‘முன்னோடி-பின்னோடி’ வாதங்களுக்கு மறுப்பு (11)

வடநாட்டிலிருந்து தமிழகம் வந்த தலைவர்களை வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்று பெரியார் ‘குடிஅரசு’ ஏட்டில் எழுதியதை கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம்.

மேலும், 8.9.1929 குடிஅரசு தலையங்கத்தில் வல்லபாய் பட்டேலின் உரைகளைக் குறித்து எழுதுகிறார். தமிழ்நாடு வந்த பட்டேல், “இங்கு பிராமண வகுப்புக்கே விரோதமாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பிரச்சாரமானது பிராமணர்களைத் தாக்குவதாக மாத்திரமல்லாமல் நம்முடைய ஆரிய நாகரிகத்தில் சிறந்தவற்றை எல்லாம் தாக்குவதாகத் தெரிகிறது.  ஒரு பிராமணரை (திரு.இராஜ கோபாலாச்சாரியாரை) ‘சைத்தான் சொரூபம்’ என்று ஒரு சாரார் துவேஷிக்கின்றனர். இது தேசிய தற்கொலையேயாகும். வகுப்பு துவேஷத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதைக் காட்டிலும் சிறந்த தேசிய வேலை வேறு கிடையாது” என்றெல்லாம் பேசிய பட்டேலைப் பார்த்து பெரியார் எழுப்பும் கேள்வி இது தான்.

“திராவிட தேசத்துக்கு வந்த இவருக்கு ஆரிய தர்மத்தைப் பற்றிய பிரச்சாரத்தில் கவலை எதற்காக வேண்டும்?” என்று கேட்டுவிட்டு, இந்த நாட்டில் ஏற்பட்டிருக்க வேண்டிய சீர்திருத்தங்களுக்கு எல்லாம் இது வரையில் முட்டுக்கட்டையாக இருந்து வந்திருப்பது ஆரிய பிரச்சாரமா? அல்லது ‘பார்ப்பன துவேஷ’ பிரச்சாரமா?முதலாவது இந்த நாட்டி லுள்ள பார்ப்பனரல்லாதார் யோக்கியதையும், அந்தஸ்தும் இன்னது இன்னது என்று இவருக்குத் தெரியுமா?

“பார்ப்பனர்களில்  சி.இராஜகோபாலாச்சாரி, சீனிவாசய்யங்கார், சந்தானம், சத்தியமூர்த்தி, வரதாச் சாரி, ஏ.ரெங்கசாமி அய்யங்கார், எம்.கே.ஆச்சாரியார் முதலியோருடைய யோக்கியதை திரு.பட்டேலுக்குத் தெரிந்தது சரியாக இருக்குமா? அல்லது திரு.ராம நாதன், திரு.ராமசாமி முதலியோர்களுக்குத் தெரிந்தது சரியாக இருக்குமா?” என்று அடுக்கடுக்காய் கேள்விகளைப் பெரியார் எழுப்புகிறார்.

ஆக, இத்தலையங்கத்தில் “திராவிட தேசத் துக்கு’ வந்தவராக படேலைக் கூறுகிறார். அடுத்து, இந்த நாட்டில் ஏற்பட்டிருக்க வேண்டிய சீர்திருத்தத் திற்குப் பார்ப்பனர் தடை என்று கூறுவதில் “இந்த நாட்டில்” என்று குறிப்பிடுவது இந்தியாவையா? ‘திராவிட தேசம்’ என்று கூறப்பட்ட சென்னை மாகாணத்தையா? என்ற அய்யம் நமக்குள் எழக்கூடும்.

அதைத் தெளிவாக்கத்தான், அடுத்ததாக “இந்த நாட்டிலுள்ள” பார்ப்பனரல்லாதார் யோக்கி யதையை யார் நன்கு அறிந்திருக்க முடியும்? என்ற கேள்வியை எழுப்பி பார்ப்பனர்களில் ராஜாஜி, சத்தியமூர்த்தி, சீனிவாசயங்கார் போன்றோரையும், பார்ப்பனர் அல்லாதாரில் எஸ்.இராமநாதன், ராம சாமி (இது ஈ.வெ.ராமசாமியா? அல்லது சர்.ஏ.ராம சாமி முதலியாரா? தெரியவில்லை. யாராக இருந்தா லும்) போன்றோரைக் குறிப்பிடுவதால் “இந்த நாடு” என மீண்டும் சென்னை மாகாணத்தை தான் பெரியார் குறிப்பிடுகிறார் என்பதை எளிதில் உணர முடியும்.

