சுவாதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இராம்குமார், சிறையில் மின் பெட்டியை உடைத்து, கம்பியை வாயில் செலுத்தி தற்கொலை செய்து கொண்டதாக சிறை நிர்வாகம் கூறி, அதை நம்பச் சொல்கிறது. இராம்குமார் இந்த வழக்கில் உண்மையான குற்றவாளி தானா? என்ற பலத்த சந்தேகம் தொடக்கம் முதலே இருந்து வந்திருக்கிறது.

இராம்குமார் தற்கொலை செய்யவில்லை; அவர் சிறையில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவரது பெற்றோர்களும், இராம்குமார் வழக்கறிஞர்களும் வெளிப்படையாகவே குற்றம் சாட்டுகிறார்கள். அடுத்த சில நாள்களில் அவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்தச் சம்பவம் நடத்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.

மின்சார பெட்டியை சிறைக்குள் ஒரு கைதியால் எப்படி உடைக்க முடிந்தது? எந்த ஆயுதத்தை வைத்து உடைத்தார்? மின்சாரம் பாயும் கம்பியை எப்படி அவரால் வாயில் வைக்க முடிந்தது? அதுவரை சிறைக் காவலர்கள் எங்கே போனார்கள்? மின்சாரம் பாயும் கம்பியை இராம்குமார் வாயில் வைத்துதான் இறந்தார் என்று சிறை நிர்வாகம் எப்படி கூறுகிறது? இதை எவராவது நேரில் பார்த்தார்களா? இதை நேரில் பார்த்த சாட்சி ஒருவர்கூட இல்லை.

வழக்கத்துக்கு விரோதமாக பெரும் சத்தம் கேட்ட பிறகே சிலர் இராம்குமாரை நோக்கி ஓடியிருக்கிறார்கள். அது வரை என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. ஒரு கைதி எப்படி மின்சாரப் பெட்டியை நெருங்க முடிந்தது? சிறை அதிகாரிகள் உடனே மின்சாரத்தை துண்டித்தார்களா? அப்போது இராம் குமார் இறந்து விட்டாரா? அல்லது உயிருக்குப் போராடினாரா? சிறைக்கு ஆம்புலன்ஸ் வண்டி வந்த நேரம் என்ன? அவர் இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுபோன நேரம் என்ன? மன அழுத்தத்துக்கு உள்ளாகும் கைதிகளை கண்டறிந்து அவர்களுக்கு உரிய ஆலோசனை அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்ற விதிமுறைகளை சிறை நிர்வாகம் பின்பற்றியதா?

இப்படி பல கேள்விகள் எழுந்து நிற்கின்றன.

அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்;

மூடி மறைக்கக் கூடாது!