நக்கீரன் எழுதிய கட்டுரைக்காக தமிழக ஆளுநர் மாளிகை, ‘நக்கீரன்’ ஆசிரியர் கோபால் மீது காவல்துறையில் நேரடியாக புகார் தந்ததோடு இந்திய தண்டனைச் சட்டம் 124அய் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியது. 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் இந்த சட்டத்தில் பிணை கிடைக்காமல் தடுப்பதற்கும் பிடிவாரண்ட் இன்றி கைது செய்வதற்கும், ஆளுநர் இந்தக் கொடூர சட்டத்தைக் கையில் எடுத்தார். எழும்பூர் மாஜிஸ்திரேட் இந்தச் சட்டம் வழக்குக்குப் பொருந்தாது என்று கூறி சிறையிலடைக்க மறுத்து விட்டார். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் பலரும் சட்ட வரம்புகளை மீறுபவர்களாகவே இருக்கிறார்கள்.

banwarilalபா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு அக்கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களில் தங்கள் கட்சி விசுவாசிகளை ஆளுநர்களாக நியமித்து ஆளுநர் அதிகாரத்தை அரசியல் நலனுக்கேற்ப முறைகேடாகவே பயன்படுத்துவதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. கருநாடகாவில் மெஜாரிட்டி பலம் இல்லாத எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்து முதலமைச்சராக பதவி உறுதிமொழியும் ஏற்க வைத்து அவர் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் ஓட்டெடுப்புக்கு முன்பே பதவி விலகி ஓடினார்.

மோடி ஆட்சிக்கு வந்த உடனேயே 2015ஆம் ஆண்டு அருணாசலப் பிரதேசத்தில் அரசியல் சித்து விளையாட்டைத் தொடங்கினார்கள். அங்கே ஆளுநராக வந்த ஜெ.பி. ராஜ்கோல்வா சட்டமன்ற கூட்டத்  தொடர் நடக்கும் தேதியை அவரே முன்கூட்டியே அறிவித்து சட்டசபையைக் கூட்டச் செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சியை மெஜாரிட்டி இல்லை என்று டிஸ்மிஸ் செய்தார். காங்கிரசிலிருந்து அதிருப்தியாளர்களை இழுத்து ஒரு பொம்மை ஆட்சியை ஆளுநர் உருவாக்கினார்.

உச்சநீதிமன்றம் தலையிட்டு ஆளுநர் முடிவை நீக்கம் செய்தது. “ஒரு ஆளுநர் தனது சொந்த விருப்பத்துக்காக சட்டமன்றத்தைக் கூட்டுவது, ஆளுநரின் வேலையல்ல. சட்டமன்ற செயல்பாடுகளில் குறுக்கிடுவதாகும்” என்று கூறியது.

உச்சநீதிமன்ற அமர்வு. தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்திலும் இந்த ஜனநாயக விரோத மீறல்களை அம்மாநில ஆளுநர் அரங்கேற்றியபோது உச்சநீதிமன்றம் தலையிட்டு தவறைத் திருத்தியது. ஹரிஷ்ராவத் தலைமையில் நடந்த காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக 69 காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தியதால் மாநில ஆளுநர் கே.கே. பவுல் - ஆட்சியை ‘டிஸ்மிஸ்’ செய்தார். சட்டமன்றத்துக்குள் ஆட்சியின் மெஜாரிட்டி எண்ணிக்கையை நிரூபிக்க வாய்ப்பு தராமல் ஆட்சியை கலைத்தது தவறு என்றது உச்சநீதிமன்றம். 2017ஆம் ஆண்டு கோவா, மணிப்பூர் மாநிலங்களிலும் ஆளுநர் பா.ஜ.க.வின் ஏஜெண்டு களாக மாறி காங்கிரஸ் தனிப் பெரும்பான்மை கட்சியாக தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியை நிறுவிட தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தினர்.