ஆக வெளிநாட்டினர் என வடநாட்டினரையும், ‘இந்த நாடு’ என சென்னை மாகாணத்தையும் குறிப்பிட்டு எழுதி, இரண்டும் வெவ்வேறு நாடுகள்தான் என்ற சிந்தனைப் போக்கு 1929-லேயே பெரியாரிடம் வெளிப்படுவதை எவர் ஒருவராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். வடநாட்டினரை வெளிநாட்டினர் என்று குறிப்பிடும் பெரியார், சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக அப்போது விளங்கி வந்த ஆந்திரப் பகுதியினரை எப்படிப் பார்த்தார் என்பதையும் அதே ஆண்டில் எழுதப்பட்ட மற்றொரு தலையங்கம் தெளிவுபடுத்துகிறது.

அது, “நெல்லூர் மகாநாடு” என்ற தலைப்பில் 22.9.1929 ‘குடிஅரசு’ இதழில் எழுதப்பட்டுள்ள தலையங்கமே ஆகும். அந்த தலையங்கம் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் (நீதிக்கட்சியின்) மாகாண மாநாடு நெல்லூரில் அதற்கடுத்த மாதம் நடக்க விருப்பதை ஒட்டி எழுதப்பட்டதாகும். அந்த மாநாட்டில் பார்ப்பனரல்லாதாரின் அரசியல் கட்சியான நீதிக்கட்சியில் பார்ப்பனரையும் சேர்த்துக் கொள்ளலாம் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றும் முயற்சி நடந்து வருவதை அறிந்த பெரியார், அம்முயற்சியை கைவிட வேண்டும் அல்லது முறியடிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு தீட்டப்பட்டதே அத்தலையங்கம்.

அத்தலையங்கத்தில் “இம்மகாநாடு தெலுங்கு நாட்டில் கூடுவது நமக்கு மிக்கப் பலவீனமென்றே தோன்றுகின்றது. ஏனெனில், தெலுங்கு நாட்டு மக்களுக்கு இந்த விஷயம் அவ்வளவு தூரம் கவலைப்படத் தக்கதாக இல்லை” என்கிறார். சென்னை மாகாணத்தில் உள்ள தெலுங்கு பேசும் பகுதி/மாவட்டங்கள் என்று குறிப்பிடவில்லை; தெலுங்கு நாடு என்றே குறிப்பிடுகிறார் என்பது மனத்துள் பதிய வைக்க வேண்டியதொரு செய்தி.

அதற்கான காரணத்தையும் கூறுகிறார்.” அவர்களுக்கு (தெலுங்கு நாட்டவருக்கு) இன்னும் பார்ப்பனர்-பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற விஷயம் அர்த்தமானதாகவே சொல்வதற்கில்லை. இதற்கு முக்கிய உதாரணம் என்னவென்றால் ஆந்திர தேசத்தில் இன்னும் காங்கிரசுக்கு மதிப்பும் ஆதரவும் இருப்பதே ஆகும்” என்கிறார். முன்பு தெலுங்கு நாடு என்று சொன்ன பெரியார், இவ்வரிகளில் அதை ஆந்திர தேசம் என்று குறிப்பிடுகிறார். மேலும், அந்த ஆந்திர தேசத்தவர்களைப் பற்றியும் விவரிக்கிறார்.

