'நாங்களும்கூட’ (MeToo) இயக்கம் தீவிரமடைந்து வருகிறது. பாலியல் சீண்டல், பாலியல் துன்புறுத்தல், பாலியல் மிரட்டல்களுக்கு உள்ளான பெண்கள், இந்த இயக்கத்தின் வழியாக மனம் திறந்து பேசுகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தவை என்றாலும், துணிவோடு வெளியிடுவதற்கான பாதுகாப்பான சமூக சூழல் இப்போதுதான் வந்திருக்கிறது.

இதில் குற்றக் கூண்டில் நிறுத்தப்படுகிற தனி நபர்கள் யார் என்ற ஆராய்ச்சிக்கு இடமில்லை. பிரச்சினைகள்தான் முக்கியம் என்பதே நமது கருத்து. பெண்கள் ‘உல்லாசத்துக்கும் இன்ப நுகர்ச் சிக்குமான’வர்கள் என்ற கருத்தியலை சமூகத்தில் கட்டமைத்தது ஆண் ஆதிக்க சிந்தனை. அந்த ஆணாதிக்க சிந்தனையை உரமிட்டு வளர்த்தது.  பொதுப் புத்தியில் திணித்து வைத்தது - மதங்களும், மதங்கள் கற்பித்த சடங்குகள் - பெண்கள் குறித்த பார்வைகள் தான்.

எந்த ஒரு ஆணும் தனது ‘பாலுறவு வக்கிரமங்களை’ பெருமையோடு பகிர்ந்து கொள்ள இந்த சமுதாயம் அனுமதிக்கிறது. அதற்காக எந்த ஆணும் வெட்கப்படுவது இல்லை. ஆனால் ஒரு பெண் அப்படி சமூகத்தில் பேசத் தொடங்கிவிட்டால் அவ்வளவுதான். சமூகம் அந்தப் பெண்ணை சமூகத்தின் அவமானமாகவே பார்க்கும். பொதுப் புத்தியில் படிந்து போய் நிற்கும் இந்த பார்வைகளை மீறி பெண் துணிவாக தனக்கிழைக்கப்பட்ட ‘பாலியல்’ துன்புறுத்தல்களை பேச வருகிறார் என்றால், அதற்கு உள்நோக்கம் கற்பிக்க முடியாது, விதி விலக்குகள் வேண்டுமானால் இருக்கலாம்.

இந்தப் பிரச்சினையை தமிழ்ப் பண்பாடும் இலக்கியங்களும் மதங்களும் பெண்கள் மீது மட்டும் ‘புனிதமாக’வும், ‘பண்பு ஒழுக்கமாக’வும் திணிக்கும் ‘கற்பு’ என்ற கருத்தியலின் அடிப்படையில் நாம் அணுகவில்லை; அதில் நமக்கு உடன்பாடும் இல்லை.

மாறாக ஒரு பெண்ணின் உடல் அவருக்கானது; அவரது உரிமைக்கும் கட்டுப்படுத்தலுக்கும் உரியது; அந்தப் பெண்ணின் உடல்சார்ந்த உரிமைகள் குறித்து முடிவெடுக்கும் முழு உரிமை கொண்டவர்  அந்தப் பெண் தான். அந்தக் கண்ணோட்டத்தில் பெண்ணின் விருப்பம் மற்றும் உரிமைகளில் அத்துமீறி நுழையும் ஆண்களுக்கு எதிராக வெளிப்படும் பெண்ணின் குரலில் முழுமையான நியாயம் இருக்கிறது என்பதே நமது கருத்து. இப்படிப் பெண்கள் துணிவோடு வெளியே வருவது பெண்களைப் போகப் பொருளாகப் பயன்படுத்த நினைப்போருக்கு எதிர்கால எச்சரிக்கையாகவும் அமையும்.

இந்தப் பிரச்சினையில் மத்திய அமைச்சர் அக்பர் பதவி விலகியிருக்கிறார். தமிழ்நாட்டில் கவிஞர் வைரமுத்து, இயக்குநர் சு.சி. கணேசன் உள்ளிட்டவர்கள் மீது குற்றச்சாட்டுகள் வந்திருக்கின்றன. தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் தலைவரான நாராயணன் மீது பாடகி சின்மயி இதேபோல் புகாரைக் கூறுகிறார். இந்தப் பட்டியலில் பல பார்ப்பன ‘இசை’ப் பிரமுகர்களும் இடம் பெற்றுள்ளனர். தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன், சின்மயியை தரக் குறைவான வார்த்தைகளால் அர்ச்சித்துள்ளார். தமிழ்நாடு பிராமண சங்கத்திலிருந்தே நாராயணன் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற எதிர்ப்புக் குரல் வெளிவரத் தொடங்கியுள்ளன. ‘தமிழ்நாடு பிராமண சங்க’த்தின் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் ஹரிஹர முத்து அதில் ஒருவர். ‘அந்தணர் முன்னேற்றக் கழகம்’ என்ற அமைப்பின் தலைவராக உள்ள ஜெயப்பிரகாஷ் என்பவரும் நாராயணனுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

பா.ஜ.க. இணை அமைச்சரான பொன். இராதா கிருஷ்ணன், இப்படி பெண்கள் வெளிப்படையாகப் பேசுவது பண்பாட்டுச் சீரழிவு என்கிறார். ஆனால் பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தர்ராசன், பெண்கள் துணிவோடு பேசுவதை வரவேற்றிருக்கிறார். பார்ப்பன சங்கத்திலும் பா.ஜ.க.விலும் முரண்பட்ட குரல்கள் கேட்கின்றன.

அதே நேரத்தில் ஆண்கள் ஆதிக்க உணர்வு கொண்ட அத்தனை அரசியல் கட்சிகளும் இதில் ‘கள்ள மவுனம்’ சாதிக்கின்றன. ஆனாலும் நாம் உரத்துக் கூறுவோம்.

பெண்களே; துணிவுடன் வெளியே வாருங்கள்; பெண்களைப் போகப் பொருளாக நினைப்போரை அம்பலமாக்குங்கள்!

அந்தக் கருத்தியலை அவர்கள் மண்டைக்குள் திணித்து வைத்திருக்கும் - மதம், சடங்கு, சம்பிரதாயம், வழிபாடு, ஜாதிய நோய்களையும் அந்த எதிர்ப்புக் குரலோடு இணைத்துக் கொள்ளுங்கள்!