2017இல் பீகாரிலும் இதுதான் நடந்தது. ஆளுநராக இருந்த ஆர்.எஸ்.எஸ்.காரரான கேசரிநாத் திரிபாதி, தனிப்பெரும்பான்மை கொண்டிருந்த கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. அய்க்கிய ஜனதாதளத்தின் தலைவராக இருந்த நித்திஷ்குமார், லல்லு பிரசாத்தின் இராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்து ஆட்சி நடத்தினார். திடீரென்று லல்லு கட்சியின் உறவைத் துண்டித்துக் கொண்டு பா.ஜ.க.வுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முன் வந்தபோது ஆளுநர் அரசியல் கட்சிக்காரர் போலவே செயல்பட்டார். ஆளுநர்கள் தங்களின் ‘கைப்பாவையாக’ செயல்படக்கூடியவர் களாக இருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக மோடி பிரதமரானவுடன் நான்கு ஆளுநர்கள் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டனர். எம்.கே. நாராயணன் (மே. வங்கம்), அஷ்வனிகுமார் (நாகாலாந்து), பி.எல். ஜோஷி (உ.பி.). சேகர் தத்தா (சத்திஸ்கர்) ஆகியோர் அந்த ஆளுநர்கள். குஜராத் ஆளுநர் கம்லா பெனிவார் - அங்கிருந்து மிசோராம் மாநிலத்துக்கு தூக்கி யடிக்கப்பட்டு, பிறகு பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட் டிருக்கும் கிரண்பேடி, டெல்லி மாநிலத்துக்கான தேர்தலில் பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு படுதோல்வியை சந்தித்தவர். இப்போது புதுச்சேரியின் ‘நியமன முதல்வராக’ செயல்பட்டு வருகிறார். ஆட்சியின் அன்றாடப் பணிகளில் குறுக்கிட்டு, அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவு போடுவதும் அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டங்களை நடத்துவதும் அவரது வாடிக்கையாகிவிட்டது. இது ஆளுநரின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என்று மாநில முதல்வர் நாராயணசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியும் முதல்வர் கடிதத்தைக் குப்பைக் கூடையில் வீசி விட்டார் மோடி. கடந்த மே 8, 2018 அன்று புதுவை முதலமைச்சர் அரசு ஆணை ஒன்றை பிறப் பித்தார். ஆளுநர்அல்லது ஆளுநர் அலுவலகம் வழியாக அதிகாரிகளுக்குப் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரோடு கலந்து பேசி அவர்களின்  ஒப்புதலைப் பெற்ற பிறகே செயல்படுத்த வேண்டும் என்று அந்த ஆணை கூறுகிறது.

இப்போது டில்லி யூனியன்  பிரதேச வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு புதுவை முதல்வர் நாராயணசாமி, கிரண்பேடிக்கு எழுதிய கடிதம் கடுமையாக எச்சரிக்கிறது.

“உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகாவது உங்களின் ஜனநாயக விரோத செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டு உங்கள் தவறுகளை சரி செய்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுவது, சட்டத்துக்குப் புறம்பாக தன்னிச்சையாக அதிகாரிகளை அழைத்து உத்தரவுகளைப் பிறப்பிப்பது போன்ற உங்களது செயல்பாடுகள் தொடருமேயானால் உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர வேண்டிய நிலை உருவாகும்” என்று கடுமையாக எச்சரிக்கிறது அந்தக் கடிதம். “உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வே தீர்ப்பளித்துள்ளதால்   இந்தத் தீர்ப்பு டெல்லி மாநில ஆட்சிக்கு மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் ஆளுநரின் அதிகாரங்களை வரையறுத்துள்ள தீர்ப்பாகும்” என்று வாதிடுகிறார், புதுவை முதல்வர் நாராயணசாமி.