“ஆந்திர தேசத்துப் பார்ப்பனர் அல்லாதார்கள் இனியும் மத சம்பந்தமான புராணங்களிலும் குருட்டு நம்பிக்கைகளிலும் ஈடுபட்டவர்கள் ஆவார்கள். எவ்வளவுக்கெவ்வளவு குருட்டு நம்பிக்கைகளிலும் புளுகு புராணங்களிலும் ஈடுபட்டு இருக்கின்றார் களோ, அவ்வளவுக்கவ்வளவு அவர்களை மேதாவிகள் என்றும் பெரியவர்கள் என்றும் நினைத் துக் கொண்டிருப்பவர்கள். எனவே, மூடநம்பிக்கை களிலிருந்தும், கண்மூடி பின்பற்றும் குருட்டு நடவடிக்கைகளிலிருந்தும் என்று ஆந்திர தேசத் தவர்கள் விடுதலை பெறுகின்றார்களோ அன்று தான் அவர்கள் பார்ப்பனர்களின் மதிப்புகளிலிருந்தும், அரசியல் புரட்டுகளிலிருந்தும் விடுதலையடைய முடியும். ஆதலால், அது வரையிலும் நாம் எந்த வகையிலும் ஆந்திர தேசத்தவர்களைப் பின்பற்று வது, மறுபடியும் குழியில் போய் விழுவதையே ஒக்கும்.

இவ்வாறெல்லாம் தெலுங்கு நாட்டவர், ஆந்திர தேசத்தவர் என்ற சொற்களில் அவர்களைப் பிரித்து தனிநாட்டவராக மட்டுமல்ல, அவர்களோடு உறவு கொள்வது கூட நம்மை மறுபடியும் பார்ப்பன, புராண, மதப் படுகுழியில் தள்ளிவிடும் என்று எச்சரிக்கவும் செய்கிறார். 1929-இல் பெரியார் கொண்டிருந்த அதே கருத்தைத் தான் 1955, 56களிலும் கொண்டிருந்தார் என்பதையும் நாம் ஒப்பு நோக்க வேண்டும்.

“பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலையில்லாமல் போய் விட்டது. பிறகு கன்னடமும், மலையாளமும் (கர்நாடகமும், கேரளாவும்) பிரிவதில் இருந்து இரண்டு, மூன்று காரணங்களால் சீக்கிரத்தில் பிரிந்தால் தேவலாம் என்கிற எண்ணம் தோன்றி விட்டது..” என்று 1955 ஆம் ஆண்டில் கூறுகிறார்.

அப்படிக் கூறிய பெரியாரைத் தான், இங்குள்ள ‘தூய’ தமிழர்களும், ‘திடீர்’ தமிழ்த் தேசியர்களும் தமிழ்நாட்டில் தெலுங்கு, கன்னட, மலையாளிகள் ஆதிக்கத்தை உருவாக்கியவர்; காத்து நின்றவர் என்றெல்லாம் தூற்றித் திரிகின்றனர். ஆந்திராவோடு, கன்னடியனும், மலையாளியும் போய்விட்டால் தேவலாம் என்று ஏன் பெரியார் விரும்பினார்.

அதையும் அவரே கூறுகிறார்: “ஒன்று கன்னடியனுக் கும், மலையாளிக்கும் இனப்பற்றோ, இன சுயமரியாதையோ, பகுத்தறிவு உணர்ச்சியோ இல்லை என்பதாகும். எப்படியெனில் அவர்களுக்கு வருணாசிரம வெறுப்பு கிடையாது. சூத்திரன் என்பது பற்றி இழிவோ, வெட்கமோ பெரும்பாலா னோருக்குக் கிடையாது. மத மூடநம்பிக்கைகளில் மூழ்கி விட்டவர்கள். 

இரண்டு – அவர்கள் இருவரும் மத்திய ஆட்சி என்னும் வடவர் ஆட்சிக்குத் தங்கள் நாடு அடிமையாக இருப்பது பற்றியும் அவர்களுக்கு சிறிதும் கவலை இல்லை. ஆகவே, இவ்விரு துறைகளிலும் நமக்கு எதிர்ப்பான எண்ணம் கொண்டவர்கள் - எதிரிகள் என்றே சொல்லலாம்.” என்றெல்லாம் விளக்கம் கொடுத்ததோடு பெரியார் நின்று விடவில்லை. 1953-இல் ஆந்திரா பிரிந்ததற்குப் பின்னரும் சென்னை மாகாணத்தின் 14 மாவட்டங் களில் ஒரு கன்னட மாவட்டமும் (தென் கன்னடம் - ளுடிரவா ஊயயேசய)  ஒரு மலையாள மாவட்டமும் (மலபார் மாவட்டம்) இருந்தது. அந்த இரண்டு மாவட்டங் களால், தமிழர்கள் உரிமைக்கு, தமிழ்நாட்டு உரிமைக்கு ஏற்பட்டு வந்த இன்னல்கள், இடையூறு களைச் சுட்டிக் காட்டுகிறார்.

