அந்த நீண்டு இருக்கும் வயல் வரப்போடு ஒட்டிய குறுகலான பாதை அதோடு ஒட்டி இருக்கும் தாமரைக்குளத்தை தாண்டியவுடன் அந்த பாதை விரிந்து ஊரி றோட்டில் ஏறுகிறது. மழை அடிச்சு வெள்ளம் வந்தால் குளத்துக்கும் வயலுக்கும் வித்தியாசம் தெரியாது. இந்த மெயின் றோட்டில் இருந்து இந்த பரந்த வயல் வெளியூடாக ஊரி றோட்டில் தொடங்கும் இடத்தில் இருக்கும் ஊர் மனைகளை பார்த்தால் மிகவும் தூரத்தில் இருப்பது மாதிரி தான் தெரியும்.

வயல் விளைச்சல் இல்லாத காலங்களில் குளமும் வற்ற வயலும் சும்மா கிடக்க அதனூடாக குறுக்கலாக நடந்து சிலர் தூரத்தை குறுக்க முனைய, வேறு சிலர் அதை தொடர அங்கு பாதை ஒன்று புதிதாக மலர்ந்து விடும்.

அதனூடாக தான் கொஞ்ச நாளாக, கொஞ்ச நாளாக என்ன, கொஞ்ச காலமாக அவர் தினமும் வந்து அந்த ஊர் மனைகள் தொடக்கத்தில் உள்ள மாமரங்கள் தென்னை மரங்கள் நிறைந்த தொடர்ச்சியாய் அச்சொட்டாக ஒரே மாதிரி தோற்றத்துடன் இருக்கும் மூன்று வீட்டு தொடருக்கு வந்து நோட்டம் விட்டு திரும்புகிறார். வேவு பார்க்க வருகிறார் என்றும் சிலர் நினைக்கலாம் அல்லது முந்தி வாழ்ந்த இடத்தை பார்த்து விட்டு போறார் என்றும் நினைக்கலாம். அவற்றுக்காக தான் வந்து போறார் என்று நிச்சயம் சொல்ல இயலாத மாதிரியும் இருக்கும். ...

இவருக்கு மனிதர் மாதிரி இப்படி சிந்திக்கும் பழக்கம் இருக்கோ என்று நிச்சயமாக தெரியாது. ஒரு காலத்தில் அந்த வீட்டு தொகுதியுனுடைய முடிசூடா மன்னர் என்று சொல்ல இயலாது. வேணும் என்றால் இவரை இப்படி சொல்லலாம். அந்த வீட்டு முடிசூடா காவல் செல்ல பிராணி வீமன் என்று அழைக்கப்பட்ட நாய் என்று

அவரை அவர் என்று சொல்லக் கூடிய முறையில் தான் அந்தக் காலம் முதல் நடந்து கொண்டு இருக்கிறார். அந்த வீட்டுக்கு மட்டுமல்ல அந்த வீதியில் தொடக்கத்தில் தொடங்கி கொஞ்சம் தூர பகுதி வரை பிரதேசத்துக்கு நாட்டாமை போல் திகழ்ந்திருக்கிறார். அந்தக் காலம் அந்த தெருவின் தொடக்கத்தில் தொடங்கி அந்த தெருக்கோடி முடிவு வரை எந்த பிராணிகள் பறவைகள் ஊர்வன தொடக்கம் புதிய மனிதர்கள் வாகனங்களில் போவோர் வரை, எவரும் இவருடைய எச்சரிக்கை கனைப்புக்கு செருமலுக்கு குரைப்புக்கு அடங்கி ஒடுங்கி நடுங்காமால் போக முடியாது.அந்த வீட்டு தொகுதியில் வாழ்பவர்களின் மத மதப்பும், குணமும், திமிரும் இவரிடம் இருந்திருக்கிறதால் இவருக்கு மனிதர் மாதிரி சிந்திக்கும் குணமும் சில வேளை இருக்கலாம் என்றும் நினைக்கலாம்

இப்பொழுது அவரை அது என்று கூட சொல்ல முடியாத தோற்றம். அரைவாசி உடம்பு முழுவதும் உண்ணிகள். எங்கும் சொறி பட்ட புண்கள். அதனால் இவர் எங்கு சென்றாலும் இவரை பின் தொடர்ந்து இவரின் உடம்பை மொய்க்கும் இலையான் பூச்சிகளின் தொல்லை தாங்க முடியாமால் ஏற்பட்ட வேதனை படர்ந்த முகம், நாயின் ஆயுட்காலம் குறைவாக இருப்பதனால் விரைந்து வந்த முதுமை ஒரு புறம்.

