பெரியாரிய களப் போராளி பத்ரிநாராயணன் படுகொலை செய்யப்பட்ட ஏப்.30ஆம் நாளில் தன்மான தன்னுரிமை மீட்பு மாநாட்டை ‘நிலம் பாழ் - நீர் மறுப்பு - நீட் திணிப்பு’ என்ற தலைப்பில் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் மண்டல மாநாடாக இராயப்பேட்டை வி.எம். சாலையில் எழுச்சியுடன் நடத்தியது. ஏப்.30, 2018 காலை பத்ரி அடக்கம் செய்யப்பட்ட அவரது நினைவிடத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், நூற்றுக்கணக்கான தோழர்களுடன் மலர்வளையம் வைத்து உறுதி மொழி ஏற்று வீரவணக்கம் செலுத்தினர்.
தோழர்கள் எடுத்த உறுதி மொழி:
“பெரியார் இலட்சியப் பணியில் உயிர்ப் பலியாகிய பத்ரியின் நினைவு நாள் எங்களின் கொள்கை உணர்வுகளை புதுப்பிக்கும் நாள்.
கொள்கைத் தோழன் பத்ரியே... இராயப்பேட்டை பகுதியில் நீ பெரியாரின் கொள்கையை வலிமையாகப் பரப்பினாய்; திசை மாறி குழம்பி நின்ற இளைஞர்களை இயக்கமாக்கி நல்வழிப்படுத்தினாய்; தோழர்களின் சுகதுக்கங்களில் பங்கேற்று அரவணைத்தாய்; இயக்கத்தில் பதவி என்பது அதிகாரம் அல்ல; தொண்டு; தோழர்களை அரவணைத்துக் கொள்கைகளை முன்னெடுப்பதே பதவி என்பதை செயலில் உயர்த்தினாய்; தன்னை முன்னிலைப் படுத்தாது கொள்கையை முன்னிறுத்தும் பண்புடன் வாழ்ந்து காட்டினாய்; நீ உருவாக்கி வளர்த்த பெரியார் இயக்கப் பணிகளை மேலும் உற்சாகத்துடனும் உறுதியுடனும் வளர்த் தெடுக்க உன் நினைவு நாளில் உறுதி ஏற்கிறோம்!
எங்கள் பத்ரிக்கு வீரவணக்கம்! பெரியார் வாழ்க! பெரியாரியம் வெல்க!” - என்ற உறுதிமொழியை ஏற்றனர்.
இந்நிகழ்வில் பத்ரியின் துணைவியார், அவரது தாயார், அவரது மகள் யாழினி, மகன் மஜீத் (பெரியார் நடத்திய சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று உயிர்நீத்த மஜீத் நினைவாக - மகனுக்கு பத்ரி சூட்டிய பெயர்). பத்ரியின் மூத்த சகோதரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள், தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், தே.மு.க., த.பெ.தி.க. உள்ளிட்ட கட்சிகளின் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். இவர்கள் பத்ரி மீது மிகவும் மரியாதையும் நட்பும் பாராட்டிய தோழர்கள். தோழர்கள் அனைவருக்கும் கழக அலுவலகத்தில் காலை உணவு வழங்கப்பட்டது.
எழுச்சி மாநாடு
மாலை 6 மணியளவில் இராயப்பேட்டை வி.எம். சாலை சந்திப்பில் மாநாடு, ‘மக்கள் மன்ற’த்தின் பறை இசையோடு தொடங்கியது. தென்சென்னை மாவட்டக் கழகத் தலைவர் வேழவேந்தன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் இரா. உமாபதி, தொடக்க உரையில், போராளி பத்ரிநாராயணன், இராயப்பேட்டை பகுதியில் பெரியார் இயக்கத்தை வளர்த்தெடுத்த அணுகுமுறை; ஜாதி எதிர்ப்புக் கொள்கையில் காட்டிய உறுதி; கழகத் தோழர்களை அரவணைத்து அவர்களைக் களப்பணியாளர்களாக்கியது; இராயப்பேட்டைப் பகுதியில் ரவுடிகளின் அட்டகாசத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது; மக்களோடு மக்களாக இணைந்து நின்று உதவிக்கரம் நீட்டிய பண்புகளை உணர்ச்சியுடன் விவரித்தார். “போராட்டத்தில் சிறை செல்வதற்கு இப்பகுதி இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு நிற்பார்கள்; பலர் பள்ளிக்கூடம் போக ஆர்வம் காட்டாதவர்கள்; ஆனால் சிறைக்குப் போவதற்கு ஆர்வம் காட்டியவர்கள். பத்ரியின் களப் பணி அவர்களை அந்த அளவு ஈர்த்தது” என்று குறிப்பிட்டார். தொடர்ந்து தலைமைக் குழு உறுப்பினர் அன்பு. தனசேகரன், பா.ஜ.க. ஆட்சியின் துரோகங்களை உணர்ச்சிபூர்வமாகப் பேசினார்.