“மூன்றாவது.. அப்படி 14-இல் 2, 7-இல் ஒரு பாகஸ்தர்களாக இருந்து கொண்டு தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதாரம், உத்தியோகம் முதலியவை களில் 3-இல் 2 பாகத்தை அடைந்து கொண்டு, இவை கலந்து இருப்பதால் நம் நாட்டை “தமிழ்நாடு” என்று சொல்வதற்கு இடமில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் பெரியார்.

அதாவது, தமிழர், தமிழ்நாட்டு உரிமைகளில் 3இல் 2 பங்கை அனுபவிக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, இந்த இரண்டு மாவட்டம் மட்டும் நம்மோடு இருப்பதால் நமது நாட்டை “ தமிழ்நாடு” என்றுகூட கூற முடியாமல் “சென்னை மாநிலம்” என்று சொல்ல வேண்டி இருக்கிறதே என்பதற்காகவும் சீற்றம் கொள்கிறார்.

தொடர்ந்து, “இதை நான் ஆந்திரா பிரிந்தது முதல் சொல்லிக்கொண்டே வந்திருக்கிறேன். ஆதலால், இவர்கள் சீக்கிரம் ஒழியட்டும் என்றே கருதி வந்தேன். அந்தப்படி நல்ல சம்பவமாக பிரிய நேர்ந்துவிட் டார்கள். ஆதலால் இந்த பிரிவினையை வரவேற் கிறேன்”. (விடுதலை அறிக்கை 12.10.1955) இவ்வாறான சிந்தனையோடிருந்த பெரியார் கன்னடராம், பிற திராவிட மொழிக் குடும்பத்தினர் ஆதிக்கத்தை தமிழ்நாட்டில் உண்டாக்கியவராம். சரி, ஏதோ தனது கழகத் தோழர்கள் மட்டும் படிக்கும் தனது ஏட்டில் அறிக்கையோடு விட்டுவிட்டாரா பெரியார்? இல்லை, தனது அமைப்பான திராவிடர் கழகத்தின் நடுவண் குழுவைக் கூட்டி, ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றி, திராவிடர் கழகத்தின் அதிகாரப் பூர்வமான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறார்.

திராவிடர் கழகத்தின் மத்திய செயற்குழு நிறை வேற்றிய தீர்மானத்தைக் காண்போம். “வடநாட் டானுடைய ஆட்சி ஆதிக்கத்திலிருந்து முழுச் சுதந்திரத்துடன் விலக வேண்டும் என்ற முயற்சிக்கு ஒத்துழைக்க முன்வர இஷ்டப்படாத ஆந்திரா, கேரளா, கன்னட நாடுகள் திராவிட நாட்டிலிருந்து விலக்கமடைந்துவிட்டதற்கு இக்கமிட்டி மகிழ்ச்சி அடைவதோடு, இனி தமிழ்நாடு முழு சுயேச்சை விடுதலைக்கு அதிதீவிரமாக பாடுபட வேண்டியதென இக்கமிட்டி தீர்மானிக்கிறது. (விடுதலை: 26.10.1956) என்பதே அந்தத் தீர்மானம். தீர்மானத்தோடு பெரியார் மனநிறைவடைந்துவிடவில்லை.

1938-இல் ‘தமிழ்நாடு தமிழர்க்கே’ என்ற முழக்கத்தை முன் வைத்திருந்தா லும், அப்போதைய அரசியல் பரப்பால் ஒருங் கிணைந்திருந்த சென்னை மாகாணத்தில் இணைந்திருந்ததோடு மட்டுமின்றி, பார்ப்பனர் அல்லாத மக்களின் அமைப்பான நீதிக்கட்சியிலும் கலந்திருந்த மலையாள, கன்னட, தெலுங்கு மக்களின் ஒத்துழைப்புக்காக 1939-இல் அவர்களையும் இணைக்க ‘திராவிடநாடு திராவிடருக்கே’ என்ற முழக்கத்தை முன்வைத்து இயங்கி வந்தார் பெரியார்.