தமிழக அரசுக்கோ இத்தகைய அரசியல் நிகழ்வுகள் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து எல்லாம் அவர்கள் பார்வைக்குச் சென்றிருக்குமா என்பதுகூட தெரியவில்லை. இந்தியாவிலேயே ஊழல் நிறைந்த மாநிலம் தமிழ்நாடுதான் என்று அமித்ஷா பேசினால்கூட “அப்படி எல்லாம் அவர் பேசியிருக்க மாட்டார், அவர் இந்திப் பேச்சை தமிழில் மொழி பெயர்த்தவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளாமல் மொழி பெயர்த்திருப்பார்கள்” என்று விளக்கம் கூறும் பரிதாப நிலையில்தான் தமிழக அரசு அடிபணிந்து கிடக்கிறது.

ஆளுநர்கள் ஆளும் கட்சிகளின் பிரதிநிதிக ளாகவே செயல்படுவது ‘சுதந்திரம்’ பெற்ற காலத்திலேயே தொடங்கிவிட்டது. அப்போது மத்தியிலும் மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிகளின் ஆட்சிகளே நடந்ததால் முரண்பாடுகளுக்கு வாய்ப்புகள் இல்லை; எனவே பிரச்சினைகள் எழவில்லை; அவ்வளவுதான்.

ஆளுநர் பதவி குறித்து நடந்த விவாதங்கள்

ஆளுநர் பதவி குறித்து அரசியல் நிர்ணய சபையிலேயே கடும் விவாதங்கள் நடந்தன. அந்த விவாதங்களைப் படித்தால், மாநிலங்களைக் கண்காணிக்கக்கூடிய மத்திய அரசின் ஒற்றர்களாக செயல்படுவதற்கே ஆளுநர் பதவி உருவாக்கப்பட்டது என்ற முடிவுக்கு வந்து விடலாம். அரசியல் சட்ட உருவாக்கத்திற்கான நகல் வரைவுக் குழு ஆளுநர்கள் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று தனது வரைவில் குறிப்பிட்டிருந்தது. இது குறித்து நடந்த விவாதத்தில் இந்த நடைமுறை இரண்டு முதலமைச்சர்களை உருவாக்குவதாகிவிடும் என்று கூறி இந்த முடிவு புறந்தள்ளப்பட்டது.

கவர்னர் பதவிக்கான வேட்பாளர்கள் பட்டியல் ஒன்றைத் தயாரித்து சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெற்று பட்டியலிருந்து ஒருவரை தேர்வு செய்ய குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம் என்பது இரண்டாவது ஆலோசனையாக முன் வைக்கப்பட்டது. இந்த முறையினால் மாநிலத்தில் ஆளும் கட்சியின் ஆதரவு பெற்றவர்தான் ஆளுநராக வர முடியும். பிறகு மாநில அரசும் ஆளுநரும் கைகோர்த்து செயல்படுவார்கள் என்பதால் இந்த ஆலோசனையும் புறந்தள்ளப்பட்டது.

ஒன்றை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் பிரிந்து செல்லும் வாய்ப்புகள் உருவாகிவிடலாம் என்ற அச்சமும் அதைத் தடுப்பதற்கான வலிமையான சட்டப் பிரிவுகளை உருவாக்கிட வேண்டும் என்ற துடிப்புமே அரசியல் நிர்ணய சபையில் காங்கிரஸ் தலைவர்களின் உளவியலாக இருந்தது. அந்த உணர்வுகளே அரசியல் சட்ட உருவாக்கத்துக்கு அடிநாதமாக இருந்தன. மாநிலத்து மக்களுக்கு நெருக்கமான ஒருவரை ஆளுநராக வரவிடக் கூடாது என்பதில் நேரு மிகவும் உறுதியாக இருந்தார். ஆளுநர் அந்த மாநிலத்துக்கு தொடர் பில்லாதவர்களாக வேறு மாநிலங்களி லிருந்து நியமிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை நேரு வலியுறுத்தினார். 1949 மே 31 அன்று நிர்ணய சபையில் நேரு இவ்வாறு கூறினார்.

