வள்ளலார் தொடக்கக் காலத்தில் சைவத்திலும் முருகக் கடவுளிடமும் நம்பிக்கைக் கொண்டிருந்தாலும் அவரது சிந்தனையில் மாற்றங்கள் வந்து கொண்டிருந்தன. அவர் எழுதிய ஆறாம் திருமுறையில் சைவம், ஆகமம், வேதங்களைக் கேள்விக்கு உட்படுத்தினார். பெரியார் ஆறாம் திருமுறைப் பாடல்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டார். வள்ளலாரின் வரலாற்றில் தலைசிறந்த நூலாகக் கருதப்படும் நூல் - முனைவர் ஊரன் அடிகள் எழுதியதாகும். அண்மையில் ஜூன் 13, 2022 அன்று தமது 89ஆம் அகவையில் முடிவெய்தினார். தமிழக அரசின் விருது பெற்ற அந்த நூலிலிருந்து வள்ளலாரின் வேத ஆகம எதிர்ப்புக் கருத்துகளின் தொகுப்பு.

vallalar bookவேத, ஆகம, சாத்திர, புராண, இதிகாசங்கள் முடிவான உண்மையைத் தெரிவிக்க மாட்டா.

வேதங்கள் ஆகமங்கள் சாத்திரங்கள் புராணங்கள் இதிகாசங்கள் கூறும் கதைகளையும் கற்பனைகளையும் பெருமான் ஒவ்வார் . 'கலை உரைத்த கற்பனையே நிலைஎனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப்போக' என்பார். வேதாகமங்கள் சூதாகச் சொல்லுகின்றன, உண்மையை வெளிப்படையாக உரைக்கவில்லை, இவற்றால் என்ன பயன் என்பார்.

வேதாக மங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்

வேதாக மத்தின் விளைவறியீர் -சூதாகச்

சொன்ன அலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை

என்ன பயனோ இவை.                                                   (5516)

சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி

நேத்திரங்கள் போற்காட்ட நேராவே - நேத்திரங்கள்

சிற்றம்பலவன் திருவருட்சீர் வண்ணம் என்றே

உற்றிங் கறிந்தேன் உவந்து.                                                     (5515)

வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்

விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்

ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி

உள்ளதனை உள்ளபடி உணர உரைத் தனையே

ஏதுமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர்

எள்ளளவும் எண்ணம் இலேன் என்னொடுநீ புணர்ந்தே

தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய்

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.                   (3767)

வேதாகமங்களெல்லாம் சாலம் எனப் பெருமானுக்கு உரைத்த இறைவன், அவற்றின் சொற்பொருளும் இலக்கியமும் பொய் எனக் கண்டறியேல் வேதாகமங்களின் உண்மை நினக்காகும், உலகர் அறிந்த வேதாகமம் பொய் எனக் கண்டுணர்வாய் எனவும் உரைத்தருளினான்.

இயல்வேதா கமங்கள் புராணங்கள் இதிகாசம்

இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்

மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிக

மகனேநீ நூல் அனைத்தும் சாலம்என அறிக

செயல் அனைத்தும் அருள் ஒளியால்காண்கென எனக்கே

திருஉளம்பற் றியஞான தேசிகமா மணியே

அயல்அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற

ஆடுகின்ற அரசேஎன் அலங்கல் அணிந் தருளே.                     (4176)

தோன்றியவே தாகமத்தைச் சாலம் என உரைத்தோம்

சொற்பொருளும் இலக்கியமும்

                                             பொய்எனக்கண் டறியேல்

ஊன்றியவே தாகமத்தின் உண்மை நினக்காகும்

உலகறிவே தாகமத்தைப் பொய் எனக்கண் டுணர்வாய்

ஆன்றதிரு அருட்சைங்கோல் நினக்களித்தோம் நீயே

ஆள்கருள் ஒளியால்என் றளித்ததனிச் சிவமே

ஏன்றதிரு அமுதெனக்கும் ஈந்தபெரும் பொருளே

இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.                  (4177)

இந்து வேதாகமங்களில் மாத்திரம்தான் ஏமசித்தி ஞானசித்தி முதலிய சித்திகளைச் சொல்லியிருக்கிறது. மற்ற எந்தச் சமயங்களிலும் மேற்படி சித்திகளையும் சாகாத கல்வியையும் சொல்லவில்லை. ஒருவேளை அப்படி யிருக்கிறதாகக் காணப்படுமாகில் அது இந்து வேதாகமங்களில் சொல்லியிருப்பதன் ஏகதேசங்களென்பது உண்மை. - உபதேசக் குறிப்புகள், பக்கம் 333

இந்து வேதாகமங்களில் என்றது இருக்கு முதலிய வேதங்களை மட்டுமன்று ; தேவார திருவாசக முதலிய திருமுறைகளையும் தமிழ்ச் சாத்திரங்களையும் சேர்த்தேயாகும். மற்ற எந்தச் சமயங்களிலும் என்றது ஏனைய புறச்சமயங்களை.

வேத, ஆகம, புராண, சாத்திரங்களைப் பெருமான் முற்றிலும் கொள்ளவு மில்லை, முற்றிலும் தள்ளவுமில்லை. கொள்ளற்குரிய அளவு கொண்டார். தள்ளற்குரிய அளவு தள்ளினார். ஒரு பழுத்த சைவ சித்தாந்தி, சிறந்த சன்மார்க்கி, அனுபவ ஞானி வேதாகமங்களை எவ்வளவுக்குக் கொள்ளலாகுமோ அவ்வளவுக்குக் கொண்டார். எவ்வளவுக்குத் தள்ளலாகுமோ அவ்வளவுக்குத் தள்ளினார்.

வள்ளலாரின் ஆரிய மொழி எதிர்ப்பு

வள்ளலார், ‘சத்தியப் பெரு விண்ணப்பத்'தில், தமக்குத் தமிழ்ப்பற்றை உண்டாக்கியதற்காக இறைவனுக்கு நன்றி கூறும் பகுதி வருமாறு:

“எல்லாம் ஆனவராயும் ஒன்றும் அல்லாதவராயும் எல்லா அண்ட சராசரங்களின் அகத்தும் புறத்தும் நிறைந்து விளங்குகின்ற தனித் தலைமைக் கடவுளே!

இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெருமறைப்பையும் போதுபோக்கையும் உண்டுபண்ணுகின்ற ‘ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்லவொட்டாது’, பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய்ப் பாடுதற்கும் துதித்தற்கு மிகவும் இனிமையுடையதாய் சாகாக் கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த ‘தென்மொழி ஒன்றனிடத்தே மனம் பற்றச் செய்து’ அத்தென்மொழிகளாற் பல்வகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித் தருளினீர்.”