2024 நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை இந்துக்களை வளைக்கவும், உயர்ஜாதி இந்துக்களின் ஆதரவைப் பெறவும் பாரதிய ஜனதா கட்சிக்கு 2 முக்கியத் தீர்ப்புகள் பயன்படும் என்றே சொல்லலாம். ஒன்று, 2019ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட அயோத்தி தீர்ப்பு, மற்றொன்று தற்போது வழங்கப்பட்டுள்ள உயர்ஜாதி ஏழை களுக்கான பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு. அரசியலமைப்பின் 15 மற்றும் 16-வது பிரிவுகள் திருத்தப்பட்டு, பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு 2019ஆம் ஆண்டு ஜனவரியில் கொண்டு வரப்பட்ட போது தென்னிந்தியாவைத் தாண்டி எதிர்ப்புகள் மிகச்சொற்பமே. உச்சநீதிமன்றத்தில் 5 பேர் கொண்ட அமர்வில் 3 பேர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும், இருவர் எதிராகவும் தீர்ப்பளித்தனர். இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தவர்களில் நீதிபதி ஜே.பி.பார்திவாலாவும் ஒருவர். இவர் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது தீர்ப்பு ஒன்றில் சம்மந்தமே இல்லாமல் இடஒதுக்கீட்டிற்கு எதிராக கருத்துக்களை வெளிப்படுத்தியவர்.

பதவி நீக்கத்தைச் சந்தித்த நீதிபதி

“இந்த நாட்டை அழித்த அல்லது நாட்டைச் சரியான பாதையில் முன்னேற அனுமதிக்காத இரண்டு எது என யாராவது என்னிடம் கேட்டால், அது இடஒதுக்கீடு மற்றும் ஊழல் என்பேன். நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆன பிறகும் யார் ஒருவராக இருந்தாலும் இடஒதுக்கீடு கேட்பது மிகவும் வெட்கக் கேடானது” என்ற தீர்ப்பெழுதிய பார்திவாலா இப்போது பொருளாதார அடிப்படை யிலான இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு எழுதியிருக்கிறார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அவரை பதவி நீக்கம் செய்யக்கோரும் வகையில் உறுப்பினர்களிடம் கையெழுத்து சேகரிக்கத் தொடங்கியவுடன், சர்ச்சைக்குரிய அந்த பத்திகளை தீர்ப்பில் இருந்து நீக்கி விட்டார். குஜராத் உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்த அகில் குரேசி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவில்லை, ஆனால் பார்திவாலா நியமிக்கப்பட்டார். உயர் ஜாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை சரி என்று ஒரு நீதிபதி கூடுதலாக தீர்ப்பளித்ததால்தான் ஏற்கப்பட் டுள்ளது. மிக இளைய நீதிபதியான பார்திவாலாவை யும் அமர்வில் இணைத்து, அவர்களுக்கு வேண்டிய தீர்ப்பை பெற்றிருக்கிறார்கள்.

chandru 318இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் ஐந்து நீதிபதிகளும் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை எதிர்க்க வில்லை. 10 விழுக்காடு இடஒதுக்கீடு உச்சநீதிமன்றம் இதற்குமுன்பு வழங்கிய 50 விழுக்காடு வரம்பை மீறக்கூடாது என்ற உத்தரவை மீறுகிறது என்றும், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் இந்த இட ஒதுக்கீட்டில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர் என்றும் தான் 2 நீதிபதிகள் எதிர்த்து தீர்ப்பளித்துள்ளனர். சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தங்கியவர்களை உயர்த்துவதற்காக, அரசிய லமைப்பின் 15 மற்றும் 16ஆவது பிரிவுகளில் கூறப்பட்டவற்றை அவர்கள் மறந்துவிட்டார்கள்.

பழைய மதராஸ் மாகாணமாக இருந்தபோது நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் ஜாதி மற்றம் மத அடிப்படையில் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை நீண்டகாலமாக இருந்தது. 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகும் இந்த நடைமுறை தொடர்ந்தது. அப்போது மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கும் இட ஒதுக்கீடு இருந்தது. பார்ப்பனரல்லாத இந்துக்கள், பிற்படுத்தப்பட்ட இந்துக்கள், பார்ப்பனர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், கிறித்தவர்கள், இசுலாமியர்களுக்கு இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்தது.

1950-51 கல்வியாண் டிற்கான மருத்துவம், பொறியியல் மாணவர் சேர்க்கை நடைபெற்ற போது இட ஒதுக்கீட்டால் தங்களுக்கு இடம் மறுக்கப் பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 பார்ப்பன மாணவர்கள் வழக்கு தொடுத்தனர். அதில் ஒருவரான செம்பகம் துரைராஜன், அரசியலமைப்பு சட்டப் பிரிவு 15(1) ஜாதி அடிப்படையில் பாகுபாடு பார்ப்பதை தடை செய்திருப்பதாகவும், ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் இல்லாமல் தகுதி அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை இருக்க வேண்டுமென்றும் வாதிட்டார். இந்த வாதங்களை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் 1950 ஜூலை 27ஆம் தேதி, மதராஸ் மாகாண அரசின் இடஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்தது. ஆனால் செம்பகம் துரைராஜன் அப்போது உண்மையில் மருத்துவ படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்கவே இல்லை, அதற்கான வயது வரம்புக்குள்ளும் அவர் அப்போது இல்லை.

உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. தலைமை நீதிபதி ஹீராலால் கானியா தலைமையிலான அமர்வு, சென்னை மாநிலத்தின் இட ஒதுக்கீடு அரசாணை அரசியலமைப்பு சட்டத்தின் 29 (2) ஆவது பிரிவுக்குப் புறம்பானது என்றும், இடஒதுக்கீட்டை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லும் என்றும் தீர்ப்பளித்தது. ஏறத்தாழ 17 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் செண்பகம் துரைராஜன் வழக்கு பேசுபொருளானது. “பல நூற்றாண்டுகளாக பாரபட்சம் காட்டப்பட்ட வர்களை உயர்த்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், யாருக்கு எதிராகவும் பாரபட்சம் காட்டுவதாகாது. சட்டப்பிரிவு 16(4) மற்றும் 340 ஆகியவை ஏற்கெனவே பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கியுள்ளன. அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார நலன்களை சிறப்பு அக்கறையுடன் அரசு ஊக்குவிக்கலாம் என்று சட்டப்பிரிவு 46 கூறுகிறது. இந்த பிரிவுகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலையை உயர்த்த எடுக்கப்படும் நடவடிக்கை ஜாதி அடிப்படையிலான பாகுபாட்டை ஏற்படுத்துவதாகக் கொள்ள முடியாது” என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

வறுமையைக் காட்டிலும் ஜாதியே முதன்மையானது

பிற்படுத்தப்பட்டவர்கள் யார் என்று கண்டறிய கர்நாடக அரசு ஆணையம் ஒன்றை அமைத்தது. இதே கேள்வி உச்சநீதிமன்றத்திலும் எழுந்தபோது, நீதிபதி ஓ.சின்னப்பரெட்டி ஜாதி மற்றும் வர்க்கத்திற்கு இடையிலான தொடர்பை விளக்கினார். “இந்திய கிராமப்புற சமூகத்தில் சமூக நிலையும், பொருளாதார வலிமையும் ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ளன. வறுமையைக் காட்டிலும் ஜாதியே முதன்மையானது என்று தயங்காமல் சொல்லலாம். ஒரு நபரின் சாதியைக் குறிப்பதன் மூலம் சமூகப் பின்தங்கிய நிலையை பெரும்பாலும் எளிதில் அடையாளம் காணக்கூடியதாக இருக்கிறது. வறுமை, சாதி, தொழில் மற்றும் குடியிருப்பு ஆகியவை சமூகத்தில் பின்தங்கிய வகுப்பினராக ஒருவர் இருக்க பங்களிக்கும் முக்கிய காரணிகள்” என்றார் அவர்.

