர்கள், தற்போதைய சூழலில், அவர்களது சுதந்திரம் மற்றும் உயிர் மீது நேரடியாகவோ, அவர்களுடைய குடும்பத்தினர் மீதான தாக்குதல்கள் மூலமாகவோ –அவர்களது உரிமைகள் மேலும் பறிக்கப்படலாம் என்பதை நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் நன்கு அறிந்திருக்கிறது.
எனவே, எங்களிடம் வாக்குமூலங்கள் அளித்தவர்களுக்கோ, அவர்களின் குடும்பத்தினருக்கோ ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், அதற்கு எங்கள் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரிகளும், குற்றம் புரிந்தவர்களுமே முழுப் பொறுப்பு என நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் அறிவிக்கிறது. தீர்ப்பாயத்தின் உண்மை அறியும் முயற்சிக்கு துணிச்சலுடன் தங்கள் பங்களிப்பை நல்கிய சாட்சிகளின் பாதுகாப்பு குறித்து சீரிய கவனம் செலுத்துவதை எங்கள் முக்கியக் கடமையாக ஏற்கிறோம். அவர்களில் யாருக்கேனும் ஏதேனும் நேர்ந்தால், அதற்கு இலங்கை அரசே பொறுப்பென நாங்கள் உறுதிபட கூறுகிறோம்.