ஆர்.எஸ்.எஸ் ஓர் அபாயம் உள்ளிட்ட மூன்று நூல்களை வெளியிட்டு ஆ.இராசா முழக்கம்

கருஞ்சட்டைப் பதிப்பகம் சார்பில், மூன்று நூல்கள் வெளியீட்டு நிகழ்வு 19.11.2022 அன்று மாலை 6 மணியளவில், தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்றது.

கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்’ கவிஞர் பிரபஞ்சன் எழுதிய “ஈரோடு தமிழர் உயிரோடு”, கவிஞர் நா.காமராசு எழுதிய , ‘ஒரு குயிலின் போர்ப் பாட்டு’ ஆகிய நூல்கள் மறு பதிப்பு செய்து வெளியிடப்பட்டது.a raja ajitha and thayappanமருத்துவர் தாயப்பன், வழக்கறிஞர் அஜிதா, மு.செந்திலதிபன் (மதிமுக) ஆகியோர் நூல்களை திறனாய்வு செய்து உரையாற்றினர். நிறைவாக திமுக துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா சிறப்புரை யாற்றினார்.

கருஞ்சட்டைப் பதிப்பகம் இயக்குனர் பெல். இராசன் நிகழ்விற்கு தலைமையேற்று நிகழ்வை ஒருங்கிணைத்தார். சிறப்புரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா உரையில் -

“ஆரிய திராவிடப் போராட்டம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அந்தப் போராட்டத்திற்கு வலிமை சேர்க்கும் கருத்தாயுதங்களாக இந்த ஆர்.எஸ்.எஸ் ஓர் அபாயம் உள்ளிட்ட முன்று நூல்களும் பயன்படும் என்பதற்காக கருஞ்சட்டைப் பதிப்பகம் இதை வெளிக் கொண்டு வந்திருக்கிறது. இந்த நூல்களை 40 ஆண்டுகளுக்கு முன்னால் நாங்கள் சரித்திரங்களாகப் படித்து கடந்து வந்தவர்கள். திராவிடர் கழக பயிற்சி முகாமில் இவைகளெல்லாம் எங்களுக்கு கற்பிக்கப்பட்டன. அன்றைக்கு எதிரிகள் நேர்மையானவர்களாக இருந்தனர்.

1962இல் அண்ணா, ‘நான் திராவிட மரபினத்தைச் சேர்ந்தவன்’ என்று மாநிலங்களவையில் பேசிய போது, அதை எதிர்த்துப் பேசுவதற்கு ஒரு ஜன சங்கத்துகாரருக்குக் கூட யோக்கியதை இல்லை. ஆனால் இன்றைக்கு மூளை இல்லாதவர்களெல்லாம் ராஜ்பவனில் உட்கார்ந்து கொண்டு திராவிடம் என்ற ஒன்றே இல்லை என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆதி சங்கரரே ‘திராவிட சிசு’ என்று கூறினார். அவர்கள் சொன்னால் திராவிடத்தை ஒப்புக் கொள்வார்கள், நாம் கூறினால் திராவிடத்தை எதிர்ப்பார்கள்.

இந்திய ஒருமைப்பாட்டுக் குழுவின் தலைவராக, நேருவால் நியமிக்கப்பட்ட சர்.சி.பி. இராமசாமி அய்யர் தன்னுடைய பட்டமளிப்பு விழா உரையில், ‘இந்தியாவில் இரண்டு பண்பாடுகள் உண்டு, ஒன்று சமஸ்கிருதப் பண்பாடு மற்றொன்று தமிழ் பண்பாடு’ என்று தெளிவாக அவர் வேறுபடுத்திக் கூறியிருக்கிறார். இந்த வரலாறு தெரியாதவர்களெல்லாம் இன்றைக்கு ஆளுநர்களாக வந்து விட்டார்கள்” என்று குறிப்பிட்டுப் பேசினார்.

அவரது முழு உரை பின்னர் வெளிவரும்.

ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம் - 10,000 பிரதிகளை ஆ. இராசா பெற்றுக் கொண்டார்

‘ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்’ நூலை மலிவு விலையில் கொண்டு வந்தால் மக்களிடம் பரப்புவதற்கு எளிதாக இருக்கும் என்று நூலை திறனாய்வு செய்த வழக்கறிஞர் அஜிதா குறிப்பிட்டார். தொடர்ந்து கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் இயக்குனர் பெல். இராசன், “குறைந்தது 10000 புத்தகத்திற்கான செலவை ஏற்றுக் கொண்டால் நிச்சயம் கொண்டு வருவோம்” என்றார். சிறப்புரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா, “பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் 10,000 நூல்களுக்கான செலவை ஏற்றுக் கொள்கிறோம்” என்று பலத்த கரவொலிக்கிடையில் அறிவித்தார்.