‘மக்கள் மன்ற’ கலை நிகழ்ச்சிகளுக்கிடையில் உரை, மீண்டும் கலை நிகழ்வு என்று நிகழ்ச்சிகள் நடந்தன. முதல் உரையாக, ‘நிலம் பாழ்’ என்ற தலைப்பில், மீத்தேன், ஷேல்மீத்தேன், ஹைடிரோ கார்பன் போன்ற நிலத்தை நஞ்சாக்கி மக்களின் வாழ்வுரிமையை அழிக்கும் திட்டங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் பேராசிரியர் ஜெயராமன், ‘நிலம் பாழ்’ என்ற தலைப்பில் 45 நிமிடம் விரிவான உரையாற்றினார். காவிரி பாசனப் பகுதியில் பூமியைக் குடைந்து எடுக்கப்படும் இத் திட்டங்கள், மக்களின் விவசாயம், அவர்கள் உடல்நலன்களை எவ்வளவு மோசமாகப் பாதித்து வருகிறது என்பதை விரிவாகப் பட்டியலிட்டார். காவிரி மேலாண்மை வாரியத்தை ‘இராம ராஜ்யம்’ அமைக்கத் துடிக்கும் ஆரிய இந்துத்துவ சக்திகள் ஒரு போதும் அமைக்க மாட்டார்கள். தன்னுரிமைக்கான போராட்டத்துக்கு நாம் தயாராக வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.
தொடர்ந்து, பத்ரியோடு ஏற்கனவே பெரியார் திராவிடர் கழகத்தில் இணைந்து பணியாற்றிய சுமார் 30 தோழர்களும், சட்டக் கல்லூரி மாணவர் மாணவியர்களும், த.பெ.தி.க. மண்டல அமைப்பாளர் கரு. அண்ணாமலை தலைமையில் கழகத் தலைவர், கழகப் பொதுச் செயலாளர் முன்னிலையில் மீண்டும் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
பத்ரி ‘நினைவுச் சுவடுகள்’ நூல் வெளியீடு
தொடர்ந்து சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் களப் போராளி பத்ரியோடு இணைந்து பணியாற்றியவர்களின் நினைவுக் கட்டுரைகள் அடங்கிய நூல் ஒன்றை “தோழர்களை இயக்கமாக்கியவன்; பெரியாரிய களப் போராளி தோழர் பத்ரியின் நினைவுச் சுவடுகள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. சென்னை மாவட்ட தி.வி.க. இந்நூலை தயாரித்துள்ளது. இந்நூலில் கொளத்தூர் மணி, ஆனூர் ஜெகதீசன், வழக்கறிஞர் சாரநாத், முரளி (இராயப்பேட்டை பகுதியில் தேனீர்க் கடை நடத்தும் தோழர்), அன்பு தனசேசகர், விடுதலை இராசேந்திரன், இரா. உமாபதி, தபசி. குமரன் மற்றும் பத்ரியோடு இணைந்து நின்ற க.பிரகாசு, ஆ.தமிழ்ச்செல்வன், ஜேம்ஸ் ஆகியோர் பத்ரியின் களப்பணிகளையும், பண்புகளையும் கட்டுரைகளாகப் பதிவு செய்துள்ளனர்.
நூலை தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் வெளியிட்டார். அவர் தனது உரையில் “இராயப்பேட்டை பகுதி எப்போதும் பெரும் எண்ணிக்கையில் குடும்பம் குடும்பமாக பெரியார் தொண்டர்களைக் கொண்ட கழகத்தின் கோட்டையாக இருந்து வருகிறது என்றால் அதற்குக் காரணம் பத்ரி தான்” என்று குறிப்பிட்டார். நூலை ஆனூர் ஜெகதீசன் வெளியிட, பத்ரியின் துணைவியார் சுதா பெற்றுக் கொண்ட காட்சி உருக்கமாக இருந்தது.
