மருத்துவக் கல்லூரிக்கு மனு போடுவதற்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நடைமுறை, சென்னை மாகாணத்தில் நிலவியது. நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் பனகல் அரசர் முதல்வராக இருந்தபோதுதான் அது ஒழிக்கப்பட்டது.

மீண்டும் சமஸ்கிருதப் பண்பாட்டை மருத்துவத் துறையில் திணிக்க ஒன்றிய ஆட்சியின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய மருத்துவ ஆணையம் தொடங்கியிருக்கிறது. மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், பத்திரப் பதிவு அமைச்சர் மூர்த்தி பங்கேற்ற விழாவில், இது வரை பின்பற்றப்பட்டு வந்த ‘ஹிப்போகிரட்டிக்’ உறுதிமொழியை மாற்றி ‘மகரிஷி சரக சபதம்’ என்ற சமஸ்கிருதத்தில் இருக்கும் உறுதி மொழியை ஆங்கில மொழி வழியாக உறுதி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.

மருத்துவக் கல்லூரியில் புதிதாக மாணவர் சேர வரும்போது அவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் (White Coat Ceremony) ‘ஹிப்போகிரட்டிக்’ என்ற உறுதிமொழிதான் உலகம் முழுதும் ஏற்கப்பட்டு வருகிறது. இந்த உறுதிமொழியை ஆங்கில மருத்துவத் தின் தந்தையாகக் கொண்டாடப்படும் ஹிப்போகிரட்டீஸ் உருவாக்கினார்.

விழா நிகழ்ச்சி நடைபெறும் முதல் நாளன்று அவசர அவசரமாக தேசிய மருத்துவ ஆணையம் ‘மகரிஷி சரக சபதம்’ என்று உறுதிமொழியை ஏற்கலாம் என்று திடீர் என்று இணையம் வழியாக அறிவுறுத்தியிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். புள்ளிகள் ஒவ்வொரு அதிகாரக் கட்டமைப்பிலும் ஊடுருவி தங்களது பார்ப்பனிய வேதக் கொள்கைகளை எப்படி தந்திரமாக நுழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்வும் ஒரு சான்று.

‘மகிரிஷி சரக சபதம்’ என்ற சமஸ்கிருத உறுதிமொழியில் பிராமணர்களையும் பசுக்களையும் உயர்வாக மதிக்க வேண்டும் என்ற மனுசாஸ்திர பாசிச சிந்தனை உள்ளடக்கியிருக்கிறது. இந்த வரிகளையும் மட்டும் வெட்டிவிட்டு ஏனைய வாசகங்களை ஆங்கிலப்படுத்தி சூழ்ச்சியாக புகுத்தும் வேலை நடந்திருக்கிறது. ‘பசுவையும் பிராமணர்களையும்’ வணங்க வேண்டும் என்ற கருத்து இடம் பெற்றுள்ளது என்றால் அந்த உறுதிமொழியின் நோக்கமே பார்ப்பனியத்தை உயர்த்திப் பிடிப்பது என்ற உண்மையை தெட்டத் தெளிவாக்கி விடுகிறது. இந்த வரிகளை மறைத்து விடுவதால் மட்டும் அதன் நோக்கம் மாறிவிடுமா என்று கேட்கிறோம். ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தை மகரிஷி சரகம் என்று கூறுகிறார்கள். ஆங்கில வழி மருத்துவத் துறைக்கு அதன் தந்தையான ஹிப்போகிரட்டிக் தந்த உறுதிமொழியை புறந்தள்ளிவிட்டு ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தையை போற்றும் உறுதிமொழியை ஏன் ஏற்க வேண்டும்?

