காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் என்றாலே சங்கர்ராமன் என்ற அர்ச்சகர் வெட்டிக் கொலை செய்யப் பட்டது நினைவுக்கு வரும். சங்கர்ராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காஞ்சி ஜெயேந்திரன் உள்ளிட்ட அனைவரும் விடுதலையாகிவிட்டார்கள். ஆனால், சங்கர்ராமனை கொலை செய்தது யார் என்பதற்கு விடை கிடைக்கவில்லை. தன் கண் முன்னே தனது பக்தன் வெட்டி வீழ்த்தி இரத்த வெள்ளத்தில் சாய்ந்ததை நேரில் பார்த்துக் கொண்டிருந்த “வரதராஜப் பெருமாளும்” அப்படியே “கல்லு”போலவே இருக்கிறார்.

அதே வரதராஜப் பெருமாள் கோயிலுக்குள் இப்போது பார்ப்பனர் நடத்தும் ‘தீண்டாமை’ வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்தக் கோயிலுக்குள் ‘மாமுனிவர்’ வைணவ கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலுக்குள் உள்பிரகாரத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அய்யங்கார் பார்ப்பனர்களை மட்டுமே அங்கே உட்கார வைத்து, அவர்களை வழிபடுவதுபோல் ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ பாட அனுமதிக்கப்படுகிறது. பார்ப்பனரல்லாத வைணவர்கள் கோயில் உள்புற வளாகத் துக்குள்ளேயே அனுமதிக்கப்படுவது இல்லை. கோயில் வளாகத்துக்குள்ளேயே பார்ப்பனரல்லாதவர்கள் அனுமதிக்கப் படாததை எதிர்த்து சில ‘சொரணை’ உள்ள பார்ப்பனரல்லாத ‘சூத்திர’ வைணவர்கள் போர்க்கொடி உயர்த்திப் போராடி வருகிறார்கள்.

‘திருக்கச்சி நம்பி திரு நாலடியார் சேவை சங்கம்’ என்ற பார்ப்பனரல்லாத வைணவர்கள் கோயில் வளாகத்துக்குள் சென்று, ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ பாட முயன்றபோது பார்ப்பனர்கள் அவர்களை விரட்டி அடித்திருக்கிறார்கள். தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இதில் களமிறங்கியது. காவல்துறையினர் வந்து பார்ப்பனர் களிடம் “நீங்கள் செய்வது தீண்டாமை குற்றம்” என்று எடுத்துச் சொல்லியும் பார்ப்பனர்கள் ஏற்க மறுத்து விட்டனர்.

“1947ஆம் ஆண்டு தமிழ்நாடு கோயில் நுழைவு உரிமைச் சட்டத்தின் 3ஆவது பிரிவுக்கு இது எதிரானது. வைணவத்தைப் பரப்பிய இராமானுஜர், தீண்டாமைக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். அவரது ஆயிர மாவது ஆண்டிலும் இந்தத் தீண்டாமை தொடருவது ஜாதி ஆணவத்தையே காட்டுகிறது” என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் பாரதி அண்ணா கூறியிருக்கிறார்.

இந்து அறநிலையத் துறையும் உயர்நீதி மன்றமும் இந்தத் தீண்டாமைக்கு எதிராக உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் கோயில் மணிமண்டபம், ராஜ மண்டபங்களில் தீண்டாமை பின்பற்றப்பட்டு வருகிறது. பார்ப்பனர்கள் நுழைவதற்கு மட்டும் தனி வாயில்அனுமதிக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாக அதிகாரி விஜயன் என்பவர் இந்த ‘பார்ப்பன தீண்டாமை’க்கு துணை போய்க் கொண்டிருக்கிறார் என்று பார்ப்பன ரல்லாத வைணவர்கள் குற்றம்சாட்டு கிறார்கள்.

‘இந்துக்கள்’ உரிமைகளுக்காக தோள் தட்டி, தொடை தட்டி, கிளம்பும் ‘இந்து முன்னணிகள்’ எங்கே போனார்கள்? இங்கே ‘சூத்திர’ இந்துக்களின் உரிமை களுக்காக ஏன் களம் இறங்கவில்லை?

இவர்கள் எல்லாம் ‘இந்து’க்கள் பட்டியலில் வரமாட்டார்களோ!

Pin It