ஆனால், 1953-இல் ஆந்திரமும், 1956-இல் கன்னட, மலையாளப் பகுதிகளும் தனியாகப் பிரிந்து போன பின்பும், அம்முழக்கத்தை ஏன் தொடர்ந்து வைத் திருக்க வேண்டும் எனக் கருதி முழக்கத்தை ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என மாற்றியமைத்து, அதையே தன் வாழ்நாள் இறுதிவரை கைக் கொண்டிருந்தார்.

தொடர்ந்து ‘திராவிடநாடு திராவிடருக்கே’ என்ற முழக்கத்தை வைத்துக் கொண்டு இயங்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தை இது குறும்பல்லவா? நமது வேலைகளைக் குலைப்பதல்லவா? குறுக்குசால் ஓட்டுவதல்லவா? என்று கடுமையாகச் சாடியதையும் இக்கட்டுரையின் முன் பகுதிகளில் பார்த்தோம்.

ஆக, 1929-ஆம் ஆண்டில் பெரியாரின் பார்வையில், உத்திர பிரதேசம், குஜராத், இராஜஸ்தான், இன்றைய சட்டீஸ்கர் ஆகியவற்றை வெளிநாடாகவே கருதி வந்திருக்கிறார். அதோடு, பிற்காலத்தில் தமிழ்நாட்டோடு இணைந்து நீண்ட நெடுங்காலம் ஒரே அரசியல் அலகாய் இயங்கி வந்த கன்னடர், தெலுங்கர், மலையாளிகள் ஒழிந்தால் தேவலாம் என்று கூறி வந்திருக்கிறார். ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கத்தை 1956 முதல் 1973 ஆம் ஆண்டின் இறுதியில் நிகழ்ந்த தன் சாவு வரை தொடர்ந்து கைக் கொண்டிருந்துள்ளார்.

ஆனால், நெடுஞ்செழியன் தனது ‘தி.மு.க.’ என்ற நூலில் தவறுதலாக, எவ்வித ஆதாரத் துணையுமின்றி, நினைவுப் பிசகாக குறிப்பிட்டுள்ள ஒற்றைக் குறிப்பைக் கையிலெடுத்துக் கொண்டு, தமிழறிஞர்களே ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கத்தை முன் வைத்தார்கள் என குதூகலமாக குறிப்பிடும் தோழர் மணியரசன் தொடர்ச்சியாகத்  தங்கள் வாழ்நாள் இறுதி வரை கூட வேண்டாம், 1938-க்குப் பிறகு தமிழ்நாட்டு விடுதலை குறித்து, அந்த தமிழறிஞர்கள் ஓருமுறையாவது பேசியதை எடுத்துக் காட்ட முடியுமா என்று சவால் விட்டுக் கேட்க விரும்புகிறோம். சரி, 1929-இல் கூறியதன் தொடர்ச்சி உண்டா? உண்டு. அவற்றையும் பார்ப்போம்.

சேலத்தில் நடைபெற்ற வன்னியகுல சத்திரியர் மாநாட்டில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவில் அவர் குறிப்பிடும் ஒரு செய்தி நாம் விவாதித்துக் கொண்டுள்ள செய்தி குறித்த அவர் பார்வையை விளக்குகிறது.

“இந்தியா ஒரு நாடு என்று ஆதனால் தானே இந்தியா முழுமையும் பற்றிப் பேச நமக்கு உரிமை உண்டு. இப்போது இந்தியா ஒரு நாடாக இருக்கின்றதா?

நீங்களே யோசித்துப் பாருங்கள்!  சாதிகள் காட்சி சாலையாக, மத கண்காட்சி சாலையாக, பாஷைகள் கண்காட்சி சாலையாக, சாமிகள் காட்சி சாலையாக இருக்கின்றதே  ஒழிய வேறு  என்னமா யிருக்கின்றது?

