மே 21இல் குடியாத்தத்தில் நடந்த கழக மண்டல மாநாட்டில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையிலிருந்து:

குடியாத்தம், வேலூர் மாவட்டங்கள் திராவிடத்தின் கொள்கை வேர்களைத் தாங்கி நிற்கிறது, ஆரிய எதிர்ப்பு என்ற சனாதன வர்ணாஸ்ரம பார்ப்பன எதிர்ப்புக்கு களமாடிய முன்னோடிகள் இந்த மாவட்டத்தில் உண்டு. பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி, சமூக சீர்த்திருத்தப் படை ஒன்றை இப்பகுதியில் உருவாக்கி, தேனீர்க் கடை இரட்டைக் குவளைத் தீண்டாமை - பார்ப்பன உயர்ஜாதியினர் வீதிகளில் தீண்டப்படாத மக்கள் நடக்கும் உரிமை மறுக்கப்பட்ட சமூகக் கொடுமைகளை எதிர்த்து நேரடி நடவடிக்கையில் இறங்கினார். சாவு சேதி சொல்லவும், பறை அடிக்கவும் தீண்டப்படாத மக்கள் மீது அவமானங்கள் சுமத்தப்பட்டதை எதிர்த்து பறை எரிப்புப் போராட்டம் நடத்தியபோது திராவிடர் கழகத் தோழர்கள் அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற வேண்டும் என்று பெரியார் ‘விடுதலை’யில் அறிக்கை விடுத்தார். 1954இல் ஈரோட்டில் பெரியார் நடத்திய புத்தர் கொள்கை பரப்பு மாநாடு - குலக் கல்வி திட்ட எதிர்ப்பு மாநாடுகளில் பங்கேற்று ஆரிய வர்ணாஸ்ரமக் கருத்துகளை எதிர்த்ததோடு பல்லாயிரக்கணக்கில் புரோகித ஜாதி மறுப்பு திருமணங்களை நடத்தினார். குடியரசுக் கட்சியின் தலைவரானார். 1958இல் சுதந்திர நாள் துக்க நாள் என்றார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும்; பரம்பரை அர்ச்சகர் முறை ஒழிக்கப்பட வேண்டும்; கிராமத் தலைவர் பதவிகளை பரம்பரை அடிப்படையில் நியமிக்கக் கூடாது என்று போர்க் கொடி உயர்த்தினார். இதே போன்று தளபதி கிருட்டிணசாமி நடத்திய களப்போராட்டம் திராவிடத்தின் இலட்சியப் பாதையில் தான்!

dvk meeting at kumbakonamஅன்றைய காங்கிரஸ் கட்சியில் ஆரிய மாடல் ஆட்சியை இராஜகோபாலாச்சாரி முன்னெடுத்த போது அதே கட்சியிலிருந்த காமராசர் அதை எதிர்த்து திராவிடக் கொடியை கட்சிக்குள் உயர்த்தி, ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டம், பைத்தியக்காரத் திட்டம் என்று அறிவித்து, முதல்வராக வந்தவுடன் அதை ஒழித்தார். முதலமைச்சர் பதவியை ஏற்ற பிறகு, 1954இல் இதே குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டபோது எதிர்க் கட்சியாக இருந்த அண்ணா, கட்சி அரசியலைப் புறந்தள்ளிவிட்டு, பார்ப்பன எதிர்ப்பு நோக்கில் காமராசருக்கு ஆதரவு தந்தார். ‘குணாளா குலக் கொழுந்தே’ என்று திராவிட நாடு ஏட்டில் புகழாரம் சூட்டினார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராசர் உயர்ந்தபோது, திராவிட சித்தாந்தத்தின் மாநில உரிமைகளையே அவர் பேசியதோடு அன்றைய பிரதமர் இந்திராவிடம் மாநில உரிமைகள் குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று அறிவுறுத்தினார். மாநில முதல்வர்கள் கருத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் முன்னுரிமை தரவேண்டும் என்பதை கட்சிக்குள் செயல்படுத்தினார். காங்கிரஸ் தலைவரான தன்னையும் நிதியமைச்சரான மொரார்ஜி தேசாயையும் கலந்து ஆலோசிக்காமல் பிரதமர் இந்திரா, சர்வதேச நிதியத்தின் கட்டளையை ஏற்று ரூபாயின் மதிப்பை குறைத்தபோதுதான் தனக்கும் பிரதமர் இந்திராவுக்குமிடையே கருத்து மாறுபாடு தொடங்கியது என்று பேராசிரியர் நாகநாதனுக்கு அளித்த பேட்டியில் கூறியதை, பேராசிரியர் நாகநாதன் தனது கூட்டாட்சியியல் நூலில் பதிவு செய்துள்ளார்.