ஜாதி மறுப்புத் திருமணம்
காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் பாலன்-பானுமதி ஆகியோரின் மகன் திலீப்குமாருக்கும் - காஞ்சிபுரம் மாவட்டம் முகையூர் பர்குணன்-உமாமகேஷ்வரி ஆகியோரின் மகள் அர்ச்சனாவுக்கும் ஜாதி மறுப்புத் திருமணத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் மாநாட்டு மேடையில் நடத்தி வைத்தார். கூட்டத்தினர் “ஜாதி ஒழிப்புத் திருமணங்கள் பெருகட்டும்; ஜாதி ஒழிப்புக் கொள்கையை வென்றெடுப்போம்” என்று முழக்கமிட்டனர். தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மாநாட்டுத் தீர்மானங்களை முன் மொழிந்தார். கூட்டத்தினர் பலத்த கரவொலி எழுப்பி, தீர்மானங்களை வழி மொழிந்தனர். தொடர்ந்து பேசுகையில் இந்த மேடையில் பெரியார் படத்துடன் அம்பேத்கர் படத்தை இணைத்திருப்பது ஏன் என்பதை விளக்கினார்.
அரசியல் வரைவுக் குழுத் தலைவராக இருந்த அம்பேத்கர், அதற்குப் பிறகு ‘மொழி வழி மாநிலங்கள் குறித்த சிந்தனை’ என்ற தமது நூலில் இந்தியாவில் வடநாடு, தென்னாடு முரண்பாடுகள் கூர்மையடைந்திருப்பதை சுட்டிக் காட்டினார். “இந்தியாவில் இந்தி பேசும் பெரும்பான்மை மக்களை ஒன்றாக்கிவிட்டு, தென்னாட்டு மக்களை சிதறடித்து விட்டார்கள். தென்னாடு வடநாட்டு அதிகாரத்தை எப்படி சகித்துக் கொள்ள முடியும்?” என்று அம்பேத்கர் குறிப்பிட்டிருப்பதை எடுத்துக் காட்டினார். இந்தி மொழிக் குறித்து அரசியல் நிர்ணய சபையில் காங்கிரசுக்குள் வடநாடு, தென்னாடு பிரிவு தலைதூக்கி நின்றதை நூலில் சுட்டிக்காட்டிய அம்பேத்கர், வடநாடு தென்னாட்டுக்கான வேறுபாடுகளையும் எடுத்துக் காட்டினார்.
“வடக்கிற்கும் தெற்கிற்கும் பல வேறுபாடுகள் இருக்கின்றன. வடக்கு பிற்போக்கானது - தெற்கு முற்போக்கானது; வடக்கு மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடப்பது - தெற்கு பகுத்தறிவு சிந்தனைக் கொண்டது; கல்வியில் தெற்கு முன்னேறிச் செல்வது - வடக்கு பின் தங்கிக் கிடப்பது; தெற்கின் கலாச்சாரம் நவீனமானது - வடக்கின் கலாச்சாரம் பழமையானது” என்று குறிப்பிட்டதை எடுத்துக் காட்டினார். ‘பசு மாட்டுப் பிரதேசங்கள்’ என்று அழைக்கப்படும் பழமையில் மூழ்கிக் கிடக்கும் வடமாநிலங்களின் பார்ப்பனிய மதவெறிக் கொள்கைகளைக் கொண்ட பா.ஜ.க. தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. தென்னகம் முழுமையிலும் இந்த வடநாட்டு எதிர்ப்புக்குரல் வலுத்து வருகின்றன. ‘திராவிட நாடு வேண்டும்’ என்ற கோரிக்கை கேரளாவிலும்; ‘சுயாட்சி வேண்டும்’ என்றக் குரலை கருநாடக முதல்வரும், ஆந்திரா, தெலுங்கானா முதல்வர்கள், தங்களின் மாநில தனித்துவ உரிமை களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார்கள். இதுவரை இந்திய ஒற்றுமையைப் பேசி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரள மாநிலத்தில் அதன் நிதியமைச்சர் தென்னக மாநிலங்களின் நிதி அமைச்சர் மாநாட்டைக் கூட்டி விவாதிக்கிறார். இந்த நிலையில் தன்னுரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் தென் மாநிலங்களுக்கு வழிகாட்டும் வரலாற்றுப் பின்புலம் கொண்ட ஒரே நாடு தமிழ்நாடுதான். தன்னுரிமை இலட்சியத்தை உயர்த்திப் பிடிப்போம்” என்று தனது உரையில் விடுதலை இராசேந்திரன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி - காவிரிப் பிரச்சினைக் குறித்து விரிவான தகவல்களை முன் வைத்தார். 370 டி.எம்.சி. காவிரி நீரைப் பெற்று வந்த தமிழகம், படிப்படியாகக் குறைக்கப்பட்டு, குறைக்கப்பட்ட நீரும் தமிழகம் வந்தடையாமல் தடுக்கப்படுவதையும் காவிரிப் படுகையை பன்னாட்டு கம்பெனிகளின் சுரண்டல் தொழிலுக்கு தாரை வார்க்கும் சதி இதில் அடங்கியிருப்பதையும் விரிவாக விளக்கினார்.
நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘நீட் திணிப்பு’ என்ற தலைப்பில் உரையாற்றினார். ‘நீட்’ திணிப்பால் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வியில் கிராமப்புற மாணவர்கள் நுழைய முடியாமல் தடுக்கப்பட்டதைப் புள்ளி விவரங்களுடன் விளக்கினார். தமிழ்நாட்டில் 85 சதவீதம் மாநிலக் கல்விப் பாடத் திட்டத்தில் மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களுக்கு நகர்ப்புற மேல்தட்டு வர்க்கத்தினரான 15 சதவீதம் பேர் மட்டுமே படிக்கும் சி.பி.எஸ்.ஈ. பாடத் திட்டத்தில் நீட் தேர்வை நடத்துவது என்ன நியாயம் என்று கேட்டார். அகில இந்திய அடிப்படையில் ஒரே மாதிரியான தேர்வு நடத்துகிறோம் என்று அதற்கு நியாயம் கற்பிப்பவர்கள் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியான வினாத்தாள்களை சில மாநிலங்களுக்கு எளிமையாகவும் சில மாநிலங்களுக்கு கடுமையாகவும் தயாரிப்பது ஏன்? என்று கேட்டதோடு, தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளையும் சுட்டிக் காட்டினார். நீட் தேர்வு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் எப்படி நடந்து கொண்டது என்பதையும் அவர் விளக்கினார்.
“நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வந்த வழக்கில் 2013 ஜூலை 18 அன்று தீர்ப்பு வந்தது. அப்போது தலைமை நீதிபதியாக இருந்த அல்டாமஸ் கபீர் மற்றும் விக்ரம் ஜித் சென் என்ற இரண்டு நீதிபதிகள், நீட் தேர்வை நடத்தும் உரிமை இந்திய மருத்துவ கவுன்சிலுக்குக் கிடையாது என்று தீர்ப்பளித்தனர். அமர்வில் இடம் பெற்றிருந்த மற்றொரு நீதிபதி அனில் ஆர் தவே மட்டும் ‘நீட்’டுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார். பெரும்பான்மை தீர்ப்பு ‘நீட்’டுக்கு எதிராக இருந்த நிலையில், மருத்துவ கவுன்சில் தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனு ஒன்றை 2013 அக்டோபர் 13ஆம் நாள் தாக்கல் செய்தது. இந்த சீராய்வு மனு மூன்றாண்டுகள் 2016 வரை அப்படியே கிடப்பில் போடப்பட்டது. நீட் தேர்வுக்கு எதிராக தீர்ப்பளித்த தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர் மற்றும் விக்ரம் ஜித் சென் ஆகியோர் பதவி ஓய்வு பெறும் வரை இது திட்டமிட்டு கிடப்பில் போடப்பட்டிருந்தது. அல்டாமஸ் கபீர் பதவி ஓய்வு பெறும் கடைசி நாளான 2016 ஏப்ரல் 11இல் உச்சநீதிமன்றத்தில் அமர்வு 2013ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் நீட்டுக்கு எதிராக வழங்கிய தீர்ப்பை இரத்து செய்தது. அப்போது நீட்டுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய அதே நீதிபதி அனில் ஆர் தவே தலைமையில் அமைந்த அமர்வு இப்போது சந்தர்ப்பத்துக்காகவே காத்திருந்து நீட் தேர்வை நியாயப்படுத்தி திணித்தது.
மாநில ஆட்சிகளின் கருத்துகளைக் கேட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று முதல் நான் கூறிய நீதிபதி அனில் தவே, பிறகு மாநிலங்களின் கருத்துகளைக் கேட்காமலேயே அடுத்த நாள் ‘நீட்’டை திணித்தார் என்று விளக்கினார் கொளத்தூர் மணி. தொடர்ந்து, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை உச்சநீதிமன்றம் நீர்த்துப் போகச் செய்ததையும் சுட்டிக்காட்டி, பெரியார் தனது இறுதி உரையில் முன்மொழிந்த தமிழ்நாட்டு விடுதலை முழக்கத்தை முன்னெடுப்போம் என்று வலியுறுத்தினார்.
மாநாட்டுக்கு விழுப்புரம், கடலூர், வேலூர், குடியாத்தம், புதுவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தோழர்கள் திரண்டு வந்தனர். பல்வேறு இயக்கங்கள் அமைப்புகளைச் சார்ந்த இளைஞர்கள், பொது மக்ககள் பெரும் திரளாகக் கூடி இறுதி வரை மாநாட்டுக் கருத்துகளைக் கேட்டனர்.