மண்டல் கமிசன் அறிக்கையின்படி, சமூக மற்றும் கல்வி ரீதியாக பின் தங்கியவர்களுக்கு 1990-களில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டபோது, பாஜகவும், அதன் இளைஞர் மற்றும் மாணவர் பிரிவும் நாடு தழுவிய போராட்டத்தைத் தொடங்கி, மிகப்பெரிய வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டன. இடஒதுக்கீடு தகுதி திறமைக்கு எதிரானது என்றும், இடஒதுக்கீடு இல்லாத வகுப்பினருக்கு சம உரிமை மறுக்கப்படு வதாகவும் எதிர்த்தனர். அப்போது இட ஒதுக்கீடு வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு வந்தது. 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு 1992-ஆம் ஆண்டில் வழங்கிய தீர்ப்பில், சமூக மற்றும் கல்வி ரீதியாக இட ஒதுக்கீட்டை ஏற்றது. கிரிமீலேயர் கூடாது என்றும் விலக்கியது. பொருளாதார ரீதியில் பின்தங்கி யோருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிப்பது அரசியல் சாசன விரோதம் என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. அரசியல் சாசனம் அதை அனுமதிக்க வில்லையென்பதோடு, இட ஒதுக்கீடு என்பது வரலாற்று ரீதியில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களை மேம்படுத்துவதற்கான வழியே தவிர, வறுமையை போக்குவதற்கான திட்டமல்ல என்றும் குறிப்பிட்டது. அதே சமயம் இட ஒதுக்கீடு 50 விழுக்காடு வரம்பை மீறக்கூடாது என்றும் உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்புக்குப் பிறகு இட ஒதுக்கீடு தொடர்பாக 2 முறை சட்டத் திருத்தம் செய்யப்பட்டன. 1995இல் செய்யப்பட்ட 77ஆவது சட்டத்திருத்தம் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அளித்தது. 2005ஆம் ஆண்டில் மேற் கொள்ளப்பட்ட 93ஆவது சட்டத்திருத்தம் அரசுப் பணிகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்தது. இவற்றை உச்சநீதிமன்றம் உறுதி செய்தாலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு ஊழியரின் பின்தங்கிய நிலை, அரசுப் பணி பதவி உயர்வுகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு போதிய வாய்ப்பு இல்லாமை, சம்பந்தப்பட்ட ஊழியரின் பணித் திறமை ஆகியவற்றை கணக்கில் கொண்டு இட ஒதுக்கீட்டை அளிக்கலாம் என்றும் 2006ஆம் ஆண்டில் கூறியிருந்தது. பல மாநில அரசுகள் இதனை செயல்படுத்த முயன்றபோது எதிர்ப்புகள் கிளம்பின. இதுதொடர்பாக தரவுகளை சேகரிக்க உத்தரகாண்ட் அரசு ஒரு குழுவை நியமித்தது. அக்குழு எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்த போதும் மாநில அரசு அதை செயல்படுத்த மறுத்தது. இதுதொடர்பான மேல்முறையீட்டில், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், நீதிமன்றங்கள் அவ்வாறு வழங்குமாறு மாநில அரசுகளை கட்டாயப்படுத்தாது என்றும் 2020இல் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த உத்தரவால் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதில் உறுதியான நடவடிக்கையை எதிர்பார்ப்பது கானல் நீரானது. அதேபோல பொதுத்துறை நிறுவனங்கள் அரசின் வசம் இருக்கும்போது அவற்றில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது அரசியலமைப்புச் சட்டம் 12 இன் கீழ் கட்டாயமாகிறது. ஆனால் தனியார்மயம், தாராளமயம் என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து முதலீடுகளை திரும்பப் பெறுவதன் மூலம் சமூக மற்றும் கல்வி ரீதியாக பின் தங்கியவர்களுக்கு கொடுக்கப்படும் இட ஒதுக்கீடு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் முதல் ஐந்தாண்டு ஆட்சிக்காலம் நிறைவின்போது, திடீரென 103-வது சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து, 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கான மசோதாவை நிறைவேற்றினார்கள்.இது 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பெரிதும் உதவும் என்று பாஜக நினைத்தது. 10 விழுக்காடு இட ஒதுக்கீடு உச்சநீதி மன்றம் உத்தரவிட்ட 50 விழுக்காடு என்ற அளவுகோலை மீறும் என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. எஸ்.சி., எஸ்.டி. இட ஒதுக்கீடு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஓ.பி.சி. இட ஒதுக்கீடு மக்கள் தொகை எண்ணிக்கை ஏற்ப இல்லாமல், 27 விழுக்காடாக குறைக்கப்பட்டது. ஆனால் உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு எந்த அடிப்படையில் வந்தது என்பது புரியவில்லை.

மார்க்சிஸ்ட்டுகள் குழப்பம்

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை இட ஒதுக்கீட்டில் இருந்து விலக்குவதற்கு வைக்கப்பட்ட கிரீமிலேயர் வரம்பைக் காட்டிலும், பொருளா தாரத்தில் பின் தங்கியோருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான வருமான வரம்பு அதிகம். பொருளாதார ரீதியாக ஏழையாக இருந்தாலும் உயர் ஜாதியினருக்கு மட்டுமே இந்த இட ஒதுக்கீடு பொருந்தும், மற்ற சமூகங்களுக்கு இதில் இடஒதுக்கீடு கிடையாது. எப்போதும் இட ஒதுக்கீடு என்றாலே தகுதி, திறமை என்று பேசும் கூட்டம், பாரதிய ஜனதா அரசு 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை கொண்டுவரும் போது மட்டும் அதைப்பற்றி எதுவும் பேசவில்லை. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கும்போது மட்டும் தகுதி, திறமையை பற்றிய கேள்விகள் தவறாமல் எழுகின்றன. இந்த மோசடியை காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளே எதிர்க்காதது ஆச்சர்யத்தை தருகிறது.

கடந்த 27 ஆண்டுகளில், மாநில அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களின் எந்த ஒரு திட்டத்திலும், அதிகாரிகள் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க முடியவில்லை. ஏறக்குறைய ஒவ்வொரு நடவடிக்கையும் நீதிமன்றத்தால் எதிர்க்கப்பட்டது மற்றும் அந்தந்த மாநில அரசுகள் செய்த திருத்தங்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

நீதித்துறையில் பெண்கள், சிறுபான்மையினர், எஸ்.சி, எஸ்.டி. மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை. அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 72 ஆண்டுகள் ஆகியும் உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் அனைத்து பிரிவினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. நீதித்துறையின் உயரிய பொறுப்புகள் உயர் ஜாதியினரின் ஆதிக்கத்தில்தான் உள்ளது. இந்த பின்னணியில் தான், செண்பகம் துரைராஜன் வழக்கில் 72 ஆண்டுகளுக்கு முன்பு ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ரத்து செய்த நீதிமன்றம், இப்போது 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை முற்றிலும் உயர் ஜாதியினருக்கு வழங்கும் சட்டத்திருத்தத்தை சரி என கூறியிருப்பதையும் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு தெளிவான மோசடியாகும்.

(சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.சந்துரு, தி ஃபெடரல்.காம் (புதிய தலைமுறையின் ஆங்கில இணைய பதிப்பு) ஊடகத்திற்கு எழுதிய கட்டுரையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு. 

தமிழில் பிரகாசு)