இந்த நிலையிலுள்ள இந்தியா விடுதலையோ முன்னேற்றமோ அடைவது என்பது சாட்தியமானதாகுமா? என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்”  என்பதே அது. (குடிஅரசு – 01-06-1930)

இதன் வழியாக பெரியார் கூறவரும் கருத்துகள் தான் என்ன? முதலில் இந்தியா என்பது ஒரே நாடு அல்ல என்று கூறுகிறார். அது பல நாடுகள் சேர்ந்த ஒரு நிலப்பரப்பு என்பதே அவர் கருத்து. இந்தியா ஒரே நாடு என்றால்தானே நாம் அதுபற்றி, அதாவது, இந்தியா முழுமையையும் பற்றிப் பேசமுடியும் என்ற சொற்கள் இந்தியா முழுமையையும் பற்றிப் பேசமுடியாது;  தமிழ்நாடாகிய நமது நாட்டைப் பற்றி வேண்டுமானால் பேசலாம் என்ற கருத்தைதானே அது காட்டுகிறது !

அது மட்டுமல்ல, வேறு வேறான பலவற்றின் தொகுப்பாக விளங்கும் கண்காட்சி சாலை போன்றே இந்தியா உள்ளது. அதாவது பல்வேறு சாதிகளாய் உள்ளவற்றின் தொகுப்பாக, மதங்களின் தொகுப்பாக மட்டுமல்ல;  பல்வேறு மொழிகளின் (பாஷைகளின்) தொகுப்பாகவும் இந்தியா விளங்குகிறது என்பதைத் தான் அவர் குறிப்பிடுகிறார்.  அதாவது பல்வேறு மொழிகளைப் பேசும்,  பல்வேறு மொழிவழி தேசிய இனங்களைக் கொண்டதுதான் இந்தியா என்ற கருத்தை 1930-இலேயே அவர் கொண்டிருந்தார் என்பதைத் தானே இது காட்டுகிறது!

அடுத்து 1936-ஆம் ஆண்டுக்கு வருவோம். 1936-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ஆம் நாள் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த் திருநாள் விழா நடைபெறுகிறது. பொங்கல் விழாவையொட்டி நடைபெற்ற அவ்விழாவில் பெரியார், “ தீபாவளி போன்ற மூடநம்பிக்கையும், சுயமரியாதை அற்றதும், ஆபாச மானதுமான பண்டிகைகளைக் கொண்டாடுவதைவிட இப்படி தமிழ்த் திருநாள் என்று தமிழ்மக்கள் கூட்டுறவுக்கும், மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்துக்கும் அனுகூலமாகத் திருநாள்களைப் பரப்பவேண்டும். நமது பெண்களும் பகுத்தறிவும், சுயமரியாதையும் இருந்தாலும் ஒரு திருநாள்  வேண்டியிருக்கிறதால், தீபாவளியை யும், மதப் பண்டிகைகளையும் கொண்டாட ஆசைப்படுகிறார்கள்” என்று பொங்கலை தமிழ்த் திருநாள் என ஒரு மாற்று விழாவாகக் கொண்டாடுமாறு பரிந்துரைத்ததும் அக்கூட்டத்தில் தான்.

அதே கூட்டத்தில் இந்தியா குறித்தும் பேசுகிறார்.  “ஷேக்ஸ்பியர்வேண்டுமா? இங்கிலாந்துவேண்டுமா? என்றால் இங்கிலீஷ் மகனே ஷேக்ஸ்பியர் வேண்டும் என்பானாம்.  நாம் எதைக் கேட்பது? இந்தியா வேண்டுமா? கம்ப இராமாயணம் வேண்டுமா?  என்றால் உண்மைத் தமிழ்மகன் என்ன சொல்லுவான்? இரண்டு சனியனும் வேண்டாம் என்றுதானே சொல்லுவான்” (குடிஅரசு – 01-06-1930) என்கிறார் பெரியார்.

இதில் முதல் கேள்விக்கு வெறுமனே இங்கிலீஷ் மகன் என இங்கிலாந்தின் குடிமகனைக் குறிப்பிட்டவர், இரண்டாவது கேள்விக்கு “உண்மைத் தமிழ்மகன்” என்று பிரித்துக் கூறுகிறார். அதாவது உண்மையான தமிழ்நாட்டினர் எவர் ஒருவரும் தமிழரை இழிவுபடுத்தும் கம்பராமாயணத்தை மட்டுமல்ல; தமிழரை அடிமைப்படுத்தும்  ‘இந்தியா’ என்ற அரசியல் கட்டமைப்பையும் ஏற்க மாட்டார்கள் என்பதையே கூறுகிறார். ஆக, சுயமரியாதையுள்ள தமிழர் ‘இந்தியா’ வில் இருக்க விரும்பமாட்டார்கள் என்பதன்வழி தனித் தமிழ்நாட்டை விழைவது தான் இதன் உள்ளடக்கம் என்பதை அறிய முடியும்.  இதுவே 1936-ஆம் ஆண்டில் இந்தியா, தமிழ்நாடு குறித்து பெரியார் கொண்டிருந்த நிலைப்பாடு ஆகும்.

