உச்ச நீதிமன்றம் பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்திருக்கலாம் என்பதற்கு தொல்லியல் துறை அறிக்கையை ஒரு ஆவணமாக எடுத்துக் கொண்டிருக்கிறது. தொல்லியல் அறிக்கை ஏற்கனவே ஆய்வாளர்களால் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. மிகச் சிறந்த வரலாற்று ஆய்வாளரும் பல வரலாற்று நூல்களை எழுதியவருமான டி.என். ஜா, இந்த தொல்பொருள் ஆய்வின் நம்பகத் தன்மைக் குறித்து ‘தி வயர்’ இணைய ஏட்டுக்கு ஏற்கனவே பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர் எழுப்பியுள்ள கேள்விகள் முக்கியமானவை. 

அயோத்தியில் இந்த அகழ்வாய்வை நடத்தியபோது தொல்பொருள் துறையின் இயக்குனராக இருந்தவர் பி.பி. லால். அவர் வெளியிட்ட முதல் ஆய்வு அறிக்கையில் பாபர் மசூதிக்கு கீழே நடத்தப்பட்ட அகழ்வாய்வில் “தூண் தளங்கள்” இருந்ததாக எந்தக் குறிப்பும் இல்லை. (கோயில் இருந்திருக்கலாம் என்பதற்கு இந்தத் ‘தூண் தளங்களே’ ஆதாரம் என்று சங்பரிவாரங்கள் கூறி வந்தன)

பிறகு 1989ஆம் ஆண்டில் ‘இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தில்’ (அய்.சி.எச்.ஆர்.) இது குறித்து அவர் ஒரு கட்டுரை சமர்ப்பித்தார். அந்தக் கட்டுரையிலும் ‘தூண் தளங்கள்’ பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. அதற்குப் பிறகு இராமாயணம் குறித்து அவர் நிகழ்த்திய உரையிலும் இது குறித்து பேசவில்லை. அதற்குப் பிறகு தான் லால் தனது கருத்துகளை மாற்றிக் கொள்ளத் தொடங்கினார்.

1990ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். இது குறித்து ஆய்வு என்ற பெயரில் வெளியிட்ட ஒரு நூலில் மசூதிக்கு அருகே ‘தூண் தளங்கள்’ தென்பட்டதாக லால் எழுதினார். அகழ்வராய்ச்சி நடந்து முடிந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு லால் வெளியிட்ட கருத்து இது. ஆய்வாளர்கள் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்வது உண்டு. அதற்கு நீண்ட ஆய்வுகளும் காலமும் தேவைப்படும். ஆனால் ‘அதிவேகத்தில்’ ஒரே ஆண்டில் தனது கருத்தை மாற்றிக் கொண்டார், லால்.

லால், மற்றொரு கருத்தையும் அப்போது கூறினார். இஸ்லாமியர் கட்டிட மரபுக்கு தொடர்பில்லாத 14 கருப்பு கல்தூண்கள் மசூதி நுழைவாயில் பகுதியில் கண்டறியப்பட்டதாகக் கூறினார். இது குறித்து சந்தேகித்த ஆய்வாளர்கள் தனியே ஆய்வு நடத்துவதற்கு அனுமதி கேட்டனர். ஆனால் தொல்பொருள் ஆய்வுத் துறை அனுமதிக்கவில்லை.

தொல்பொருள் துறையின் ஆய்வறிக்கையை பல ஆய்வாளர்கள் நிராகரித்து விட்டனர். முதலில் இந்த ஆய்வு இதற்காக நிர்ணயிக்கப்பட்ட அறிவியல் முறையில் நடத்தப்படவில்லை. இரண்டாவதாக மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்தது என்று ஏற்கனவே முடிவு செய்து கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு என்று ஆய்வாளர்கள் கூறினார்கள்.

சுப்ரியா வர்மா, ஜெயாமேனன் என்ற இரண்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் 2010 செப்டம்பரில் ‘எக்னாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ இதழில் இந்த ஆய்வின் குளறுபடிகள் குறித்து விரிவான கட்டுரை ஒன்றை எழுதினார்கள். ஆய்வாளர்கள் அரசு அதிகாரத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததால் அவர்கள் நேர்மையான முறையில் ஆய்வை நடத்த முடியவில்லை என அவர்கள் கூறியதோடு, "தொல்பொருள் ஆய்வு நடத்த விரும்பும் எவரும் துறையின் அனுமதி பெற வேண்டும் என்று விதி இருப்பதால் எந்த ஆய்வாளரும் அரசை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. எனவே பலரும் இந்த ஆய்வில் நடந்த முறைகேடுகளைக் கண்டிக்க முன் வரவில்லை” என்றும் அந்த கட்டுரையில் சுட்டிக் காட்டினர்.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர் வர்மா, மசூதிக்கு கீழே கோயில் இருந்தது என்பதற்கு முன் வைக்கப்படும் சான்றுகளை உறுதியாக மறுத்தார். அங்கே மசூதி இருந்ததற்கான தடயங்கள்தான் இருந்தன என்றும் கூறினார்.

இந்த அகழ்வாய்வு - அறிக்கை விலங்குகளின் எலும்புகள், உடைந்த ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டதைக் குறிப்பிடாமல் மறைத்து விட்டது என்றும் ஜா குற்றம் சாட்டினார். 

இந்த தொல்பொருள் ஆய்வு அறிக்கையைத் தான் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் கிடைத்துள்ள அடிப்படையான ஆவணம், என்று நீதிமன்றம் கூறுகிறது.