“தெற்காசிய நாடுகளான இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேசத்தில் உள்ள 25 கோடி தலித் மக்கள் சந்திக்கும் சாதி ரீதியான பாகுபாட்டை எதிர்ப்பதற்கு தீவிர செயல்பாடுகளை மேற்கொள்ளவும்; இம்மக்களின் நிலையை மேம்படுத்தவும் – வெளியுறவுத் துறை அமைச்சர் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்'' என்று அய்ரோப்பாவில் உள்ள நெதர்லாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் 30.6.2011 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தலித் மக்கள் எண்ணற்ற கொடுமைகளை சந்திப்பதாகவும், அடிப்படை மனித உரிமைகள் அவர்களுக்கு முற்றாக மறுக்கப்படுவதாகவும் நெதர்லாந்து நாடாளுமன்றம் பதிவு செய்துள்ளது. 150 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 95 பேர் இத்தீர்மானத்தை ஆதரித்துள்ளனர். மேலும், தலித் மக்கள் பிரச்சினையை – அய்ரோப்பிய ஒன்றியம், அய்க்கிய நாடுகள் அவை சார்ந்த அமைப்புகள், உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதியம் உள்ளிட்ட இடங்களில் எழுப்ப வேண்டும் என்றும் இந்நாடாளுமன்றம், வெளியுறவுத் துறை அமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிராக, ஒரு நாளைக்கு 27 வன்கொடுமைகள் இழைக்கப்படுகின்றன. ஆனால், உலகின் மிகப்பெரிய "ஜனநாயக' நாடாளுமன்றத்தில் இப்படியொரு தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. கடந்த இரு மாதங்களில் மட்டும் உத்தரப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக மூன்று தலித் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கண்கள் குத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டதாகவும்; கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. இருப்பினும், இவை இந்து ஊடகங்களால் தேசியப் பிரச்சினையாக்கப்படவில்லை.

செந்தமிழ்நாட்டில் தமிழ் பேசும் சேரி மக்களுக்கு எதிராக, தமிழ் பேசும் ஊர் மக்களால் நடத்தப்பட்ட வன்கொடுமைகள் பற்றிய விரிவான செய்திகள் – இவ்விதழின் 18 பக்கங்களில் பதிவாகியுள்ளன. இவை கடந்த இரு மாதங்களில் நிகழ்ந்தவை மட்டுமே; அதுவும் ஒரு சில ஆங்கில ஏடுகளில் வெளிவந்தவை. இன்னும் பதிவான, பதிவாகாத அதிகாரப்பூர்வமான செய்திகள் கண்டிப்பாக ஏராளம் இருக்கும். மிகக் குறிப்பாக, தேனி மாவட்டம் சுருளிக்காட்டில் "கயர்லாஞ்சி' போன்றதொரு கொடுமை, எழில் முதல்வன் – கஸ்தூரி இணைக்கு நிகழ்ந்துள்ளது. ஆனால், இதைப் பற்றி எல்லாம் தமிழ்ச் சமூகத்திற்கு ஒன்றுமே "தெரியாது.'

ஏழை, பணக்காரன் என்ற பாகுபாட்டை ஏற்கும் சமூகம், ஊர் என்றும் சேரி என்றும் இரு இந்தியாக்கள் இருப்பதை மட்டும் ஏற்க மறுக்கிறது. தலித் மக்களின் ஏழ்மைக்கு காரணமே அவர்கள் தீண்டத்தகாதவர்களாக சேரிக்குள் முடக்கப்பட்டிருப்பதுதான் என்ற உண்மை எவருக்கும் உறைப்பதில்லை. அரசியல் குறித்தும், ஊழல் குறித்தும், குடிமைச் சமூகத்தின் உரிமைகள் குறித்தும் வாய்கிழிய விவாதிக்கும் தமிழ்ச் சமூகம் – தலித் பிரச்சினை பற்றி விவாதிக்க மறுக்கிறது. தமிழ்ச் சமூகத்தின் கள்ள மவுனம் எதைக் காட்டுகிறது? தமிழ்ச் சமூகம், ஜாதி இந்து சமூகமாக இருப்பதையே வெளிப்படுத்துகிறது. இப்பிரச்சினையை அரசும் சட்டமன்ற உறுப்பினர்களும் தீர்த்து விடுவார்கள் என்பது, பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்பு. ஆனால், 44 தலித் சட்டமன்ற உறுப்பினர்களும் அந்தந்த கட்சியின் நிழலில் இருக்கிறார்கள்; தலித் கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சற்றுத் தள்ளி, கூட்டணி என்ற பெயரில் இளைப்பாறுகிறார்கள்.

பொது சட்டமன்ற உறுப்பினர்கள், தாங்கள் தலித் மக்களுக்கும் சேர்த்துதான் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்பதை கவனமாக மறந்து விடுகிறார்கள். தலித் சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் தொகுதியில் உள்ள அனைத்து சமூக மக்களுக்கும் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்பதை ஒருபோதும் மறப்பதில்லை. இந்நிலையில் அரசு, தலித் மக்களுக்கான சில உரிமைகளை சலுகைகளாக அறிவிப்பதோடு நிறுத்திக் கொள்கிறது. அனைத்து நிலைகளிலும் தலித் மக்களுக்கான பிரதிநிதித்துவம் பற்றியும், அவர்கள் சுயமரியாதையுடன் வாழ்வதற்கான எந்த செயல்திட்டங்களையும் உருவாக்க முன்வருவதில்லை.

கல்வி, தன் முன்னேற்றம், அரசியல், அதிகாரம், பிரதிநிதித்துவம், சட்டம், ஒற்றுமை என இவை எல்லாம் தலித் மக்களை வன்கொடுமைகளிலிருந்து விடுவிக்குமா? மேற்கூறிய எந்த வகை தீர்வானாலும், இந்து என்ற அடையாளத்துடனான எந்த முன்னேற்றமும், அதிகாரமும் – ஜாதிய இழிவுகளைப் (மென்கொடுமை) போக்காது; அதுவே கிரõமமாக இருந்தால் ஊராட்சி மன்றத் தலைவரானாலும் தீண்டாமையை (வன்கொடுமை) ஒழிக்காது. சாதி இழிவுகளை நிரந்தரமாக்கி, பிறவி இழிவுக்கு வழிவகுக்கும் சாதியக் கருத்தியலை அழித்தொழிக்காமல் வன்கொடுமைகள் பற்றி மட்டும் பேசுவது, அதைத் தீர்க்க உதவாது.

Pin It