தமிழக அரசின் துணைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற மா. கோபாலன், தனது 14ஆம் வயதிலேயே பெரியாரால் ஈர்க்கப்பட்டவர். கழகப் பணிகளில் பங்கேற்றவர். ‘ஆடும் பருவத்திலேயே எனை ஆட்கொண்ட பெரியார்’ எனும் தலைப்பில் அவர் எழுதிய நூலில் பல களப் பதிவுகளை செய்துள்ளார். அந்நூலிலிருந்து சில பகுதிகள்.
சென்னை பெத்துநாயக்கன் பேட்டையில் சிவஞானம் பிள்ளை பூங்கா ஒன்று உள்ளது. அங்குப் பெரியார் ஒரு நாள் பேசினார். அது திராவிடர் கழகத்தினரால் நடத்தப்பெற்ற பொதுக் கூட்டம்.
கூட்டத்தை நடத்தியவர்களுள் மு.பொ. வீரன் என்பவரும், டபுள்யூ.பி. வேலாயுதம் என்பவரும் முக்கியமானவர்கள். அவர்கள் இருவரும் மேடைக்கு முன்னர் நின்றிருந்தார்கள்.
பெரியார் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு செங்கல் துண்டு, எங்கிருந்தோ வந்து மேடையில் பெரியார் கால்கள் அருகில் விழுந்தது. யாரோ ஒருவன் மறைந்திருந்து அதனை வீசி எறிந்தான். நல்ல வேளை அது பெரியார் மீது படவில்லை.
அந்தக் கல் வந்து விழுந்த நேரம்; இடம் ஆகியவற்றை ஒரு தாளில் எழுதச் சொன்னார். மு.பொ. வீரன் அவ்வாறே எழுதிப் பெரியாரிடம் கொடுத்தார். அத்தாளில் அச்செங்கல்லை வைத்துக் கயிறு ஒன்றால் கட்டச் சொன்னார். கட்டி முடித்ததும் அதனைத் தம் பெட்டியில் வைத்துக் கொண்டார்.
பிறகு பெரியார் பேசினார். மிகவும் ஆவேசத்துடன் பேசினார். “நான் இந்தக் கட்சியை ஆரம்பிக்கும்போது தமிழ்நாட்டில் பல பகுதிகளுக்குச் சென்றிருக்கிறேன். அங்கிருந்தவர்களை விசாரித்து இருக்கிறேன். அவர்கள் எல்லாம் தங்கள் பிள்ளைகள் மூன்றாம் வகுப்பு வரை படித்தார்கள், ஐந்தாம் வகுப்பு வரை படித்தார்கள், எட்டாம் வகுப்பு வரை படித்தார்கள் என்றுதான் கூறுவார்கள்.
யாரும் தங்கள் பிள்ளைகள் எஸ்.எஸ்.எல்.சி. படித்தார்கள், பி.ஏ., எம்.ஏ. படித்தார்கள் என்று சொன்னதில்லை. 20-30 ஆண்டுகள் கழித்து அந்த ஊர்களுக்குச் சென்றேன். அந்த ஊர்களில் உள்ள மக்கள் தங்கள் பிள்ளைகள் கல்லூரிகளில் படிப்பதாகச் சொன்னார்கள்.
இப்போது கல்லூரிகளில் படிக்கும் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளை அதற்கு மேல் படிக்க வைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது ஒன்றே போதும். என்னுடைய பிரச்சாரம் நல்ல பலனைத் தந்திருக்கிறது. இனி நான் செத்தாலும் இந்தச் சமுதாயம் நன்றாக முன்னேறிவிடும். எனவே, நான் மிகவும் திருப்தியாக சாகத் தயார். இந்தக் கல்லை அடித்தவர் நேரே இந்த மேடைக்கு வந்து என்னைக் கல்லால் அடித்துச் சாகடிக்கட்டும் மனநிறைவோடு நான் சாகத் தயார்” என்றார்.
தள்ளாத வயதில் ஏன் ஊர் ஊராகச் சுற்றுகிறார்? பல போராட்டங்களை நடத்துகிறார்? சிறைக்குச் செல்கிறார்? என்ற கேள்விகளுக்கு அன்று அவர் ஆற்றிய உரை பதிலாக அமைந்தது.