பசுவதைத் தடைச் சட்டத்தை காங்கிரஸ் கட்சிக் குள் கொண்டு வரவேண்டும் என்று காங்கிரசில் பார்ப்பனிய சக்திகள் முன்வைத்த கோரிக்கையை அகில இந்திய காங்கிரஸ் தலைவரான காமராசர் ஏற்க மறுத்தார். அதன் காரணமாகவே சாதுக்களும் ஆர்.எஸ்.எஸ். மதவெறிக் கும்பலும் டெல்லியில் அவரது வீட்டுக்கு தீ வைத்தனர். காமராசர் உயிர் தப்பினார்.

1975இல் தென் மாநிலங்கள் தங்களுக்குள் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி நீர், மின்சாரம் மற்றும் அரிசியை - தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, இந்திராவிடம் கருத்து மாறுபாடு எழுந்த போது தமிழ்நாடு அளவில் ‘ஸ்தாபன காங்கிரஸ்’ கட்சியை உருவாக்கினார். தேசிய அரசியலில் இருந்தாலும் காமராசரின் ‘திராவிடச் சிந்தனையே’ அவரது அடையாளமாக இருந்தது.

பார்ப்பன எதிர்ப்பை உள்ளடக்கிய ஆன்மீகத் துக்கும் திராவிடக் கருத்தியல் தனது கதவைத் திறந்து வைத்திருந்தது. பழுத்த ஆன்மீகவாதியான ஓமாந்தூர் ராமசாமி (ரெட்டியார்) தமிழக முதலமைச்சராக இருந்தபோது அறநிலையத் துறையில் பார்ப்பனர் கொள்ளைகளைப் பட்டியல் போட்டுக் காட்டி, அறநிலையத்துறை சட்டத்துக்கு புத்துயிர் தந்தார். பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவினருக்கு முதன்முறையாக இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்தவரும் அவர்தான். ‘தாடி இல்லாத ராமசாமி நாயக்கரே - இந்த ராமசாமி ரெட்டியார்’ என்று பார்ப்பனர்கள் கொந்தளித்து காந்தியிடமே மனு கொடுத்தனர். நேர்மையின் சின்னமாக ஆரிய எதிர்ப்புடன் திராவிட சித்தாந்தமான சமூகநீதியைப் பின்பற்றிய ஓமந்தூரார், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பதவியில் நீடிக்க முடியவில்லை; “ஆரியம் முதுகில் குத்திவிட்டது; ஆனால் நீங்கள் நெஞ்சில் வீரத் தழும்புடன் வெளியேறுகிறீர்கள்; போய் வாருங்கள்” என்று அன்றைக்கு ‘விடுதலை’ நாளேடு எழுதியது.

நிறுவனமாக்கப்பட்ட வேதமதமான இந்து மதத்தின் சனாதனத்தை எதிர்த்து புரட்சி செய்தவர் வடலூர் வள்ளலார். வடமொழி எதிர்ப்போடு பார்ப்பனியர்களை கடவுளின் தரகர்களாக்கும் உருவ வழிபாட்டைப் புறக்கணித்தார். ‘விளக்கை’ ஏற்றி வணங்கச் சொன்னார், காவிக்கு மாற்றாக வெள்ளை உடை தரித்தார். திராவிட இயக்கம் வள்ளலாரை அரவணைத்தது. தி.மு.க. ஆட்சி வள்ளலார் ஆய்வு மய்யத்தை உருவாக்கும் திட்டத்தை அப்போது அறிவித்துள்ளது. குன்றக்குடி அடிகளார் என்ற காவி உடை புரட்சித் துறவி, பெரியாருடன் மேடையைப் பகிர்ந்து கொண்டு ஜாதி சனாதன எதிர்ப்பை சமூகநீதியை பொதுவுடைமைப் பேசினார். திராவிடத்தின் ஆரிய எதிர்ப்பு வறட்டுத் தனமான கடவுள் எதிர்ப்பு அல்ல; அது மனித சமத்துவம். சுயமரியாதையோடு சனாதன எதிர்ப்பு ஆன்மிக வாதிகளையும் அரவணைத்தது. அதற்கு வழிகாட்டியாக இருந்தது வேலூர் மாவட்டம்.

