சென்னையில் 30.04.2018இல் நடந்த திராவிடர் விடுதலைக் கழக தன்மானம் - தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
இராணுவமயமாக்காதே! - காவேரி பாசனப் பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற உழைக்கும் மக்களின் கோரிக்கையைப் புறந்தள்ளி, பாசனப் பகுதியை நஞ்சாக்கும் – மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களைத் திணித்து வருகிறது நடுவண் ஆட்சி; மக்கள் – வாழ்வுரிமைக்கான போராட்டத்தை துணி வுடன் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில் – நடுவண் ஆட்சி - போராடும் மக்களை மிரட்டவும் - ஒடுக்கவும் துணை இராணுவப் படையை இறக்கி – காவிரி பாசனப் பகுதியை இராணுவ மயமாக்கி வருவதை – இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது; இராணுவத்தைக் கொண்டு மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை நசுக்க முயன்றால் – அது மக்கள் புரட்சியாக வெடிக்கும் என்று – இம்மாநாடு எச்சரிக்கிறது.
தமிழகக் கல்வி உரிமையில் குறுக்கிடாதே! : கிராமப்புற மாணவர்களின் – மருத்துவப்படிப்பை முடக்கும் ‘நீட்’ தேர்விலிருந்து – தமிழகத்துக்கு விதிவிலக்கு தரவேண்டும் என்ற தமிழக சட்ட மன்றத்தின் ஒருமித்த தீர்மானத்தைக் குப்பைக் கூடையில் வீசி எறிந்து விட்டது நடுவண்ஆட்சி; கடந்த ஆண்டு நீட் தேர்வால் – பின்தங்கிய மாவட்டங்களிலிருந்து படிக்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாக சரிந்துவிட்டது; இப்போது மேலும் ஒரு அடி விழுந்திருக்கிறது; கிராமப்புறங்களில் மருத்துவ சேவை செய்யும் அரசு மருத்துவர்களுக்கு மேல்பட்டப் படிப்புகளில் – டிப்ளோமோ வகுப்பில் 50 சதவித இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட முறையும் நீக்கம் செய்யப்பட்டு விட்டது; அத்துடன் இனி மருத்துவ பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வு – அகில இந்திய தேர்வாக நடக்கும் என்று தேசிய மருத்துவ ஆணையம் கூறுகிறது; இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் –மருத்துவக் கல்லூரிகள் அதிகம்; காமராசர் காலத்திலிருந்து தொடர்ந்து - பின்பற்றப்பட்டு வந்த சமூக நீதிக்கல்வியில் – தமிழ்நாடு மருத்துவத்துறையில் – இந்தியாவிலேயே முதலிடத்தில் நிற்கிறது; இந்த சமூக நீதியையும் கிராமப்புற மருத்துவ சேவையையும் முற்றாக சீர்குலைக்கும் அதிரடி நடவடிக்கைகளை நடுவண் அரசு தொடர்ந்து மேற்கொண்டு – தமிழ்நாட்டு மக்கள் மீது – போர்தொடுத்து வருவதை – தமிழக மக்கள் இனியும் சகிக்க மாட்டார்கள் ; தமிழக கல்வி உரிமையிலிருந்து நடுவண் அரசு ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்றும் – தமிழ்நாட்டு மக்களின் உரிமை சார்ந்த – உணர்வுகளோடு விளையாட வேண்டாம் என்றும் இம்மாநாடு நடுவண்அரசை எச்சரிக்கிறது.