பொதுக் கூட்டங்களில் எதிர்க் கட்சிக்காரர்கள் கற்களால் அடிப்பார்கள். அல்லது போலீசுக்காரர்கள் தடிகளால் அடிப்பார்கள். சுயமரியாதைக் கட்சி ஆரம்பித்த நாளில் இருந்து இவை வாடிக்கையாகி விட்டன.
“நீங்கள் முட்டாள்கள்”
பெரியார் பொதுக் கூட்டங்களில் பேசும்போதுகூடத் தம் கருத்தை வெளிப்படையாகவே தெரிவித்து விடுவார். யாருடைய முகத்துக்காகவும் தம் கருத்தை மாற்றிக் கொள்ள மாட்டார்.
சென்னையில் பொது மருத்துவமனைக்கு எதிரே மெமோரியல் மண்டபம் இருக்கிறது. அங்குத் தொடக்க ஆசிரியர் மாநாடு ஒன்று நடந்தது. பெரியாரை அங்குப் பேச அழைத்திருந்தார்கள். பெரியாரும் அங்குச் சென்றிருந்தார். பாவேந்தர் பாரதிதாசனும் பெரியாருடன் சென்றிருந்தார். மாநாட்டுத் தொடக்கத்தில் ஆசிரியர்கள் பலர் கவிதைகள் எழுதியிருந்தார்கள். அவற்றை ஒவ்வொருவராகப் படித்தார்கள். இறுதியில் அவற்றை எல்லாம் பாவேந்தர் வாங்கிக் கொண்டார். “நீங்கள் யாப்பிலக்கணத்தைத் தகுதி வாய்ந்த தமிழாசிரியரிடம் முதலில் படியுங்கள். தமிழ் இலக்கியங்களை எல்லாம் நன்றாகப் படியுங்கள். பின்னர் கவிதைகளை எழுதுங்கள்” என்று அவர்களுக்கு அறிவுரை கூறினார்.
பின்னர், பெரியார் பேசினார். அந்த மன்றத்தில் கூடியிருந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்களைப் பார்த்துச் சொன்னார், “நீங்கள் எல்லாம் முட்டாள்கள். விசாலமான, விரிவான அறிவு இல்லாதவர்கள்” என்றார். எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.
பெரியார் தொடர்ந்து பேசினார், “நான் ஏன் அவ்வாறு சொல்கிறேன் தெரியுமா? நீங்கள் காலமெல்லாம் 10 வயதுக்குட்பட்ட பிள்ளைகளோடுதான் பழகுகிறீர்கள். அதற்குமேல் வயதுள்ளவர்களோடு பழகுவதில்லை. பழகுவதற்கு உங்களுக்கு வாய்ப்பும் இல்லை. நீங்கள் படிக்கும் புத்தகங்களும் அப்பிள்ளைகள் படிக்கும் புத்தகங்களே. பின் உங்களுக்கு அறிவு எப்படி விசாலமாகும்” என்றார்.
மன்றத்தில் கூடியிருந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர் களுக்குத் தங்களைப் பெரியார் ஏன் முட்டாள்கள் என்று சொன்னார் என்பது புரிந்து விட்டது. அனைவரும் கைகளைத் தட்டி ஆர்ப்பரித்தனர். பலமான கை தட்டல். அவ்வொலி அடங்க வெகுநேரம் ஆகி விட்டது.
பிறகு பெரியார் அவர்களுக்கு அறிவுரை சொன்னார். நீங்கள் நிறையப் படித்தவர்களோடு பழக வேண்டும். நல்ல புத்தகங்களை, மேதைகள் எழுதிய புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்றார். தம்மைப் பேச அழைத்தார்கள் என்பதற்காக அவர்களைப் புகழ்ந்து பேசவில்லை பெரியார்.
பணம் வாங்க மறுத்த பார்ப்பன தொழில் அதிபர்
பெரியார் நீதிமன்றத்துக்குப் போவார், தம் பெட்டி, படுக்கையுடன் போவார்.