சதுர்வேதிமங்கலம் - ஆரிய மாடல் சமத்துவபுரம் - திராவிட மாடல்

தமிழ்நாட்டில் தமிழ் மன்னர்கள் பலரும் ஆரியத்தைக் கொண்டாடியதாகவே வரலாறு கூறுகிறது. ‘பிராமணர்’களுக்கு ஊர்களும் கிராமங்களும் இலவசமாக வழங்கப்பட்டன. வேதப் பார்ப்பனர்ககளின் வேத அறிவே உலகத்தை வாழ்விக்கும் என்று மன்னர்கள் நம்பினார்கள். அதற்குப் பெயர் ‘சதுர்வேதிமங்கலம்’; தமிழ் தாத்தா என்று கொண்டாடப்படும் சங்க இலக்கிய சுவடிகளைத் தொகுத்த உ.வே.சாமிநாதய்யர், தனது பிறந்த ஊரான ‘உத்தமதானபுரம்’ பிராமணர்களுக்கு ‘தானமாக’ வழங்கப்பட்ட ஊர் என்பதை தனது சுயசரிதையில் பதிவு செய்திருக்கிறார். ஒரு அரசர், தனது வேதபண்டிதர் பரிவாரங்களுடன் தங்கள் கிராமத்தில் ஒரு மரத்தடியில் ஓய்வு எடுத்து, உணவு உண்டு, வெற்றிலைப் பாக்கு போட்டுக் கொண்டாராம். பிறகுதான் அன்றைய தினம் அமாவாசை என்பது தெரிந்து அதிர்ந்து போனாராம். அமாவாசையில் வெற்றிலைப் பாக்கு போடுவது- தெய்வக் குற்றமாம். இந்தக் ‘குற்றத்துக்கு’ பரிகாரம் தேட, அருகிலிருந்த வேத பண்டிதர்கள் ஆலோசனைப்படி அந்தப் பகுதியை வேத பண்டிதர்களுக்கு தானமாக்கி வீடுகளைக் கட்டித் தந்தாராம். அதுவே தான் பிறந்த உத்தமதானபுரம் வரலாறு என்று பதிவு செய்திருக்கிறார். அமாவாசையன்று வெற்றிலைப்பாக்கு போட்டக் குற்றத்துக்காக பார்ப்பனர்களுக்கு வீடுகளையும் ஊர்களையும் வழங்கியது ‘ஆரிய’ மாடல் ஆட்சி.

இதே குடந்தை அருகே உள்ள ‘மாதிரி மங்கலம்’ என்ற ஊரும் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்டதுதான். பார்ப்பன ஜாதிக் கொடுமைகளை எதிர்த்து கருஞ்சட்டை வீரர் பெரியார் தொண்டர் என்.டி. சாமி, மாதிரி மங்கலத்தில் களமாடினர். தீண்டப்படாத மக்கள் சாவுக்கு சேதி சொல்ல மறுத்து, இழவு வீட்டுக்கு பறையடிக்க மறுத்து, பறைகளை நெருப்பில் போட்டுக் கொளுத்தினர். பார்ப்பனர் ஆதிக்க ஜாதியினர் நிறைந்த பகுதியில் தீண்டப்படாத மக்கள் குடியேற்றப்பட்டனர். ஆதிக்க ஜாதி நிறைந்த பகுதியில் ‘தலித்’ மக்களுக்கு தனது சொந்த முயற்சியில் தேனீர்க் கடையைத் திறந்தார். பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாhப்பனர் மற்றும் ஜாதி எதிர்ப்புப் புரட்சி, கொலை வரை நீண்டு வழக்குகள் நடந்தன. இது ஆர்யமாடலை எதிர்தது நடந்த களப் போராட்டம்.

வட இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘பிராமணர்களுக்கு’ தமிழ்நாட்டு விவசாயிகளின் நிலங்களை கட்டாயப்படுத்தி பறித்து தானமாக வழங்கப்பட்டது. நிலம் தர மறுத்தவர்கள் வன்முறையால் அடக்கப்பட்டனர் என்று ஆய்வாளர் கே.கே.பிள்ளை, தனது ‘தமிழக வரலாறு; மக்களும் பண்பாடும்’ ஆய்வு நூலில் பதிவு செய்துள்ளார். இதுதான் ஆரிய மாடல்.

திராவிட மாடல் இதை எதிர்த்துப் புரட்சி செய்தது. ‘அக்கிரகாரம் - ஊர்த் தெரு - சேரி’ என்று பிரிந்து கிடக்கும் நிலை, அவலம் இப்போதும் தொடருகிறது என்றால் வேத காலங்களில் இதன் கட்டமைப்பு எவ்வளவு வலிமையாக இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். கலைஞர் முதல்வராக இருந்தபோது ‘சதுர்வேதிமங்கலங்களுக்கு’ எதிராக உருவாக்கியதுதான் ‘பெரியார் சமத்துவபுரம்’. அiன்த்து ஜாதியினருக்கும் ஒரே பகுதியில் வீடுகளைக் கட்டி, குடியேற்றி அதற்கு பெரியார் சமத்துவபுரம் என்று பெயர் சூட்டினார். இப்போது மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு இடையில் பராமரிப்பு இன்றி கைவிடப்பட்ட இத்திட்டத்துக்கு உயிர் கொடுக்க ரூ.100கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்; சமத்துவபுரங்களை மேலும் வளர்த்தெடுக்க முன் வந்துள்ளார்.

சதுர்வேதிமங்கலம் -ஆரிய மாடல்;

பெரியார் சமத்துவபுரம் - திராவிட மாடல்

- குடந்தை மண்டல மாநாட்டில் விடுதலை இராசேந்திரன் உரையிலிருந்து

Pin It