பிரதமர் நரேந்திர மோடியின் நண்பரும், அவரது ஆதரவுடன் குறுகிய காலத்திலேயே நாட்டின் பெரும்பணக்காரராக உருவெடுத்து இருப்பவருமான கௌதம் அதானியின், ஆஸ்திரேலிய நிலக்கரிச் சுரங்கத்திற்கு எதிராக அந்நாட்டு மக்கள்  போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர்.  

ஆஸ்திரேலியாவின் நியூ சவூத் வேல்ஸ் மாகாணத்திலுள்ள போண்டி கடற்கரை, சிட்னி, பிரிஸ்பேன், மெல்போர்ன், கோல்ட் கோஸ்ட் ஆகிய நகரங்களில் சுமார் 40 இடங்களில் ஆயிரக்கணக்கில் திரண்ட அந்நாட்டு மக்கள், STOP ADANI, ADANI GO HOME (அதானியே நிறுத்து ; உன் நாட்டிற்கே திரும்பு) என்ற பதாகைகளை உயர்த்தியும், முழக்கங்களை எழுப்பியும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குஜராத்தை தலைமையகமாக கொண்ட அதானி நிறுவனம், ஆஸ்திரேலியாவில் ஒரு புதிய நிலக்கரி சுரங்கம் அமைக்க உள்ளது. மோடியின் ஆசியுடன், பாரத ஸ்டேட் வங்கியிடமிருந்து ரூ. 6 ஆயிரம் கோடி ரூபாயை கடனாகப் பெற்ற அதானி, கடந்தாண்டு மோடி ஆஸ்திரேலியா சென்றபோது, கூடவே சென்று நிலக்கரி சுரங்கத்தை ஏலத்தில் எடுத்தார்.

16.5 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இந்த நிலக்கரிச் சுரங்க திட்டத்தை செயல்படுத்தினால், அது நாட்டின் சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கும் என்று அப்போதே எதிர்ப்புகள் எழுந்தன.  குயின்ஸ்லாந்து மாகாணத்தின் கார்மைக்கல் என்ற பகுதியில்தான் அதானியின் நிலக்கரி சுரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியார் ரீப் என்ற பவளப் பாறைகள் நிறைந்த இந்த பகுதி, உலகிலேயே மிகவும் ரசிக்கப்படும் ஒரு சுற்றுலாத் தலமாகும். அண்மைக்காலமாக இந்த பகுதியில் வாழும் உயிரினங்கள் அழிந்து வருவதாகவும், பல கடல்வாழ் உயிரினங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்ப தாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கார்மைக்கல் பகுதியில் அதானியின் நிலக்கரித் திட்டத்தை செயல்படுத்தினால், கடல் மேலும் மாசுபடுத்தப்பட்டு, சுற்றுச்சூழல் கேள்விக் குள்ளாகும், கடல்வாழ் உயிரினங்கள் பேரழிவைச் சந்திக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனடிப்படையில் அதானி நிறுவனத்திற்கான சுற்றுச்சூழல் துறை அனுமதி கடந்த ஓராண்டாக தாமதமாகி வந்தது. திட்டம் தாமதமானதால் போராட்டங்கள் பெரியளவில் எழவில்லை.

ஆனால், அதானியின் திட்டத்திற்கு சுமார் ரூ. 6,500 கோடி மதிப்பில் கடன் வழங்கப் போவதாக ஆஸ்திரேலிய அரசு அண்மையில் அறிவித்தது, அந்நாட்டு மக்களை கொதிப்படையச் செய்தது. தங்களின் எதிர்ப்பையும் மீறி அதானி நிறுவனத்திற்கு சுரங்கத்தை ஒதுக்குவதா? என்று ஆவேசம் அடைந்தனர்.

“பொதுமக்களின் வரிப்பணத்தை வைத்து, அதானியின் திட்டத்திற்கு நிதியுதவி எதுவும் அளிக்க மாட்டோம்” என்று குயின்ஸ் லாந்து மாகாணத் தலைவராக உள்ள அனஸ்டாஸியா பலஸ்சூக் முன்பு உறுதியளித்திருந்தார்.

அதன்படி அதானிக்கு ஆஸ்திரேலிய அரசு வழங்கவுள்ள கடனை, தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்ய வேண்டும் என்றும், திட்டத்தையே தடை செய்ய வேண்டும் என்றும் குயின்ஸ்லாந்து மக்கள் பலஸ்சூக்கிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும், ளுகூடீஞ ஹனுஹசூஐ, ஹனுஹசூஐ ழுடீ ழடீஆநு என்ற பெயரில் 30 சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் ஒன்றாக இணைந்து அதானிக்கு எதிராக போராட்டத்திலும் இறங்கின.

அந்த வகையில், ஆஸ்திரேலியாவின் நியூ சவூத் வேல்ஸ் மாகாணத்திலுள்ள போண்டி கடற்கரை, சிட்னி, பிரிஸ்பேன், மெல்போர்ன், கோல்ட் கோஸ்ட் ஆகிய நகரங்களில் சுமார் 40 இடங்களில் நடந்த போராட்டங்களில் அதானி நிறுவனத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.இவர்கள் பொதுமக்களுடன் இணைந்து, STOP ADANI, ADANI GO HOME என்ற வடிவத்தில் மனித சங்கிலியையும் உருவாக்கினர்.

இப்போராட்டம் வரும் காலத்தில் மேலும் வலுவடையலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில், அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில், அந்நாட்டு மக்கள் சுமார் 70 சதவிகிதம் பேர் அதானியின் திட்டத்தை எதிர்ப்பதாக தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டைச் சூறையாடி வரும் அதானி, தனது தொழிலை ஆஸ்திரேலியாவுக்கும் விரிவுபடுத்திய நிலையில், அந்நாட்டு மக்கள் தங்களின் இயற்கை வளத்தை அதானிக்கு காவு கொடுக்க மாட்டோம் என்ற உறுதிப்பாட்டுடன் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்க அந்நாட்டுக்கு உறுதியளித்து உள்ளதாகவும், ஆஸ்திரேலிய பிராந்தியத்தில் இந்த திட்டத்திற்கு பெரும் ஆதரவு இருப்பதாகவும் அதானி நிறுவனத்தின் ஆஸ்திரேலிய தலைமை நிர்வாக அதிகாரி ஜெயகுமார் ஜனகராஜ் தெரிவித்துள்ளார்.

Pin It