தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்கு, ஊழலை ஓர் அளவுகோலாகக் கொள்ளும் சமூகமும்; அச்சமூகத்தின் சிந்தனையை நாள்தோறும் கட்டுப்படுத்தும் ஊடகங்களும் – சமூக நீதியை ஓர் அளவுகோலாகக் கொள்வதில்லை. அரசியல் மற்றும் பொருளியல் அதிகாரங்கள் இவர்களின் கண்களை உறுத்துகின்றதே தவிர – அதைவிட பலம் பொருந்திய, ஊழலுக்கு வித்திடும் சமூக – மத – பண்பாட்டு அதிகார மய்யங்கள் மக்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை. நாடாளுமன்றமே நாட்டை ஆள்வதாக நம்பப்பட்டாலும், உண்மையில் ஆளும் அதிகார வகுப்பினரான பார்ப்பனர்களே அதை வழிநடத்துகின்றனர். ஜனநாயக நாட்டின் தூண்கள், இன்றளவும் ஜனநாயகப் படுத்தப்படவில்லை. தேர்தல் அரசியலில் தங்களுக்கு போதிய அதிகாரம் இல்லாததால், அதைக் கொச்சைப்படுத்துவதில் ஆளும் வகுப்பினர் தீவிரம் காட்டுகின்றனர்.

உழைக்கும் மக்களைச் சுரண்டிக் கொழுத்து, உலகப் பணக்காரர்கள் வரிசையில் நிற்கும் லட்சுமி மிட்டல், "ரிலையன்ஸ்' அம்பானி போன்றோரை பெருமை பொங்கப் பார்க்கும் ஊடகங்கள், தமிழக முதல்வர் (குடும்பம்) ஆசியாவின் பணக்காரர்களில் ஒருவராக இருக்கிறாரே என வெறுப்பை உமிழ்வதற்குக் காரணம் என்ன? ஒரு சூத்திரன் இவ்வளவு பெரிய பணக்காரனாக இருக்கின்றானே என்பதால் எழும் ஆத்திரம்தானே! "தினமணி' வைத்தியநாதன்கள் "ஏழை'களாக இருந்தாலும் "பிராமணர்'களாக சமூக – மத அதிகாரத்துடன் வாழ முடிகிறது; ஆனால், அய்ந்து முறை முதல்வராக இருந்தாலும், ஆசியாவின் பணக்காரர்களில் ஒருவராக இருந்தாலும் – கருணாநிதி இன்றளவும் சூத்திரராகவே இருக்கிறாரே? ஊழலைக் கண்டிப்பதிலும் வர்ணாசிரமப் பார்வைதானே!

அரசியலில் நல்ல கட்சிகள் என்று ஏதுமில்லை. தீயவற்றில் எது குறைந்தளவு தீங்கானதோ அதைத்தான் தேர்வு செய்ய இயலும். அவரவர் முன்னிறுத்தும் அளவுகோல்தான், அது எந்த வகையில் குறைந்தளவு ஆபத்தானது என்பதைத் தீர்மானிக்கிறது. தமிழகத்தைப் பொருத்தவரை, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் – தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரு அணிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதே நம்முன் இருக்கும் வழி. தேர்தலைப் புறக்கணிப்பது, எந்த வகையிலும் தீர்வாகாது என்பது மட்டுமல்ல; அது, மோசமான அணிக்கே வலு சேர்க்கும். அவ்வாறு புறக்கணிப்பவர்கள், அதற்கு மாற்றாக என்ன தீர்வை முன்வைக்கிறார்கள்?

"இந்து இந்தியா'வின் பண்பாடாக ஊழல் மாறி, நீண்ட நாட்களாகிவிட்டன. அரசியலைப் போலவே நீதித்துறை, அதிகார வர்க்கம், ஊடகத் துறை என அனைத்தும் ஊழல்மயமாகவே காட்சியளிக்கின்றன. எவ்வித மாற்றுக் கட்சியும் இல்லாத எதார்த்த சூழலில், காங்கிரஸ் கட்சியின் ஊழலை மட்டுமே முன்னிறுத்தினால், மதவெறியும் ஊழலும் இணைந்த பாரதிய ஜனதா கட்சியைதான் தேர்வு செய்ய முடியும். மதவெறி ஆபத்தை முன்னிறுத்தி, வேறு வழியின்றி காங்கிரசை ஆதரிப்பது – அதன் ஊழலை நியாயப்படுத்துவது ஆகாது. அதேபோல, பார்ப்பனத் தலைமையிலான திராவிடர் கட்சிக்கு மாற்றாக, பார்ப்பனரல்லாத தலைமையிலான திராவிடக் கட்சியை ஆதரிப்பது – தி.மு.க.வின் அயோக்கியத் தனங்களை ஏற்றுக் கொள்வதாகப் பொருளாகாது. நம்மளவில் அதை எதிர்த்தும், அம்பலப்படுத்தியும் வருகிறோம். மாற்று அணி இருந்த நிலையிலும், பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருந்த போதும் – அதை நாம் ஆதரிக்கவில்லை.

ஒரு மாற்று அணிக்கான தேவையை எவருமே மறுக்க முடியாது. ஆனால், அதை உருவாக்க கம்யூனிஸ்டுகள் உட்பட எவரும் தயாரில்லை என்பதுதான் வேதனை. அரசியல் சீர்திருத்தம் பேசுகின்றவர்களும், அரசியல் அநீதிகளை கண்டிக்கின்றவர்களும்கூட, இதில் அக்கறை செலுத்துவதில்லை. அதைச் செய்யாமல் குறைகளை மட்டும் சொல்லிக் கொண்டு, தேர்தலைப் புறக்கணித்தõல் – ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் பிரதிநிதித்துவம் பெறுவது எப்படி?

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதன் மூலமே, தமிழர்களை தலைநிமிரச் செய்ய முடியும் என முழங்கிய திராவிடக் கட்சிகள் 40 ஆண்டுகள் கடந்தும், தமிழர்களுக்கு பெருமளவு உரிமைகளைப் பெற்றுத் தரவில்லை. அரசியல் பாதையை தேர்ந்தெடுத்தவர்களின் அவலம் நம் கண்முன் இருக்கும்போது, தலித் மக்களின் சமூக விடுதலைக்கான போராட்டத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு, அதிகாரத் தேடலில் இறங்கியுள்ள தலித் கட்சிகள், போதிய அதிகாரத்தையோ, உரிமைகளையோ பெற்றுவிட முடியாது. குறைந்தபட்சம் தலித் கருத்தியலை முன்வைத்து – அனைத்து தலித் கட்சிகளும் ஒன்றிணைவது என்பதுகூட, இன்றுவரை சாத்தியமற்றதாகவே இருக்கிறது.

இருப்பினும், தலித் மக்கள் அரசியல் பிரதிநிதித்துவம் பெறவும், சாதி ஒழிப்பை முன்னிறுத்தி சமூக மாற்றத்திற்கான பாதையில், தனி அடையாளத்துடன் கட்சியை உருவாக்கிப் போராடும் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் மற்றும் சமூக சமத்துவப்படை ஆகிய கட்சிகளை நாம் ஆதரிக்கிறோம். அந்த வகையில், புதிய தமிழகம் மற்றும் சமூக சமத்துவப் படை ஆகிய கட்சிகள் போட்டியிடும் இடங்களில் அவர்களையும்; பிற இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை உள்ளடக்கிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணியையும் ஆதரிப்பதே நம் நிலைப்பாடு.

Pin It