அடுத்ததாக இந்தி திணிப்பு குறித்த இராஜாஜி அரசின் கருத்துகள் வெளிவரத் தொடங்கிய  1937-ஆம் ஆண்டின் நிலைப்பாடுகளைக் குறித்துப் பார்ப்போம்.

25.9.2014-ஆம் நாளிட்ட ‘பெரியார்முழக்கம்’ இதழில் 1937 அக்டோபரில் நடை பெற்ற சென்னை பொதுக் கூட்டத்திலும், அதே அக்டோபரில் திருநெல்வேலியில் தமிழ்ப் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திலும்  12.11.1937 அன்று திருவையாறு செந்தமிழ்க் கல்லூரி சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திலும் ஆந்திரா தனியாகப் பிரிய முயல்வதைப் போல தமிழருக்கு என்றும் தனியாக தமிழ்மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரும் தீர்மானங்களை நாவலர் சோமசுந்தர பாரதியார் முன்மொழிந்த செய்திகளைப் பார்த்தோம். மேற்கூறப்பட்ட மூன்று கூட்டங்களுக்கும் முன்னதாக 19.91937 அன்று ஈரோடு கொல்லம்பாளையத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில் பெரியார்  ஆற்றிய உரையைப் பார்ப்போம்.

“இந்தியா நம் தாய்நாடு என்று சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? இந்தியா என்கிற பெயர் இந்த நாட்டுக்கு எப்போது ஏற்பட்டது? இதற்கு எல்லை என்ன? பர்மா போன வருஷம் பிரிந்து விட்டது. அதற்கு முன் இலங்கை பிரிந்துவிட்டது. அதற்கு முன் மலேயா பிரிந்து விட்டது. அதற்கு முன் நேப்பாளம், புத்தான் (பூட்டான்) பிரிந்து விட்டது. இப்படியே எவ்வளவோ பிரிந்து எவ்வளவோ சேர்ந்திருக்கிறது. இந்த நிலையில் தாய்நாடு எது? தகப்பன் நாடு எது?  புராணகாலத்தில்  56 நாடுகள் இருந்ததே. அப்போது ஒரு நாட்டுக்காரன் ஒரு நாட்டைத்  தாய்நாடு என்று கருதினானா?

இப்போதும் நேற்று சட்டசபையில் ஆந்திரர்கள் தங்களைத் தமிழ்நாட்டிலிருந்து பிரித்துத் தனி மாகாணம் ஆக ஆக்க வேண்டுமென்கிறார்கள்.  மாகாண சுதந்திரம் கொடுத்து, மாகாணத்திற்கு மாகாணம் சர்வ சுதந்திரமாய் தன்தன் காலிலேயே நிற்கும்படியான நிலைமை ஏற்பட்டு, ஐரோப்பா தேசத்தைப் போல் பாஷை வாரியாக தனித்தனி நாடாகப் பிரிந்து கொண்டால் இந்தியா எப்படி எல்லோருக்கும் தாய்நாடாகும்? நேபால் நம் ஒரு ஜில்லா போலுள்ள விஸ்தீரணம். அவர்கள் இந்தியாவைத்  தாய்நாடென்பார்களா? சையாமில் (இன்றைய தாய்லாந்து )பெரிதும் இந்து மதம் தான். அவர்கள் இந்தியாவைத் தாய்நாடென்பார்களா?