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை உறுதி செய்! : தலித் மக்களின் பாதுகாப்புக் கவசமாக நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை – உச்ச நீதிமன்றம் – நீர்த்துப்போகச் செய்தது – உச்சநீதிமன்றத்தின் வரம்பு மீறியச் செயலாகும்; இந்தச் சட்டம் முறையாக செயல்படுத்தப்படாமல் இருப்பதுதான் உண்மை நிலையாகும்; சட்டத்தில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் அதிக அளவில் விடுவிக்கப்படுவதற்குக் காரணம் – சட்டத்தை அமுல்படுத்தும் அதிகார வர்க்கத்தின் அலட்சியமே தவிர சட்டத்தின் தோல்வி அல்ல; எனவே உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிராகரிக்கும் சட்டப் பாதுகாப்புகளை உறுதி செய்ய நடுவண் ஆட்சி முன்வரவேண்டும்; அதற்கு அனைத்துக் கட்சியினரும் ஆதரவு தரவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
15ஆவது நிதிக் குழுவின் அநீதி: 15ஆவது நிதிக்குழு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்காக உருவாக்கியுள்ள புதிய கோட்பாடுகள் – வடமாநிலங்களை விட வளர்ச்சியடைந்த தமிழ்நாடு உள்ளிட்ட தென்னக மாநிலங்களுக்கு கடும் பாதிப்புகளை உருவாக்குவதாகும். வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் என்பதற்காகவே தண்டிக்கப்படுகின்றனர்; இந்த அநீதியை எதிர்த்து – தென்னக மாநிலங்களின் – ஒருமித்த வலிமையான கண்டனத்தைத் தெரிவிக்க கேரள நிதியமைச்சர் – தென்னக நிதி அமைச்சர்களின் மாநாட்டைக் கூட்டினார்; இந்த மாநாட்டில் நடுவண் அரசுக்கு அஞ்சி நடுங்கி – தமிழக நிதியமைச்சர் பங்கேற்கவில்லை; இது தமிழ்நாட்டு மக்களுக்கு இழைத்த துரோகம்; ஆட்சி அதிகாரத்துக்காக – தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை – நடுவண் பா.ஜ.க பார்ப்பனிய ஆட்சியிடம் அடகு வைக்கும் – தமிழக ‘சரணாகதி’ ஆட்சியை இம்மாநாடு வண்மையாகக் கண்டிக்கிறது.
‘வடநாட்டு அதிகாரிகளே; வெளியேறு!’ - தமிழ்நாட்டில் மத்திய அரசு அலுவலகங்களில் – தேசியமய வங்கிகளில் – வடநாட்டுக்காரர்கள் – ஏராளமாக குவிந்துவிடுகிறார்கள்; தமிழ் மொழியே அறிந்திடாத – தமிழ்நாட்டுக் கலாச்சாரத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாத வடமாநில அதிகாரிகள் – தமிழ்மக்களின் வேலை வாய்ப்பு உரிமைகளைப் பறித்து – குறுக்கு வழியில் பதவிகளைப் பிடித்துவரும் முறைகேடுகள் அவ்வப்போது அம்பலமாகி வரு கின்றன; இந்நிலையில் – “வடநாட்டு அதிகாரிகளே, வெளியேறுங்கள்” என்ற இயக்கத்தைத் தொடங்க – தமிழர்கள் தயாராகுமாறு, இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது.
சேகர் - ராஜாவை கைது செய்க : தமிழ்நாட்டு பெண் ஊடகவியலாளர்களின் சுயமரியாதையை அவமதித்து – அவர்களை இழிவு செய்து முகநூல் பதிவிட்ட நடிகர் எஸ்.வி.சேகர் – முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகும் கைது செய்யப்பட வில்லை; தமிழ்நாட்டின் மதிப்புமிக்க தலைவர்களை – தனது திமிர்ப்பேச்சால் – அவ்வப்போது ‘நஞ்சு கக்கி’ – தமிழகத்தில் கடும் எதிர்ப்புகளை சந்தித்துவரும் பா.ஜ.கவின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பார்ப்பனர் என்றால் அவர்கள் எந்தக் குற்றம் செய்தாலும் தண்டிக்கப்படக்கூடாது என்ற ‘மனுகால’ சட்டத்தை தமிழக காவல்துறையில் – தமிழக அரசும் இவர்களிடம் பின்பற்றாமல் – இந்தியத் தண்டனைச் சட்டத்தைப் பயன்படுத்த முன்வர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.