நீதிபதியைப் பார்த்துச் சொல்வார், “எனக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லை; உங்கள் சட்டங்களின் மீது நம்பிக்கை இல்லை; நீங்கள் என்ன தண்டனை கொடுக்க முடியுமோ அந்தத் தண்டனையைக் கொடுங்கள். அந்தத் தண்டனையை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று.
அடிக்கடி வெளியூர்களுக்குப் பயணம் செய்யும் பெரியாருக்கு வசதியான வேன் ஒன்று தேவைப்பட்டது. தூங்குவதற்கும் இளைப்பாறுவதற்கும் படிப்பதற்கும் வசதி வேண்டும். சென்னை அண்ணா சாலையிலுள்ள சிம்சன் நிறுவன உரிமையாளர் அனந்தராம கிருட்டிணனிடம் வேனைத் தயார் செய்யச் சொன்னார். வேன் தயாரானதும் மீரான் சாகிப் தெருவில் உள்ள பெரியாரிடம் காட்டி ஒப்புதல் பெற அதனைக் கொண்டு வந்தார். வேனைப் பார்த்ததும் பெரியாருக்கு மிகுந்த திருப்தி. அனந்தராம கிருட்டிணனிடம், ‘தங்களுக்குப் பணம் எவ்வளவு கொடுக்க வேண்டும்’ என்று கேட்டார்.
பெரியாரிடம் பணம் வாங்க அவர் மறுத்து விட்டார். “ஐயா, நீங்கள் வகுப்புவாரித் திட்டத்தை வலியுறுத்தி வருகிறீர்கள். ‘பிராமணர்’களாகிய எங்களுக்கு கல்வித் துறையிலும் உத்தியோகத்திலும் 3 விழுக்காடுதான் தரவேண்டும் என்று கூறி வருகிறீர்கள். அதனால் என் சமூகப் பிள்ளைகளுக்குப் படிக்கவோ வேலைக்குப் போகவோ தமிழ்நாட்டில் வாய்ப்பு இல்லை.
எனவே, அவர்கள் எல்லாம் பிற மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்று மிகவும் வசதியாக உள்ளனர். இதற்கு நானும் என் சமூகமும் உங்களுக்கு என்ன கைம்மாறு செய்வதென்றே தெரியவில்லை. இந்த வேனுக்காக நான் செலவு செய்தது மிகவும் சொற்பம்” என்றார். கடைசி வரை பெரியார் எவ்வளவு வற்புறுத்தியும் அவர் பணம் ஒன்றும் வாங்கவே இல்லை. பெரியாருடைய பிரச்சாரம் எவ்வாறெல்லாம் வேலை செய்கிறது என்பதனை இந்நிகழ்ச்சி எங்களுக்கு உணர்த்திற்று.
‘பிராமணர்கள்’ தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க வெளி மாநிலங்களுக்கு அனுப்புகின்றனர், வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றனர். நியூசிலாந்து நாட்டுக்குப் பல ‘பிராமணர்கள்’ குடியேறி அங்குத் தங்கள் பிள்ளைகளை மருத்துவக் கல்லூரிகளில் படிக்க வைப் பதை அங்குச் சென்றபோது நான் நேரில் பார்த்தேன்.
தமிழ்நாட்டு மக்கள் தொகையில் மூன்றே விழுக்காடு கல்லூரிகளிலும் அரசு அலுவலகங்களிலும் சேர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இவ்வாதிக்கம் 1916ஆம் ஆண்டு நீதிக்கட்சி தோன்றுவதற்குக் காரணம். அவர்கள் 1937ஆம் ஆண்டு வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தனர்.
பிராமணரல்லாதாருக்கு அவர்கள் ஆற்றிய தொண்டு அளவிடற்கரியது. அதனைப் பெரியார் தொடர்ந்து மேற்கொண்டார். அதனால்தான் சிம்சன் கம்பெனி உரிமையாளர் அனந்த இராமகிருட்டிணன் தம் கம்பெனியில் உருவாக்கிய வேனுக்கான பணத்தைப் பெரியாரிடம் வாங்க மறுத்துவிட்டார்.
வெளியீடு:
ஞானசம்பந்தம் பதிப்பகம், சென்னை-600010. தொடர்புக்கு: 9442554807