“ஆளுநர்கள் மாநில மக்களால் தேர்ந் தெடுக்கப்படுபவர்களாக இருந்தால் மாகாணப் பிரிவினை உணர்ச்சிகளையும், குறுகிய மாகாண உணர்வுகளையும் ((Narrow provincial way of thinking) ஊக்கப்படுத்திவிடும்” என்றார்.

மற்றொரு உறுப்பினரான பி.எஸ். தேஷ்முக் வெளிப்படையாகவே கேட்டார்:

“முதல்வரும், ஆளுநரும் எல்லா பிரச்சினையிலும் ஒன்றுபட்டு நின்று, மத்திய அரசை எதிர்ப்பதிலும் அவர்கள் ஒன்றுபட்டு நின்றால், பிறகு என்ன செய்ய முடியும்? மத்திய அரசின் ஆணைகளையும் கட்டளைகளையும் மாநில அரசு செயல்படுத்த மறுத்தால் என்ன செய்வது? மத்திய அரசு மாநில அரசு மீது படை எடுத்துச் செல்லுமா?” என்று கேட்டார்.  இறுதியாக ஆளுநர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவராகவே இருப்பார் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான திருத்தத்தை இறுதியாகக் கொண்டு வந்தவர் பிரஜேஸ்வர் பிரசாத். “மத்திய அரசின் அதிகாரம் அனைத்து மாகாணங்களிலும் நிலை நாட்டப்பட்டாக வேண்டும். இது அவசியமானது” என்பது தீர்மானத்துக்கு அவர் கூறிய காரணம்.

பிரிட்டிஷ் இந்தியாவில் 1935ஆம் ஆண்டு இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டத்தின் கீழ் ‘மாகாண ஆட்சி’களைக் கண்காணிக்க ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு தங்கு தடையற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இந்தியாவின் ‘சுதந்திரத்துக்கு’ப் பிறகும் அறுக்க முடியாத அடிமைச் சங்கிலியாக ஆளுநர் பதவி தொடருகிறது. ஆளுநருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைக் குறைத்து அமைச்சரவையின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும் என்று சட்டம் அவர் களுக்கான அதிகாரங்களைக் கட்டுப்படுத்தினாலும் ஆளுநர்கள் தங்கள் ‘உசிதம்போல்’ செயல்படக் கூடிய அதிகாரங்களை (Discretionary Powers) சட்டம் வழங்கியிருக்கிறது. அந்த அதிகாரங்கள் எவை என்ற வரையறைகளும் சட்டத்தில் தெளி வாக்கப்படவில்லை. இப்போது ‘உசிதம்போல்’ என்பது தான் சார்ந்துள்ள கட்சித் தலைமையின் ‘உசிதம்போல்’ செயல்படுதல் என்ற நிலைக்கு வந்து விட்டது.

ஆளுநர் மாளிகை ஆடம்பரங்களில் வீண் செலவுகளில் கொழுத்துப் போய் கிடக்கின்றன. நேருவின் சகோதரியாகிய விஜயலட்சுமி பண்டிட், மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநராக சிறிது காலம் பணியாற்றி, பிறகு பதவியைத் துறந்தார். “ஆளுநர் பதவிக்குக் கிடைக்கிற அதிக ஊதியமும், வசதிகளுமே ஒருவரை அப்பதவிக்குத் தூண்டுகின்றன. ஆளுநர் பதவி பயனற்றது. அரசமைப்புச் சட்டத்திலிருந்தே ஆளுநர் பதவியை அகற்றி விடவேண்டும்” என்று பதவி விலகியதற்குப் பிறகு அவர் துணிந்து கூறினார்.

‘ஆட்டுக்குத் தாடி தேவை இல்லை; அதுபோல் ஆளுநர் பதவியும் நாட்டுக்குத் தேவை இல்லை’ என்பதே தொடக்கக்கால தி.மு.க.வின் கொள்கையாகவும் இருந்தது.

Pin It