மதவாதம் பேசிய பழமைக் கருத்துகளை வென்று தான் மருத்துவ விஞ்ஞானமே வளர்ந்திருக்கிறது. ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த செல்வீடஸ் என்ற விஞ்ஞானி, இரத்தம் இதயத்திலிருந்து நுரையீரல்களுக்கு எப்படிச் செல்கிறது என்பதை மனித உடலைத் தேடி கீறிப் பார்த்து அந்தப் பாதையைக் கண்டுபிடித்தார். அதற்காக மனித உடலைக் கீறியது மத விரோதம் என்று கூறி அவரை கம்பத்தில் கட்டி வைத்து உயிருடன் கொளுத்தினார்கள். ‘மோட்சம்’ போகும் உடலை அறுத்து பிரேதப் பரிசோதனை செய்யக் கூடாது என்று பழமைவாதிகள் மதத்தின் பெயரால் எதிர்த்த வரலாறுகளும் உண்டு.

பார்ப்பனியத்தை எதிர்த்த சித்தர்கள், அவர்கள் உருவாக்கிய சித்த மருத்துவத்தின் தமிழ்ப் பெயர்களை சமஸ்கிருதமயமாக்கி தன் வயப்படுத்திக் கொண்டனர் பார்ப்பனர்கள். குடிநீரை கஷாயம் என்றும், ‘இளகலை’யை லேகியம் என்றும், நீற்றை பஸ்பம் என்றும், அமுக்கரா இளகலை என்பதை அஸ்வகந்தி லேகியம் என்றும், இலிங்கப்புளிப்பை ஜாதி ஜம்பீரம் என்றும், தீ நீரை திராவகம் என்றும், துணை மருந்துகளை அனுமானம் என்றும், காய்ச்சலை ஜுரம் என்றும் மாற்றினார்கள். ஒவ்வொரு நோய்க்கும் சித்த மருத்துவர்கள் சூட்டிய தமிழ்ப் பெயர்களை சமஸ்கிருதமாக்கியது குறித்து விரிவான நூல்களை ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள்.

தமிழக நிதியமைச்சர் விரைவிலே எதிர்ப்பைப் பதிவு செய்ததைப் பாராட்ட வேண்டும். மதுரை மருத்துவக் கல்லூரி டீன் இரத்தினவேல் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் இந்த உடனடி நடவடிக்கை மிகவும் பாராட்டுக்குரியது. இதுவே கடந்தகால ஆட்சிகளாயிருந்தால் இவர்கள் கவுரவிக்கப்பட்டிருப்பார்கள். சென்னை அய்.அய்.டி. களில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாடாமல், சமஸ்கிருதத்தில் வந்தே மாதரம் பாடப்பட்டு வந்தது எதிர்ப்பு தெரிவித்தது. தமிழக அரசு, ஒன்றிய ஆட்சிக்கு கடிதம் எழுதியதால் இப்போது ‘தமிழ்த் தாய் வாழ்த்து’ பாடுவதற்கு ஒன்றிய ஆட்சி அனுமதி வழங்கியிருக்கிறது. அய்.அய்.டி. நிறுவனங்களில் சமஸ்கிருதம், ஒரு பாடமாக்கப்பட்டுள்ளது. அய்.அய்.டி.க்கும் சமஸ்கிருதத்துக்கும் என்ன தொடர்பு?

சமஸ்கிருதத்துக்கும் பார்ப்பனியத்துக்கும் உள்ள தொடர்பு தான் இதற்கு அடிப்படை. இரண்டும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். பெரியார் கூறினார்:

“சமஸ்கிருதம் பரவினால் தான் பார்ப்பனர்கள் வாழ முடியும். சுரண்ட முடியும். நம்மை கீழ் ஜாதி மக்களாக ஆக்க முடியும். அவன் பிராமணனாக இருக்க முடியும். அதன் நலிவு பார்ப்பண ஆதிக்கத்தின் சரிவு என்று உணர்ந்து ஒவ்வொரு பார்ப்பனரும் சர்வ ஜாக்கிரதையோடும் விழிப்போடும் காரியம் செய்துவருகிறார்கள்” - விடுதலை 15.02.1960

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் கால் பதிக்க நினைக்கும் சமஸ்கிருதத்தை ‘திராவிட மாடல்’ திருப்பி அடித்து வெளியேற்றி தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It