இந்த வீட்டு தொகுதியிலுள்ளவர்கள் எந்த நாட்டில் என்று தெரியாத மாதிரி இவரும் எங்கு படுத்து எழும்புகிறார் எங்கு தின்று கழிக்கிறார் என்ற இரகசிய குறிப்புகள் ஒன்றும் தெரியாது. ஆனால் இவரின் முன்னாள் எஜமானர்கள் அகதியாக தேசாந்திரம் போயிட்டினம் என்ற மாதிரி. இவருக்கு உடனடியாக அந்த அந்தஸ்து கொடுக்கால் முதலில் காணாமல் போனோர் பட்டியலில் தான் போட்டார்கள் .இப்ப கொஞ்சக் காலம் இவரின் நடமாட்டம் கண்ட பின் தான் அகதி பட்டம் கிடைத்திருக்கிறது..இப்ப இவரும் ஒரு அகதி தான்.

இன்றும் அந்த பாதையூடாக குளத்து கட்டை சுற்றி வீச்சு நடை போட்டு வந்தவர், தூரத்தில் சொகுசு பஸ் தோசை கடை பொன்னம்மாக்கா வீட்டுக்கு முன்னால் நிற்க கண்டு இவ்வளவு நாளும் காணதா அந்த ஆள் அரவம் கண்டு கேட்டு நிதானமாக நின்று யாரையோ தேடும் பாவனையில் கவனிக்கிறார்.

கொஞ்ச காலங்களாக இந்த ஊரில் வெடிச்சத்தங்கள் கேட்கால் விட்டவுடன் வெளிநாட்டிற்க்கு சொல்லிக் கொள்ளமால் ஓடிப் போனவர்கள் சொகுசு பஸ்ஸில் தீடிரென சொல்லிக்கொள்ளாமல் வந்து இறங்கி ஊரை வந்து பார்க்கிறதோடு கலர் காட்டி சென்று கொண்டு இருக்கிறார்கள். இந்த நாய் பெருமானாரும் ஏதோ விதத்தில் மோப்பம் பிடித்து மணந்து கொண்டு எப்படியோ தெரிந்து கொண்டாரா என்னவோ. அதனால் தான் இப்ப கொஞ்ச காலமாக எங்கையோ படுத்து எழும்பி விட்டு இந்த வீட்டடிக்கு விஜயம் செய்யிறதும் திரும்புறதுமாக இருக்கிறார் என்பது மனித புத்தியூடாக விளங்கிறது கஸ்டம தான். அதுக்காக நாயை மாதிரி சிந்திக்க புரிய மனிதர்களும் இருக்க வேண்டுமா என்ன?

இது சண்டைக்காலம், இது சமாதான காலம் என்று அவராலும் மனிதர் மாதிரி பிரித்து கணிக்க முடியுமா? அவருக்கு தெரிந்தது எல்லாம் வெடிசத்தம் நல்லாய் கேட்கும் காலம் சத்தம் கேட்காத காலம். அந்த காலங்களில் கொண்டாட்ட நாட்களில் தான் வெடிச்சத்தம் கேட்கும் அந்த நாட்களில் தான் வெளியிலிருந்து ஆட்கள் வருவார்கள். இப்ப வெடிச்சத்தம் கேட்காத நேரத்தில் கேட்காத காலங்களில் வருகிறார்கள் என்ற குழப்பம் இருந்தாலும் அந்த ஆராய்ச்சியில் எல்லாம் ஈடுபடாமல் அந்த சொகுசு பஸ் அருகில் இருந்த கூட்டத்தில் தான் தேடும் யாரும் நிற்க மாட்டார்களா என்ற ஏக்கத்துடன் நாக்கை தொங்க போட்டுக் கொண்டு உற்று பார்த்து கொண்டிருந்தது.