ஐரோப்பாவில் நார்வே,  ஸ்வீடன், டென்மார்க்,  ஹாலண்ட்,  பெல்ஜியம், போர்த்துக்கல், கிரீஸ் ஆகிய நாடுகள் நமது நான்கு ஜில்லா, மூன்று ஜில்லா, இரண்டு ஜில்லா விஸ்தீரணமுள்ளவை. இவர்கள் எல்லோரும் தங்கள் நாட்டைத் தாய் நாடென்பார்களே ஒழிய,  ஐரோப்பாவைத் தாய்நாடென்பார்களா?  ஆகவே, தமிழ் நாட்டவர்கள்,  திராவிடமக்கள் எந்தக் காரணம் கொண்டு இந்தியாவை தாய் நாடென்று கூறவேண்டும் என்பதும், இந்தியா பூராவும் எப்போதும் ஒரே குடை யின் கீழ் இருக்கவேண்டும் என்பது எனக்கு விளங்கவில்லை” என்கிறார் பெரியார்.

இவ்வுரைப் பகுதி வெளிப்படுத்தும் செய்திதான் என்ன? ஒரு மாவட்ட அளவிலான பரப்பு கொண்ட நேபாளம் தனிநாடாக இருக்கமுடியும்போது,  இரண்டு, மூன்று, நான்கு மாவட்டங்களின் பரப்புடைய பல ஐரோப்பிய நாடுகள் தனிநாடுகளாக இருக்க முடியும் என்கிறபோது, தமிழ்நாடு மட்டும் ஏன் தனிநாடாக இருக்கமுடியாது? என்பது ஒன்று.

மொழிவழியாக அப்போது கேட்கப்பட்டு வந்த ஆந்திர மாநிலம் போல சர்வ சுதந்திரமான வாய்ப்போடு அனைத்து மொழிபேசும் பகுதிகளும் தனிநாடுகள் ஆகவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ஆவலும் மற்றொன்று.

குறிப்பாக தமிழ்நாட்டவர் எதற்காக இந்தியாவை தாய்நாடென்று கூறவேண்டும்? தேவையில்லையே என்ற குறிப்பு மற்றொன்று ஆகிய மூன்று செய்திகளை அழுத்தமாக உரைக்கும் பகுதிகளல்லவா இவை?

அதே உரையின் தொடர்ச்சியாகக் கூறும் செய்திகளையும் பார்ப்போம்.

“இந்தியா ஒருநேஷனா? அதற்கு பாஷை எது? மதம்எது? இந்தியாவில் எத்தனை மதம்? எத்தனை ஆச்சார அனுஷ்டானம்? இந்து மதத்தால் இந்தியா நேஷனாயிற்று  என்றால் அதாவது நேஷனுக்கு மதமே பிரதானம் என்றால் இஸ்லாமியருக்கும், கிறித்துவருக்கும், பௌத்தருக்கும், பார்சிகளுக்கும் இந்தியா நேஷனாகுமா? எதைக் கொண்டு அவர்கள் இந்தியாவை நேஷன் என்பது. பாஷையைக் கொண்டு நேஷன் பிரிப்பது என்றால் மாகாணம் ஒன்றுக்கு நான்கைந்து நேஷன் ஆகிவிடாதா?” என்ற கேள்விகளை எழுப்புகிறார் பெரியார்.

தொடர்ச்சியாக, “மதராஸ் ஒரு நேஷன் அல்லவென்றும், அது தனித்து இருக்கமுடியாது என்றும் கே.பி.பிள்ளை சொன்னார். மதராஸ் ஒரு தனி நேஷனாய் இருந்தது. இன்றும் இருக்கிறது” என்றுகுறிப்பிடுகிறார்.

எல்லாம் சரி.  அதற்குத் தீர்வுதான் என்ன? அதையும் அதே உரையின் பிற்பகுதியில் கூறுகிறார் பெரியார்.  “இன்றைய அரசியலைப் பார்க்கின்றபோது, எக்காரணம் கொண்டாவது, எப்பாடுபட்டாவது, நம் நாட்டை வடநாட்டு சம்பந்தத்திலிருந்து தனியாய் பிரித்துக் கொண்டால் ஒழிய நமக்கு நாட்டு விடுதலையோ, மானமோ ஏற்படப் போவதில்லை”. இதுதான் பெரியார் கூறும் தீர்வு. 19.9.1937-இல் ஆற்றிய இவ்வுரை 26.9.1937 நாளிட்ட  ‘குடிஅரசு’  இதழில் வெளியிடப்பட்டுள்ளது.                              

  (தொடரும்)

Pin It