நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மய்யத்தின் சார்பில் ‘ஈழம் தொடரும் துயரமும்; நமது கடமையும்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் கடந்த செப்.25 மாலை 6 மணியளவில் சென்னை கவிக்கோ மன்றத்தில் சிறப்புடன் நடந்தது.
நாடு கடந்த தமிழீழ அரசு குறித்தும் அதில் இடம் பெற்றுள்ள தமிழக உறுப்பினர்கள் தமிழினியன், முகேஷ் தங்கவேலு ஆகியோரை அறிமுகம் செய்தும் பேராசிரியர் சரசுவதி அறிமுக உரை யாற்றினார்.
விடுதலை இராசேந்திரன், தியாகு, அருட் தந்தை குழந்தைசாமி, பேராசிரியர் அபுல்பாசல், பேராசிரியர் மணிவண்ணன் ஆகியோர் உரையாற்ற, நிறைவாக பண்ருட்டி இராமச்சந்திரன் பேசினார்.
அருட்தந்தை குழந்தைசாமி ஒரு மாத காலம் தமிழர் பகுதி முழுதும் நேரில் சென்று பார்வையிட்டு திரும்பி யுள்ளார். அவர் மக்களின் துயரங்களை சிங்கள ஆக்கிரமிப்புகளை பகிர்ந்து கொண்டார். நாடு கடந்த தமிழீழ அரசு சார்பில், தமிழ் ஈழத்துக்கான புதிய அரசியலமைப்பு, சர்வதேச சட்ட நிபுணர்களைக் கொண்டு உருவாக்கப் பட்டு வருகிறது என்ற தகவலை தோழர் தியாகு அறிவித்தார்.
நிறை வுரையாற்றிய முன்னாள் அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரன், ஈழத் தமிழர்களின் உரிமைகளை தொடர்ந்து பறிக்கும்போது இயல்பாகவே இலங்கை அரசின் மீதான பழி வாங்கும் உணர்வே அதிகரிக்கும் என்றும், அது இலங்கைக்கு கடும் நெருக்கடி களையே உருவாக்கும் என்பதை புரிந்து செயல்பட இலங்கை அரசு முன்வர வேண்டும் என்று கூறினார். நாடு கடந்த தமிழீழ அரசு மேற் கொண்டு வரும் அரசியல் நகர்வுகளை பாராட்டினார்.
இக்கருத்தரங்கில் பங்கேற்க தமிழக முதல்வர் அனுமதி யோடு வந்திருக்கிறேன் என்று கூறிய அவர், இறையாண்மை, பிரிந்து போகும் உரிமை, வாக்கெடுப்பு ஆகிய கருத்தாக்கங்கள் குறித்த, உலகக் கண்ணோட்டம் மற்றும் நடைமுறைகளை விளக்கினார்.
ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண அம்மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெளியீடுகளை பண்ருட்டி இராமச் சந்திரன் அவர்களுக்கு பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வழங்கினார். செறிவான கருத்துகள் விவாதங்களோடு நடந்த இந்த கருத்தரங்கில் பார்வையாளர்களால் அரங்கம் நிரம்பி வழிந்தது.
முகேஷ் தங்கவேல் நிகழ்வை தொகுத்து வழங்கினார். தமிழினியன் நன்றி கூறினார்.