கால வெள்ளத்தில் மறைந்த நினைவுகளை மீட்டு பார்த்தது. இந்த வயலில் வெள்ளம் குளம் போல வழிய அதுக்குள் தன்னை போட அதுக்குள் நீந்தி மகிழ அவர்களும் மகிழ்ந்தது .அந்த மூலை வீட்டு சின்ன மகளோடு பந்து விளையாடியது, சிரித்து சந்தோசமடைந்தது எல்லாம் திரும்ப திரும்ப வந்து நினைவுகள் சந்தோசமடைந்திருக்க வேண்டும். நாய் சிரிக்க முனைந்தது. முடியவில்லை போலும். நாய் சிரித்தது என்று சொன்னால் நம்புவது கஸ்டம் தான். வேணும் என்றால் அவர்களை கேட்டுப் பாருங்கள் அதுவும் அவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தால் தான் முடியும்.

அவர்கள் தான் வந்து விட்டார்கள் அந்த வீட்டுக்குள் ஆட்கள், என அசுமாத்தம் பட்டு விட்டதோ என்னவோ துள்ளிக் குதித்து அந்த வீட்டு பின்புறத்தில் உள்ள வேலியில் உள்ள துளையூடாக நுழைந்தது, அந்த காலம் அது போட்ட துளை தான் அதனால் அதுக்கு அதனூடாக இப்ப நுழைவது இரட்டிப்பு சந்தோசம்.

இளைய மகள் சூட்டி தான் வந்திருந்தாள் தனது மகள்கள் இருவருடன் வந்திருந்தாள், மகள்களை பார்த்த அந்த காலத்தில் சூட்டியை பார்த்த மாதிரி இருந்தார்கள், மனிதர்கள் பேசும் மொழி விளங்காவிட்டாலும் இவர்கள் மொழி வழக்கமாக இங்கை ஒலித்த சத்தம் இல்லை என்று மட்டும் விளங்கியது. சிரிக்க முடியா விட்டாலும் அழுது கனைத்து காட்டி தன்னை அடையாளம் காட்ட முனைந்தது. கனைப்பு சத்தம் கேட்ட சூட்டி பிள்ளைகளை எச்சரிக்கை செய்தாள் விச நாய் ஓன்று வந்திருக்குது என்று

தன்னை அடையாளம் காணமால் அலட்சியம் செய்து தனது ஆவல்களை எல்லாம் ஒரு நிமிடத்தில் தவிடு பொடியாகிவிட்ட ஆத்திரத்தில் மீண்டும் வேறு விதமாக ஊளையிட்டு குரைத்தது. என்ன நன்றி கெட்ட மனிதர்கள் என்ற மாதிரி இருந்தது. இவரை தான் நன்றியுள்ள மிருகம் என்று சொல்லி இருக்கினம்.

மனிசரை எப்பொழுதாவாது நன்றியுள்ளவர்கள் என்று யாரும் சொல்லி இருக்கினமா? இப்ப இதுக்கு இவர் கோபிப்பதில் அர்த்தம் இல்லை தானே. அதோடு இவர் தன்னை அடையாளம் காணவில்லை என்று தங்களுடைய அடையாளத்தை தொலைத்த இந்த பாவப்பட்டவர்களை கோபித்து இவர் என்ன காணப்போறார்

பாவப்பட்டவர்கள் என்று தெரியவா போகுது இந்த நாய்க்கு. .இந்த ஊரில் உள்ளவர்களே இவர்களின் பவுஸுகளை கண்டு அவர்கள் அப்படி இல்லை என்று நினைக்கும் போது. திரும்பி பாராமாலே வந்த வேலி துளை வழியே திரும்பிவிட்டது. இப்ப இந்த பாதைக்கு வருவதில்லை. இப்ப போக்கிடம் இல்லாமால் திசை தெரியாமல் ஓடி கொண்டிருக்கிறது. அவர்களும் அப்படித்தான் என்று உதுக்கு விளங்கவா போகிறது.

- சின்னக்குட்டி
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It